இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

கற்ற தமிழும் கையளவும்

May 9th, 2012 · 6 Comments

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான். 

தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது.

அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் தொடர்ச்சியிலும் அடங்கி இருக்கிறது என்னும் வழக்கிற்கேற்ப நமக்குப் பின்னான புலம்பெயர் சந்ததியினருக்கும் நம் மொழியையும் அடையாளத்தையும் கொண்டு செல்ல வேண்டுமே என்னும் கருக்கடையும் ஏற்படுகிறது.

இவ்விரு எண்ணங்களுக்கும் தூபம் போடுவதாகவும் அதே நேரத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த உதவுவதாகவும் வார இறுதித் தமிழ்ப்பள்ளிகள் அமைந்திருக்கின்றன.

நாடெங்கும் தன்னார்வலர்கள் தமிழ்ச் சங்கங்களும், பள்ளிகளும், விழாக்களும் அமைத்து முயன்று வருவதைப் போன்றே எங்கள் பகுதியிலும் இப்போது ஒன்றிற்கு இரண்டாகப் பலபத்து மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் உருவாகி இருக்கின்றன.

இவையிருக்க, எங்கள் வீட்டிலும் சில வாதங்கள். எந்த மாற்றத்திற்கும் ஆரம்பநிலை எதிர்ப்புகள் இருப்பது இயல்பு தானே. எங்கள் மக்களும், இவ்வருடம் தமிழ்ப்பள்ளிக்குச் செல்வோம் என்று சொன்ன போது, “எதுக்குப் போகணும்”, “வீட்டிலேயே கத்துக்கலாம்”, “எதுக்காகக் கத்துக்கணும்”, என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்.

இவற்றுக்குப் பதில் சொல்லவும் நம் தமிழைத் தான் அழைத்து வரவேண்டியிருக்கிறது.  அதற்கு இவ்விடத்தில் வலு இருக்கிறதோ இல்லையோ நமக்குத் தெரிந்தது அவ்வளவு தானே! புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் கருத்துக்கு ஆதரவு தேடிக் “ ‘களவும் கற்று மற’ என்று வள்ளுவரே சொல்லி இருக்கார் தெரியுமா?”, என்றேன்.

“என்னது? வள்ளுவரா? அவரெங்கே அப்படிச் சொன்னார். அது ஒரு பழமொழிங்க”, என்று மொழிந்தார் மனைவி. பிள்ளைகளை வலியுறுத்தும் பேச்சு மறந்து போய்க் களவைப் பற்றி வள்ளுவர் சொன்னாரா என்னும் வாதத்தில் இறங்கிவிட்டோம்.

எங்கள் பள்ளியிலும் சென்று பிற ஆசிரியர்களிடம் இம்மாபெரும் ஐயத்தைச் சொல்லித் தீர்வு கேட்க, அங்கும் பாதிப்பேர் வள்ளுவர் கூற்றென்றும் மீதிப் பேர் இல்லையென மறுத்தும் இரு கட்சியாக நின்றனர். இணையத் தேடலில் பார்த்துக் கொள்வோம் எனச் சில நேரம் முயன்றும் அறுதியாய் இது வள்ளுவர் எழுதியது தான் என்பதற்குச் சான்றே கிட்டவில்லை. பிறகு தான் மூலத்திற்கே சென்று பார்க்கலாமே என்று வள்ளுவத்தை வைத்திருக்கும் சில தளங்களில் சென்று தேட, ‘களவு’ என்னும் சொல்லை வள்ளுவர் ஒரே ஒரு குறளில் தான் பாவித்திருக்கிறார். அது நிச்சயமாகக் கற்று மறத்தல் பற்றி அன்று.  நல்ல வேளை நான் பந்தயம் ஏதும் கட்டவில்லை!

ஆக, தமிழ்ப்பள்ளியானது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் நிறையக் கற்றுத் தருகிறது. இப்படித் தான் இன்னுமொரு நாள் நிலை-1ன் ஆசிரியை ஒருவர் ‘படங்காட்டிப் பெயர் சொல்லல்’ என்று சுவையாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது Yak விலங்கின் படத்தைக் காட்டினால் என்ன சொல்வது என்று குழம்பியிருக்கிறார். (A for Apple,… என்னும் வரிசையில் இருக்கும் படங்களைக் கொண்டு வந்ததில் Y for Yakம் வந்துவிட்டது!). பிற ஆசிரியர்களிடமும் இது பற்றி  வினவினார். ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை.

