இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

பூளப்பூவும் புதுவருசப் பொங்கலும்

January 13th, 2008 · 34 Comments

“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”.

aavaarampoo-Thanks to http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.htm

மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ, என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு (இந்தியாவுல இன்னிக்கு), “இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு!?”ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன்.

‘பொங்கலுக்கு என்ன பண்றீங்க, தீபாவளிக்கு என்ன பண்றீங்க’ன்னு கேக்குறதுக்கு…, குறிப்பா அம்மாக்கிட்டக் கேக்குறதுக்கு எப்பவுமே கொஞ்சம் தயக்கம். “என்ன பண்றம்? ரெண்டு சீவனு எப்பவும் போல ஒரு ஒழக்குப் போட்டுக் காச்சிக் குடிச்சுக்குறோம்” அப்படீம்பாங்க. இல்லாட்டி, “மக்க மருமக்க, புள்ள குட்டில்லாம் பக்கத்திலயா இருக்கு? ஒரு நோம்பி நொடின்னு கொண்டாட?” ம்பாங்க. சங்கட்டமாத் தான் இருக்கும். அவசரமாப் பேச்ச மாத்தீருவேன். இல்லாட்டி நானும் எதாச்சுக்கும் வம்பு பேசுவேன். அதது நேரத்தப் போல – சில நாள் சரியாப் போயிரும். சில நாள் எச்சா வம்புல போயி முடியும். ஒத்த மகன பத்தாயிரம் மைல் தள்ளியிருக்குற தாயி எல்லாத்துக்கும் கஷ்டந்தான், புரியுது. இருந்தாலும்…

“ஊடு வாச முழுக்க வழிச்சுட்டுக்கிட்டுருந்தா”ன்னு சொன்ன அப்பா கிட்ட, “யாராவது ஆளு வரச்சொல்லிப் பண்ணியிருக்கலாமுல்ல”ன்னு சொல்லிக்கிட்டிருந்தேன். சிலநாளு அப்பா கூட சேந்துக்கிட்டு இப்படித்தான் ரெண்டுபேரும் ஏதாவது பேசுவோம்.

‘அப்பனும் மவனும் ரெண்டுபேரும் சேந்துக்குறீங்களா? என்னப் பத்தி என்னடா பேசறீங்க’ன்னு சண்டைக்கு வருவாங்க. அப்பா எதையும் கண்டுக்காத ஆளும்பாங்க அம்மா. “அப்படி இருக்குறதுனால தான் சக்கரையெல்லாம் கூட கொறஞ்சுட்டுதாட்ட இருக்குது. பரவால்ல போ. நாந்தான் அதையும் இதையும் போட்டு மனச ஒழப்பிக்கிட்டுக் கெடக்குறேன்”. டாக்டரு என்ன சொல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு அடுத்த மாசம் பாத்துக்கலாம்னு தள்ளி வச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு மாசம் கழிச்சுப் போனாச் சக்கர தானா கொறஞ்சுடுமா?

* * * *
“இன்னும் காப்புக் கட்டே வல்ல. நாளைக்குத் தான் காப்புக்கட்டு. மறாநாளுத் தான் பொங்கலு”ன்னு அப்பா சொன்னாங்க.

இந்த வருசம் மாறிப் போச்சாட்டருக்குது. “காப்புக் கட்டுக்கு எல்லாம் வாங்கி வச்சிட்டீங்களா”ன்னு கேட்டேன்.

“என்ன வாங்குறது?”

“அதான். கட்டுக் கட்டா வேப்பந்தல. அப்புறம், அதென்ன பேரு?”

“ஓ! அதுவா. வேப்பந்தல. ஆவாரந்தல. அப்புறம் பூளப்பூவு. நாளைக்குப் போனாக் கூடயில கொண்டாருவாங்க. அப்ப வாங்கிக்கலாம்”

உதிர்ற பூளப்பூவத் தடவிக்கிட்டே, பூவுந்தலையும் சேந்த வாசத்த முகந்துக்குட்டு, ஊடு முச்சூடும் காப்புக் கட்டறதுக்கும், கட்டமுடியாத எடத்துல அப்படியே தூக்கிப் போடுறதுக்கும் அப்பச்சிங்கற தாத்தங்கூடப் பெரிய மனுசனாட்டம் வேல செஞ்ச சின்னவயசுக் காலமெல்லாம் கொஞ்சம் மங்கிப் போனாலும், ஒரு ஓரத்துல மனசுக்குள்ள எப்பவும் இருக்கும்.

poolappoo-Thanks to Kasi http://kasiblogs.blogspot.com/

“ஒரு மஞ்சக் கலருப் பூவு இருக்குமேங்மா. சின்னதா. அது என்ன?”

