• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« ஒற்றைக் குரல்
தமிழ்த்தாய் வாழ்த்தும் »

வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்

Jan 18th, 2018 by இரா. செல்வராசு

andal garland

கோதை நாச்சியார் ஆண்டாள் குறித்துக் கவிஞர் வைரமுத்து எழுதியதன்பால் எழுந்த சர்ச்சை என்னைப்பொருத்தவரை அவசியமில்லாதது. ஆனால், இப்படியொரு சர்ச்சை எழுந்த காரணத்தால் தான் இந்தக் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதோடு, ஆண்டாள், ஆழ்வார், திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனப் பலதும் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்தது. ஆண்டாளை அவதூறாகப் பேசிவிட்டார் என்று அடிக்கும் தலைக்குமாய்க் குதிக்கும் பலர் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தும்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்பது தான் சோகம். அப்படியே படிக்க முனைந்திருந்தாலும் அது எவ்வளவு தூரம் அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்பதும் ஐயப்பாடே.

ஒரு புறம் இந்துமதவெறியர்கள் (அறிந்தே தான் கடுஞ்சொல்லைப் பயன்படுத்துகிறேன்) இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வன்முறைதூண்டும் எதிர்வினையை ஆற்றுகின்றனர். இது தான் சமயம் என்று கருத்துரிமையை நெரிப்பது, பிற மதத்தினரை ஏசுவது, கையை காலை வெட்டுவது, நாக்கை அறுப்பது என்று தீயைத் தூண்டிவிட்டு அதற்கு நெய்யும் வார்க்கிறார்கள்.

நித்யானந்தித்த சீடர்பெண்கள் வாயைத் திறந்து கக்கும் அசிங்கங்களைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அவர்களுக்காக மனம் வலிக்கிறது. அறிவுசார் நிலமாக, சகிப்புத்தன்மை வாய்ந்த நிலமாக, சுதந்திரமாகப் பல்வேறு கருத்துகளையும் பகிரக்கூடிய நிலமாக அல்லாமல் தமிழகத்தை இந்த மூடர்கூடம் பின்னுக்குத் தள்ளுகிறதே என்னும் ஆதங்கமும் எனக்குண்டு.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.

இன்னொரு புறம், அறிவுசார் சமூகமானது, வைரமுத்து எழுதியதில் அவதூறு இல்லை என்றாலும் அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்கிறது. அல்லது, இதை எழுத, பேச, இது இடமும் காலமும் அல்ல என்று போதிக்கிறது. வைரமுத்து என்னும் தனிநபரின் மீது கொண்ட முன்முடிபுகளால் எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துகளை வைக்கிறது. இந்த எழுத்துக்கு அவரது ஆணாதிக்கத் திமிர் என்றோ, தெரியாத ஒன்று பற்றி இந்தாள் எதற்கு எழுத வேண்டும் என்றோ அவர் மீது விமர்சனங்களைச் சுமத்துகிறது. பாப்கார்ன்/சோளப்பொறி எழுத்து அவரது என்று எள்ளிநகையாடுகிறது. செயமோகன் போன்றவர்களை வைத்து இது வைரமுத்துவுக்கான இடம் அல்ல என்று தகுதியைப் பற்றிப் பேசுகிறது. அவருக்கு அவ்வளவாக இலக்கிய அறிவு இல்லை என்றும் கூட அளந்து பார்க்கிறது.

vairamuthu-aandaal

இத்தனைக்கும் இடையில் ‘எனது கருத்துகள் உங்களைக் காயப்படுத்தியிருக்குமானால் அதற்காக வருந்துகிறேன்’ என்று வருத்தத்தை மட்டும் பதிவு செய்துவிட்டு அமைதியாக எதிர்கொண்டு இதை வைரமுத்து கையாளும் விதமும் என்னைக் கவர்கிறது. அப்படி என்ன தான் எழுதிவிட்டார் அவர்? காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்கும்போது, என்னளவில் இது மிகவும் அருமையானதொரு கட்டுரை. படிப்படியாகக் கட்டியமைக்கிறார். ஆண்டாளின் சிறப்புகளைச் சொல்லி, பின் அவர் வாழ்வு குறித்த சில குறிப்புகளில் இருந்தும், அன்றைய சமூகச் சூழல்களில் இருந்தும் எழும் சில கேள்விகளை முன் வைக்கிறார்.