Fair Use from https://i0.wp.com/gearjunkie.com/images/5330.jpg

“பாக்கறதுக்கு எருமை மாதிரி தானேங்க இருக்கு. சும்மா காட்டெருமைன்னு சொல்லுங்க”, என்றேன்.

தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத அவ்விலங்கைக் காட்டெருமை என்று அதன் தோற்றத்தை வைத்துச் சொல்லலாமே என்று நினைத்தாலும் அது ஒரு குறையான அனுமானம் தான்.

“அது எப்படிங்க? அப்போ Wild Buffaloவிற்கு என்னன்னு சொல்லுவீங்க? அது தானே காட்டெருமை?”, என்று அவர் எதிர்கேள்வி கேட்கவே, சரி அது ஒத்துவராது என்று விட்டுவிட்டோம். இப்போதெல்லாம் நாட்டிலே நிறையக் கேள்விகள் கேட்கின்றனர்!  Smile

இதை விட்டுவிடுவதா என்று பல அகரமுதலிகளிலும், இணையத்திலும், விக்சனரி, விக்கிப்பீடியா என்றும் தேடிப் பார்த்தும் Yak-ற்குச் சரியான சொல் சிக்கவில்லை. ஒரு வகையான திபெத்திய மாட்டுவகை என்றோ, கவரிமா என்றோ தான் இருந்தது.

எருமை மாதிரி இருக்கும் ஒன்றை மான் என்று எப்படிச் சொல்வது எனக் கேள்வி எழுந்தாலும் மானும் கொஞ்சம் எருமை மாதிரி தான் இருக்கும் என்பதைச் சில ஆண்டுகள் முன் நெடுஞ்சாலையில் எங்கள் வாகனத்தில் வந்து இடித்துக் கதவை உடைத்த ஒரு மானை வைத்து நான் உணர்ந்திருந்தேன்.  இருப்பினும் ‘மயிர் நீப்பின் உயிர் நீக்கும்’ தன்மை வாய்ந்த ஒன்றை எருமைக்கு நிகரான Yak என்று எப்படிச் சொல்வது? எப்படியோ தவறாகக் கவரிமான் என அகரமுதலிகளில் இடம்பெற்று விட்டது போலும் என நினைத்தேன்.

ஆனால் மேலும் தேடியதில் சிக்கியது ஒன்று:
"கவரிமா என்றொரு மானே கிடையாது. இமயத்தில் வாழும் காட்டுமாடு, சடை போன்ற முடி உடையது. கவரி என்றால் மயிர், மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே வாழும் இந்த மாடு உடலிலுள்ள மயிரை இழந்துவிட்டால் உயிர் துறந்துவிடும். இதையே வள்ளுவர் உவமையாக ‘மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்று குறிப்பிட்டார். பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ‘நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரை’ என்று கூறி இல்லாத ஒரு மான் இனத்தை உருவாக்கிவிட்டனர். "

உசாத்துணை:  ச.முகமது அலி எழுதிய ‘இயற்கை : செய்திகள், சிந்தனைகள்’ என்னும் நூல் பற்றிய விமர்சனக் குறிப்பு.

ஆக, யாக்கு என்பது கவரிமா என அறிவோம்.

மேலும், “பி.எல். சாமி அவர்கள் சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்னும் நூலிலும், செந்தமிழ்ச்செல்வி என்னும் மாதிகையிலும் இது பற்றிக் குறித்துள்ளார்”, என்று தமிழ் விக்கியின் உரையாடல் ஒன்றில் கனடா பேராசிரியர் செல்வா குறிப்பிட்டுள்ளார்.

