• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« ஒரு தந்தையின் கடிதம் – மூலம்
நான்காவது வீடும் நிலையான முகவரியும் »

முரடாய் மிரட்டாதே !

Jul 11th, 2004 by இரா. செல்வராசு

விருந்தோம்பலுக்குப் பெயர் போன கொங்கு நாட்டின் அமெரிக்க வாரிசு-என் தங்க மகள் நிவேதிதா-அப்படிக் கூறிவிட்டாளே என்று மனம் சற்றே வேதனைப் பட்டது. “அப்பா… நம் வீட்டிற்கு விருந்தினர்யாரும் வரவேண்டாம். அப்படியே வந்தாலும் இரவு நம் வீட்டில் தங்க வேண்டாம்!” அழுதபடி அவள் கூறியதை நண்பர் வீட்டினர் வேற்றறையில் இருந்து கேட்டும் விட்டனர். “நாங்க வேணும்னா பக்கத்து அறையில் படுத்துக் கொள்கிறோம். அவங்க படுக்கையை அவங்களுக்கே குடுத்துடுங்க”, என்று அவர்கள் தர்மசங்கடத்துடன் முன்வந்தது என் கஷ்டத்தை இன்னும் அதிகப் படுத்தியது.

தங்களுடைய பெண்ணும் சில சமயம் தனது படுக்கைச் சொந்தம் பாராட்டித் தன் மாமா/அத்தைக்கே விட்டுத் தர மறுத்திருப்பதைச் சுட்டி, அது இயற்கையானது என்று தாங்கள் உணர்ந்திருப்பதாகக கூறினார்கள். அது உண்மை தான் என்றாலும், இங்கே நடப்பில் படுக்கை பிரச்சினையாக இல்லை. தவறு என்னுடையது(ம்) தான். இரவு ஒரு மணிக்கு நான் அப்படி முரட்டுத்தனமாய் மிரட்டி இருக்கக் கூடாது…


இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் மற்றும் அவர் தங்கை குடும்பத்தினர் எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். எல்லோரையும் முன்னரே அறிந்திருப்பதாலும், வந்தவர்களில் ஒரு எட்டு வயதுப் பெண்ணும் ஒன்றரை வயதுப் பையனும் இருந்ததாலும் அவர்களின் வருகையை நிவேதிதாவும் நந்திதாவும் மிகவும் எதிர்பார்த்தே இருந்தார்கள். வழியில் சற்றே தாமதமாகி விட்டதாலும், மறுநாள் காலை சென்று விடுவார்கள் என்பதாலும் அன்றிரவு வழக்கமான நேரத்தில் உறங்கச் செல்லப் பணிக்காமல், வெகு நேரம் பெண்களை விளையாட விட்டுவிட்டோம்.

கடைசியில் ஒரு வழியாய் விளையாட்டைக் கலைத்து எல்லோரையும் உறங்க அழைத்து வரக் கிட்டத்தட்ட இரவு ஒரு மணி ஆகி விட்டது. அவ்வளவு நேரம் ஆனதன் சோர்வு உடலில் இருந்தாலும், அவர்களின் உள்ளமோ இன்னும் விளையாட்டில் இருந்து வெளி வர விரும்பவில்லை. அதற்குத் தடையாக நிற்கிறோமே என்று அந்த உணர்ச்சி மிகுந்த நிலையில் எங்கள் மீது ஒரு அதிருப்தி. உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தவள் தெரிந்தோ தெரியாமலோ என்னைத் தன் கைவிரல்களால் குத்திவிட எனக்கும் சுருக்கென்று பட்டிருக்க வேண்டும். நானும் ஒரு சோர்நிலையில் இருந்தேன்.