ஆண்டாளைத் தாய் என்றும், இலக்குமியின் அவதாரமென்றும், துளசிச்செடியருகே குழந்தையாய் உதித்தார் என்றும், திருவரங்கத்தில் மாயமாய் மறைந்தார் என்றும் ஆன்மிகத்தார் நம்பலாம். ஆனால், எல்லோரும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லையே! அறிவியலாளரும், ஏரணந்தேடுவோரும் அவரது பிறப்பு, வாழ்வு, மறைவு இவற்றில் இருக்கும் கேள்விகளை எண்ணிப் பார்க்கத் துணிவது இயல்பு தானே.

மணக்கோலத்தில் அலங்கரித்துத் திருவரங்கத்தில் கோயிலில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவரது வளர்ப்புத் தந்தையார் வீட்டுக்குத் திரும்பிவிட, இறைவனுக்கே தன்னையும், தன்வாழ்வையும் அர்ப்பணித்துவிட்டு, அரங்கனையே தன் கணவனாய் எண்ணி வாழும் ஒரு தேவரடியாராக அவர் இருந்திருக்கலாம் என்னும் ஒரு கருதுகோளைப் பேசுகிறார். இது போன்ற ஒரு கருத்து வாய்மொழியாக இருக்கும் ஒன்று தான் என்பதையும், சில அச்சில் வந்த மேற்கோள்களையும் காட்டுகிறார் (அம்மேற்கோள் சுட்டில் சிறு பிழை இருப்பினும், சொல்ல வந்த கருத்தில் அது எந்த மாறுதலையும் ஏற்படுத்திவிடாது). கருவறைக்குள் நுழைந்து காணாமல் போய்விட்டார் என்பதை நம்புவதை விட, தன் வாழ்வடையாளங்கள் துறந்து, இறைவனே கணவன், கோயிலே வாழ்விடம் என்று வாழ்ந்து மறைந்தார் என்பது ஏரணப் பொருத்தம் உடையதாக இருக்கிறதா இல்லையா? தவிர இந்த முடிபுக்கு ஆதாரமாக வேறு பல வாதங்களையும் கட்டி எழுப்பி இருக்கிறார். அது சமூக நிலையையும், அக்காலத்தைய பெண்ணுரிமை நிலைப்பாட்டையும் கூடத் தொட்டுநிற்கிறது.

ஆனால், காலகாலமாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ள ‘கல்லைத் தொட்டதும் மறைந்தாள்’ என்னும் கதைக்கு மாறாக இப்படி ஒரு கருத்தைத் தான் சொல்லுவதைப் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள், ஆனால் பெண்ணுரிமைவாதிகளும், இறைமறுப்பாளர்களும் எண்ணிப் பார்ப்பார்கள் என்றும் இதைப் பற்றிக் கூறுகிறார். இதில் அவதூறு எங்கே வருகிறது? அவர் ஆண்டாளை வேசி என்றோ, தாசி என்றோ, விலைமாது என்றோ, இக்கால வழக்குப்படித் தேவடியாள் என்றோ எதுவும் சொல்லவில்லை. தன் வாழ்வைத் தேவருக்கு அர்ப்பணித்துக்கொண்ட அடியார் என்று தான் சொல்லி இருக்கிறார். அவர் சொல்லாத ஒன்றைச் சொல்லியதாகச் சாடி வசைபாடும் ஆன்மிகவாதிகளல்லவா ஆண்டாளுக்கு இழுக்கைக் கொண்டுவருகிறார்கள்? அப்படியே அவர் தேவரடியாராகவோ, தேவடியாளாகவோ இருந்தாலும், அது ஏதேனும் ஆண்டாளின் சிறப்பையும், அவரது தமிழின் சுவையையும் எள்ளளவும் குறைத்துவிடுமா என்ன? இதைத் தான் டி.எம்.கிருசுணா போன்றவர்கள் கேட்கின்றார்கள்.