Yak என்னும் விலங்கைத் தமிழர்கள் கவரி மான் என்று அழைதார்கள் என்பதை பி. எல். சாமி ஐயத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டியுள்ளார். எப்படி நரந்தம் புல் உண்டு, குளிரான இமயமலைப் பகுதியில் வாழ்கின்றது என்னும் செய்திகளைத் தொகுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் குறளிலே,
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

என்னும் குறளில் வரும் கவரிமா இந்த Yak தான். எப்படி மயிரை நீக்கிவிட்டால், குளிர் தாங்கமாட்டாமல், கவரிமா இறந்து படுமோ, அதுபோல், மானம் இழந்தால் தம் உயிரைநீப்பர் மானமுடையவர் என்கிறார். இதனை அறியாமல் பலரும் ஒரு முடி விழுந்தாலும் உயிர் நீங்கும் மான் இனம் (கற்பனை) என்று பலர் பொருள் கூறியுள்ளனர் (தவறுதலாக). சங்க இலக்கியத்திலே பல இடங்களில் கவரி மா வாழும் இமயமலைப் பகுதியையும், அது உண்ணும் நரந்தம் புல்லையும் பற்றித் தெளிவான குறிப்புகள் உள்ளன. “

இப்படியாகப் பல இடங்களிலும் தொன்மை திரிந்த வழக்கை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையை மீட்டெடுக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளியின் சில மாதங்களிலே கற்றுக் கொண்டவற்றிற்கு இவை சில சான்றுகள் தாம். இன்னும் இலக்கணக் குறிப்புகள், இருபெயரொட்டுப் பண்புத்தொகை, குறிப்பு வினைமுற்று, அகரயீற்றுப் பெயரெச்சம் என அறிந்து கொண்டவை பலபல. 

தமிழின் தொன்மை தொடர்வது அடுத்த தலைமுறையினருக்கு மொழியினை பயிற்றுவிப்பதில் மட்டுமன்று; நமது மொழியறிவின் குறைகளைக் களைந்து கொள்வதிலும், தொடர்பான பிற செய்திகளை அறிந்துகொள்வதிலும் கூட உள்ளது என்று எனக்கு மேலும் ஆர்வம் பிறக்கிறது. அதிகம் அறிய அறிய அறியாதது தான் அதிகரிப்பதாகவும் படுகிறது. அதனால் தானே நம் தமிழில் அன்றே சொல்லி வைத்தாள் ஔவைப் பாட்டி:  ‘கற்றது கையளவு; கல்லாதது உலகளவு’.

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7a/Statue_of_Avvaiyar.jpg

“என்னது? நிச்சயமா ஔவையார் தான் அதைச் சொன்னாங்களான்னு கேக்கறீங்களா? இருங்க, இணையத்துல கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறமா வந்து அதுக்குப் பதிலச் சொல்றேன்!”

கூகுளைத் தேடி ஓடினேன்.

எந்த ஔவையார் பத்திக் கேக்குறீங்க? குறைஞ்சது மூணு பேராவது இருந்திருக்காங்க”, என்று கூகுளும் என்னை மறுகேள்வி கேட்கிறது!

 

பி.கு.: வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ‘தென்றல்-முல்லை’ சித்திரைச் சிறப்பிதழில் (2012 ஏப்ரல்) வெளிவந்த கட்டுரை.

Tags: தமிழ்

6 responses so far ↓

  • 1 மஞ்சு // May 9, 2012 at 7:39 am

    கலக்கிட்டீங்க செல்வராஜ்! நிச்சயமா தெரிஞ்சுக்க வேண்டிய தகவல். கவரிமா எருமை பரம்பரை தெரிஞ்சுட்ட யாரும் இனி தங்களை கவரிமா’னோ’ட உவமைப் படுதிக்க மாட்டங்க 🙂
    அறிவூட்டலுக்கு நன்றி!

