இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு

January 18th, 2012 · 16 Comments

மூலம்:

Espuma y nada más  -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez)

ஆங்கிலத்தில்:

Just Lather, That’s All  -டானல்டு யேட்சு (Donald A. Yates)

தமிழில்:

நுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj)

 

 

image

 

உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் பெருவிரல் சதையில் வைத்து அதனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கணத்தில் அவன் தனது துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்த குண்டுகள் நிறைந்த கச்சையைக் கழட்டினான். சுவற்றில் இருந்த கொக்கியில் அதனை மாட்டிவிட்டு, அதன் மேலே தனது இராணுவத் தொப்பியையும் வைத்தான். பிறகு தன் கழுத்துப் பட்டியின் முடிச்சினைத் தளர்த்திக் கொண்டே என்னை நோக்கித் திரும்பி, "வெய்யல் நரகமாக் கொளுத்துது; எனக்குச் சவரம் செஞ்சு விடு" என்று நாற்காலியில் அமர்ந்தான்.

அவனுக்கு நாலு நாள்த் தாடி இருக்கும் என்று அனுமானித்தேன். எங்களது படைகளைத் தேடிச் சென்ற அவனது பயணத்தின் நான்கு நாட்கள்! வெய்யல் காய்ச்சிய அவனது முகம் சிவந்து போய்க் கிடந்தது. கவனமாக, சோப்பினைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். சில வில்லைகளை வெட்டி எடுத்துக் கோப்பைக்குள் போட்டு, சிறிது வெந்நீர் கலந்து, பூச்சுமட்டையால் கலக்க ஆரம்பித்தேன். உடனடியாக நுரை மேலெழ ஆரம்பித்தது.

"குழுவில் மத்த பசங்களுக்கும் இவ்வளவு தாடி இருக்கும்" என்றான். நான் நுரையைக் கலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

"ஆனா, நாங்க ஓரளவுக்குச் சரியாச் செஞ்சுட்டோம், தெரியுமா. முக்கியமானவங்களப் பிடிச்சுட்டோம். கொஞ்ச பேரப் பொணமாக் கொண்டாந்தோம். இன்னும் கொஞ்சம் பேர உசுரோட பிடிச்சிருக்கோம். ஆனா, கூடிய சீக்கரம் அவங்களும் செத்துப் போயிருவாங்க".

"எத்தன பேரப் பிடிச்சீங்க?"

"பதினாலு பேர். அவங்களக் கண்டுபிடிக்கக் காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போக வேண்டியிருந்துச்சு. ஆனா, பழி வாங்கீருவோம். ஒருத்தன் கூட இதிலிருந்து உசுரோட வெளிவர மாட்டான். ஒருத்தன் கூட".

என் கையில் நுரை ததும்பிய மட்டையைப் பார்த்து நாற்காலியில் பின் சாய்ந்தான். அவன் மீது இன்னும் துண்டு போர்த்த வேண்டியிருந்தது. சந்தேகமே இல்லை. நான் நிலைகுலைந்து போயிருந்தேன். பெட்டியில் இருந்து ஒரு துண்டை எடுத்து அவனது கழுத்தைச் சுற்றி முடிச்சுப் போட்டேன். அவன் பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனது கட்சிக்கு ஆதரவாளன் என்று என்னை நினைத்துவிட்டானோ தெரியவில்லை.

"நாங்க அன்னக்கிச் செஞ்சத வச்சு இந்த ஊரே ஒரு பாடம் கத்துக்கிட்டிருக்கணும்"

வேர்த்திருந்த அவனது கழுத்தின் அடியில் முடிச்சிறுக்கத்தைச் சரிபார்த்துக் கொண்டே, "ம்" என்றேன்.

"அது ஒரு அருமையான ஆட்டம், இல்லியா?"

"ரொம்ப அருமை", பூச்சு மட்டையை எடுக்கத் திரும்பியபடி சொன்னேன்.

