அள்ளுகுச்சி
Aug 1st, 2016 by இரா. செல்வராசு
சென்றவாரம் சிங்கப்பூரில் இருந்தபோது, குழு விருந்து ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கட்டுறுத்தப் பொறிஞர் (control engineers) கூட்டத்தாரின் நற்செயல்களைப் பாராட்டி மேலாளர் கூட்டம் வழங்கிய மதிய உணவு. ஒரு கூட்டுவேலைக்காக வந்திருந்த என்னையும் அவர்களுடன் கூட்டிக்கொண்டார்கள்.
கிழக்காசிய உணவை அள்ளுகுச்சிகளின் (chopsticks) வழியே உண்ணும் கலை இன்னும் கைவரப்பெற்றிருக்கவில்லை என்பதால், நான் பெரும்பாலும் எளிதாக உண்ணக்கூடிய வறுசாதம் போன்றவற்றையே தெரிவு செய்வதுண்டு. நெளியுணவு முதலியவற்றை முட்கரண்டிவழி உண்பதும்கூடச் சிக்கலான ஒன்றே. ஆனாலும் வலியவிதி ‘இங்கே என்ன நல்லா இருக்கும்’ என்று என்னை அருகிருந்தவரைக் கேட்கவைத்துவிட்டது. அவரும் சரியாக ஒரு நெளியுணவும் கோழிச்சாறும் எனக் கைகாட்டிவிட்டார். ‘ஆகா’வென அதையும் ஒரு துணிவுடன் ஏற்றுக்கொண்டேன். ‘முயற்சியில் மனம் தளரா விக்கிரமாதித்தா, துச்சமிது துச்சமிது’ எனக் களத்தில் இறங்கினேன்.
அடுத்தவர் உணவு வரும்வரை காத்திருக்கையில், கோழிச்சாற்றில் ஊறி உணவுச்சரடுகள் ஒன்றுடனொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க நண்பரின் யோசனைப்படி அள்ளுகுச்சிகொண்டு விட்டுவிட்டு அளைந்துகொண்டிருந்தேன். பிறகு அப்படியே வைத்துவிட்டேன். ஏதோ சுவையாரமாய்ப் பேசிக்கொண்டிருந்தவர் சட்டென நிறுத்தி என்னைப்பார்த்து அவசரமாய்த் தோளைத்தட்டி, படக்கென்று குண்டாவினுள் கிடந்த அள்ளுகுச்சிகளை வெளியே எடுத்துக் கிடைமட்டமாக வைத்து ஏதோ சொல்ல, சுற்றியிருந்தோர் மிதமாகச்சிரித்துவைத்தனர். ‘என்ன என்ன?’ எனக்கேட்ட என்னிடம் பிறகு சொல்வதாகச் சொன்னதில் ஏதோ பண்பாட்டுக்கீறலை (cultural boo boo) உண்டாக்கிவிட்டேன் போலும் என உணர்ந்துகொண்டேன். அறியாமை கலந்த ஒரு பெருமிதத்தோடு மெதுவாகச் சிரித்தும் வைத்தேன்.
சிறிதுநேரம் கழித்து விளக்கினார் நண்பர். நீத்தார்க்குப் படையல் போன்ற ஒரு சடங்கில் யாருமற்ற மேசையில் இவ்வாறு ஒரு உணவில் உள்ளே அள்ளுகுச்சியைப் போட்டுவைத்துவிடுவார்களாம். அதனால் வேறெப்போதும் அவ்வாறு செய்யக்கூடாதாம். நல்லது. இதுவும் எதுவும் ஒரு கற்கும் வாய்ப்பே!
பிறகொருநேரம் ஊரிலிருக்கும் மனையாளை அழைத்து ‘இப்படியிப்படியாச்சு…இப்படியிப்படியாம்’ என்று கதை சொன்னால், “ஆமா. இது தெரியாதா? இதையெல்லாம் குவோரால படிச்சுட்டுப் போகலையா?” என்கிறார்.
பி.கு.: படங்கள் வேறொரு நேரம் எடுக்கப்பட்டவை.