இன்னும் சிலரோ, ஆண்டாளை ‘முந்தி விரித்தாள்’ என்று சொல்லிவிட்டாரே என்று கோபப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் வசதியாக அதற்கு முன்னர் இருக்கும் ‘பெருமாளுக்கு’ என்னும் சொல்லை விட்டுவிடுகின்றனர். வைரமுத்து ஒரு கவிஞர். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவரது எழுத்தில் சில சமயம் வலியப் புகுத்திய எதுகை மோனைகள் எட்டிப் பார்க்கும். இது சில சமயம் அருமையாக அமைந்துவிடலாம். சில சமயம் துருத்திக் கொண்டிருக்கலாம். ஒன்று சிலருக்குப் பிடித்தமானதாகவும் சிலருக்குச் சில்லறைத்தனமாகவும் இருக்கலாம். ஆனால் அது அவரவர் பார்வை. இங்கே, பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளே முதன்மையாய் இருக்கிறாளே என்று அவரது சிறப்பைச் சொல்ல வந்தவர், ‘பெருமாளுக்கு முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் ஆணாழ்வர்களைக் காட்டிலும் முந்தி நிற்கின்றாள்’ என்று தன் கவிநடையில் ஒலிநயம்கருதி எழுதிப் போகிறார். தவிர, ஆண்டாளின் மொழி சற்றுக் காம வெளிப்பாடாக அமைந்த ஒன்று என்றும், காமமும் பக்தி நிலையில் ஒன்று, உயர்ந்தது தான் என்றும் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று தானே. ஆண்டாளே சொன்னதை எடுத்துச் சொன்னது எப்படித் தவறாகும். ‘முந்தி விரித்தல்’ என்பது பொதுவாகத் தமிழ் மரபில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சொல்லாடல் தான் என்பது பல தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கும் ஒன்றுதான். ‘உன்னை நம்பித் தான்யா முந்தி விரிச்சேன்’, என்றோ, ‘உன் ஒருத்தனுக்குத் தான் முந்தி விரிச்சேன்கிறது உண்மையா இருந்தா…’ என்பது போன்றோ உரையாடலைக் கேட்டுத் தானே இருக்கிறோம். பெருமாளைக் கணவனாக ஏற்று அவரோடு கலக்க எண்ணிக் காமம் ததும்பப் பாட்டெழுதிய ஆண்டாளை, ‘பெருமாளுக்கு முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்’ என்று எழுதியதில் சிலவற்றை மட்டும் பொறுக்கியெடுத்து அவதூறாக எழுதிவிட்டார் என்று கொதிப்பதும் எப்படி நியாயமாகும்?

அது மட்டுமின்றி, வைரமுத்து எழுதியது உண்மைக்குப் புறம்பானது, பொய், புரட்டு என்று சில கூச்சல்கள் கேட்கின்றன. உண்மை என்ற ஒன்று இங்கே எங்கே இருக்கிறது? இருப்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் குறித்த கேள்விகளை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். கேள்வி கேட்கவும், மேலும் அறிந்துகொள்ள விழைதலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நம்பாதவன் கேள்வி கேட்கக்கூடாது என்றும், என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை; யார் சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்று வெளிப்படையாகத் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் கூடத் தைரியமாகப் பேசித் திரிகிறார்கள். இது போன்ற அயோக்கியத்தனங்களை, குழப்பத்திடையே கவனிக்காமல் விட்டுவிடுவார்களோ மக்கள் என்பதும் எனக்கொரு அச்சமாக இருக்கிறது.

‘எல்லாம் சரி; ஆண்டாளைச் சிறப்பித்துத் தான் வைரமுத்து எழுதியிருக்கிறார்’, என்று ஒப்புக்கொள்ளும் சில நண்பர்கள் கூட, ‘ஆனால், அவர் இதையெல்லாம் எழுதியிருக்க வேண்டுமா; அதற்கான அவசியம் என்ன’ என்று கேட்கிறார்கள்.