ஒரு ஆயாசத்தோடு கண்களை மூடி, சோப்பு நுரையின் குளுகுளுத் தழுவலுக்காகக் காத்தபடி அமர்ந்திருந்தான். இவ்வளவு நெருக்கத்தில் அவன் என்னிடம் சிக்கியதில்லை. தூக்கில் தொங்கிய நான்கு போராளிகளைப் பார்க்க மொத்த ஊரையும் அந்தப் பள்ளியின் முற்றத்திற்கு அணிவகுத்து வர அவன் உத்தரவிட்ட அன்று ஒரு கணம் நேருக்கு நேர் அவனைப் பார்க்க நேர்ந்தது. ஆனால் சிதிலமாக்கப்பட்ட உடல்களின் காட்சியால், அதற்கெல்லாம் காரணமானவனின் முகத்தைப் பார்க்க இயலாமல் போய்விட்டது. அந்த முகத்தை இப்போது என் கைகளில் பிடிக்கப் போகிறேன். நிச்சயமாக, அப்படி ஒன்றும் அழகற்ற முகம் அல்ல அவனுடையது. வயதைச் சற்றே கூட்டிக் காட்டிய அந்தத் தாடியும் அப்படியொன்றும் பொருத்தமில்லாமல் எல்லாம் போகவில்லை. அவன் பெயர் டோரசு. கேப்டன் டோரசு. கற்பனா சக்தி நிரம்பியவன்; இல்லையெனில் வேறு யார் போராளிகளின் நிர்வாண உடல்களைத் தூக்கிலிட்டு, அவர்கள் உடல்களின் சில பாகங்களை மட்டும் குறியாக்கிப் பயிற்சி நடத்துவார்? சோப்பு நுரையின் முதல் பூச்சைப் பூச ஆரம்பித்தேன். கண்களை மூடியபடியே அவன் தொடர்ந்தான்.

"தூக்கம் சொக்குது. முயற்சியே செய்யாம அப்படியே தூங்கிருவேன். ஆனா இன்னிக்கு மத்தியானம் செய்யறதுக்கு நிறைய இருக்குது".

நுரை பூசுவதை நிறுத்திவிட்டு, ஆர்வம் இல்லாதது போல் காட்டிக் கொண்டு, "என்ன துப்பாக்கிச் சூடா?" என்று கேட்டேன்.

"அந்த மாதிரி ஏதோ தான். ஆனா, கொஞ்சம் மெதுவாக" என்றான்.

அவனது தாடியின் மீது நுரை பூசும் என் வேலையைத் தொடர்ந்தேன். என் கைகள் மீண்டும் நடுங்க ஆரம்பித்தன. அவனால் அதனை உணர முடியாது என்பது எனக்குச் சாதகமானது தான். ஆனாலும், அவன் இங்கு வராமலே இருந்திருக்கலாம் என்று விரும்பினேன். அவன் உள்ளே நுழைவதை எம் குழுவினர் சிலர் பார்த்திருக்கலாம். ஒருவருடைய கூரையின் கீழே எதிரி இருப்பது சில கட்டாயங்களை விதிக்கிறது. அவனுடைய தாடியையும் பிறருடையதைப் போலவே, கவனமாக, மென்மையாக நான் சிரைக்க வேண்டும். எந்தவொரு துளையும் ஒரு துளி இரத்தத்தைக் கூட வெளிப்படுத்திவிடாத வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாடிமயிரின் சிறுகொத்துக்கள் சவரக்கத்தியை அலைக்கழிக்காமல் இருக்கும்படி கவனமாக இருக்கவேண்டும். என் புறங்கையை அவன் முகத்தில் தடவும் போது எந்த மயிரும் தட்டுப்படாதவண்ணம் அவனுடைய சருமத்தைச் சுத்தமாகவும், மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆம், நான் மறைவாய் இருக்கும் ஒரு போராளி தான்; இருப்பினும் நான் மனசாட்சியுள்ள நாவிதனும் கூட. எனது தொழில்சுத்தத்தின் மீது பெருமை உள்ளவன். இந்த நான்கு நாள்த் தாடி எனக்குச் சரியான சவாலைத் தருகிறது.

