இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 1

புத்தாண்டும் படைப்பூக்கமும்

January 4th, 2013 · 5 Comments

black marble earth 

அனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள்.  சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் முகப்புத்தகத்தில் முகநூலில் பேரா. செல்வா இது ஆங்கில உலகம் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன்.

ஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் பெயர் என்று அப்படியே பயன்படுத்தாமல் ஏன் முகப்புத்தகம் முகநூல் எனப் பெயர்க்க வேண்டும் என்றும் முன்பு நான் எண்ணியதுண்டு. ஆனால், சிலவற்றை இப்படிப் பெயர்ப்பதில் தவறில்லை என்பதோடு அதுவே அழகாகவும் இருப்பதால் ஏற்றுக் கொள்ளலாம். தவிர, வலியது நிலைக்கும் என்னும் டார்வின் கோட்பாட்டின்படி இன்று பலரும் முகப்புத்தகம் முகநூல் என்று சொல்லி அது நிலைத்துவிட்டதையும் உணரலாம்.

[Read more →]

→ 5 CommentsTags: சமூகம் · பொது

கற்ற தமிழும் கையளவும்

May 9th, 2012 · 6 Comments

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான். 

தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது.

அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் தொடர்ச்சியிலும் அடங்கி இருக்கிறது என்னும் வழக்கிற்கேற்ப நமக்குப் பின்னான புலம்பெயர் சந்ததியினருக்கும் நம் மொழியையும் அடையாளத்தையும் கொண்டு செல்ல வேண்டுமே என்னும் கருக்கடையும் ஏற்படுகிறது.

இவ்விரு எண்ணங்களுக்கும் தூபம் போடுவதாகவும் அதே நேரத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த உதவுவதாகவும் வார இறுதித் தமிழ்ப்பள்ளிகள் அமைந்திருக்கின்றன.

நாடெங்கும் தன்னார்வலர்கள் தமிழ்ச் சங்கங்களும், பள்ளிகளும், விழாக்களும் அமைத்து முயன்று வருவதைப் போன்றே எங்கள் பகுதியிலும் இப்போது ஒன்றிற்கு இரண்டாகப் பலபத்து மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் உருவாகி இருக்கின்றன.

இவையிருக்க, எங்கள் வீட்டிலும் சில வாதங்கள். எந்த மாற்றத்திற்கும் ஆரம்பநிலை எதிர்ப்புகள் இருப்பது இயல்பு தானே. எங்கள் மக்களும், இவ்வருடம் தமிழ்ப்பள்ளிக்குச் செல்வோம் என்று சொன்ன போது, “எதுக்குப் போகணும்”, “வீட்டிலேயே கத்துக்கலாம்”, “எதுக்காகக் கத்துக்கணும்”, என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்.

[Read more →]

→ 6 CommentsTags: தமிழ்

ஆழ்கடலில் வெடித்த பாறைநெய்க் கிணறு

April 20th, 2012 · 8 Comments

முன்குறிப்பு: 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.  அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக  எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன்.

* * * *

அமெரிக்க மெக்சிக்கோ வளைகுடாவின் ஆழ்கடலில் 2010ல் ஏப்ரல் மாதம் பிரிட்டிசுப் பெட்ரோலியம் (பீ.பி) நிறுவனத்தின் பாறைநெய்க் கிணறு ஒன்று வெடித்துத் தொடர்ந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குக் கச்சா எண்ணெய்யைக் (கரட்டு நெய்யைக்)  கடலில் கலக்க விட்டுக் கொண்டிருந்தது. கசிந்த கரிய பாறைநெய்யின் அணுமானித்த அளவு நாளுக்கு நாள் மாறி, உயர்ந்து ஆரம்பத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் பீப்பாய் அளவு (1000 BPD) என்று சொல்லப்பட்டதில் இருந்து அதிகபட்சம் அறுபத்தைந்து ஆயிரம் பீப்பாய் (65000 BPD) அளவுக்கு இருக்கலாமெனச் சொல்லப்பட்டது.  (ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர்). அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக இது கருதப் படுகிறது.

image

[Read more →]

→ 8 CommentsTags: வேதிப்பொறியியல்

மனதில் உறுதி வேண்டும்

January 23rd, 2012 · 3 Comments

2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு.

அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன்.

வலைப்பதிவு மற்றும் இதர இணையத் தளங்களுக்கும் இவனைத் தொலைத்து விடுவோமோ என்னும் கவலைக்கும், நன்றாகவும் நிறையவும் எழுத ஊக்குவிக்க வேண்டுமென்னும் ஆர்வத்திற்கும் இடையில் ஊசலாடும் மனைவியின் நிலை பற்றியும் அறிவேன். வளர்ந்து வரும் மக்களின் நல்வாழ்விற்கும் இனிய அனுபவங்களுக்கும் அவர்களோடு கழியும் நேரங்களும் தவிர்க்கக் கூடாதவை.

நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகளும் எண்ணங்களும் கூட நமது காலத்திலேயே வெறும் புகையாய்க் கலைந்து போகும் முன்னே அவற்றுள் சிலவற்றையேனும் எழுத்தில் ஆவணப் படுத்தி வைக்க முடியுமா என்னும் ஆதங்கமும் ஒருபுறம். என்னுடைய துறைசார் விவரங்களை எளிமையாகவும் சுவையாகவும் (அல்லது இவ்விரண்டும் இல்லாவிட்டாலும் சரி) கொஞ்சம் எழுத முயலலாம் என்றும் எண்ணம்.

இவற்றினிடையே தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா, வள்ளுவன் தமிழ் மையம், போன்ற தன்னார்வப் பணிகளுக்கு என்னுடைய நேரத்தில் சிறு பங்கை அளித்து வருகிறேன். அவற்றையும் திறனோடு தொடர விருப்பம் உண்டு. (இதில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகமும் சேர்ந்து கொள்ள வாய்ப்புண்டு). தமிழா கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவிலும் பணியாற்ற விருப்புடன் சேர்ந்து இன்னும் மறைவாய் இருக்கிறேன் :-).  இவையன்றி மேலும் வரும் சில வேண்டுகோள்களை மறுத்து வருகிறேன்.

இவை அனைத்தும் ஒரு சமன்பட்ட ஈடுபாட்டில் இயன்றவரை செய்ய முடியுமா என்று இவ்வாண்டும் தொடர்ந்து முயல்வேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துகளும் புதிய ஆரம்பங்களுக்கான வாழ்த்துகளும்.

புதிய ஆரம்பங்கள் புத்தாண்டின் போது மட்டும் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதில்லை.

 

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.

ஓம் ஓம் ஓம்!

குறிப்பு: வள்ளுவன் தமிழ் மையம் தமிழ்ப்பள்ளியின் சார்பாகச் சென்ற வாரம்  நடந்த தமிழர் திருநாள் விழாவில், சலங்கை ஆர்ட்சு அகிலா சுப்ரமணியம் அவர்களின் வழிப்படுத்தலில் என் மகள்கள் இருவரும் பங்கு கொண்ட குழு நடனம்.

→ 3 CommentsTags: இணையம் · கண்மணிகள் · சமூகம் · தமிழ் · வாழ்க்கை

குத்துப்புள்ளி

January 22nd, 2012 · 6 Comments

செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம்.

ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு தாசில்தார்வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் கடைகள் (xerox) இருக்கும். நகலாக்கும் கடைகள் என்றாலும் அவை இன்னும் பல சேவைகளை அளித்து வரும். அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். மற்றும் ஆவணங்கள், கடன்பத்திரங்கள், அவற்றிற்கு ஒட்டவேண்டிய வருவாய்த்தலைகள் (revenue stamps) முதலியனவும் கிடைக்கும். அவற்றை எழுதிக் கொடுப்போர், ஆலோசனைகள் சொல்வோர் என்று பலரும் அங்கு இருப்பர். வரிசையாகப் பல தட்டச்சும் தாவணிப் பெண்கள் அக்காலத் தட்டச்சிகளில் தட்டச்சிக் கொண்டு சில வினாடிகளுக்கு ஒருமுறை அதன் நெம்புகோலை (lever) ஒரு முனையில் இருந்து மறு முனைக்குத் தள்ளிக் கொண்டிருப்பர்.

அக்கடைகளில் தட்டச்சவும் பிற ஆவணங்கள் எழுதவும் தேவையான தாள்களை மொத்தமாகப் பெரிய அளவில் வாங்கி, சரியான அளவில் (A4 முதலியன) தேவைப்படும் அளவில் வெட்டி வைத்துக் கொள்வர். வெட்டியது போக எஞ்சி இருக்கும் துண்டுத் தாள்கள் நிறையக் கிடைக்கும். சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல அகலமும், எட்டு/ஒன்பது அங்குல நீளமும் உள்ள அத்துண்டுகளைக் குத்துப்புள்ளித் தாள்கள் என்பர். ஒரு குடும்ப நண்பர் வைத்திருந்த கடையில் சொல்லி வைத்திருந்தால் அந்தத் துண்டுத் தாள்களை எறிந்துவிடாமல் எடுத்து வைத்துத் தருவார்கள். அதை எனது வீட்டிலும், தாத்தா/மாமாவின் கடையிலும், ஏதேனும் பட்டியல் போட, குறிப்புகள் எழுத, சிறு கணக்குகள் எழுத என்று பயன்படுத்துவார்கள்.

"நடராசு, அப்புறமா நீங்க இங்க வர்றப்பக் கொஞ்சம் குத்துப் புள்ளித் தாள் இருந்தா எடுத்துட்டு வாங்க"

"சரிங்கையா"

[Read more →]

→ 6 CommentsTags: வாழ்க்கை