மனதில் உறுதி வேண்டும்
Jan 23rd, 2012 by இரா. செல்வராசு
2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு.
அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன்.
வலைப்பதிவு மற்றும் இதர இணையத் தளங்களுக்கும் இவனைத் தொலைத்து விடுவோமோ என்னும் கவலைக்கும், நன்றாகவும் நிறையவும் எழுத ஊக்குவிக்க வேண்டுமென்னும் ஆர்வத்திற்கும் இடையில் ஊசலாடும் மனைவியின் நிலை பற்றியும் அறிவேன். வளர்ந்து வரும் மக்களின் நல்வாழ்விற்கும் இனிய அனுபவங்களுக்கும் அவர்களோடு கழியும் நேரங்களும் தவிர்க்கக் கூடாதவை.
நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகளும் எண்ணங்களும் கூட நமது காலத்திலேயே வெறும் புகையாய்க் கலைந்து போகும் முன்னே அவற்றுள் சிலவற்றையேனும் எழுத்தில் ஆவணப் படுத்தி வைக்க முடியுமா என்னும் ஆதங்கமும் ஒருபுறம். என்னுடைய துறைசார் விவரங்களை எளிமையாகவும் சுவையாகவும் (அல்லது இவ்விரண்டும் இல்லாவிட்டாலும் சரி) கொஞ்சம் எழுத முயலலாம் என்றும் எண்ணம்.
இவற்றினிடையே தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா, வள்ளுவன் தமிழ் மையம், போன்ற தன்னார்வப் பணிகளுக்கு என்னுடைய நேரத்தில் சிறு பங்கை அளித்து வருகிறேன். அவற்றையும் திறனோடு தொடர விருப்பம் உண்டு. (இதில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகமும் சேர்ந்து கொள்ள வாய்ப்புண்டு). தமிழா கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவிலும் பணியாற்ற விருப்புடன் சேர்ந்து இன்னும் மறைவாய் இருக்கிறேன் :-). இவையன்றி மேலும் வரும் சில வேண்டுகோள்களை மறுத்து வருகிறேன்.
இவை அனைத்தும் ஒரு சமன்பட்ட ஈடுபாட்டில் இயன்றவரை செய்ய முடியுமா என்று இவ்வாண்டும் தொடர்ந்து முயல்வேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துகளும் புதிய ஆரம்பங்களுக்கான வாழ்த்துகளும்.
புதிய ஆரம்பங்கள் புத்தாண்டின் போது மட்டும் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதில்லை.
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.
ஓம் ஓம் ஓம்!
குறிப்பு: வள்ளுவன் தமிழ் மையம் தமிழ்ப்பள்ளியின் சார்பாகச் சென்ற வாரம் நடந்த தமிழர் திருநாள் விழாவில், சலங்கை ஆர்ட்சு அகிலா சுப்ரமணியம் அவர்களின் வழிப்படுத்தலில் என் மகள்கள் இருவரும் பங்கு கொண்ட குழு நடனம்.
ஆடல் அருமை. நன்றி செல்வராசு!
உங்கள் ஆர்வமும் செயலூக்கமும் அறிய முடிந்தது.உங்கள் போல் உள்ளவர்களால் தமிழ் புதிய தொடுவானத்தை அறிமுகம் செய்து கொள்கிறது.நடனமும் பதிவிற்கு பொருத்தம்.வாழ்த்துகள்
முழுமையாக பார்த்த என் மகள்கள் கேட்ட கேள்வி இதில் எந்த அக்கா இவரின் மகள்கள்?