  • 2 இரா. செல்வராசு // May 9, 2012 at 8:48 pm

    நன்றி மஞ்சு. இதை முதலில் தெரிந்துகொண்டபோது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. இன்னும் இதுபோல் எவ்வளவோ தெரியாமலோ மாறிப்போயோ இருக்கு…

  • 3 குறும்பன் // May 10, 2012 at 4:17 pm

    நான் கவரிமான் பரம்பரைன்னு இனி பேச்சுக்கு கூட சொல்ல முடியாதாட்டக்குதே 🙁 இனி யாராச்சும் நான் கவரிமான் அப்படின்னு சொன்னா சிரிப்பு தான் வரும் பின்ன யாரு நான் எருமைன்னு பெருமையா சொல்லிக்குவாங்க 🙂 . களவும் கற்று மற அப்படின்னா திருட்டையும் கற்று மறந்துவிடுன்னு பலர் நினைச்சிக்கிட்டுருக்காங்க, அதன் பொருள் அது அல்ல என்று படித்தேன் ஆனா உண்மையான பொருள் மட்டும் மறந்துடுது. இந்த சொற்பதத்தை வச்சிக்கிட்டு என் நண்பர்கள் சிலர் அடிக்கும் லூட்டி தாங்க முடியலை 😐

  • 4 Senthil // May 10, 2012 at 11:32 pm

    இக் கட்டுரை “தென்றல் முல்லையில்” பார்த்த போதே தங்களைப் பாராட்ட வேண்டும் என நினைத்தேன். நல்ல கட்டுரை மட்டுமன்று… செய்திகளை ஆற்றொழுக்குப் போல் அமைந்தது கூடுதல் சிறப்பு. “களவும் கற்று மற” போன்ற சொல்லாடல்கள் நினைத்துப் பார்க்கும் போது தான் நாம் பெற்றதை விட இழந்தது அதிகம் என எண்ணத் தோன்றுகிறது… நிறைய எழுதுங்கள் … பாராட்டுகள்.

    ஒரே படைப்பை இரண்டு இடங்களில் வெளியிடுவதை தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

  • 5 இரா. செல்வராசு // May 11, 2012 at 5:21 pm

    குறும்பன், களவும் கற்று மற பற்றி நீங்க சொல்லியிருப்பது மாதிரி நானும் நிறைய இடங்கள்ல படிச்சேன். ஆனா, அதிலும் வேறு வேறு கருத்துத் தென்பட்டதாலும், அவற்றின் நம்பகத்தன்மை உறுதியாகத் தெரியாததாலும் அதை விட்டுவிட்டேன்.

    கொங்குதேர் வாழ்க்கை பாட்டுக்குக் கூட உண்மைப் பொருள் வேறு வழக்கில் வந்துவிட்ட கதை வேறு என்று பதிவர் சுசீலா மு.வ. எழுதியதைச் சுட்டி ஒரு இடுகை எழுதியிருந்தாங்க. இவையிரண்டையும் சேர்த்துத் ‘தொன்மை திரிதலும்’ என்பதாக எழுத முதலில் நினைத்திருந்தேன்.

  • 6 இரா. செல்வராசு // May 11, 2012 at 5:25 pm

    செந்தில், நன்றி. இரண்டு இடங்களில் வெளியிடுவது பற்றி நீங்கள் குறிப்பிடுவதில் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கிறது. என்றாலும், இவை இரண்டும் பெரிதும் வேறுபட்ட தளங்கள். வாசகர்களும் வேறு. (உ-ம் வாசிங்டன் அருகேயன்றிப் பிற நாடுகளில் வாழும் நண்பர்கள் தென்றல் முல்லையை அறியார்) அதனால் இரண்டிலும் வெளியிட ஒரு காரணமும் இருக்கிறது.
    குறைந்தபட்சம், இதழ் வெளியாகும் வரை பதிவில் வெளியிடுவதில்லை என்று நானாக ஒரு முறையை வைத்துக் கொண்டேன்.

    தவிர, வலைப்பதிவினை, ஒரு பயிற்சிக்களமாகவும், சேமிப்புக் கிடங்காகவும் பார்க்க முயல்கிறேன். முன்பும் பிற தளங்களில் எழுதியதை அவை வெளியானபின் இங்கு இட்டு வைத்திருக்கிறேன். அப்படி இல்லையென்றால் இங்கே ஆடிக்கொண்ணு சித்திரைக்கொண்ணுன்னு கூட எழுத முடியாமப் போயிடும் 🙂

    (பி.கு.: இந்த இடுகையை மூன்றாவதான ஒரு தளத்தில், ஒரு நோர்வே செய்தித்தாளில் வெளியிடவும் விரும்பிக் கேட்டுக்கொண்ட நண்பரிடம் சம்மதித்திருக்கிறேன் 🙂 ).