அமெரிக்காவின் ஒரு பெருந்தவறு
May 19th, 2018 by இரா. செல்வராசு
நேற்றுக் காலை ஒரு அலுவ இடைவெளியில் தேநீர் கொள்ளச் சென்றபோது அவர் பதற்றமாய்த் தன் பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். சக ஊழியர்.
“எப்படி இருக்கீங்க”, வழக்கமான முகமன் உரைத்தேன்.
முகத்தில் கவலையைப் பார்க்க முடிந்தது. “என் மகளோடு பேச முடியுமாவெனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. பூட்டுநிலை அறிவிச்சிருக்காங்கலாம். துப்பாக்கியோடு ஒரு ஆள் அந்தப் பகுதியில் சுத்திக்கிட்டிருக்காராம்”.
“அப்படியா? அப்ப எனக்கும் வந்திருக்கணுமே”, என்று அவசரமாய் எனது பேசியை எடுத்துப் பார்த்தேன். அவரது மகள் பயிலும் அதே பள்ளியில் தான் எனது மகளும் பயின்று வருகிறாள். ஆம். எனக்கும் ஒரு மணிநேரம் முன்பு அந்தச் செய்தி வந்திருந்தது. அலுவல் மிகுதியில் பார்க்காமல் விட்டிருந்தேன். ஆனால், அவரைப் போல ஏனோ எனக்குப் பதற்றம் ஏற்படவில்லை. ஏதோ ஒரு உளமறுப்பு. அப்படி ஏதும் தீயூழ் நிகழ்வுகள் இங்கு ஏற்படா என்று குருட்டு நம்பிக்கை.
இப்படியாகச் செய்தி வந்ததே, அனைத்தும் நலமா என்று கேட்டு மகளுக்கு ஒரு செய்தியனுப்பினேன். பள்ளியில் பொதுவாகத் தொலைப்பேசி மணியை அணைத்து வைத்திருப்பாள் என்பதால் செய்திவழிப் பரிமாற்றம் தான் விரைவில் உரையாட வசதி. நான் அனுப்பவும் அவளிடம் இருந்து பதிலும் பள்ளியில் இருந்து இன்னொரு குறுஞ்செய்தியும் வரவும் சரியாக இருந்தது.
‘அனைத்தும் இயல்நிலைக்குத் திரும்பிவிட்டது. ஒன்றும் சிக்கலில்லை. ஆளை அடையாளம் கண்டுகொண்டோம். ஆயுதம் ஏதுமில்லை’
பதற்றம் ஏற்படா நிலையில் இதையும் ஒரு செய்தியாகக் கடந்து போய்விட்டேன். ஆனால், அப்போதிருந்து 24 மணிநேரம் கூட ஆகியிருக்கவில்லை; தெக்சாசில் இன்னொரு உயர்நிலைப் பள்ளியில் இப்படிக் கடந்துபோகாவண்ணம் பத்துப் பேரைக் காவுகொண்டு போயிருக்கிறது இன்றைய துப்பாக்கிச் சூடு. சாந்தா ஃபே உயர்நிலைப்பள்ளி (Santa Fe High) எங்கள் பகுதியில் இருந்து ஐம்பது/அறுபது மைல் தொலைவு தான் இருக்கும். அங்கு படிக்கும் மாணவனே துப்பாக்கி ஏந்திச் சுட்டுப் பத்து பேர் மரித்தும் இன்னும் பத்துப் பேர் காயமுற்றும் போயிருக்கிறார்கள்.
அமெரிக்கா! உன் நிலத்தில் ஏதோ ஒரு பெருந்தவறு நடந்து கொண்டிருக்கிறது. உன் பதில் தானென்ன? இவ்வாண்டில் மட்டும் சராசரியாக வாரம் ஒரு முறை துப்பாக்கிச் சூட்டு நிகழ்வு நடந்திருக்கிறது.
ஆயுதம் தாங்கும் உரிமை அமெரிக்க அரசியற்சட்டத்தின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன் என்றாலும் இவ்வாறு தொடர்நிகழ்வுகளின் வழியே அழியும் உயிர்களுக்கும் துயருறும் குடும்பங்களுக்கும் பதில் தானென்ன?
‘துப்பாக்கியால் சுட்டவனை எனக்குத் தெரியும். அவனும் நானும் காலையில் இரண்டாவது மணியில் ஒரே வகுப்பில் தான் படிக்கிறோம்’, பள்ளி மாணவி ஒருவரின் நேர்காணல் வானொலியில் கேட்டவாறு வீடு திரும்பினேன்.
‘இன்னும் இருபது நிமிடங்கள் கழிந்திருந்தால், நானும் அவனும் ஒரே வகுப்பில் இருந்திருப்போம். நம்ப முடியவில்லை’. இவருக்கு வயது பதினேழு – என் மகள் வயதுப் பெண், இச்சோக நிகழ்வைத் தாங்கிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
‘இது அரசியலாகிவிட்டது. எங்கள் பகுதி ஆயுதந்தாங்கும் உரிமையின் சார்பாகப் பேசும் பெரும்பான்மை உள்ள பகுதி. ஆனால் என்னைப்போல் சிலர் ஆயுதக் குறைப்பிற்காகப் பேசுபவர்களாவும் உள்ளனர். இப்போது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும்; இருப்போம். இந்தச் சோகம் பெரிது. இன்னும் சில வாரங்கள் போகட்டும்; பிறகு இருபக்கக் கருத்துகள் பற்றியும் விவாதித்துக் கொள்ளலாம்’, என்று சொல்லக்கேட்கவும் எனக்குக் கண்கள் பணித்தன.
‘குண்டுச் சத்தம் கேட்டவுடன் என் தங்கையைப் பற்றிக்கொண்டு ஓடினேன். இது போன்ற நிகழ்வுகளைப் பிற மாநிலங்களில் பிற ஊர்களில் நடப்பதாய்ப் படிக்கிறோம். ஆனால், நமக்கெல்லாம் இப்படி நிகழாது என்று எப்போதும் நினைக்கிறோம். ஆனால், இன்று இது இங்கேயே நடந்திருப்பதில் விசித்திரமாய் இருக்கிறது’.
எல்லோருமே இப்படித் தான் நினைக்கிறோமா? தீயூழ் நிகழ்வுகள் நம்மை அண்டாவென்று ஒரு நம்பிக்கை அடிப்படையில் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். ஆனால், அடிக்கடி இவ்வாறு நிகழும் நிகழ்வுகள் அதில் ஐயப்பாட்டை எழுப்பிவிடுகின்றன. இன்னும் இரண்டே வாரங்களில் பள்ளிவாழ்வை முடித்துக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டியவர்கள், இப்படி வாழ்வறுபட்டுச் சாவுற்று வீழ்வதை எங்ஙனம் நியாயப்படுத்துவது! எப்படிப் புரிந்துகொள்வது?
* * * *