சவரக் கத்தியை எடுத்து, அதன் இருபக்கக் காப்பு மூடியையும் திறந்து, கூர்மையான பிளேடை வெளிப்படுத்தி அவனது ஒரு பக்கக் கிருதாவின் கீழிருந்து என் வேலையை ஆரம்பித்தேன். கத்தி அருமையாக வேலை செய்தது. அவனது தாடி மயிர் நெகிழ்வற்றுக் கடினமாய் இருந்தது. நீட்டமாய் இன்றிக் கெட்டியாக. கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் எட்டிப்பார்த்தது. நுரையும் மயிர்த்துண்டுகளும் கலந்த குவியல் பிளேடின் மீது திரளும்போது எழும் தனித்த ஒலியை எழுப்பியபடி சவரக்கத்தி சுழன்றது. கத்தியைச் சுத்தம் செய்ய ஒரு நிமிடம் நிறுத்தினேன். பிறகு கத்தியைத் தீட்ட மீண்டும் தோல்வாரினை எடுத்தேன். ஏனெனில் நான் என் தொழிலைச் சுத்தமாகச் செய்பவன். இதுவரை கண்களை மூடி இருந்தவன், மெல்லத் திறந்து, போர்த்தியிருந்த துண்டின் அடியிலிருந்து தன் ஒரு கையை வெளியே எடுத்து சவரம் செய்யப்பட்ட ஒரு புறத்தைத் தடவிப் பார்த்துவிட்டு, "இன்னைக்கு மாலை ஆறு மணிக்குப் பள்ளிக்கூடத்துக்கு வா", என்றான்.

"அன்னைக்கு மாதிரியேவா?" திகிலுடன் கேட்டேன்.

"இல்ல. அத விட இது நல்லா இருக்கும்"

"என்ன பண்ணப் போறீங்க?”

"எனக்கு இன்னும் தெரியல. ஆனா, நல்லா கொண்டாடுவோம்னு மட்டும் தெரியும்", என்று சொல்லிவிட்டு மீண்டும் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

எனது கையில் தீட்டிய கத்தியோடு அவனை நெருங்கினேன். "அவங்க எல்லோரையும் தண்டிக்கப் போறீங்களா?" சற்றே பம்மியபடி துணிந்தேன்.  "எல்லோரையும்".

