இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

பழையன கழிதலும்

January 17th, 2012 · 24 Comments

"பழச விட்டுடு; புதுசா புடிச்சுக்கோ" என்று போகித்தருமர் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்; அவர் நினைவாகத் தான் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் என்று போகிற போக்கில் கதை விடலாமா என நினைத்தேன். ஆனால், அதுதான் அன்றே தமிழன் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே" என்று நன்னூலில் எழுதி வைத்திருக்கிறானே! மிகவும் பரவலாய் அறியப்பட்ட நன்னூல் வாசகம் இதுவாகத் தான் இருக்கும். இணையத் தேடலில் இதற்குப் பற்பல ஆயிரம் தேடல் முடிவுகள்! அதனால் எனது கதை இங்கு செல்லவும் செல்லாது. தேவையும் இல்லை.

old-new

நன்னூல்க்காரர் இதை எனக்கென்றே எழுதி வைத்திருக்கவும் ஒரு சாத்தியம் இருக்கிறது. எதையும் எளிதில் விட்டுவிட முடியாமல் சேர்த்து வைக்க முயலும் நான், அண்மையில் இந்தப் பழையன விட்டுவிடுதலில் கொஞ்சம் நுழைந்து பார்த்தேன். ஆகா! என்ன ஒரு சுதந்திர உணர்வு. பழந்தமிழன் சொல்லி வைத்துப் போன ஒன்றை இப்படியாகச் செய்ய வைத்த பழி பாவத்தை எனது அலுவத்தார் மீது தான் போட வேண்டும்.

வருடத்தில் ஒரு நாளைப் பழையன கழிதலுக்கென்றே ஒதுக்கி வைத்து, அன்று காலை மதியம் எல்லாம் உணவும் தந்து, இன்று முழுதும் நீங்கள் வேலையே செய்ய வேண்டாம்; ஆனால், நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற பழைய கோப்புக்கள், திட்ட ஆவணங்கள், புத்தகங்கள், கணிப்பொருட்கள், இன்ன பிற ஆகாதவை என எல்லாவற்றையும் பரிசீலித்து, முக்கியமானவற்றைப் பத்திரப்படுத்திக் கொண்டு மற்றவற்றைக் கடாசி விடுங்கள் என்று அறிவித்தினர். இது ஏதோ ஒரு முறை மட்டும் நடப்பதல்ல. வருடா வருடம் ஈற்றுக் காலாண்டில் இந்தப் பண்டிகை நடக்கும்.

நானும் கல்லூரிக் காலத்தில் இருந்து சேகரித்துப் பெட்டி பெட்டியாகச் சென்ற இடங்களில் எல்லாம் தூக்கி அலைந்து கொண்டிருந்த சிலவற்றை அவ்வருடம் அலுவப்போகியில் எறிந்துவிட்டேன். நேரம் இருக்கும்போது படிக்கலாம் என்று மாதா மாதம் தேக்கி வைத்த நுட்ப இதழ்கள் பல ஆண்டுகளில் மலையெனக் குவிந்து கிடந்தன. சில ஆவணங்கள்/கோப்புகள் என்னிடம் இருக்கிறது என்பதே மறந்து போயிருந்தது. சில ஆய்வு அறிக்கைகள் மிகவும் பழசாகி விட்டிருந்தது. அதைவிட முன்னேறிய அறிக்கைகள், தரவுகள் முதலியன தேவைப்படும்போது இணையம் முதலான பிற தரவுதளங்களில் எளிதில் பெற முடிந்தது. சிலவற்றில் குத்தி வைத்த குண்டூசி கூடத் துருப்பிடித்துக் கிடந்தது. சில, இனி வாழ்நாளில் என்றும் தேவைப்படாதது. மொத்தத்தில் அது ஒரு விட்டு-விடுதலையாகும் அருமையான உணர்வாய் இருந்தது. நீங்களும் கூட முயன்று பாருங்கள்.

உற்சாகம் என்னைத் தொற்றிக் கொள்ள, அந்தப் பழக்கத்தை அப்படியே வீடு வரை இழுத்து வந்தேன். கால காலமாய்ச் சேர்த்து வைத்த சொத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்துத் தூக்கி வீசிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும், இன்னும் அந்தப் பத்தாம் நிலையில் வரைந்த விலங்கியல், புதலியல் ஆய்வு ஆவண ஏடுகளை விட்டுவிட முடியாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். மண்டி போட்டுக் கொண்டு புள்ளி புள்ளியாய் வைத்து வரைந்து அலங்கரித்த அந்த நினைவுகளும் எறிந்துபடுமோ என்று தயக்கம். அந்த நாள், இடம், பொருள், வாசனை என்று அனைத்திற்கும் சாட்சியாக இருந்து மனதில் படங்களாகச் சேகரித்து வைத்திருப்பனவற்றை இழந்து விடுவோமோ என்று அச்சம். குறைந்த பட்சம், அதற்கு முன்னர் என் மனைவி, மக்களிடம் அதனைப் பகிர்ந்து கொள்ள மாட்டோமா என்ற கவலைகள். மனைவிக்கோ தனது சொந்தச் சரக்குகள் நிறைய இருப்பதில் இதற்கெல்லாம் நேரம் கிட்டாது. வளர்ந்து வரும் மக்களின் கவனங்களை ஈர்க்க வேறு பல ஈடுபாடுகள் போட்டிக்கு வந்துவிட்டது. இதையெல்லாம் உணர ஆரம்பித்திருப்பதில், இப்போது கொஞ்சம் மனம் வந்து இப்பழையனவற்றைப் பரிசீலிக்க ஆரம்பித்திருக்கிறேன். நம்புங்கள். இது உண்மை தான். இளநிலைப் பொறியியல் அரையாண்டுத் தேர்வுகளுக்காகக் கொடுக்கப் பட்டிருந்த தேர்வறை நுழைவுச்சீட்டுக்களை எல்லாம் இத்தனை ஆண்டுகள் ஆச்சே இனித் தேவைப்படாது என்று சென்ற வருடமே எறிந்துவிட்டேன்! 🙂 எல்லாமே போச்சே!

இதிலே வீட்டினுள்ளேயே போட்டி வேறு. நான் தான் நிறையச் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று மனைவி குற்றம் சாட்டுவதும், ‘அப்படியா, இங்கே வா, இதெல்லாம் யாருது’ என்று அவருடைய மூட்டைகளைச் சுட்டி நானும் பேசிக் கொண்டிருக்கிறோம். "அதெல்லாம் என்னோடது. முக்கியமானது. நீ தொடாதே" என்று வீராப்புகள் வேறு. ஆனாலும், இந்தப் பழக்க வழக்கம் எம்மக்களிடமும் தொற்றிக் கொள்ளுமோ என்று இப்போது கவலைப் பட வேண்டியிருக்கிறது. நிவேதிதாவிடம் பிரச்சினை இல்லை. அவளுடைய பள்ளிச் சரக்குகளை அவளை விட நாங்கள் தான் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நந்திதாவிடம் இருந்து எதையேனும் பிடுங்குவதற்குச் சாம தான தண்ட பேதங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. ஏதேனும் ஈனியல் தொடர்பாய் இருக்குமோ என்னவோ!

இவை இருக்க, ஒரு நாள் எனது பள்ளி நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தபோது பழைய நண்பர்கள் தொடர்பு விவரங்களை எல்லாம் சேகரிக்க வேண்டும், யார் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், என்றெல்லாம் சேகரிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், இத்தனை ஆண்டுகளில் யார் யாரெல்லாம் உடன் படித்தவர் என்பது கூட மறந்து விட்டிருந்தது. என்ன செய்ய? நாம் என்ன செய்து காக்க நினைத்தாலும், கடந்து போகும் ஆண்டுகள் சில பல நினைவுகளையும் கரைத்துவிட்டே தான் செல்கின்றன.

பிறகொரு நாள் என் புதையல் மூட்டைகளில் ஒரு அட்டையைக் கண்டு பிடித்தேன். அதில், இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் உடன் படித்த அனைவரது பெயரையும் அவர்கள் பள்ளி முடித்து என்ன செய்யப் போனார்கள், எந்தக் கல்லூரிக்குப் படிக்கப் போனார்கள் என்றும் எழுதி வைத்திருக்கிறேன். இதெல்லாம் தேவையில்லை என்று ஒரு நாள் தூக்கி எறிந்திருந்தால் இன்று அது ஒரு இழப்பாகத் தானே இருந்திருக்கும்? இது தான், இந்த அச்சம் தான் இன்னும் பலவற்றைக் கட்டிக்கொண்டே இருக்க வைக்கிறது.

ஆனாலும், பழைய மூட்டைகளை விடுத்து வாழும் சுதந்திர உணர்வும் ஈர்ப்பதாகத் தான் இருக்கிறது. அதனால் என்ன? படங்களையும், பட்டியலையும், ஆவணங்களையும் எண்ணிமக் கோப்புகளாக வருடி வைத்துக் கொள்ளலாம். இப்படிக் கணினிக் கோப்பாகவும் சேர்த்துச் சேர்த்து வைப்பதையும் ஒருநாள் கழிக்கத் தான் வேண்டும். இவை இடங்களை அடைப்பதில்லை என்றாலும், ஒரு கட்டுக்குள் இன்றி மனத்தகைவுகளுக்குக் காரணங்களாய் இருக்கலாம்.

மீண்டும் எனது நிறுவனக் கொள்கை ஒன்றே இங்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. அண்மையில் அறிவித்த திட்டத்தின் படி இனிமேல் எங்கள் அலுவக் கணிகளில் ஒரு வருடத்திற்கும் மேல் மாற்றாத கோப்புக்களை வைத்திருந்தால், நீக்கி விட வேண்டும் என்பதே. இல்லையெனில், தானாக ஓடும் ஒரு நிரல், அவற்றைக் கண்டுபிடித்து கவனத்தை ஈர்க்கும். ஒரு எச்சரிக்கைக் காலம் தந்து தானாகவே அவற்றை அழித்து விடும். இவையெல்லாம் தகவல் மேலாண்மை என்னும் பெருந்திட்டத்தின் கீழ் வரும் பல கூறுகள்.

காலகாலமாய்க் கூடை கூடையாகச் சேர்த்து சேர்த்து வைத்த பொறியாளர்கள் இது கண்டு பொங்கி முறையிட்டுப் பார்த்தார்கள். இது போல் பெரும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மனசு தயாராய் இருப்பதில்லை. ஆனால், பெரிய நிறுவனத்தில் இந்தப் பொங்கலுக்கெல்லாம் வேலையே இல்லை. அப்படிப் பயனுள்ள கோப்பாக இருந்தால் எல்லோருக்கும் உதவும் வண்ணம் பொதுவான பகிர்வலையில் சேர்த்து வை என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் சரி தான் என்று ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். முன்பு போல் வந்தவை, அனுப்பியவை பட்டியலில் அலுவ மடல்கள் அனைத்தையும் பெரும்பாலும் சேர்த்து வைத்த பழக்கம் போய், அவசியம் இருக்கும் மடல்கள் தவிர பிறவற்றை அழித்துக் கொண்டு இருக்கிறேன்.

இந்தப் பழக்கத்தையும் வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும் தான். ஆனால் படங்களும், அசைபடங்களுமாய்ப் பழைய வடிவங்களில் இருக்கிற நினைவுகளைப் புதிய எண்ணிம முறைகளுக்கு மாற்றிவிட்டுத் தூக்கிப் போடலாம் என்று தள்ளிப் போட்டு வருகிறேன். ஆனால், நான் கேட்கவே போகாத பழைய பாட்டு ஒலிநாடாக்களை எதற்கு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் புரியவில்லை.

பழையன கழிதல் என்றால் இப்படியாகச் சேர்த்து வைத்து குப்பைகளை விடுப்பது மட்டுமல்ல. புறவெளியில் மட்டுமின்றி, அகவெளியிலும் பழையனவற்றைக் கழித்து விட்டுப் புதியனவற்றைச் சேர்க்கலாம்.

மனசுக்குள்ளே சிலவற்றை மறக்கலாம். மன்னிக்கலாம். மாற்றிக் கொள்ளலாம். புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளலாம். புத்துணர்ச்சி கொள்ளலாம். எதிலாவது ஈடுபடலாம். ஏன் புத்தாண்டுக்குத் தீர்மானங்கள் கூடச் செய்து பார்க்கலாம். நடக்கலாம். பறக்கலாம். சிறக்கலாம்.

போதும் போதும் என்னும் அளவிற்குப் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்னும் சொற்றொடரையும் இத்தனையாண்டுகளில் படுத்தி எடுத்துவிட்டதில், அதைக் கூடச் சில காலத்துக்குச் சொல்லாது இனி விட்டு வைக்கலாம். 🙂

Tags: பொது · வாழ்க்கை

24 responses so far ↓

 • 1 Thangamani // Jan 17, 2012 at 4:32 am

  🙂 பொங்கல் வாழ்த்துக்கள் செல்வா.

 • 2 ஜோதிஜி திருப்பூர் // Jan 17, 2012 at 9:21 am

  உங்கள் எழுத்து நடையை வாசிக்கும் போது இப்படியெல்லாம் நம்மால் எழுத முடியுமா? என்ற கேள்வி ஒவ்வொரு முறையும் உருவாகின்றது.
  உங்கள் பணி, இடம், சூழ்நிலை காரணமாக நிறைய விசயங்களை விட்டுக் கொடுத்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். உருப்படியாக தொடர்ந்து முயற்சியிருந்தால் இந்த எழுத்துலகில் பல படிக்ளை நீங்கள் தாண்டியிருக்க முடியும்.

 • 3 Senthil // Jan 17, 2012 at 11:16 am

  மிக அழகான நடை மட்டுமல்ல, செய்திகளுக்குள் ஒளிந்துள்ள தங்களின் உண்ர்ச்சி படிப்போரின் உள்ளத்தையும் ஈர்க்கிறது. பாராட்டுக்கள்.
  “பழையன கழிவது” என்பது சாதாரணமானது அல்ல. நான், பல முறை செய்யது துணிந்து இறுதியில் தோற்றுப் போயிருக்கிறேன் என்பதே உண்மை.

 • 4 இந்தியன் // Jan 17, 2012 at 1:58 pm

  சிந்தனையைத் தூண்டும் இடுகை.

  //இளநிலைப் பொறியியல் அரையாண்டுத் தேர்வுகளுக்காகக் கொடுக்கப் பட்டிருந்த தேர்வறை நுழைவுச்சீட்டுக்களை எல்லாம் இத்தனை ஆண்டுகள் ஆச்சே இனித் தேவைப்படாது என்று சென்ற வருடமே எறிந்துவிட்டேன்! எல்லாமே போச்சே!//

  அடோ சாமீ! 🙂

  திருநெல்வேலி படத்துக்கு விவேக் “அந்தப்” பேப்பர உங்களிடம்தான் இரவல் வாங்கினாரோ? 🙂

  //மீண்டும் எனது நிறுவனக் கொள்கை ஒன்றே இங்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. அண்மையில் அறிவித்த திட்டத்தின் படி இனிமேல் எங்கள் அலுவக் கணிகளில் ஒரு வருடத்திற்கும் மேல் மாற்றாத கோப்புக்களை வைத்திருந்தால், நீக்கி விட வேண்டும் என்பதே. இல்லையெனில், தானாக ஓடும் ஒரு நிரல், அவற்றைக் கண்டுபிடித்து கவனத்தை ஈர்க்கும். ஒரு எச்சரிக்கைக் காலம் தந்து தானாகவே அவற்றை அழித்து விடும். இவையெல்லாம் தகவல் மேலாண்மை என்னும் பெருந்திட்டத்தின் கீழ் வரும் பல கூறுகள்.//

  இதை என் மடிக்கணினிக்கும் வாரந்தர வழக்கமாக்கிய பெருமை விண்டோஸ் விஸ்டாவையே சாரும் 🙁

 • 5 Sundaravadivel // Jan 17, 2012 at 6:36 pm

  இன்றுதான் உணவகத்தில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் முற்றினாலும் வியாதியாகிப் போகும் (hoarding). பாரதியின் பாடலொன்றில், குள்ளச்சாமி என நினைக்கிறேன், ஒரு அழுக்கு மூட்டையை அந்தச் சாமியார் தூக்கிக் கொண்டே திரிவார். விரட்டிப் பிடித்து பாரதியார் கேட்டபோது, புறத்தே நான் சுமக்கிறேன், அகத்தே நீ சுமக்கிறாய் என்பார். இதெல்லாம் இல்லாமலிருந்தாலும் வறண்டு போகும். ஒரு நிதானத்துல போக வேண்டியதுதான்!

 • 6 இரா. செல்வராசு // Jan 17, 2012 at 8:37 pm

  சுந்தர், “புறத்தே நான் சுமக்கிறேன், அகத்தே நீ சுமக்கிறாய்” – ஆகா… நல்லதொரு கூற்று. தேவைக்கேற்ப இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் போலிருக்கிறதே 🙂

  இந்தியன், கணிக்கோப்புகளையெல்லாம் முறையாக backup செய்து வைக்க வேண்டும் என்பதையும் உங்கள் கருத்து சொல்லுதுன்னு நினைக்கிறேன். அந்தக் கதையும் அரை குறையாய் இங்கு நடக்குது.

  செந்தில், ரொம்பச் சந்தோசங்க. நம்ம சிரமத்தைப் புரிஞ்சவங்க இருக்கறதும் ஒரு ஆறுதல் தான் 🙂

  ஜோதிஜி, நன்றி. உங்ககிட்ட இருக்கற நல்ல விசயம் – இப்படி எல்லாத்தையும் (எல்லோரையும்) பாராட்டி வச்சுடறது தான். தொடர்ந்தளிக்கும் ஊக்கத்துக்கு நன்றி.

 • 7 இரா. செல்வராசு // Jan 17, 2012 at 8:39 pm

  தங்கமணி, உங்களையும் பாத்து நாள் பலவாச்சு. ஒரு நாள் பேசுவோம். சங்கர் கிட்ட உங்க முகவரியையும் கொடுத்து அனுப்பணும் 🙂

 • 8 dharumi // Jan 18, 2012 at 1:03 am

  தங்கமணி,
  இப்பதிவின் மூலம் உங்களுக்கு என் வாழ்த்து. உங்களுடைய பழைய பதிவு ஒன்றைத் தேடி நண்பர்களிடமெல்லாம் சில காலம் கேட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவெல்லாம் என்ன ஆனது? பதிவுகளில் உங்கள் பங்கை நினைக்கிறேன். எல்லாம் விட்டு விட்டீர்களோ?!

 • 9 dharumi // Jan 18, 2012 at 1:04 am

  //நான் கேட்கவே போகாத பழைய பாட்டு ஒலிநாடாக்களை எதற்கு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் புரியவில்லை. //

  வீட்டில் இதை வைத்து பல பட்டி மன்றங்கள் … குற்றச்சாட்டுகள் .. இருந்தும் விட மனதில்லை!

 • 10 இரா. செல்வராசு // Jan 18, 2012 at 1:22 am

  >>>>தங்கமணி,
  உங்களுடைய பழைய பதிவு ஒன்றைத் தேடி நண்பர்களிடமெல்லாம் சில காலம் கேட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவெல்லாம் என்ன ஆனது?
  >>>>
  தருமி ஐயா, நீங்கள் சரியான இடத்தில் கேட்கவில்லை 🙂
  சில காரணங்களால் மொத்தமாகத் தொலைந்து போக இருந்த அவரது பதிவுகளை மீட்டெடுத்து இங்கு வைத்திருக்கிறோம்.

  http://ntmani.seerakam.com/

  வேறு நிரந்தர இடம் பார்த்துத் தொடர்வதாய்ச் சொன்னவர் காணாமல் போய்விட்டார். அவர் விரும்பும் வரை இங்கே பதிவு இருக்கும்.

 • 11 கண்ணன் // Jan 18, 2012 at 2:57 am

  நட்சத்திர வார வாழ்த்துகள் செல்வா! ஒருவாரத்திற்கேனும் இங்கே தினமும் புதிய பதிவொன்றை எதிர்பார்த்து வரலாம் என்பதில் மகிழ்ச்சி 🙂

 • 12 Thangamani // Jan 18, 2012 at 7:11 am

  நன்றி தருமீ. செல்வா, உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் மீட்டுத்தந்தற்காக. திரும்ப வலைப்பதியலாம். பேசுபொருட்களும், விருப்பும் பெரிதும் மாறிவிட்டன. நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் போது சொல்லுங்கள். சந்திப்போம். 🙂

 • 13 ராஜ நடராஜன் // Jan 18, 2012 at 7:43 am

  எழுத்தின் பரிமாணங்கள்!

 • 14 C.Karuppusamy // Jan 18, 2012 at 12:00 pm

  Thanks Mr. Selvaraj
  Nalla saithikal payanullavai.Palakkapaduthinal adhan mahimai puriu

 • 15 dharumi // Jan 18, 2012 at 12:28 pm

  மீட்டெடுத்ததற்கு நன்றி.

 • 16 selvanayaki // Jan 19, 2012 at 12:44 am

  நட்சத்திர வார வாழ்த்துகள்!

 • 17 இரா. செல்வராசு // Jan 19, 2012 at 1:42 am

  வருக செல்வநாயகி. வாழ்த்துக்கு நன்றி. பதிவுகளின் பக்கம் அதிகமாக வருவதில்லையோ என நினைத்தேன். பிறகொரு நாள் மடலனுப்பி வரச்சொல்லலாம் என நினைத்திருந்தேன். 🙂

 • 18 இரா. செல்வராசு » Blog Archive » குத்துப்புள்ளி // Jan 22, 2012 at 2:11 pm

  […] இன்னும் வைத்திருந்ததால் (நாம் தான் பழையதை அவ்வளவு எளிதில் தூக்கி வீசிவி… மாட்டோமே ), மீண்டும் பொறுமையாக […]

 • 19 குமரன் // Jan 27, 2012 at 12:38 pm

  வணக்கம்…
  இந்த கட்டுரையும் அதற்கான கருத்துகளும் அருமை…

  எனக்கு 15 நாட்களுக்கு முன் மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு நல்ல தூய தமிழ் பெயர்களை தேடும் பொழுது, இந்த வலைத்தளம் அகப்பட்டது.

  எனக்கும் பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று விருப்பம்.

  சரி தூய தமிழ் பெயர் என்று எப்படி முடிவு செய்வது? தூய தமிழ் என்றால் எதை மட்டும் எடுத்து கொள்வது?

  “பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே” – நன்னூல்.

  சரி எனக்கு புதியன வேண்டாம்! பழைய தமிழ் சொற்கள் தான் வேண்டும் என்றால், எந்த காலத்திய தமிழ் சொற்களை எடுப்பது?

  பழைய தமிழ் சொற்களுக்கு புள்ளி வாய்த்த எழுத்துகள் கிடையாதாம்?

  சில சுவடிகளில் ஷ், ஸ்ரீ… போன்ற சொற்களும் தமிழ் மொழிக்கான புதிய சொற்களாக இணைக்க பட்டுள்ளன. இதை யார் முடிவு செய்வது?

  சரி, அந்த கால சொற்கள், வார்த்தைகள் மட்டும் தான் தமிழ் என்றால் “வலைத்தளம்”,…. போன்றவற்றை எந்த மொழி சொல் என்பது?

  தமிழில் அனைத்து எழுத்துகளும் சொற்களும் ஒரே நாளில் உருவானவை கிடையாது. தேவையின் படி, புதிய எழுத்துகள் சொற்கள் இணைக்க படுகின்றன. அப்படிதான் “வலைத்தளம்” தமிழ் சொல் ஆனது என்பது என் கருத்து.

  சரி வேண்டாம். தமிழ், சமஸ்கிருதம் பற்றி படிக்கும் பொது, தமிழில் “முகம்” என்ற வார்த்தை கிடையாதாம். முகம் என்று சொல்லும்போது, மு-ம் இடையில் வரும் ஒலி தமிழ் “க” போல் இருக்காது.
  அது மருவி வந்ததாம். மருவி வருபவை தமிழ் சொற்கள்/வார்த்தைகள் ஆகலாமா?

  இக்குழப்பம் மிக நெடும் காலமாய் இருக்கிறது…. என்று தீருமோ?

  இருந்தாலும், தூய தமிழ் பெயர் தான் என் மகனுக்கு… அதில் தினையளவு கூட மாற்றமில்லை….
  தமிழ் பெயர்கள் பட்டியலில், தமிழ் பொருள் இருக்கும் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய பலத்த ஆலோசனைக்கு பின் முடிவு செய்துள்ளேன்.

 • 20 இரா. செல்வராசு // Jan 27, 2012 at 10:19 pm

  குமரன், உங்கள் வருகைக்கு நன்றி. முதலில், உங்கள் குடும்பத்திற்கும் மகனுக்கும் நல்வாழ்த்துகள். குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப்பெயர்கள் கொண்ட தளங்கள் இற்றை நாளில் பல உள்ளன. சில காட்டுகள் கீழே. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  http://www.peyar.in/
  http://www.tamilkalanjiyam.com/tamil_world/tamil_names/girls_names.html
  http://linoj.do.am/tamilnamegirls.pdf
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  இவை இருக்க, தூய தமிழ்ச்சொற்கள் பற்றியும், புதியன பழையன பற்றியும் நீங்கள் அதிகம் குழப்பிக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ் வாழும் மொழி. தமிழிலேயே பல புதிய சொற்களை ஆக்கிக் கொள்ள முடியும். ஆக்க வேண்டும். தேவைக்கேற்றாற்போல் புதிய புதிய சொற்களைத் தமிழ் வேர்களில் இருந்தே கிளைத்து ஆக்கலாம். அது சிறப்பானது.
  அது மட்டுமன்றி, தமிழல்லாத சொற்களையும் தேவைக்கேற்பப் பிற இடங்களில் இருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம். திசைச்சொல், வடசொல் என்று இவற்றை ஏற்றுக் கொள்ளும் முறைகளைத் தொல்காப்பியமே சொல்கிறது. மற்றொன்று, பல சொற்கள், தமிழில் இருந்து வடக்கே போய், திரும்பத் தமிழுக்கே வரும்போது சற்றே அடையாளம் மாறிப் போய் இருந்தாலும் அவை தமிழே என்று மீட்டுக் கொள்ள முடியும். (இராம.கி யின் வளவு http://valavu.blogspot.com பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லையெனில் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்).

  பிரச்சினை எங்கு என்றால், தேவையில்லாத இடங்களிலும் தமிழல்லாத சொற்களை ஏற்றுக் கொள்வதும், வேண்டுமென்றே திணிப்பதும் போன்ற செயல்கள் தாம்.

  உங்கள் மகனுக்குத் தமிழ்ப்பெயரே தான் வைப்பது என்னும் உங்கள் முடிவுக்கும் வந்தனம்.

 • 21 செ.இரா.செல்வக்குமார் // Feb 1, 2012 at 10:09 pm

  அன்புள்ள செல்வராசு,
  எவ்வளவு அழகாக நுணுக்கமாக இயல்பாக, அறிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள்!! உங்கள் இனிய தமிழ் ஈர்க்கின்றது!! வாழ்க நீங்கள் செல்வராசு! நானோ ஒரு பழையதைத் தொலைக்காதே, புதியதைத் துரத்திப் பிடிக்கும் பித்துக்குளி. எனக்கு பல நேரம் பழையன புதிதாகவும், புதியன பழையதாகவும் தெரியும்! 🙂
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
  அன்புடன் செல்வா

 • 22 இரா. செல்வராசு // Feb 2, 2012 at 11:32 pm

  பேரா. செல்வா, உங்களுடைய இனிய கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து செல்ல ஊக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.

 • 23 இளம்பரிதியன் // Jan 12, 2013 at 12:25 pm

  எளிய இனிய தமிழ் நடை ………… நிகழ்வின் வெளிப்பாடாய் நும் கருத்து ……… உண்மைதான் எம் மனமும் வீசி ஏறிய மறுக்கிறது ……. பலவற்றை ………. ம் அருமை

 • 24 இரா. செல்வராசு // Jan 12, 2013 at 7:02 pm

  நன்றி இளம்பரிதியன். பொருத்தமாகப் பழைய இடுகையைப் பிடித்து வந்திருக்கிறீர்கள் 🙂 இவ்வாண்டும் கூட, பழைய குறிப்பேடு ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது பத்தாண்டு முன் நடந்த சில நிகழ்வுகள் கண் முன் நிழலாடின. இவற்றை இழக்க எப்படி மனம் வரும்? இருந்தும் ஆகாத சிலவற்றை விட்டொழித்தே ஆகவேண்டும். பரிசீலிக்க நேரம் தான் வேண்டும்.
  உங்களுக்கும் பொங்கல்/புத்தாண்டு வாழ்த்து!