யாராவது வந்து இரவு தங்கினால் பெண்கள் எங்களோடு வந்து உறங்கிக் கொள்வது வாடிக்கை தான் என்பதால் அது பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. ஆனால் சிறியதும் பெரியதும் படுத்த பின்னும் ஏதோ போட்டி போட்டுக் கொண்டும், அழுது அடம்பிடித்துக் கொண்டும் இருக்க, உடற்சோர்வில் அது எனக்குச் சற்றே பொறுமையின்மையை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

“ஒழுங்காக அமைதியாகப் படுங்கள்”, என்ற என் குரல் கடுமையாகத் தான் இருந்திருக்க வேண்டும். இரவு வெகுநேரமான சோர்வும், எனது மிரட்டலும், தான் விரும்பியபடி படுக்கையின் குறுக்கே படுக்க முடியவில்லை(!) என்பதும், சகோதரியோடு தகராறும், இன்ன பிறவுமாய்ச் சேர்ந்து ஒரு எதிர்ப்பு உருவாகிச் சற்று முரண்டு பிடிக்கவும் அழவும் ஆரம்பித்தாள் மகள். பொறுமையை இழந்த நான் “சத்தம் இப்போ வெளியே வரக் கூடாது. வாயை மூடு. அமைதியாகப் படுத்துத் தூங்கு”, என்று முரட்டுத் தனமாய் மிரட்டி விட்டேன். அது அவளது உரிமையைப் பாதித்து விட்ட உணர்வையும் தந்திருக்க வேண்டும். (மன்னித்துவிடு மகளே!).

இது தவறு. இரவு ஒரு மணிக்கு மட்டுமல்ல. எப்போதுமே இப்படி மிரட்டி இருக்கக் கூடாது. குழந்தைகளைச் சக்தியற்றவர்களாய் உணரச் செய்யும் இது போன்ற மிரட்டல்கள் கூடாது என்று படித்திருக்கிறேன். எப்போதும் நான் எண்ணியிருக்கிறேன். மனைவியோ பிறரோ இப்படியான மிரட்டல்களில் ஈடுபட்டாலும் அப்படிச் செய்யவேண்டாம் என்றும் கூறி இருக்கிறேன். ஆனாலும் அந்த நேரத்தில் பொறுமை இழந்து விட்டேன். எனது அந்த மிரட்டல் தான் அவளது அழுகையை இன்னும் தூண்டி விட்டது. இங்கே இருந்தால் தானே பிரச்சினை – நான் என் படுக்கைக்கே போகிறேன் – என்று எண்ணிக் கூறியவள் அதுவும் முடியாது என்னும் இயலா நிலையிலேயே மேற்கூறிய புலம்பலை வெளியிட்டாள்.

* * * * *

எண்ணிப் பார்க்கிறேன். என்னிடம் அவள் முரண்டு பிடிக்கவும், குழந்தை என்றும் பாராமல் நான் பொறுமை இழப்பதும், எப்படி ஆயிற்று இப்படி ? அவசர வாழ்க்கையில் பெண்களோடு உறவாடும் நேரம் சற்றே குறைந்து விட்டது என்பது ஒரு புறம். சேர்ந்திருக்கும் நேரங்களும் அங்கு போக வேண்டும், இங்கு அழைத்துச் செல்ல வேண்டும், கிளம்பு, காரில் உட்கார், ஓடு, பிடி, என்று ஒரு அவசர கதியாகவே சென்று விடுவதும் ஒரு நல்ல பிடிப்பை உருவாக்குவதாய் இல்லை என்பதும் காரணங்களாய் இருக்கலாம். இந்நிலை சரியில்லை.

அதனால் எனக்கு நானே சில அறிவுரைகளைக் கூறிக் கொள்ள வேண்டியது முக்கியமாகப் படுகிறது.

  1. குழந்தைகளோடு இன்னும் சற்று அதிக நேரம் செலவிடு. அலுவலகத்தில் இருந்து இன்னும் ஒரு அரை மணி நேரம் முன்னதாகக் கிளம்பி வா.
  2. அரை டவுசர் போட்டுக் கொண்டு அவர்களோடு விளையாடு. உப்பு மூட்டை தூக்கு. குதிரைச் சவாரி செய்.
  3. பொறுமையாய் உட்கார்ந்து முழு ஈடுபாட்டுடன் ஒரு புத்தகம் படி.
  4. முச்சக்கர சைக்கிள் வண்டியை முன்னாலே ஓட்ட விட்டு விட்டு ஒரு நடை சென்று வா. (உடற்பயிற்சியும் செய்த மாதிரி இருக்கும்).
  5. தூங்கப் போகும் முன் கதை சொல்லி (அ) பாட்டுப் பாடி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது! எட்டு மணிக்குத் தூங்கப் போனால் தான் கதை சொல்வேன் என்று மிரட்டாமல், ஒரு நாள் ஒரு நல்ல கதை சொல். பாரதியைப் பாடு.
  6. நீச்சல் குளத்திற்கு வாரம் ஒருமுறையேனும் அழைத்துச் செல். விளையாட்டுப் பூங்காவிற்கோ நீச்சல் குளத்திற்கோ சென்றால் வேறு வேலை செய்யும் வழியில் செல்லாமல் அதற்காகவே செல்
  7. அவர்களுடைய ஓவியங்களையும் கைவண்ணங்களையும் கண்டு பாராட்டு. அவர்களோடு சேர்ந்து அறையைச் சுத்தம் செய் (தமது குப்பையைத் தாமே சரி செய்ய வேண்டும் என்று அவர்களும் கற்றுக் கொடு)
  8. வார இறுதியில் தீக்கக்கும் dragon ஆக மாறி பயமுறுத்தி விளையாட்டுக் காட்டு. அவர்களின் லீமர் பொம்மையைப் பிடிங்கி பிரியாணி செய்து சாப்பிடுவேன் என்று துரத்து. (இது இந்த வாரம் நடந்தது:-) )
  9. கையில் உறை மாட்டி விட்டுக் களை பிடுங்க அழைத்துச் செல்லும் போது கலங்கிய சேற்றைப் பிசைந்து விளையாடுவதைக் கண்டு ஒன்றும் சொல்லாதே.
  10. தொட்டதற்கெல்லாம் சட்டம் போடாமல், முக்கியமான தளைகளை மதிக்கக் கற்றுக் கொடு.
  11. அரைகுரையாய் இல்லாமல் அவர்களுடனான பேச்சுக்கும் கேள்விகளுக்கும் முழுக் கவனம் செலுத்து.
  12. அவர்களுடைய உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கக் கற்றுக் கொள். அதே சமயம் அவர்களுக்கு மரியாதை கற்றுக் கொடு.
  13. எக்காரணம் கொண்டும் கட்டின்றிக் கையை ஓங்காதே.
  14. பாடங்கள் கற்றுக் கொடுப்பதையும் அன்பாகச் செய். இப்படிச் செய், அப்படிச் செய் என்று ஒருக்காலும் முரட்டுத் தனமாய் மிரட்டாதே.
  15. இன்னும்…

இன்று இரவு படுக்க வைத்த பின் பத்தாவது முறையாய்க் கீழிறங்கி வந்தவளை உடனே மேலே போ என்று மிரட்டாமல், “என்னம்மா?” என்றேன்.

“பசிக்குதுப்பா”

“அம்மா கீழே போகச் சொன்னாங்களா ?”

“ஆமாம்”

“பால் ஊத்திக் கொடுக்கட்டுமா ?”

“ம்”

சூடான சர்க்கரைப் பாலை வெள்ளை மீசை உருவாகக் குடிப்பவளைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு சாந்தமான முகம்! மனசு நெகிழ்ந்தது.

தலையை வருடி விட்டு, “நீ என் மகளாய் இருப்பதற்காகப் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்”, என்றேன்.

அதைக் கவனித்தவளாய்க் காட்டிக் கொள்ளாமல் தனது கேள்விகளைத் தொடர்ந்து கேட்பதிலேயே மும்முரமாய் இருந்தாள். இவள் சின்னக் குழந்தை தான். ஆனாலும் தனக்கென்று ஒரு சுதந்திர மனமும் எண்ணங்களும் உணர்வும் கொண்ட ஒரு முழு மனுஷி !

ஒருநாள் எனது தவறுகளையும் இவள் மன்னிப்பாள் !

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in வாழ்க்கை

11 Responses to “முரடாய் மிரட்டாதே !”

  1. on 12 Jul 2004 at 1:07 am1Eelanathan

    குழந்தையின் மனநிலை புரிந்து நடக்கும் உங்களைப்போல் அருமையான் அப்பா கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் உங்கள் புத்திரிகள்

  2. on 12 Jul 2004 at 5:07 am2meena

    கண்கள் கலங்கி விட்டன செல்வராஜ்

  3. on 12 Jul 2004 at 1:07 pm3பாலாஜி

    எனக்கு சொல்கின்ற மாதிரியே இருக்கிறது. நன்றி செல்வராஜ்.

  4. on 18 Jul 2004 at 12:07 pm4Thangamani

    A nice post Selvaraj. Thanks.

  5. on 20 Jul 2004 at 11:07 am5அன்பு

    என்னுடைய குப்பையில் உங்களுக்கு லிங்க் போட்டிருந்தாலும் சத்தியமாக இன்றுதான் உங்கள் வலைக்குள் வருகிறேன். அதுவும் முதன் முதலில் உங்களுடைய இந்த எழுத்து – ஆம் இதைத்தான் கடவுளின் ஏற்பாடு என்பார்களோ…! அருமை, மிக அருமை. நன்றி அண்ணே, நீங்கள் கேட்டுக்கொண்டதை நிறைவேற்ற பார்க்கிறேன். எங்களோட எழிலும் சந்தோஷப் படட்டும்.

    குழந்தைகள் நிவேதிதா, நந்திதாவுக்கு வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து ஒங்க வீட்டுப்பக்கம் (சாரி …தாஸ்) வலைப்பக்கம் வருவேன்.

  6. on 20 Jul 2004 at 2:07 pm6sundaravadivel

    ஜோக் – நீங்க சொன்ன 15+ தகுதிகளோட எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒருத்தர்தான் இருக்கார் 🙂
    (இது உண்மையா இல்லையான்னு மாசிலனிடம் கேட்டுக் கொள்ளவும்!).

    சீரியஸ் – சிந்திக்க வைத்த பதிவு செல்வராஜ், நன்றி.

  7. on 20 Jul 2004 at 10:07 pm7செல்வராஜ்

    எல்லோருக்கும் நன்றி. அவ்வப்போது இப்படி நின்று யோசித்துக் கொள்வதும் நிதானப்படுத்திக் கொள்வதும் நிச்சயமாய் எனக்கு உதவுகிறது. குறுங்காலச் சலசலப்பில் தூரத்து இலக்கு மறைந்து போய் விடாதிருக்க இது உதவுகிறது. ஒரு வகையில் நாட்குறிப்புக்கள் இந்த வேலையைச் செய்திருக்கும். அதன் புறவடிவமான இந்த வலைக்குறிப்புக்கள் (குறிப்பாய் நாட்குறிப்புக்கள் நின்று போன இந்த நாட்களில்) வேறொரு பரிமாணத்தில் அதையே செய்ய உதவுகிறது. உங்கள் கருத்துக்களுக்கும் பகிர்தல்களுக்கும் நன்றி.

  8. on 21 Jul 2004 at 12:07 am8chandravathanaa

    கண்கள் கலங்கி விட்டது செல்வராஜ்.

  9. on 21 Jul 2004 at 2:07 am9Balaji-paari

    Dear Selva:
    Thanks for such a post. I am overwhelmed. Thanks once again. Vaarthaigal illai unarvugalai solla…
    Print out eduthu veeting suvatril otta vendum allathu shirt-pocketil eppothum irukka vendum.
    Anbudan
    Balaji

  10. on 21 Jul 2004 at 9:07 pm10Shreya

    beautiful..everyone should keep “top 15” in mind. :O)
    —

  11. on 30 May 2010 at 12:02 pm11ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர்.

    எத்தனையோ விசயங்கள் குடும்பத்துடன் ஒத்து போகாத என் எண்ணங்கள், பாதைகள் ஆனால் குழந்தைகள் பிறந்த அந்த நொடியில் இருந்து வளர்ந்து கொண்டுருக்கும் இந்த நொடி வரைக்கும் சார்ந்த அத்தனை உறவினர்களும் முன் உதாரணமாக வைத்து பேசுவது என்னைத் தான்.

    சுதந்திரம் என்ற வார்த்தைகளை சரியான கலவையில் வைத்து ஊக்கம் என்ற தேனுடன் ஊட்டி வளர்த்த குழந்தைகள் இன்று வரைக்கும் ஏமாற்றவில்லை.

    குழந்தைகள் என்பதை பிறப்பாகத் தான் பார்க்கிறார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையை செலுத்தும் திசைகாட்டியாக பார்க்கின்றேன். நீங்கள் கடைபிடித்த இந்த கொள்கைகளை பெரும்பாலும் ஏற்கனவே இன்று வரைக்கும் கடைபிடித்துக்கொண்டு தான் இருக்கின்றேன். வடிகால் மற்றும் வாங்கிக் கட்டிக்கொள்வதற்கு உடன் ஒருத்தி இருப்பதால்?

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook