இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

தமிழ்த்தாய் வாழ்த்தும்

January 26th, 2018 · 3 Comments

ஒரு விசயேந்திரர்(ன்) எழுந்து நிற்கவில்லை என்பதால் தமிழ்த்தாய்க்கு ஓர் இழுக்கும் இல்லை. தமிழின் சிறப்புக்கும் செழுமைக்கும் ஒரு பங்கமும் இல்லை. சிறுமைப்பட்டுப் போனதென்னவோ சின்னவர், காஞ்சியின் மடத்தலைவர் தான். நிற்காத காரணமாய் முன்னும் பின்னும் முரணாய்க் கருத்துகளை வெளியிடுவதில் இருந்தே தவறு செய்துவிட்ட அவர்களின் தடுமாற்றம் தெரிகிறது. ஆனாலும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர்களின் அகந்தை இடந்தராது.

TN GO thamiz thaai vaazththuதமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது  வெளிப்படையான  சட்டமில்லை தான். ஆனால், அதுவே பொது அவையின் மரபும், மரியாதையும் ஆகும். காட்டவேண்டிய பண்பும் பணிவுமாம்.  எந்த ஒன்றிலும் ஒரு நன்மை இருக்கிறது என்றாற்போல, இதனால் தான் 1970ல் கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்றைப் பற்றியும் இன்னும் விரிவாக அறிந்து கொள்ள நேர்ந்தது. எல்லா அரசு, ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவன நிகழ்வுகளிலும் ‘தொடக்கத்திலேயே’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடங்க வேண்டும் என்பது தான் சட்டம் சொல்வது.

மனோன்மணீயப் பாட்டில், ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன்’ என்னும் வரியுட்படச் சில வரிகளை நீக்கிச் செய்தது தான் இந்த வாழ்த்துப்பாடல் என்பதை அறிந்திருந்தாலும், அது பற்றிய சில வரலாற்றுச் செய்திகளையும் இது வெளிக்கொணர்ந்திருக்கிறது. விகடனில் கி.வா.ச எதிர்த்து எழுதியதும், பிறகு, மு.வ, அப்பாத்துரையார், ம.பொ.சி போன்றோர் ஆதரித்தும் வெளியிட்ட கருத்துகள் பற்றியும் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி வழியாகப் படிக்க நேர்ந்தது. தமிழ்மொழியின் சிறப்பும் சீரிளமையும் குறித்துப் பாடவேண்டிய இடத்தில் வேற்றொருமொழியின் அழிவுபற்றிப் பேசவேண்டாமே என்னும் நல்லியல்பில் அவ்வரிகளை விடுத்துத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டதும் நல்லதே. கடந்த சுமார் ஐம்பதாண்டுகளாக ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கித் தமிழணங்கை நாம் வாழ்த்தியே வந்திருக்கிறோம்.

ஒரு நாட்டின் கொடியையோ, அரசியல் சாசனத்தையோ, கீதத்தையோ, வேறு புனிதம் என்று போற்றத்தக்க ஏதேனும் ஒன்றையோ ஒரு அடையாளமாக எடுத்துக்கொண்டு அதனை எதிர்ப்பதிலோ, எரிப்பதிலோ மக்கள் ஈடுபடுவதை உலகெங்கும் பார்த்துத் தானிருக்கிறோம். ஒருவகையில் அது அகிம்சைப் போர் என்று காந்தி கையிலெடுத்ததையும் நாம் போற்றத் தான் செய்திருக்கிறோம். அது வேறு. ஏன் எதிர்க்கிறோம், எதற்காகப் போராடுகிறோம் என்று தெளிவித்துவிட்டுச் செய்யும் செயல் அது. அவற்றுள் சில, இருக்கும் சட்டத்துக்குப் புறம்பானதாய் இருப்பின் அதன் பலனையும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறோம் என்று அறிந்தே செய்யும் செயல் அது. ஆனால் இங்கோ அப்படி வெளிப்படையாகச் சொல்லிச் செய்யாவிட்டாலும், தமிழ் கீழானது என்றும், அதற்கு முன் தானெழுந்து நிற்கக் கூடாது என்றும் எண்ணிச் செய்த செயலாகத் தான் இதனைப் பார்க்க முடியும்.

யாருக்கு வேண்டும் இவர்களது மன்னிப்புவேண்டல்? இம்முகத்திரைக்குப் பின்னுள்ள இந்தச் சிந்தனையைத் தமிழ்ச்சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான இன்னுமொரு தெளிவான சான்றாகத் தான் இச்செயலைப் பார்க்க முடியும். தியானமாம், மரபாம்… யாரிடம் புருடா விடுகிறார்கள்? இன்னும் கூட ஐயத்தின் பலனை அவர்க்குத் தரலாம் – ஆனால் – அவராகச் செய்ததை உணர்ந்து ஏற்று ஏதும் கூறுவார் என்னும் நம்பிக்கை எனக்கில்லை.  அறியாது செய்தால் தவறு-மன்னிப்பு எல்லாம் பேசலாம். ஆனால், அறிந்தே செய்த ஒன்றை என்னவென்று அழைப்பீர்கள்? நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

clip_image001

அண்மைய ஊர்ப்பயணத்தில் சென்னைத் திரையரங்கு ஒன்றில் படம் பார்க்கச் சென்றிருந்தபோது சனகனமண பாட்டிசைத்தார்கள். கேளிக்கைக்கான இடத்தில், நேரத்தில், தேசியகீதம் பாடித் தான் தேசியம் வளர்க்க வேண்டும் என்னும் நடுவண் அரசின் திணிப்பை எதிர்த்தாலும், அத்திரையரங்கில் நானும் எழுந்து நின்றேன். இந்நிகழ்வால் என் தேசிய உணர்ச்சி வளரவில்லை. எனினும் ஒரு அவை நாகரிகம் கருதி எல்லோருடனும் நானும் எழுந்தேன்.

நடுவண் அரசுக்கு என்னிடம் ஓர் அறிவுரை உண்டு. உண்மையான தேச பக்தியை வளர்ப்பது எளிது. நாட்டின் பல்வேறு இனக்குழுக்களின் வேற்றுமையைப் பாராட்டுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வெறும் முழக்கமாக மட்டும் கொண்டிராமல் (இப்போதெல்லாம் அம்முழக்கம் கூட மறைந்துவிட்டதோ என்னவோ) உண்மையாக அரவணைத்துச் செல்லுங்கள். வேற்றுமொழியை ஒரு இனத்தின் மீது திணிக்காமல், அவரவர் மொழியை மதித்து, அவற்றின் வளர்ச்சிக்கு உண்மையான அக்கறை காட்டுங்கள். இந்தி மொழி மீது எனக்கேதும் காழ்ப்பில்லை. ஆனால், இந்தி தான் தேசிய மொழி என்னும் பொய்ப்பரப்புரையைக் கைவிடுங்கள். எல்லா மொழிகளோடும் ஒன்றாய் இந்தியும் அதனிடத்தில் வளர்ந்துகொள்ளட்டும்.

எல்லா மாநிலத்தவரும் எம்நாட்டு மக்களே என்று அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெருகவும், அவர்களின் பாதுகாப்புணர்ச்சி பெருகவும் உண்மையான செயல்களில் ஈடுபடுங்கள். தேசிய உணர்ச்சி, தேசப்பற்று என்பது திணித்து வளர்வதல்ல. அவை தற்கிளர்ச்சியாக உருவாகி வரவேண்டும். எனது மொழியை முதலில் மதியுங்கள். பிறகு, நாமெல்லோரும் ஒரு தேசத்தினர் என்னும் கருத்துருவாக்கத்தை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எனது மொழியை மதியா ஒருவரை நான் மதிக்கத் தான் வேண்டுமா என்று விசயேந்திரன் என்று ஒருமையில் எழுத எத்தனித்தேன். இருப்பினும் நாம் மதித்தே செல்வோம் என்று என் தமிழ் கூறுகிறது.

அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருப்பவள் எங்கள் தாய். அவள் சீரிளமையைத் திறம்வியந்து வாழ்த்துங்கள். அத்தாய், எங்களை மட்டுமல்ல, உங்களையும் வாழ்த்தும்.

* * * *

Tags: சமூகம் · தமிழ்

3 responses so far ↓

  • 1 மதுரைத்தமிழன் // Jan 26, 2018 at 11:51 am

    தமிழ்தாய் வாழுத்து பாடிய போது தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்பதுபோல இதற்கும் எழுந்து நிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாததால் அமர்ந்தவாறே அதை கேட்டு மகிழ்ந்தேன் என்ற ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அவர் மக்கள் மனதில் உயர்ந்து இருப்பார் இப்படி அவர் சொல்லி இருந்தால் மன்னிப்பு கூட கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.. நான் அப்படி பேச அவரின் அகந்தை இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை

  • 2 மதுரைத்தமிழன் // Jan 26, 2018 at 11:55 am

    செல்வராசு ,நீண்ட இடைவெளிக்கு பின் பதிவுலகில் அடி எடுத்து வைத்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்

  • 3 இரா. செல்வராசு // Jan 26, 2018 at 8:29 pm

    மதுரைத்தமிழன், கருத்துக்கும் வரவேற்பிற்கும் நன்றி. உங்களை நான் முன்பு படித்ததில்லை என நினைக்கிறேன். இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். இடையில் பல காலம் வலைப்பதிவுகளில் எழுத இயலவில்லை. இவ்வாண்டு சிறிது சிறிது எழுதலாம் என ஒரு எண்ணம். பார்ப்போம்.