அவன் முகத்தில் சோப்பு நுரை காய்ந்து கொண்டிருந்தது. நான் விரைந்து செயல்பட வேண்டும். கண்ணாடியில் தெருவை நோக்கினேன். அது எப்போதும் போன்றே இருந்தது: மளிகைக் கடையும் அதன் இரண்டோ மூன்றோ வாடிக்கையாளரும். பிறகு கடிகாரத்தைப் பார்த்தேன்: மதியம் இரண்டரை மணி. கத்தி கீழ்நோக்கி இறங்கியது. இப்போது அடுத்த கிருதாவில் இருந்து கீழே. கெட்டியான நீல நிறத் தாடி. சில கவிஞர்களைப் போன்றோ பாதிரிகளைப் போன்றோ இவனும் இதனை வளர்த்திருக்க வேண்டும். அது இவனுக்கு நன்றாகப் பொருந்தி இருக்கும். நிறையப் பேருக்கு அடையாளம் தெரியாமற் போயிருக்கும். அது அவனுக்கு வசதியாய் இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன். இப்போது கழுத்துப் பகுதியை மென்மையாகச் சிரைத்துக் கொண்டிருந்தேன். அங்கே, நிச்சயமாகக் கத்தியைத் தேர்ந்தமுறையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அங்கே முடி மென்மையாக இருக்கும் என்றாலும் சுருள் சுருளாகச் சுருண்டு கிடக்கும். சுருட்டைத் தாடி. நுண்ணிய மயிர்த்துளைகளில் ஒன்று லேசாகத் திறந்து கொண்டாலே ஒரு முத்து இரத்தம் வெளியே தெரியக் கூடும். ஆனால், என்னைப் போன்ற ஒரு நல்ல நாவிதன், தன் எந்தவொரு வாடிக்கையாளனுக்கும் அப்படி ஒன்று நேர்வதை அனுமதிக்காமல் பெருமை கொள்வான். இவனோ முதல்த் தர வாடிக்கையாளன்! எங்களில் எத்தனை பேரைச் சுட இவன் உத்தரவிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரை வெட்டிச் சிதைக்க உத்தரவிட்டிருக்கிறான்? இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் இருப்பதே நல்லது. நான் அவனது பகைவன் என்பதை டோரசு அறிந்திருக்கவில்லை. அவனுக்கும் தெரியாது. பிறருக்கும் தெரியாது. வெகு சிலருக்கே தெரிந்த ஒரு இரகசியம் அது. அப்போது தான் அவன் ஊருக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரட்சியாளர்களிடம் தெரிவிக்கவும், ஒவ்வொரு போராளி-வேட்டைப் பயணத்திலும் அவன் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்பதை அறிந்து தெரிவிக்கவும் முடியும். அதனால் தான் அவன் என் கைகளில் சிக்கி இருந்தும் அமைதியாக விட்டுவிட்டேன் – உயிரோடும் சவரம் செய்தும் – அனுப்பிவிட்டேன் என்பதை விளக்குவது மிகவும் சிரமமாக இருக்கும்.

தாடி இப்போது கிட்டத்தட்ட முழுதும் போய்விட்டது. பார்க்கச் சற்று வயது குறைந்தவனாகத் தெரிந்தான். உள்ளே வந்தபோது இருந்ததை விட இப்போது கடந்து போன ஆண்டுகளின் பாரம் குறைந்தவனாகத் தெரிந்தான். நாவிதர் கடைக்குச் செல்லும் எல்லோருக்கும் நிகழும் ஒன்றாகத் தான் இருக்கும். என்னுடைய கத்தியின் வீச்சில் டோரசு புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறான். அவனது புத்துணர்ச்சிக்குக் காரணம் நான் தான். நானே சொல்லிக் கொள்வதாய் இருந்தாலும், நான் ஒரு நல்ல நாவிதன், இந்த ஊரிலேயே சிறந்தவன். இன்னும் கொஞ்சம் நுரை பூச வேண்டும், இங்கே, தாடைக்குக் கீழே, குரல்வளையின் மேலே, புடைத்த பெருநரம்பின் மேலே. எப்படிச் சூடாகி விட்டது! என்னைப் போன்றே டோரசும் வேர்த்துப் போயிருப்பான். ஆனால் அவன் எதற்கும் அஞ்சவில்லை. தன்னிடம் சிறைப்பட்டவர்களை இன்று மதியம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாத அமைதியான மனிதன். ஆனால் என்னாலோ, இந்தக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இவன் சருமத்தின் மீது வீச்சும் மறுவீச்சுமாகவும், இவனது நுண்துளைகளின் வழியே குருதி வழிந்துவிடக்கூடாதே என்று முயன்று கொண்டும், சரியாகச் சிந்திக்கக் கூட முடியவில்லை. ஒழிக இவன் இங்கு வந்ததற்கு, நான் ஒரு புரட்சியாளன்; போராளி; கொலைகாரன் அல்லன். ஓ, இவனைக் கொல்வது தான் எவ்வளவு எளிது. அதற்குத் தகுதியானவனும் தான். என்ன? அப்படித்தானா? இல்லை! சாத்தானே! வேறொருவனைக் கொலைகாரனாகும் தியாகத்தைச் செய்ய வைக்க யாருக்கும் தகுதியில்லை. அதனால் கிடைக்கும் நன்மை தான் என்ன? ஒன்றுமில்லை. பிறகு வேறு யாரோ வருவார்கள். அதன் பின் இன்னும் வேறு சிலர். முதலாமவர் இரண்டாமவரைக் கொல்ல, பின் அவர்கள் மற்றவரை என்று இந்தக் கதை எல்லாமே ஒரு இரத்தக் கடலாகும் வரை தொடர்ந்து நிகழும். நான் இவனது தொண்டையை எளிதில் வெட்டி எறிந்துவிடலாம், கீச்! கீச்! புலம்புவதற்கான நேரத்தைத் தரவேண்டியதில்லை. கண்களை மூடி இருப்பதால், பளபளக்கும் எனது கத்தியின் கூர் முனைகளையோ, பளீரிடும் என் கண்களையோ இவ்ன் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால், நான் ஒரு உண்மையான கொலைகாரனைப் போலவே நடுங்குகிறேன். அவனது கழுத்தில் இருந்து இரத்தம் கொப்பளித்துத் தெறிக்கும். இந்தத் துண்டின் மீது, நாற்காலி, என் கரங்கள், தரை என எல்லாப் பக்கங்களிலும் பாயும். நான் கடையின் கதவைச் சாத்த வேண்டியிருக்கும். வெதுவெதுப்பாகவும், அழிக்கமுடியாமலும், கட்டுப்படுத்தமுடியாததாகவும், இவனது இரத்தம் தரை வழியே சிறுகச் சிறுகப் பெருகி வெளியே சாலையை அடைந்து, ஒரு செந்தாரையாய் ஓடும். ஒரு பலமான வீச்சு, ஒரு ஆழ்வெட்டு போதும். அவனுக்கு எந்த வலியும் இன்றித் தவிர்க்கலாம். அவன் துன்புறப் போவதில்லை. ஆனால் உடலை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? எங்கே அதை ஒளித்து வைப்பது? என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஒரு அகதியாய், தூரமாக, வெகு தூரமாக, ஓடவேண்டியிருக்கும். ஆனால், அவர்கள் என்னைக் கண்டுபிடிக்கும் வரை பின் தொடர்வார்கள்.

"இவன் தான் கேப்டன் டோரசைக் கொன்றவன். இவனிடம் சவரம் செய்துகொண்ட போது கோழயாகக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டான்".

அப்புறம் மறுபக்கம் வரும்.

"நமக்காகப் பழி தீர்த்தவன். நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய பெயர் இவனது. (இங்கு தான் என் பெயரைச் சொல்வார்கள்). நம்மூர் நாவிதன். நமது பக்கம் சேர்ந்து போரிட்டவன் என்று ஒருவருக்கும் தெரியவில்லை."

இதையெல்லாம் வைத்து என்னாவது? கொலைகாரனோ? வீரனோ? என் விதி இந்தப் பிளேடு முனையில் இருக்கிறது. என் கையை இன்னும் கொஞ்சம் திருப்பலாம். கத்தியை இன்னும் கொஞ்சம் அழுத்தி உள்ளே இறக்கலாம். தோல்ப் பகுதி ஒரு பட்டுத்துணியைப் போல, இரப்பரைப் போல, இந்த வாரினைப் போல வழி விட்டு ஒதுங்கிவிடும். மனிதனின் தோல் போல மிருதுவான வேறு எதுவும் இல்லை. அதை அடுத்து வெளியே சிந்தத் தயாராக இரத்தம். இது போன்ற ஒரு கத்தி என்றும் தோற்பதில்லை. என்னுடையதில் மிகவும் சிறப்பானது. ஆனால், ஐயா, நான் ஒரு கொலைகாரன் ஆக எனக்கு விருப்பமில்லை. நீ என்னிடம் சவரம் செய்துகொள்ள வந்தாய். நான் என்னுடைய வேலையைக் கௌரவமாகச் செய்வேன்… என் கரங்களில் இரத்தம் வேண்டாம். நுரை மட்டும் போதும். நீ ஒரு கொலைகாரன்; வெட்டியான். நான் வெறும் நாவிதன். உலக இயல்பில் அவரவர்க்கு அவரவர் இடம் உண்டு. அது தான் சரி. அவரவர்க்கு உரிய இடம்.

இப்போது அவனது தாடையும் சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் இருந்தது. எழுந்து அமர்ந்து கண்ணாடியைப் பார்த்தான். கைகளால் முகத்தைத் தேய்த்துப் புதிது போலிருப்பதை உணர்ந்தான்.

"நன்றி" என்று சொல்லிவிட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த தனது கச்சை, துப்பாக்கி, தொப்பி நோக்கிச் சென்றான். நான் மிகவும் வெளுத்துப் போயிருக்க வேண்டும். எனது சட்டை முழுக்க நனைந்திருந்தது போல் உணர்ந்தேன். டோரசு, தன் கச்சையை இறுக்கிக் கொண்டு, துப்பாக்கியை உரையில் நேர்ப்படுத்திக் கொண்டு, தலையைக் கோதிச் சரிசெய்து கொண்டு தொப்பியைப் போட்டான். என் வேலைக்குக் கட்டணமாய்க் கொடுக்கத் தன் கால்சராயின் பையில் இருந்து சில்லறைக் காசுகள் பல எடுத்துக் கொடுத்தான். பிறகு வெளிக்கதவை நோக்கி நகர ஆரம்பித்தான். கதவின் விளிம்பில் ஒரு கணம் தயங்கி, என்னை நோக்கித் திரும்பினான்:

"நீ என்னைக் கொன்று விடுவாய் என்று அவர்கள் சொன்னார்கள். பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால், கொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எனக்குத் தெரியும், நம்பு" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி நடக்கலானான்.

ooOoo

Tags: இலக்கியம் · சிறுகதை

16 responses so far ↓

 • 1 நண்டு @ நொரண்டு // Jan 18, 2012 at 4:15 am

  அருமையான அழுத்தமான கதை.

 • 2 Thangamani // Jan 18, 2012 at 6:13 am

  நல்ல கதை!

 • 3 ஜோதிஜி திருப்பூர் // Jan 18, 2012 at 12:23 pm

  சத்தியத்துக்கு கட்டுப்பட்டு தினந்தோறும் எழுதி ஆக வேண்டும் ( தமிழ்மண கொள்கை) என்கிறவிதத்தில் கஷ்டப்பட்டு கணினி முன் அமர்ந்து வீட்டுப்பாடம் போல எழுத உட்காரும் உங்கள உருவம் என் மனதில் நிழலாடுகின்றது. ஆமாம் கேட்க மறந்து விட்டேன். சென்ற இடுகையில் இருக்கும் இருவரில் எவர் நானும் உங்களோடு விமானத்தில் உங்க மடி மேல உட்காரந்து வந்து விடுவேன் என்று சொன்னது?( தனியாக அவசரமாக ஏதேவொரு வேலையாக நீங்க கிளம்ப முயற்சிக்கும் போது) சென்னவர் யார்?

  இடுகையில் நல்ல விசயங்களை பார்ப்பது அரிது. அதையும் அப்போதே பாராட்டுவது அதிலும் அரிது. நமக்கு அதெல்லாம் பிரச்சனையே இல்லை. யாராக இருந்தாலும் இடுகை உலகில் புதியவராக இருந்தாலும் தெளிய தெளிய பாராட்டு தண்ணீர் ஊற்றி அடித்து விட வேண்டும். இந்த உலகில் வருவதே தினந்தோறும் சில மணி நேரம். ஏன் வஞ்சனை.

  கதையெல்லாம் வேண்டாங்க. உங்கள் துறை சார்ந்த அனுபவங்களை உங்கள் பார்வையின் மூலம் எழுதுங்களேன். பெரும்பாலும் தங்கள் துறை சார்ந்து எழுதுவதே இல்லை. அதில் முக்கியமாக நீங்க எழுதுவதே இல்லை. 20 வருட வாழ்க்கையில் எழுதவா முடியாது?

 • 4 dharumi // Jan 18, 2012 at 12:25 pm

  கொல்லப்போவதில்லை என்று முன்பே தெரிந்தும் கடைசி வினாடி வரை suspense (தமிழில் …?)!

 • 5 குறும்பன் // Jan 18, 2012 at 8:35 pm

  அருமையான கதை. மூலக்கதை எப்படி என்று தெரியாது. மொழி பெயர்ப்பு அற்புதம், பிடிங்க பாராட்டுகளை. பல்வேறு மொழிபெயர்ப்பு கதைகளில் (சில மொழி பெயர்ப்பு கதைகளை தான் படித்துள்ளேன் 🙂 ) ஒரு வகையான நடையை காண்கிறேன். நாமாக எழுதும் கதைகளில் உள்ள இயல்பு தன்மை மொழி பெயர்ப்பு கதைகளில் இருப்பதில்லை, அது ஏன் என்று புரியவில்லை.

  கடைசியில் கேப்டன் டோரசு சொன்னது பலவற்றை சொல்லுகிறது.

 • 6 இரா. செல்வராசு // Jan 18, 2012 at 9:21 pm

  நண்டு@நொரண்டு, தங்கமணி, நன்றி. கதையின் கதை பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. பிறகு…
  ஜோதிஜி, துறைசார் பதிவும் எழுதவேண்டும் தான். இவ்வாரம் கூட அப்படிச் சில எழுத எண்ணம் இருந்தது/இன்னும் இருக்கிறது. பார்க்கலாம்.
  தருமி ஐயா, நன்றி.
  குறும்பன், இங்கும் நடை இயல்பு தன்மை மாறி இருக்குன்னு சொல்றீங்களா இல்லையான்னு புரியலயே. ஆனால், பொதுவாக நீங்கள் சொல்வது உண்மை தான். இது போன்றவற்றை எழுதும்போதே சிலவற்றை உணர முடிகிறது.

 • 7 சொ. சங்கரபாண்டி // Jan 18, 2012 at 11:05 pm

  நன்றாக இருந்தத் கதையும், அதைவிட உங்கள் மொழிபெயர்ப்பும்!

 • 8 தி.தமிழ் இளங்கோ // Jan 19, 2012 at 12:27 am

  வணக்கம்! குழப்பம் இல்லாத தெளிவான மொழிபெயர்ப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட கதையும் தொடர்ந்து படிக்க வைத்தது.

 • 9 Vassan // Jan 19, 2012 at 12:29 am

  மொழிபெயர்ப்பு நன்று.

  தாடிக்காரன் ஏனோ எனக்கு ‘தலைவர்’ டூக்கொ ரமிரஸை ஞாபகப்படுத்தினான்! When you have to shoot… just Shoot! Don’t talk

  நேரம் கிடைத்தால், நானும் இதுபோன்று மொழிபெயர்ப்பு செய்து பார்க்க ஆசை வந்துவிட்டது.
  நன்றி.
  மற்றொன்று: [சாதகப்பட்சியாகவே இருந்து பழகிவிட்டது, கருத்தைத் தவறாக எண்ண வேண்டாம்! ]

  எர்ணான்டோ டெல்லசு (Hernando Tellez)என்பது எர்ணான்டோ டேய்யஸ் என்றிருக்க வேண்டும். ஸ்பேனிஷ் மொழியில் 2 ll கள் சேர்ந்து வரும் போது மௌனம் – ஒலி கிடையாது. எர்ணான்டோ
  மிகச்சரி – H க்கும் பெயர்சொல்லில் ஒலி கிடையாது, ஸ்பேனிஷில்.

 • 10 இரா. செல்வராசு » Blog Archive » நுரை மட்டும் போதும்: கதையின் கதை // Jan 19, 2012 at 1:33 am

  […] Comments « நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்ய

 • 11 இரா. செல்வராசு // Jan 19, 2012 at 1:41 am

  சங்கரபாண்டி, தமிழ் இளங்கோ, நன்றி.

  வாசன், இப்படியாகத் திருத்தங்கள் சொல்வதை நான் வரவேற்கிறேன். இல்லையெனில் பிறகெப்படி நான் திருத்திக் கொள்வது? பொய்யோ என்று கோழியைச் சொல்வதை மட்டும் அறிவேன் 🙂 உடனே டேய்யசு எனத் திருத்தி விட்டேன், நன்றி. டூக்கோ படம் இந்தப் பாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்துகிறது!

 • 12 நிலவன்பன் // Jan 20, 2012 at 6:12 am

  மிகவும் நன்று

 • 13 குறும்பன் // Jan 20, 2012 at 2:55 pm

  ஆமாங்க இங்கும் இயல்பு தன்மை மாறி இருக்கிற மாதிரி தான் எனக்கு படுது.

 • 14 இரா. செல்வராசு // Jan 20, 2012 at 3:25 pm

  நன்றி நிலவன்பன்.

  குறும்பன், நானும் கொஞ்சம் அப்படி நினைத்திருந்தேன். மீண்டும் மீண்டும் படித்து எடுவித்துக் கொண்டிருந்ததில் தெரியவில்லை. உங்கள் பின்னூட்டுக்குப் பிறகு படித்ததில் சில இடங்களில் நன்றாகவே தெரிகிறது. அடுத்தடுத்து எழுதுகையில் முன்னேற்றிக் கொள்ளலாம் 🙂

 • 15 நாகு // Jan 21, 2012 at 5:26 pm

  அழகாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள். கடைசி வரிகள் மிகவும் அழுத்தம்.

  //உங்கள் துறை சார்ந்த அனுபவங்களை உங்கள் பார்வையின் மூலம் எழுதுங்களேன்.//
  சுஜாதா ஒரு முறை குத்ரேமுக் போயிருந்தபோது அங்கே வேலை செய்யும் இஞ்சினியர் ஒருவர் அவருடைய கதை எழுதச் சொன்னாராம். அதைப்பற்றி சுஜாதா எழுதியிருந்தார். மலையைச் சுரண்டுவதைப் பற்றி எழுதினால், அந்த இஞ்சினியரும் நானும் மட்டும்தான் படிப்போம்! அதுமாதிரி செல்வராசு வேதிப் பொறியியல் பற்றியும் பாறைநெய்(?) பற்றியும் எழுதினால், செல்வராசு மட்டும்தான் படிப்பார் 🙂 நேயர்விருப்பம் கேட்ட ஜோதிகூட அம்பேல் ஆகிவிடுவார்.

  ஏங்க – நல்லாதானே எழுதியிருக்கார். கதையெல்லாம் வேண்டாங்கன்னு அலுத்துக்கறது ஏனோ? 🙂

 • 16 இரா. செல்வராசு // Jan 21, 2012 at 11:13 pm

  /துறைசார்… / நீங்க சொல்றது மிகச்சரி தாங்க. முழுக்கத் துறைசார் பதிவா இல்லாம, பொது ஆர்வமும் இருக்கற மாதிரி கொஞ்சம் எழுத எண்ணம் தான். ஆனா, அதுக்குக் கொஞ்ச நேரம் அதிகம் வேணும். நிறையத் தகவல் பார்க்கணும். எளிமைப்படுத்தணும்.

  இந்த வாரம் எழுத நினைத்ததக் கொஞ்சம் தள்ளிப்போட்டுட்டேன்.