குத்துப்புள்ளி
Jan 22nd, 2012 by இரா. செல்வராசு
செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம்.
ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு தாசில்தார்வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் கடைகள் (xerox) இருக்கும். நகலாக்கும் கடைகள் என்றாலும் அவை இன்னும் பல சேவைகளை அளித்து வரும். அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். மற்றும் ஆவணங்கள், கடன்பத்திரங்கள், அவற்றிற்கு ஒட்டவேண்டிய வருவாய்த்தலைகள் (revenue stamps) முதலியனவும் கிடைக்கும். அவற்றை எழுதிக் கொடுப்போர், ஆலோசனைகள் சொல்வோர் என்று பலரும் அங்கு இருப்பர். வரிசையாகப் பல தட்டச்சும் தாவணிப் பெண்கள் அக்காலத் தட்டச்சிகளில் தட்டச்சிக் கொண்டு சில வினாடிகளுக்கு ஒருமுறை அதன் நெம்புகோலை (lever) ஒரு முனையில் இருந்து மறு முனைக்குத் தள்ளிக் கொண்டிருப்பர்.
அக்கடைகளில் தட்டச்சவும் பிற ஆவணங்கள் எழுதவும் தேவையான தாள்களை மொத்தமாகப் பெரிய அளவில் வாங்கி, சரியான அளவில் (A4 முதலியன) தேவைப்படும் அளவில் வெட்டி வைத்துக் கொள்வர். வெட்டியது போக எஞ்சி இருக்கும் துண்டுத் தாள்கள் நிறையக் கிடைக்கும். சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல அகலமும், எட்டு/ஒன்பது அங்குல நீளமும் உள்ள அத்துண்டுகளைக் குத்துப்புள்ளித் தாள்கள் என்பர். ஒரு குடும்ப நண்பர் வைத்திருந்த கடையில் சொல்லி வைத்திருந்தால் அந்தத் துண்டுத் தாள்களை எறிந்துவிடாமல் எடுத்து வைத்துத் தருவார்கள். அதை எனது வீட்டிலும், தாத்தா/மாமாவின் கடையிலும், ஏதேனும் பட்டியல் போட, குறிப்புகள் எழுத, சிறு கணக்குகள் எழுத என்று பயன்படுத்துவார்கள்.
"நடராசு, அப்புறமா நீங்க இங்க வர்றப்பக் கொஞ்சம் குத்துப் புள்ளித் தாள் இருந்தா எடுத்துட்டு வாங்க"
"சரிங்கையா"
பல காலத்துக்கு அதை ஏன் ‘குத்துப் புள்ளித் தாள்’ என்று சொன்னார்கள் எனத் தெரியவே இல்லை. இது போன்ற ஒரு பாவனையை நான் வேறெங்கும் கவனித்தது கிடையாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தான், நானாக அதன் பொருளை ஒருவாறு விளங்கிக் கொண்டேன். அதில் இருந்து ஒரு அழகான தமிழ்ச்சொல்லும் கிடைக்கும்.
ஆங்கிலத்தில் ‘To Do’ எனப்படும் செய்யவேண்டியன பட்டியல் போடும்போதோ, அல்லது ஒரு ஆவணக்கோப்பில் ஏதேனும் பட்டியல் போட வேண்டுமென்றாலுமோ, பொதுவாக இரண்டு முறைகள் உண்டு.
- எண்களோ எழுத்துக்களோ முன்னிட்டு ஒழுங்கு முறையில் எழுதுவது.
- எண்களேதும் இடாமல் Bulleted List என்று எழுதுவது.
- அந்த ‘புல்லட்’களுக்குப் பல வடிவம் இருக்கலாம்
- வட்டக்குறி, அம்புக்குறி, சதுரக்குறி, சிரிப்பான் எனப் பல.
கணினியிலன்றிக் கையில் வெற்றுத் தாள்களில் எழுதும்போது இயல்பாக வட்டக்குறி இட்டே பட்டியல் இடுவது வழக்கம். இந்த வட்டக்குறிக்கே குத்துப்புள்ளி எனப் பெயர் என்பது எனது முடிபு. இங்கே புல்லட் என்பதைக் குண்டு, ரவை, தோட்டா என்றா சொல்ல முடியும்? 🙂 ஆக, புல்லட் என்பதற்குக் குத்துப்புள்ளி என்று அனைவரும் பயன்படுத்தலாம் என்று இதனால் அறிவிக்கிறேன்!
கூகுளில் கூடத் தேடிப் பார்த்தேன். மெய்யெழுத்துக்கு வைக்கும் புள்ளியைத் தான் சிலர் குத்துப்புள்ளி என்று வழங்கி வந்துள்ளனர். ஆனால், அதனை வெறும் புள்ளி அல்லது மெய்ப்புள்ளி என்று சொல்வதே போதுமானதும் ஏற்கனவே வழங்கி வருவதுமாகும். அதனால், குத்துப்புள்ளி என்றால் bullet (in a list) என்பதே. இந்தப் பயன்பாட்டை, பாவனையை வேறு யாரும் அறிந்திருந்தால் அது பற்றி அறியத் தந்து வலுச்சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (எத்தனை பொற்காசுகள் இக்கண்டுபிடிப்புக்குக் கிடைத்தாலும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம் 🙂 ). தவறெனிலும் சுட்டிக் காட்டுக. (ஆனால், அதற்குப் பரிசு ஒன்றும் கிடையாது).
குத்துப்புள்ளியிட்டுச் செய்ய வேண்டிய உருப்படிகளை (items) எழுதி வைத்தால் மட்டும் ஆயிற்றா? அதனைச் செய்ய வேண்டுமே. இல்லையெனில் பட்டியல் வளர்ந்து பெற்ற பிள்ளைகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது மட்டும் தான் மிஞ்சும்.
நிற்க. நான் அப்படி ஒன்றும் மோசமானவனில்லை என்று சுயக்காப்பு வாதத்தையும் இங்கே வைக்க வேண்டும். அவ்வாறான ஒரு தோற்றப்பிழைக்கான காரண காரியத்தையும் அடுக்க வேண்டும். (மூச்! இங்கே நீங்கள் எதுவும் சொல்ல அனுமதியில்லை:-) ).
முதலில், செய்ய வேண்டியன பட்டியலில், மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய வேலைகள் இருப்பின் அதை மீண்டும் மீண்டும் தாளில் எழுதி அடிக்க வேண்டும். ஒரு தாளில் பாதி அடித்தும் பாதி இன்னும் உயிரோடும் இருக்கும் போது ஒரு ஒழுங்கு நேர்த்தி கருதி, வேறோர் தாளெடுத்து இன்னும் மிச்சம் இருப்பதை மட்டும் எழுதி வைக்க வேண்டும். அல்லது சட்டைப் பையில் வைத்திருந்த காகிதம் வெய்யல், மழை, வியர்வை, போன்று வேறு பல காரணிகளால் பாழ்பட்டுப் போகும் போது, மீண்டும் புதிய தாள், இற்றைப்படுத்திய பட்டியல் என்று மாற்ற வேண்டும்.
இந்தக் காரணங்களால், தாளில் போடப்படும் பட்டியலுக்குச் சில குறைபாடுகள் இருக்கின்றன. கணினிகளும், கையடக்கக் கருவிகளும் வந்துவிட்ட இக்காலத்தில், மின்பட்டியல்கள் இவ்வேலையை மிகவும் எளிதாக்குகின்றன. ஒரு முறை செய்யவேண்டிய வேலை, காலத்தில் மீண்டும் மீண்டும் செய்யவேண்டியது என்று அமைத்து விடலாம். புதிய இடுகையை, இவ்வேலை முடித்தவுடன் உண்டாக்கு என்றோ, குறிப்பிட்ட தேதியில் மீண்டும் உண்டாக்கு என்றோ தொடக்கத்திலேயே அமைத்துவிடலாம்.
இப்படி ஒரு பட்டியல் போடவேண்டும் என்றே கேசியோவின் கைக்கருவி ஒன்றை தொண்ணூறுகளில் வாங்கி வைத்திருந்தேன். ஓரிரண்டு வருடம் நல்ல உழைப்பைத் தந்த அக்கருவி, பொட்டுபொசுக்கென்று ஒரு நாள் உயிரை விட்டது. ஊழ்வினையின் காரணமாய் அதில் இருந்த தரவுகள் வேறு எங்கும் சேமிக்கப்படவில்லை. கணினிக்கு இணைக்கும் வழிவகைகள் அன்று அதற்குக் கிடையாது.
ஏதோ, இக்கருவிக்கும் முன்னரான தாள்களில் அமைந்த திட்டத் தரவுகள், முகவரிகள் போன்றவற்றை இன்னும் வைத்திருந்ததால் (நாம் தான் பழையதை அவ்வளவு எளிதில் தூக்கி வீசிவிட மாட்டோமே 🙂 ), மீண்டும் பொறுமையாக என்னால் அவற்றை மீட்டெடுக்க முடிந்தது.
அதன் பிறகு, 1995/96 காலகட்டத்தில், பால்ம் பைலட் என்னும் செங்கல் எடையில் ஒரு கருவி சந்தைக்கு வந்தது. கணினிக்கு இணைப்புக் கொடுத்துத் தரவுகளைக் கைக்கருவியிலோ கணினியிலோ ஏற்றிக் கொள்ளலாம்; ஆக, ஒரு பிரதி சேமிப்பில் இருக்கும் போன்ற நற்காரணங்களால், அதிலும் ஒன்றை வாங்கி வைத்தேன். அதுவும் ஓரிரண்டு வருடங்கள் உழைத்துப் பின் உடைந்து போக, பால்ம்-2 (அ) 3, பிறகு பால்ம் Z22 என்று பலவும் வாங்கினேன். முகவரிகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள உதவிய அளவிற்குச் செய்யவேண்டியன பட்டியலுக்கு இவை பெரிதாய் உதவவில்லை. இதற்கான காரணம் கருவியன்று, கருத்தா தானே என்பது தெளிவாய் இருந்திருக்க வேண்டும்.
கையிலே ஒரு தாளிலே குத்துப்புள்ளியிட்டு எழுதி, அதனைச் செய்து முடித்தபின் பேனாவைக் கொண்டு அழுத்தம் திருத்தமாக அதனைக் கோடிட்டு அடித்து நீக்குவதில் இருக்கும் அந்த நிறைவு, மின்கருவிகளில் தெரியும் பொட்டியில் ஒரு ‘டிக்’ பொட்டு வைத்து அது தானாக அவ்விடுகையை நீக்குவதிலோ, அடித்துக் காண்பிப்பதிலோ இருக்கவில்லை. அதனால் மீண்டும் தாள்/பேனா/கை முறைக்கே மாறிக்கொள்ளலாம் என்று எண்ணிய காலகட்டத்தில் பிராங்க்ளின் கவி என்னும் மொட்டைதலையர் ஒரு புதிய முறையைக் கொண்டு வந்து புகழ் பெற்றும் வணிகம் செய்தும் பரப்புரை செய்து கொண்டிருந்தார்.
சரி, அதையும் செய்து பார்ப்போமே என்று ஓரிரண்டு வருடங்கள் இறங்கிப் பார்த்தேன். சுருக்கமாகச் சொன்னால், அவரது முறையில் வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்று நம்மைக் கேட்டுக் கொன்டு அதனை ஒரு முதன்மைப் பட்டியலில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் இருந்து இந்த மாதம் என்ன செய்து முடிக்கலாம் என்று மாதப்பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை அதனைப் பரிசீலித்து, அதிலிருந்து செய்யவேண்டியவை பற்றிய பட்டியல் எடுத்து எவற்றை என்று செய்வது என்று அந்த வாரம் முழுவதுக்கும் அந்தந்த நாளுக்குரிய நாட்காட்டிப் பக்கத்தில் எழுதிக் கொள்ள வேண்டும். அவற்றையும் முக்கியமானது, செய்தால் நல்லது, செய்யாவிட்டாலும் பரவாயில்லை (:-) ) போன்ற வகைப்படுத்திக் குறிப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் செய்ய முடியவில்லை என்றால், அவற்றை எடுத்து மறுபடி வேறு எப்போது செய்யவேண்டும் என்று எண்ணி அந்த நாளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு எளிமையான சிறு பட்டியலையே வைத்துக் கொண்டு கட்டி அழ முடியாதவன், இத்தனை வேலை செய்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள்? நானும் எழுதிய ஒன்றையே திரும்பத் திரும்ப அடுத்தடுத்த நாட்களில் எழுதியது தான் மிஞ்சியது. இதை எப்படி இரண்டு வருடங்கள் செய்தாய் என்று கேட்காதீர்கள். நாம் தான் எதையும் எளிதாய் விட்டுவிடும் ஆள் அல்லவே.
இணையம் பரவலான காலத்தில் இணைய தளங்களிலேயே இப்படிப் பட்டியலிட்டுக் கொள்ளும் வசதி வந்து குவியத் தொடங்கிவிட்டது. நானும், அதில் ஒவ்வொன்றையும் போய்ப் பார்த்து முயன்று கொண்டிருக்கத் தொடங்கினேன். அவர்களும் வேண்டிய வேண்டாத வசதிகளை எல்லாம் தொடர்ந்து தரவே முயன்று கொண்டிருந்தார்கள். அதில் கடந்த சில ஆண்டுகளில் பரிசோதித்த சில:
இதற்குள் ஆப்பிள் வெளியிட்ட ஐபோனைக் கண்டு மயங்கி பால்ம்-ஐ விட்டு அதற்குத் தாவினேன். முகவரிகளைச் சேர்த்து வைக்கவும், காலண்டர் எனப்படும் நாட்காட்டி/நினைவுபடுத்தியினைப் பயன்படுத்தவும், செய்யவேண்டிய பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்பதெல்லாம் அதனை வாங்க நியாயப்படுத்திய காரணங்கள். ToodleDo.com என்னும் வலைத்தளத்தினையும் அதன் இணையான ஐபோன் செயலியையும் வைத்திருக்கிறேன் (இங்கே பயன்படுத்துகிறேன் என்று சொல்லாமல் வைத்திருக்கிறேன் என்று சொல்வது மிக நுட்பமான ஒன்று என்பதைக் கவனிக்க வேண்டும் 🙂 ).
அண்மையில் டேவிட் ஆலன் என்பார் ஒருவர் ‘செய்வன செய்து முடித்தல்’ (Getting Things Done) என்று அவரும் ஒரு திட்டத்தையும் அதற்கான புத்தகங்கள், அறிவுரைக் கூட்டங்கள் என்று தானொரு வணிகம் செய்து வருகிறார். எனது அலுவலகத்தில் ஒரு குழுவில் அதுபற்றிக் கேட்கப் போக, அங்கு அவர் எழுதிய புத்தகம் கொடுத்தார்கள். அவர் கூறும் முறை கேட்க நன்றாகத் தான் இருந்தாலும், அதனைச் செயல்படுத்த இறங்கலாமா என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. எளிமையாக இல்லாத எதுவும் நிலைக்காது. அதனால், அவர் கூறுவதில் இருக்கும் சில நல்லவற்றை, பிடித்தவற்றை எடுத்து நமது சொந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் பார்த்து வருகிறேன். ஒரு வகையில், செய்கிறோமோ இல்லையோ, திட்டங்களைப் பட்டியலில் போட்டு வைத்துக் கொண்டாலே, அவற்றை நினைவு வைத்திருக்கிறோமா, மறந்துவிட்டோமா என்பன போன்ற மன அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளவேனும் குறைந்தபட்சப் பயனை இப்பட்டியல்கள் தருகின்றன என்பேன்.
இப்போது குத்துப்புள்ளித்தாள், ஐபோன், டூடுள்டூ போன்ற பலவற்றையும் கலந்து கட்டி ஆடிவருகிறேன். இவையெல்லாம் சொந்த வேலைகளுக்கு. அலுவலக வேலைகளுக்குத் தனியாக மைக்ரோசாவ்ட் அவுட்லுக், சேர்ப்பாயிண்ட்டு, எக்சல் பட்டியல் என்று அதன் கதை தனியாக நீளும்.
இவ்வாறாகப் பட்டியல் போடும் முறைகளையே ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளும் அளவிற்குத் திறம்படச் செய்து வரும்போது, என்னையும் என் பட்டியல்களையும் பார்த்துக் கிண்டல் செய்வது நியாயமா என்று நீங்கள் தான் கூறவேண்டும். 🙂
// அதனால், குத்துப்புள்ளி என்றால் bullet (in a list) என்பதே. இந்தப் பயன்பாட்டை, பாவனையை வேறு யாரும் அறிந்திருந்தால் அது பற்றி அறியத் தந்து வலுச்சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.//
இந்தப் பயன்பாட்டை கேள்விப்பட்டதில்லை. ஆனால் குத்துப்புள்ளி என்பதை இலக்குக்குறி என்று எடுத்துக் கொண்டால் சரி வருமா? அம்பு அல்லது குண்டு தாக்க வேண்டிய இலக்கு என்பது போல செய்து முடிக்க வேண்டிய வேலை அல்லது தேவையான பொருள் என்று பட்டியல் போடும் பொது ஒவ்வொரு வரியும் இலக்குதானே? சரியென்று பட்டால் பொற்காசுகள் கிடைத்தால் மறக்காமல் அனுப்பி வைக்கவும். 😉
ஆஹா.. இவ்வளவு வழி முறைகளா?
நான், sticky notes என்னும் கருவியின் மூலம் எனது மடிக்கணினி திரையில் செய்ய வேண்டிய காரியங்களை ஒட்டி ஒட்டி, அது சமயத்தில் முழுத்திரையையும் மறைக்கும் அளவிற்குப் போகும் 🙂
அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை, உபயோகப்படுத்தப்பட்ட தாள்களின் பின்புறம் பேனாவால் எழுதி, வேலை முடிந்த பின்பு அதனை அடித்துத் தள்ளும் ஒரே வேற்றுக் கிரகவாசி நானாகத்தான் இருப்பேன் 🙂
தாசில்தார் அலுவலகம் என்பதை வட்டாச்சியர் அலுவலகம் என்று சொல்லாம உட்டுட்டீங்களே 🙁 . குத்துப் புள்ளித் தாள் — இது வரை கேள்விப்படாத பெயர்தான், எப்படி இந்த பெயர் வந்திருக்கும் என நீங்கள் கூறிய காரணமும் சரியாதான் இருக்கு. அந்த தாளை எதிலாவது குத்திவச்சிருவாங்களா? அதனால அப்படி பெயர் வந்திருக்குமோ? கேசியோ நிறுவன பொருட்கள் தரமானதான் இருக்கும் அதுவே 2 ஆண்டுகளில் மண்டைய போட்டுறுச்சுன்னா அதுக்கு காரணம் அதிக பலுன்னு தான் இருக்கும் (இயந்திரமா இருந்தாலும் அதுவும் அதோட திறனுக்கு மேல் தாங்க முடியாதில்ல) ;-).
SK, உங்களுக்குப் பொற்காசுகள் கிடையாது. 🙂 உங்கள் சொந்தக் கற்பனையில் நீங்கள் புதிதாக ஒரு தேற்றம் சொல்கிறீர்கள். எனது கண்டுபிடிப்புக்கு வலுச்சேர்க்கவில்லை. 🙂
பதி, StickyNotes போல இன்னும் சில குறிப்புச்செயலிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை இப்பட்டியலுக்குச் சரிவருவதில்லை என்பது என் எண்ணம். தவிர, அவை ஒரு கணினியில் சிறைப்பட்டிருக்குமே. நமக்கு எங்கு வேண்டுமானாலும் இப்பட்டியல் கைப்படவேண்டும் 🙂
குறும்பன், முதலில் வட்டாட்சியர் அலுவலகம் என்று தான் எழுதி இருந்தேன். பிறகு ஒரு ஐயம் உண்டானதால் நீக்கி விட்டேன். இப்போது சேர்த்துவிட்டேன்.
தாசில்தார் தான் வட்டாட்சியரா? வட்டம் என்பது தாலுகா என்றும் வழக்கம் உண்டு. தாலுக்காப்பீசு என்றும் பெயர் உண்டு, அவை இரண்டும் ஒன்றுதானா, வெவ்வேறாய் அந்த வளாகத்தில் இருந்தவையா என்ற விரிவான தகவல்கள் குறித்து ஐயமுண்டானது. அந்தச் சாலையின் பெயரே கச்சேரி வீதியா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியிருந்தது. கூகுள் வரைபடங்கள் உதவவில்லை. பிறகு அங்கிருந்த ஒரு கனரா வங்கியை நினைவுகொண்டு தேடிக் கண்டுபிடித்தேன். கடந்து போன ஆண்டுகளின் மங்கும் நினைவுகளைப் பிடித்து வைத்துக் கொள்வது சற்று வருத்தம் தருகிறது. அது பற்றி வேறொன்றும் எழுத எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
டு டூவுக்கே இவ்வளவா…நாமெல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை என்பதால் புதியன புகுதலாக இருக்கிறது, தகவல்கள். இப்போவரைக்கும் எங்க ஆயாதான் என்னோட டு டூ லிஸ்ட், காலண்டர் எல்லாமும்… 🙂 பழையன கழிதலிலிருந்து புதியன புகுதல் வரைக்கும் நல்லதொரு வாரம்….நன்றி
very good collection,
Applauds to you