ஒரு எழுத்தாளன் என்ன எழுத வேண்டும், எப்போது எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அந்த எழுத்தாளனுக்கே உரியது. அதைப் பிறர் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? அவ்வெழுத்தில் அவதூறு, ஆபாசம், வன்முறைதூண்டல் போன்றவை இருக்கக்கூடாது என்னும் அளவில் வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அதுவன்றிப் பிற கருத்துகளுக்குத் தடை விதிக்க ஊருக்கு யார் உரிமை கொடுத்தது? ஆனால், வைரமுத்திடம், தான் எழுதாத ஒன்றை, தான் ஏற்றாத உணர்ச்சிகளை, ‘இல்லை, நீ இப்படித் தான் எழுதியிருக்கிறாய்’ என்று ஏற்றிக் கூறி, அதனால் நாங்கள் வெகுள்வோம், நீ வந்து மன்னிப்புக் கேள் என்று அடம்பிடிப்பது இந்தச் சமூகத்திற்கு ஆரோக்கியமான ஒன்றன்று. அவ்வாறாக அவர் மன்னிப்பேதும் கேட்கக் கூடாது. மதவெறிக்கும் இரவுடித்தனத்துக்கும் அடிபணிவது முற்போக்குச் சமூகத்திற்கு ஒரு பெருந்தோல்வியாகவே அமையும்.

* * * *

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Tags: ஆண்டாள், திருப்பாவை, தேவரடியார், வைரமுத்து

Posted in இலக்கியம், சமூகம்

15 Responses to “வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்”

  1. on 19 Jan 2018 at 12:53 am1Mahalingam

    உண்மை. எழுத்தாளன் சிந்திப்பதைக் கட்டுப்படுத்தினால் அவனின் சுயம் காணாமல் போகுமல்லவா? தமிழ் மக்கள் இன்று எடுப்பார் கைப்பிள்ளை போல் தூண்டி விடுபவர்களின் பேச்சுக்கெல்லாம் மயங்கி விடுகின்றனரோ என்ற ஐயம் எழுகிறது.

  2. on 19 Jan 2018 at 1:49 am2இரா. செல்வராசு

    ஆம். இவ்விசயத்தில் குட்டையை நன்றாகவே குழப்பி விட்டுவிட்டனர் இந்துமதத் தீவிரவாதிகள். இதிலும் மயங்காது நாம் தான் விழித்திருக்க வேண்டும்.

  3. on 19 Jan 2018 at 6:26 am3கதிரவன்

    ..அருமையான ஒரு கட்டுரை..ஆசிரியரே. இந்த சோதியாய் மறைந்தார் வள்ளலார் போன்ற கதைகளில் புரட்டு இருக்கு என்று கேள்வி கேட்கும் அனைவருக்கும் வரும் சிந்தனையே. கேள்வி கேட்கும் பண்பாட்டை வளர்க்க நாம் முற்படுவோமாக. அதுவே அறிவார்ந்த சமூகத்துக்கு அடிப்படை

    நன்றி
    கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

  4. on 19 Jan 2018 at 8:52 am4Sasi

    I completely disagree with Vairamuthu’s article.

    The entire article of Vairamuthu was built on the Premise of curiosity. His Curiosity is mainly due to the fact an orthodox Brahmin girl who wrote the religious Thiruppavai went on to write even more masterpiece in a fluent erotic style called “Nachiyar Thirumozhi”. And even more startling is her fluency in Tamil in such a young age.

    So, Vairamuthu ( and many others) concludes this is only because of the possibility of her being a devadasi for which there is absolutely no evidence except for some quotes attributed in a book (and that too without evidence).

    Aandal as a character is a big puzzle in Tamil history. Being the only female Azhwar who broke all traditions and that too an unmarried girl who wrote poetry in an erotic style which is so unique in Tamil poetry.

    So, they conclude she cannot be an ordinary girl but only a devadasi could do it.

    It’s a cheap misogynistic mindset.

    – Sasi

  5. on 19 Jan 2018 at 6:02 pm5இரா. செல்வராசு

    சசி, நீங்கள் கூறிய எதுவுமே அக்கட்டுரையை (மட்டும்) படிக்கும்போது (எனக்கு) வெளிப்படவில்லை. மாறாக இந்த அனுமானத்துக்கு ஏன் வந்தார் என்பதற்கு மூன்று நான்கு வாதங்களை அவர் வலுவாக வைத்திருப்பதாகப் படுகிறது. அவற்றை ஞாநி அவர்களின் காணொளியிலும் கேட்டு அறிய முடியும். தவிர, இது ஒன்றும் தீவிரமான ஆராய்ச்சிக் கட்டுரையன்று. அவர் சுட்டிய தரவு பிழை. ஆனால் அது சொல்லவந்த கருத்துக்கு பெரும் தடையாய் இருக்கவில்லை. மற்றபடி உங்கள் கருத்து வைரமுத்து பற்றிய முன்முடிவோடு அணுகுவது போலத் தான் எனக்குப் படுகிறது. இருக்கட்டும், நாம் கருத்துகளில் வேறுபட்டிருப்போம். இதை எதிர்த்து எப்படி வேண்டுமானாலும் விமர்சனங்களை வைக்கலாம், எதிர்கருத்துகளைப் பரப்பலாம். ஆனால், இந்துத்துவச் சக்திகள் இதனை வாய்ப்பாகக் கொண்டு செய்யும் பரப்புரையும் வன்முறைதூண்டலும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  6. on 19 Jan 2018 at 8:08 pm6Sasi

    இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பதில் உடன்படுகிறேன். நானும் எதிரிக்கிறேன்.

    வைரமுத்துக்கு தன் கருத்தைக் கூற எல்லா உரிமைகளும் உண்டு. அந்த வகையில் மட்டும்
    தான் வைரமுத்துவை ஆதரிக்க முடியும்.

    வைரமுத்துவின் கருத்துக்களை கருத்துகளால் மட்டுமே எதிர்க்க வேண்டும்.

    இந்துத்துவ சக்திகள் வைரமுத்துவை அளவுக்கு அதிகமாக விமர்சிக்கிறார்கள் என்பதால் ஒரு வரி தானே என்று அலட்சியமாக அணுகுவது சரியான அணுகுமுறை ஆகாது.

    அடிப்படையில் எந்த வித ஆதாரமும் இல்லாமல் எழுதப்பட்ட அந்த வரிகளும், அதற்கு முந்தைய சில வரிகளும் தான் அந்தக் கட்டுரையின் முடிவுரை என்னும் பொழுது அதனை எப்படி புறந்தள்ள முடியும் என புரியவில்லை.

  7. on 19 Jan 2018 at 10:00 pm7Tamil Susai

    ஆழமான நடுநிலையான ஆய்வு

  8. on 19 Jan 2018 at 10:25 pm8இரா. செல்வராசு

    நல்லது சசி. இந்துத்துவச் சக்திகளை எதிர்ப்பதிலும், கருத்துகளில் ஒவ்வாமை என்றால் எதிர்கருத்துகள் வைத்துப் பேசுவதிலும் நாம் உடன்படுகிறோம். போதிய ஆதாரம் இல்லாமல் தேவரடியார் என்று சொல்லிப் போந்த கருத்தை நீங்கள் தவறு என்கிறீர்கள். அதில் மட்டும் நாம் வேறுபடுகிறோம்.

    புறந்தள்ளிவிட்டுப் போகச் சொல்லவில்லை, அதில் பெரிய தவறிருப்பதாய் நான் கருதவில்லை. கேள்விகள், அனுமானங்கள், ஏரணங்கள் இவை அறிவுசார் சமூகத்தின் இயல்புகள் என நான் கருதுகிறேன். கதிரவன் மேலே சொல்லியுள்ள வள்ளலார் சோதிமயமான கதையும் அதைப் போன்ற ஒன்றே.

    சுவாரசியமாக, இன்னும் ஓரிரண்டு நல்ல நண்பர்களோடும் நான் வேறுபடும் இடமும் இதுதான். இதுவும் எண்ணத்தக்கது.

  9. on 19 Jan 2018 at 10:26 pm9இரா. செல்வராசு

    தமிழ் சூசை ஐயா, உங்களின் பாராட்டுக்கும் நன்றி.

  10. on 24 Jan 2018 at 12:48 am10Bala

    மிகவும் சிறப்பானதோர் கட்டுரை. ஆற்றொழுக்கான அழகிய தமிழில் அமைந்துள்ளது. வாழ்த்துகள்
    (கவனக்குறைவாக ஒரு பிழை ஏற்பட்டுள்ளது. கருவரை அல்ல கருவறை)

  11. on 24 Jan 2018 at 9:26 am11இரா. செல்வராசு

    மிக்க நன்றி பாலா. குறிப்பாக, சிறு பிழையென்றாலும் அதனைச் சுட்டியதற்கு மிகமிக நன்றி. இயன்றவரை பிழையின்றித் தமிழில் எழுதவேண்டும் என்பதை நான் பெருவிருப்பாய்க் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு சிறு பிழைகளைவதும் அதற்கு முதன்மையானது.

  12. on 24 Jan 2018 at 9:51 am12Johan Paris

    அருமை! மிகச் சிறப்பான பொறுப்பான ஆய்வு. இளைஞர்கள் இப்படித் தெளிவுடன் இருந்தால் எல்லோருக்கும் நலம். தொடருங்கள். பச்சைத் தமிழிச்சி ஆண்டாளைப் பரிசு கெடுத்தது- வைரமுத்து அல்ல!

  13. on 24 Jan 2018 at 11:39 pm13இரா. செல்வராசு

    Johan Paris, உங்களுக்கும் எனது நன்றி. ஆம், அந்தத் தெளிவைச் சமூகத்தில் பரவவிடும் பொறுப்பும் நமக்கு உண்டு.

  14. on 25 Jan 2018 at 9:58 pm14சொ.சங்கரபாண்டி

    அன்பின் செல்வா,
    வைரமுத்துவின் கட்டுரையைப் படித்தபின்னரே இதையும் படிக்க வேண்டுமென்று முடிவுசெய்திருந்தேன். இப்பொழுதுதான் அதையும் படித்து முடித்துவிட்டு இதையும் படித்தேன். இப்போதெல்லாம் எனக்கு வைரமுத்துவின் பேச்சுகளிலும் எழுத்துகளிலிமிருக்கும் உருவகங்கள் இளம்பருவத்திலிருந்த அளவுக்கு ஈர்ப்பைத் தருவதில்லை. ஆனால் இந்தக் கட்டுரையை அவர் நன்றாகவே கையாண்டிருக்கிறார் எனக்குப் பட்டது.

    தகவல் பிழை என்பதில் கூட பிழையான தகவல் என்பதை விட யார் தந்த தகவல் என்பதில்தான் பிழை என்கிற பட்சத்தில் அத்தகவல்கள் கட்டுரையின் கருத்துக்கு உடன்படுவதாகத்தானிருந்தது. நீங்களும் இவற்றை நயமாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
    வைரமுத்துவை வசைபாடுபவர்கள் படித்திருக்க மாட்டார்கள் அல்லது புரிந்திருக்க மாட்டார்கள்.

    இது தொடர்பாக இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் கீழே:
    http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/FestSchrift/supa_9d.pdf
    http://www2.rsuh.ru/binary/object_40.1412591563.13923.pdf

  15. on 26 Jan 2018 at 12:26 am15இரா. செல்வராசு

    நன்றி சங்கர். மகிழ்ச்சி. நீங்கள் இணைத்திருக்கும் ஆய்வுக்கட்டுரைகளைப் பொறுமையாகப் படித்துப் பார்க்கிறேன்.

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook