இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

ஒற்றைக் குரல்

January 21st, 2017 · No Comments

ஒபாமாவை  ஒரு நல்ல பேச்சாளராக எண்ணியிருக்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல கதை சொல்லியும் கூட என்பதை இப்போது உணர்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க அதிபராக எட்டாண்டுகள் முடிந்து இன்று ஆட்சியில் இருந்து கீழிறங்கிச் செல்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் வலையில் சுற்றிக்கொண்டிருந்த பழைய காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது.  இல்லரி கிளிண்டனுக்காக வாக்குக் கேட்கும் கூட்டமொன்றில், தான் முதன்முதலில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கதையைச் சுவைபடக் கூறுகிறார். Fired up? Ready to go! என்னும் போர்க்குரலைத் தன் மந்திரமாகக் கொண்டதன் பின்னணிக் கதை.

சோவென்று மழைகொட்டிய நாளொன்றில், உடலும் உள்ளமும் தொய்வுற்றிருக்கையில் தன் போட்டிகு ஆதரவு தேடி எங்கோ தென் கரோலினாக் கிராமம் ஒன்றிற்கு பயணித்து, அங்கு இருபது பேர் கொண்ட கூட்டம் ஒன்றை மட்டும் சந்தித்து அயர்வோடு இருந்த நேரத்தில் அக்கூட்டத்தில் இருந்து நடுத்தர வயதுப் பெண்ணொருவர் இவ்வாறு திரும்பத் திரும்ப, Fired up? Ready to go! என்று தானும் சொல்லிக் கூட்டத்தினரையும் சொல்ல வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துத் தானும் உத்வேகம் கொண்டதைச் சுவைபட விவரிப்பார்.

இது ஒரு நல்ல கதை தான். அதை அவரும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் இக்கதையை மீண்டும் மீண்டும் கூறுகிறார் போலும். Fired up? Ready to go! என்று தேடினால் இதையே முன்னொரு முறையும் எட்டாண்டுகள் முன்னர் சொன்ன விழியம் ஒன்றையும் பார்த்தேன். சின்ன சின்ன விவரங்கள் மாறி இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலும் அக்கதையின் உணர்ச்சிகளும், அதை விரிவாகச் சொல்லுமுறையும், பெரிதும் மாறவில்லை. மீண்டும் கேட்கவைக்கும் ஈர்ப்பு அதில் கலந்திருக்கிறது. எத்தனை முறை எத்தனை எத்தனை இடங்களில் இதையே சொல்லியிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் இதை வைத்து சில சித்திரப் பட விழியங்களும் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பார்க்க முடிகிறது.

கடந்த எட்டாண்டில் இடையில் ஒபாமாவின் செயல்பாட்டில் சில இடங்களில் அதிருப்தி அடைந்திருந்தேன் என்றாலும் மொத்தத்தில் சிறப்பான ஆட்சியைத் தந்திருந்தார் என்பதில் ஐயமில்லை.  கூட்டத்தினரை ஈர்க்கும் ஓருத்தியாக இக்கதையைப் பயன்படுத்திக் கொண்டாலும் அதன் சிறப்புக் கருதி அதை மன்னித்துவிடலாம். இக்கதையின் சாரமாக அவர் சொல்வதாய் நான் எடுத்துக் கொள்வது, ‘எவ்வாறு ஓர் ஒற்றைக்குரல் அந்த அறையை மாற்றும்; ஊரை மாற்றும்; சமுதாயத்தை, உலகத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தது’, என்பதைத் தான். 

* * *

கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தின் இளையோர் தன்னெழுச்சியைக் கண்டு குதூகலம் அடைந்து கிடக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணொளிகளைக் கண்டும், வலையில் மேய்ந்து படித்தும் உணர்ச்சி வயப்பட்டும், யாருமறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டும் மெய் சிலிர்த்துக் கிடக்கிறேன்.

இது சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் என்றாலும் இது சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் மட்டுமல்ல. இது ஒரு தமிழருரிமைக் குரல். இந்தியத் தேசியத்தில் தனக்கான மதிப்பையும் மரியாதையையும் கோரும் குரல். பன்னெடுங்காலமாகத் தமிழர் ஊட்டி வந்த உணர்வுகளின் விளைவுதான் இது.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! "
-பாரதிதாசன்.

சங்ககாலந்தொட்டு இதுநாட்சமூகவலைக் குறிப்புகள் வரை தூண்டப்பெற்ற உணர்ச்சிகளும், வைக்கப்பட்ட கருத்துகளும், பொதுப்புத்தியில் உண்டாக்கிய தெளிவின் விளைவுதான். அரசியல் இல்லை எனலாம்; ஆனால் இதில் அரசியல் உண்டு. சுய உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு ஒற்றைக் குரலும் அரசியல் கலந்ததே.

சிறுகுழந்தை, பள்ளிச்சிறார் முதற்கொண்டு, இளைஞர், முதியோர் என்று ஒவ்வொரு குரலிலும் தெறித்திடும் உணர்ச்சியில் திளைத்திருந்த எனக்கு(ம்) இந்தத் தங்கையின் குரலும் முகத்தின் உற்சாகமும் தொற்றிக் கொள்வதாய் இருக்கிறது. புன்முறுவலோடு பார்த்துக் களிப்புக்கொள்ள வைக்கிறது. அதனால் நானும் ‘உள்ளே வந்து கத்துகிறேன்’.

புதிய தோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்

– பாரதிதாசன்

Tags: சமூகம்