“அதாம்பா ஆவாரம்பூவு”

“நீங்க ஆவாரந்தலன்னு மட்டும் தான சொன்னீங்க. அதான் கேட்டேன்”

“இப்போல்லாம் வெறும் தல மட்டும் தான் கெடைக்குது. எங்காவது கிராமத்துப் பக்கம் போனா வேணாப் பூவு கெடைக்கும். இங்க கொண்டாரதுக்குல எல்லாம் உதுந்து போயி வெறும் தல மட்டும் தான் இருக்கும்”

அப்பத்தான் மேல சொன்ன மாதிரி ஆவாரம்பொடி பத்திச் சொன்னாங்க. தமிழ்க் கலாச்சாரத்துல ஆவாரம்பூவுக்கு நெறயா எடமிருக்குங்கறது ஒரு முற கூகுள் பண்ணினாத் தெரியுது. பூளப்பூன்னு தேடினாத் தான் அதிகம் ஒண்ணயுங்காணோம். நானே இந்தப் பேரெல்லாம் மறந்து போயிட்டேன். நாளைக்கு எம்பொண்ணுக எப்படித் தெரிஞ்சுக்குவாங்க? 🙁

இப்போல்லாம் நாட்டு மருந்துக் கடையில ஆவாரம்பொடின்னே கெடைக்குதுன்னும், பக்கத்துத் தெரு பிரேமாக்கா ஒரு டப்பா வாங்கியாந்தவங்க, அதுல பாதிய குடுத்தாங்கன்னும், அத ஒரு நா பாசிப்பருப்புக் கொழம்புக்குள்ளயும் இன்னொருநா சாம்பாருக்குள்ளயுமோ என்னமோ போட்டுச் சாப்பிட்டோம்னும் அம்மா சொன்னாங்க.

நான் கருவேப்பிலப் பொடி சாப்பிட்டிருக்கேன். ஆவாரம்பொடி சாப்பிட்டதில்லையே. ஒரு நாளைக்கி அதையும் சாப்பிட்டுப் பாக்கணும்னு நெனச்சிக்கிட்டே, “ஆவாரம்பொடி கெடக்குது உடுங்க, உங்க பேத்திமாருக்கெல்லாம் கரும்பு தான் வேணுமாம். அதுக்காகவே இந்தியாவுக்கு வரணும்னுக்கிட்டு இருக்காங்க”ன்னு சொன்னேன்.

“அடப் பாவமே! அங்கயெல்லாம் கரும்பு கெடைக்காதா?”

‘பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியா’ன்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான்.

“நீங்க இங்க வரும்போது கரும்புச் சீசன் எல்லாம் முடிஞ்சு போயிரும். அப்ப எங்க போயி வாங்கறது?”

சூன், சூலை எப்பவாச்சும் போலாம்னுட்டு இருக்கோம். நாங்க முடிவு பண்றதுக்குள்ள டிக்குட்டு எல்லாம் வித்துப் போயிருமாட்ட இருக்குது.

“இங்கிருந்து குடுத்துடற மாதிரி சாமானா இருந்தாக் கூடப் பரவால்ல!” இப்படியாக் கறும்ப எப்படி ஏத்துமதி பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சவங்களத் திக்கு மாத்திக் கடல வியாபாரத்துக்குக் கொண்டு வந்தேன்.

“சரி. கரும்ப உடுங்க. எப்பவாவது கெடச்சா பச்சக் கடல வேணா வாங்கி வையுங்க. வேக வெச்ச கடல சாப்பிடறதுக்கும் இவங்களுக்குப் புடிக்கும். இங்க பொதுவா வறுத்த கடல தான் கெடைக்கும்”

அப்பா அம்மா எல்லாம் அவங்க அய்யங்காலத்துலயே காடு வெள்ளாம இதெல்லாம் உட்டுப்போட்டு டவுனுப் பக்கமா வந்துட்டாங்க. முன்னாடில்லாம், ஊரு சேதின்னு போனா, காட்டுக்கம்பு, தட்டப்பயிறு, கடலக்கொட்டன்னு மஞ்சப் பை நெறயா வாங்கீட்டு வருவாங்க. இன்னிக்கு, “அதுக்கென்ன? நீங்க வரப்போ எங்க கெடச்சாலும் வேணுங்கறத வாங்கியாந்து தரேன்”னு சொன்னாங்க.

கம்பும் பயிறும் கடலையும் மட்டுமில்ல. நெல்லும், தேங்காயும், கரும்பும், மஞ்சளும், (ஆவாரையும்), இன்னும் எல்லாத்தையும் கொடுக்கிற நம்ம பூமிக்கு நன்றி சொல்லத் தான பொங்கலு வச்சுச் சாமி கும்பிடறோம். இன்னிக்கு நாம நேராப் பயிர் பண்ணாட்டி என்ன? பண்ணறவங்க பண்ணினாத் தானே மத்தவங்க வயித்துப்பாட்டுக்கு ஆச்சு. நம்ம பூமித் தாய்க்கும், இன்னும் ஒழவுத் தொழில் பண்ணிட்டிருக்கறவங்களுக்கும், அவங்களுக்கு உதவுற காத்து, தண்ணி, சூரியன் இப்படியான எல்லா இயற்கைச் சாமிகளுக்கும், மனுசஞ் சாப்பிடறதுக்காகத் தானும் உழைக்குற மாடு, கன்னு, ஆடுகளுக்கும் சேத்து நன்றி சொல்லி வாழ்த்திக்கலாம். பொங்கலோ பொங்கல்!

பயிர் பண்ணி, அறுவட முடிச்சுட்டு, இனி வர்ற வருசத்துக்குப் புத்துணர்ச்சியச் சேக்கிற அறுவடைத் திருநாள, பழசெல்லாம் ஒழிச்சுட்டுப் புதுசா தொடங்குற ஒருநாள, புது வருசத்தின் பொறப்பாவும் நெனைக்கிறது இயல்பான ஒண்ணு தான? அதனால, இனிமேலு தமிழ்ப்புத்தாண்டத் தை ஒண்ணுல இருந்து ஆரம்பிக்கலாம்னு மாத்தப் போறாங்களாம். நல்லது தான். தை பொறந்தா வழி பொறக்கும்பாங்க. இனிமே தை பொறந்தாப் புது வருசமும் பொறக்குதப்போவ்!

* * * *
பின்குறிப்பு:

ஆவாரம்பூவைச் சுட்ட இடம்: வரவனையானின் பதிவு

Tags: கொங்கு · வாழ்க்கை

34 responses so far ↓

 • 1 S. Sankarapandi // Jan 13, 2008 at 7:46 pm

  செல்வா,

  முதல்முறையா உங்க இடுகையச் சூடாப் படிச்சு, சூடாப் பின்னூட்டலாம்னு வந்தேன். என்னை இளமைக் காலக் கிராமத்து அத்தியாயத்துக்கு கொண்டுபோய் விட்டீர்கள். பொங்கல் சமயம் கண்ணுப்பூளச் செடியையும் (அப்படித்தான் எங்க கிராமத்துல சொல்றதுண்டு), ஆவாரம் பூவையும் போய் பறிச்சு வருவோம். வீட்டுல ஆறு உருப்படி இருந்தா எவ்வளவு செடியும், பூவும் வந்து சேரும்னு யோசிச்சுப் பாருங்க. “பேயன் வாழத்தோட்டத்தில புகுந்து வந்த மாதிரி இவ்வளவு செடியையும், பூவையுமா அள்ளிக் கொண்டு வருவீங்கன்னு” அம்மா சத்தம் போடுவாங்க. வீட்டுக்கு வெள்ளையடிப்பது, செம்மண் பட்டையடிப்பது, தரையில சாணி பூசுறது, அடுப்புக்கட்டி செய்றது, அடுப்புக்கு எரிக்கப் பனை ஓலை பொறுக்கி வறதுன்னு பொங்கலுக்கு முன்பே இரண்டு, மூணு வாரமா ஒரே அமர்க்களமா இருக்கும். முற்றத்தில் காலைச் சூரியனில் குலவை விட்டு பொங்கல் விடுவதும், பொங்கல் விட்டு முடிஞ்ச நெருப்பில் பனங்கிழங்குகளைப் போட்டுச் சுடுவதும், பொங்கல் சாப்பிட்டு விட்டு காட்டுக்குள் போய் பட்டம் விடுவதும், கரிநாளைக்கு பழைய பொங்கலையும், சுண்டுன கறியையும் கட்டிக் கொண்டு தோப்புகளில் போய் விளையாடிப் பொழுதைக் களிப்பதும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள்.

  //‘பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியா’ன்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான். //
  செல்வா, இங்கையும் கொரியன் கடைகளில் பொங்கல் நேரங்களில் வெட்டி வைக்கப் பட்ட கரும்புகள் கிடைக்கின்றன. கடந்த மூணு-நாலு வருசமா வாங்கிக் கொண்டிருக்கோம். நேற்று கூட “Han Au Rheum” கடையில் வாங்கி வந்தேன். பேர்பாக்ஸில், உங்க வீட்டுப் பக்கமும் கூட இந்தக் கடையிருக்கு. போய்ப் பாருங்கள். என்ன, நம்ப ஊர்ல கழிவுன்னு எறியப் பட்ட கரும்போட ருசிதான் இருக்கும் )-:

  //“சரி. கரும்ப உடுங்க. எப்பவாவது கெடச்சா பச்சக் கடல வேணா வாங்கி வையுங்க. வேக வெச்ச கடல சாப்பிடறதுக்கும் இவங்களுக்குப் புடிக்கும். இங்க பொதுவா வறுத்த கடல தான் கெடைக்கும்”//
  அதே கொரியன் கடைல அருமையான பச்சக்கடலை கிடைக்கும். அஞ்சாறு வருசமாவே வாங்கி அவிச்சுச் சாப்பிடறோம். எங்க வீட்ல அவிச்செடுத்த உடனே அடிபுடியா போகிறது இந்த அவிச்ச கடலைதான்.

  நன்றி – சொ. சங்கரபாண்டி

 • 2 கெக்கெபிக்குணி // Jan 13, 2008 at 8:52 pm

  கரும்பு, பச்சக் கடலை எல்லாம் Organic stores பலதில கிடைக்குதே! எந்த ஊரு நீங்க (ஸாரி, முன்ன பதிவுல படிச்சிருக்கேன், அப்புறம் ஊர் மாறினீங்கன்னு நினைக்கிறேன்..)?

  இந்த ஊரு கரும்பு வெள்ளைக் கரும்பு வகை தான், டேஸ்டு படு சுமாரு. இதான் கரும்புன்னு என் பசங்களுக்கு காமிக்கறதுக்காக வாங்கி வேஸ்டு… பச்சைக் கடலை நல்லாயிருக்கு…

 • 3 நாடோடி இலக்கியன் // Jan 13, 2008 at 10:41 pm

  ஆவாரம் பூ,புளாங் கொத்து,இண்டங்காய்,பிரண்டைச் செடி,வெட்டி வேர்,பலா இலை இவற்றை சேகரிப்பதற்காக நண்பர்களோடு சேர்ந்து ஒரு பெரும் கூட்டமாக காட்டுக்குச் செல்வோம். அந்த நினைவுகளையெல்லாம் அசை போட வைத்தது உங்கள் பதிவு.இதுதான் எங்கள் வீட்டில் நானில்லாத முதல் பொங்கல்,அந்த நினைப்பே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.உங்கள் பதிவை படித்துவிட்டு அப்படியே கிராமத்து நினைவுகளில் கொஞ்ச நேரம் மூழ்கிப் போனேன்.என்னதான் குளிரூட்டப் பட்ட அறைக்குள் இருந்தாலும் மனசு ஏனோ கிராமத்து வீட்டின் ஒட்டுத் திண்ணையின் குளிர்ச்சிக்கே ஏங்குகிறது.

 • 4 R.SEENIVASAN // Jan 13, 2008 at 11:04 pm

  கொங்குத் தமிழ்நடை உங்களுக்கு நன்கு வசப்படுகிறது.கொங்கு வட்டார வழக்கில்
  எழுதுபவர்கள் இப்ப ரொம்ப கம்மி.நிறைய எழுதுங்கள்.
  பொங்கல் வாழ்த்துகள்.

 • 5 Ag // Jan 13, 2008 at 11:57 pm

  //என்ன பண்றம்? ரெண்டு சீவனு எப்பவும் போல ஒரு ஒழக்குப் போட்டுக் காச்சிக் குடிச்சுக்குறோம்” அப்படீம்பாங்க. இல்லாட்டி, “மக்க மருமக்க, புள்ள குட்டில்லாம் பக்கத்திலயா இருக்கு? ஒரு நோம்பி நொடின்னு கொண்டாட?” ம்பாங்க.//

  //பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியா’ன்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான்.

  “நீங்க இங்க வரும்போது கரும்புச் சீசன் எல்லாம் முடிஞ்சு போயிரும். அப்ப எங்க போயி வாங்கறது?”//

  இப்போ இருந்தே கரும்பு தேட ஆரம்பிச்சிடுவாங்க பாருங்க :-))
  அம்மாக்கள் எல்லாரும் ஒன்று தான் போல.பொங்கலைப் பற்றிய நினைவுகளையும்,ஏக்கத்தையும்(கொஞ்சம் கண்ணீரையும்) கொடுத்தது உங்கள் பதிவு.அயல்நாட்டு வாழ்க்கையில்
  நிஜமாவே எதைப் பெற்று எதை இழக்கிறோம் என்று புரியவேயில்லை.
  பொங்கல் வாழ்த்துக்கள்!
  ..Ag

 • 6 மணியன் // Jan 14, 2008 at 2:39 am

  மண்வாசனையுடன் பொங்கல் பொங்கிய இன்பம் கிடைத்தது ! மும்பையில் கரும்பு கிடைத்தாலும் பொங்கல் இங்கே அடுக்ககங்களில் சடங்காகவே முடிகிறது.
  பொங்கலும் அதனையடுத்த மாட்டுப் பொங்கலும் நம்மூர்களில்தான் சிறப்பு 🙁 ஏக்கம் வரவழைத்தப் பதிவு.

  இனிய பொங்கல்/ தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!

 • 7 முத்துலெட்சுமி // Jan 14, 2008 at 7:44 am

  ஊரைவிட்டு தொலைவில் இருக்கும் எல்லாரையும் நெகிழ வைக்கும் அளவுக்கு எழுதி இருக்கிறீர்கள்..

 • 8 Vimala // Jan 15, 2008 at 1:55 am

  Ingayum Pongal kondadugirom….but we miss lot of things(Kolam,karumbu,pillayar etc).
  Neither we celebrate our festivals(completely) nor the ones here.

 • 9 priya // Jan 15, 2008 at 4:06 am

  othaiyaa porandhu veli oor vandha vara prachanai enaku puridhunga..
  adhu sari, yaaru pudhu varushatha maathuvaanga? 🙂

 • 10 iraamaki // Jan 15, 2008 at 7:37 am

  எங்கள் பக்கம் கார்த்திகை மாதத்தில் வரும் பிள்ளையார் நோன்புக்கு ஆவாரம்பூ தான் சார்த்துவார்கள்; அப்போது ஆவாரம் பூ வெகுவாய் உதிர்ந்து வெறும் குலை மட்டும் மீந்து இருப்பது நடப்பது தான்.

  ஆவிரையும் ஆவாரையும், ஆவாவிரையும் ஒன்றுதான். Cassia auriculata (Tanner’s cassia) என்று புதலியலில் (botany) சொல்லுவார்கள். ஆவாரம்பூ நீரழிவு நோய்க்குக் கைகண்ட மருந்து. பூவை வாணலியில் இட்டு நீரூற்றிக் கருக்க வைத்துக் காய்ச்சி அதன் சாற்றைக் குடித்தால், தமிழ் மருத்துவ முறையில் நீரழிவைக் குறைக்க முடியும்.

  கோவையில் இருக்கும் பூளை மேடு (இன்றைக்குப் பீள மேடு என்று மாற்றி ஒலிப்பார்கள்) இந்தப் பூவின் பெயரால் ஆனது. பூளைச்செடியை javanese wool plant என்றும் சொல்லுவார்கள். இது ஒருவித silk cotton. [பிற்காலத்தில் பருத்தி பரவுவதற்கு முன்னால் இப்படி silk cotton தான் கோவைப் பகுதியின் துகில்த் (textile) தொழிலுக்குத் தொடக்கம்.]

  பூளைப் பூவை பெரும்பாணாற்றுப் படை 192-193 ல்

  நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
  குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி

  கடியலூர் உருத்திரங் கண்ணனார் சொல்லுவார். (நீண்ட கொத்தையுடைய பூளைப்பூவை குறுகிய தாளுடைய வரகின் சோற்றுக்கு உவமையாகச் சொல்லுவார்.) சீவக சிந்தாமணி, கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றிலும் இந்தப் பூ எடுத்துக் காட்டப் பெறும்.

  பூளையின் படத்தையும் தேடியெடுத்து உங்கள் கட்டுரையில் சேருங்கள்.

  பொங்கலோ பொங்கல்.

  அன்புடன்,
  இராம.கி.

 • 11 காசி // Jan 15, 2008 at 8:15 am

  இராம.கி. அய்யா சொன்னமாதிரி பூளைமேடுதான் இன்று பீளமேடு. அதனால்தான் பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் தமிழ்ப்பெயரில் பூ.சா.கோ. என்று இருக்கிறது.

  சித்தூரில் எங்கள் வீடுகளில் தலகாணி செய்ய பூளைப்பூதான் ஒரு உள்ளீடு. (இன்னொரு மாற்று ராகிப் பொட்டு) ஆகவே இது ஒருவகையில் பருத்திப் பஞ்சுக்கு முன்னோடி/மாற்று என்பதும் உணர்ந்திருக்கிறேன்.

  அய்யா சொன்னதற்காக வாசலில் கிடந்த பூளைப்பூவை (காப்புக்கட்டியது) படமெடுத்து இங்கே வலையேற்றியிருக்கிறேன்.
  http://i12.tinypic.com/6q3bg5f.jpg

 • 12 காசி // Jan 15, 2008 at 8:16 am

  பொங்கல் வாழ்த்துகள். புத்தாண்டும்:-)

 • 13 நட்டு // Jan 15, 2008 at 8:37 am

  பூளப் பூ!பொங்கலுக்கு மட்டும் ஒலிக்கும் வார்த்தை.ஆஹா!எந்த ஊருங்கைய்யா நீங்க?பழசு நினைப்பையெல்லாம் கிளப்பி விடறீங்க போங்க!

 • 14 செல்வராஜ் // Jan 15, 2008 at 9:03 am

  சங்கர், கெக்கெபிக்குணி, இங்கு கொரியன் மற்றும் ஆர்கானிக் கடைகளில் கரும்பும் கடலையும் கிடைப்பது தெரியும். அந்தச் சுவையற்ற கரும்பை வாங்குவானேன் என்று விட்டுவிட்டோம். ஒருமுறை வாங்கிய கடலை விதைக்கடலையைப் போல முத்துக்கள் அற்றுப் போய்விட்டது. மேலும் நம் சொத்தையே கொடுக்க வேண்டும் என்று அதிகம் வாங்குவதில்லை 🙂 சங்கர் நீங்கள் சொன்ன கடையைப் பார்த்ததில்லை, தேடிப் பார்க்கிறேன்.

  R.SEENIVASAN: வட்டார வழக்கில் அவ்வப்போது எழுத முயல்கிறேன். எனக்கும் பிடித்திருக்கிறது. மறந்து/மறைந்துபோகிற சில சொற்றொடர்களை நினைவுபடுத்துவதாகவும் இருக்கிறது.

  நாடோடி இலக்கியன்,Ag,மணியன், முத்துலெட்சுமி, விமலா, ப்ரியா: உங்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் இனிய நினைவுகளும் அதுபற்றிய ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றைப் பகிர்ந்து கொள்ள இணையமும் நட்புக்களும் இருப்பது ஒரு ஆறுதல் தானே.

  இராம.கி அய்யா: சுவையான பல தகவல்களுக்கு நன்றி. பூளைப்பூ படத்தையும் தேடினேன் கிடைக்கவில்லை. மீண்டும் முயல்கிறேன். கிடைக்கும்போது சேர்க்கிறேன். என் ஆவலும் விருப்பமும் உங்கள் பின்னூட்டினால் இன்னும் அதிகரிக்கிறது.

 • 15 DJ // Jan 15, 2008 at 10:30 am

  நனறாகவிருக்கிறது.

 • 16 iraamaki // Jan 15, 2008 at 8:32 pm

  எங்களூர்ப் பக்கம் பிள்ளையார் நோன்பில் ஆவாரம்பூ பற்றிச் சொன்ன நான் அதில் பூளைப்பூவின் பயன்பாடு இருப்பதையும் சொல்ல விட்டுவிட்டேன்.

  நெற்கதிர், ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றை ஒரு பந்தாய்க் கட்டி வீட்டுவாயிலில் செருகிவைப்பதும், சாமிவீட்டில் வைத்துக் கும்பிடுவதுமாகப் பிள்ளையார் நோன்பு தொடங்கும்.

  நீங்களும் காசியும் காப்புக் கட்டு பற்றிச் சொன்னீர்கள். அதைக் கொஞ்சம் விவரிக்க முடியுமா? எதற்குக் காப்புக் கட்டு? என்ன வழிபாடு?

  அறிந்து கொள்ள ஓர் ஆர்வம்.

  அன்புடன்,
  இராம.கி.

 • 17 நா. கணேசன் // Jan 16, 2008 at 12:11 am

  செல்வராஜ்,

  கொங்குத்தமிழ் உங்களுக்குப் படுலாவகமாக கைவசப்படுகிறது. பொள்ளாச்சி – உடுமலைக்கு நடுவே உள்ள ஊர் பூளைவாடி. இங்கிருந்துதான் தமிழ் சினிமா (நாடகங்களிலிருந்து) உலகில்
  முதலில் பாட்டுகள் எழுதிய முத்துச்சாமிக் கவிராயர்,
  அவரது மாணவர் உடுமலை நாராயணகவி (‘ஆடல் காணீரோ?’ புகழ்)
  போன்றோர் தோன்றினர். பூளைமேடு போலவே கோவையில் ஆவாரம்பாளையம் உள்ளது.

  கொங்கு நாட்டார் வாழ்வியலுக்கு நல்ல புத்தகம்,
  கோவைகிழார் எழுதிய ‘எங்கள் நாட்டுப்புறம்’. பேரூர்க் கல்லூரியில் கிடைக்கும் (என் பிரதி கிடைத்தால் அனுப்புகிறேன், பெட்டிகளில் தேடி). கோவைகிழார் நாட்டுப்புறவியலின் (தமிழில்) முன்னோடி.
  அவர் எழுதிய 100-க்கணக்கான கட்டுரைகள் பாழ்படும் நிலையில்
  கேட்பாரற்றுக் கிடக்கின்றன. என்களுடைய தோட்டத்துப்
  பொலிகாளைகள் பழைய மதறாஸ் மாகாணக் கால்நடைப் போட்டியில் முதல்பரிசுகள் பலமுறை பெற்றிருக்கின்றன.
  ஊரில் படத்தை எடுத்துவந்து வலையேற்றணும்.

  அன்புடன்,
  நா. கணேசன்

 • 18 செல்வராஜ் // Jan 16, 2008 at 12:41 am

  காசி, மிக்க நன்றி. எங்கிருந்து பூளப்பூ படம் பிடிக்கிறதுன்னு பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் படத்தைப் பதிவிலும் இணைத்துக் கொண்டேன். அப்படியே, இராம.கி அய்யா கேட்கும் காப்புக்கட்டு பற்றிய விவரங்கள் குறித்தும் சொல்லுங்களேன்.

  நா.க அவர்களிடமும் கேட்டிருக்கிறேன். அவர் சொன்னபிறகு, அட ஆவாரம்பாளையம் என்று முன்பு கேள்விப்பட்ட ஊர்ப்பெயர்களுக்குச் சிறப்பு அர்த்தம் விளங்கியது. கோவைக்கிழார் புத்தகம் கிடைத்தால் சொல்லுங்கள்.

  டிசே, நட்டு நன்றி. நட்டு நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன் – என்றாலும் சிறு வயது முதலே ஈரோட்டில் தான் வளர்ந்தேன்.

  இராம.கி: காப்புக்கட்டு என்பதும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லியபடி வேப்ப இலை, ஆவாரம் இலை,பூ அடக்கிய கொத்து, மற்றும் பூளைப்பூ இவற்றைச் சேர்த்து ஒரு கட்டாக வீட்டில் கதவு நிலவு, சன்னல் மேல்புறம் என்று பல இடங்களில் கட்டி வைப்போம். இது போகிப் பண்டிகை அன்று செய்யப்படும். போகி என்பதை விடக் காப்புக்கட்டு என்றே அந்த நாள் பரவலாக அறியப்படும்.
  இது பற்றிய முழு விளக்கங்களைக் காசி, நா.க. இவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம். முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை.

 • 19 வெங்கட் // Jan 16, 2008 at 12:43 am

  செல்வராஜ் – மிக சுவாரசியம். எந்த அளவுக்கு என்றால் இரவு பதினோரு மணிக்கு மேல் என்னையும் உட்கார்ந்து எழுதத் தூண்டும் அளவுக்கு.
  பீளைப்பூ படம் என் பதிவில் போட்டிருக்கிறேன். எங்கள் ஊரில் இதற்கு வேறு பெயரும் உண்டு; நினைவில் வரவில்லை. இதுதானா என்று சொல்லுங்கள்.

  http://domesticatedonion.net/tamil/?p=723

 • 20 ila // Jan 16, 2008 at 1:07 am

  hmm, ஞாபகத்தை எல்லாம் கிளப்பி விட்டுட்டீங்களே செல்வா.
  //ஆவாரம்பாளையம்//
  எங்கூருக்கு அடுத்த ஊருதான்(கிராமம்) சங்ககிரியிலிருந்து 5 மைலு

 • 21 செல்வராஜ் // Jan 16, 2008 at 1:51 am

  வாங்க இளா, நீங்க சொன்னதுக்கப்புறம் இந்த ஆவாரம்பாளையமும் நினைவுக்கு வருது. இது தான் ஈரோட்டுக்குப் பக்கம்.

  வெங்கட்,
  உங்க பதிவும் பார்த்தேன். உங்களத் தூண்டிவிட்டதுக்கு மகிழ்ச்சி. பூளப்பூ (உங்க ஊர்ல பீளப்பூ?) உங்க படம் அதுதானான்னு கொஞ்சம் உறுதியாத் தெரியல்லே. செடியோட பாத்ததில்லைங்கறதால கூட இருக்கலாம்.

  எங்க வீட்டுலயும் இன்னிக்கு ப்ரஷர் குக்கர் பொங்கல் வச்சோம். முன்னாடி சில வருஷம் ஒண்ணுமே இல்லாம இருந்ததுக்கு இதுவே பரவாயில்லைன்னு இருக்கோம். அதனால் வருத்தம் ஒன்றும் இல்லை.

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

 • 22 selvanayaki // Jan 16, 2008 at 1:59 am

  வழமையான உங்கள் பதிவு செல்வராஜ். நீண்ட நாட்கள் கழித்து எட்டிப்பார்த்தேன். அருமை. மனம் ஊருக்குப் போய் அதுபாட்டுக்குப் பொங்கல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இழுத்துப் போனது இப்பதிவு. நன்றி.

 • 23 அருள் செல்வன் க // Jan 16, 2008 at 4:54 am

  பூளைப் பூவைப்பத்தி இப்பிடி ஒரு தொடரா. செல்வராசு, வாழ்க.

  1. காப்புக்கட்டுதல் பற்றி:
  கோவைப்பக்கம் போகிப் பண்டிகைன்னு சொல்றதில்லை. பொங்கலுக்கு மொதநாளு ‘காப்புக் கட்டற நோம்பி’ ன்னுதான் சொல்றாங்க.
  என்னன்னா, பலபேரு முத்தத்திலியும் கொத்தமல்லி மாரு இன்னும் காஞ்சிட்டு இருக்கும். அத வாரி போராப் போடறவங்க சில பேரு. கொண்டக்கடல, மொச்சப்பயிறு இப்பிடி இதெல்லாம் வெளஞ்சு வர்ர நேரமா, அத பறிச்சு வாரவங்க சில பேரு. அரசாணிக்காயி வேற ஒரு மாசமா முத்த ஆரம்பிச்சுரும். இப்பிடி பல பயிறும் வெளயற நேரமுங்க. இதெல்லாம் கோயமுத்தூரு மாவட்ட புன்சைக் காட்டுல. ஆறு, வாய்க்கா போற ஊருங்கள்ள அரிசி கரும்பெல்லாம் கொழிச்சிக் கெடக்கும். சரி, காப்புக்கட்ற அண்ணைக்கு, வீடெல்லாம் வெள்ளையடிச்சு சுத்தம்பண்ணி, சாணிபோட்டு வழிச்சுடுவாங்க. சாயங்காலமா, பொழுது அடங்குறத்துக்கு முன்னாடியே வேப்பில, ஆவாரம்பூவு, பூளைப்பூவு, மாவில இப்பிடி எல்லாம் சேத்து சின்னச் சின்ன கொத்தாக்குவாங்க. வீட்டுல சுத்தியும் நாலு பக்கமும் ஓட்டுக்கு கீழ, நிலைவைக்கு மேல இப்பிடி பல இடங்களில சொருகி வப்பாங்க. இதுக்குப் பேருதான் காப்புக்கட்டுறது. சுத்தமாக்கிய வூட்டுக்குள்ள கெட்டது எதுவும் வராம இருக்கறதுக்குன்னு சொல்லுவாங்க.
  2. எங்கூருல எப்பிடின்னா, காப்புக்கட்டி முடிச்சப்புறம் உக்காந்து முறுக்கு, தட்டவடைன்னு சுட தொவங்குனாக்கா முடிச்சு எந்திரிக்கறதுக்கு மறுநா வெடிகாத்தால வெட்டாப்பு உட்டுறுமுங்க. தென முறுக்கு, அரிசி முறுக்கு இப்பிடி பலதும். அத்தினி முறுக்கு பண்றவங்கல்லாம் இப்ப ஆரும் இல்லை.
  3. மறுநா பொங்கலாச்சுங்களா. அது எப்பவவும் போலத்தாங்க. எல்லா ஊருலயும் ஒண்ணுபோலத்தான். ஆனா ஒண்ணுங்க, வேற எந்த நோம்பிக்கு துணி எடுக்கறாங்களோ இல்லியோ பொங்கலுக்குத் தட்டாம உண்டுங்க. தீவாளிக்காவது சில பேரு வூட்டுல கறிச்சோறு உண்டு. பொங்கலுக்கு கிடையவே கிடையாது.
  4. மாட்டுப் பொங்கலுக்கு பட்டியில போடர பொங்கலு தனீங்களா. அதுக்கு மத்தவங்கசொல்லணும்.

  அருள்

 • 24 M. Sundaramoorthy // Jan 16, 2008 at 5:14 pm

  இந்த பீளைப்பூ எல்லா ஊர்களுக்கும் பொதுபோல. எங்க ஊர்ப்பக்கம் பொங்கலுக்கு வாசலிலும், மாடுகளுக்கும் கட்டும் மாலை பீளைப்பூ, பொன்னாவாரி (=> பொன்னாவரை => ஆவாரம்பூ? ), பிரண்டை, கரும்புத்துண்டுகள் ஆகியவற்றைக் நெற்றாளில் திரித்த கயிற்றில் கோர்த்து கட்டப்பட்டிருக்கும்.

 • 25 காசி // Jan 17, 2008 at 11:24 am

  ஆகா, அருள் செல்வனும் வந்தாச்சா?

  காப்புக்கட்டு, பெரிய நோம்பி, பட்டி நோம்பி, பூப்பொறிக்கற நோம்பி, இந்த நாலு நாளும் சேர்ந்து ‘தை நோம்பி’ – பற்றிய நினைவுகளை,அவதானங்களை எழுதலாம் என்று ரெண்டு நாள் முன்பு ஒரு ஓசனை வந்துது. பாக்கலாம். இந்த வாரக் கடைசிக்குள் ஒரு அனுபவப் பகிர்வை எழுதி வைக்கிறேன். (செல்வராஜ் எழுதுற அளவுக்கு சுவையா இருக்காது, ஒரு கலவையான பதிவா இருக்கும்: ஒரு டிஸ்கிளைமர்)

 • 26 Anbu Selvaraj // Jan 17, 2008 at 1:35 pm

  செல்வா,
  அப்படியே என்ன ஒரு 20வது வருஷம் பின்னாடி கொன்டு போய்ட்டீங்க.
  அப்பெல்லாம் வீட்டுக்கு சுன்னாம்பு அடிக்கறது என்ன, காப்பு கட்டறுது என்ன.
  பொங்கள் அன்னிக்கு பிள்ளாருக்கு பொங்கள் வைக்கறுதும்,புது துணி போடறுதும்.
  மாட்டு பொங்கள் அன்னிக்கு எருமை, மாடு, ஆட்டய்யெல்லம் குளிப்பாட்றதும்.
  எருமை கொம்புக்கெல்லாம் காவி கல்ல கரச்சி பூசறுதும், மாடு, ஆடு கொம்புக்கெல்லாம், மாட்டு வண்டிகெல்லம் பெயின்ட்ட பூசறுதும் ஒரெ கொண்ட்டாட்டம் தான்.

 • 27 தஞ்சாவூரான் // Jan 17, 2008 at 6:06 pm

  ம்ம்ம்ம்…. பழைய கிராமத்து நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டீர்கள்!!

  எங்க ஊர்ல பூலப்பூன்னு சொல்லுவாங்க. மாட்டுப் பொங்கல் அன்னிக்கு, பூலப்பூ, ஆவாரங்கொத்து, சங்கு இலை (கரும்பச்சை நிறத்தில் முட்களோடு இருக்கும்), மாவிலை, பிரண்டை ஆகியவைகளைச் சேர்த்து மாலை கட்டி மாடுகளுக்கும், மாட்டுப் பொங்கல் பானைக்கும் இடுவார்கள். இன்னொரு இலை (இலுப்பை??) தேடி நீண்ட நெடும்பயணம்(?) சென்றது இன்னும் ஞாபகத்தில்.

  இப்போ இங்கே கொண்டாட, வெள்ளை மாடுக மட்டும்தான் கூட இருக்கு!

 • 28 நாகு // Jan 17, 2008 at 9:49 pm

  போன மாசம் கரோலினா மாநிலங்கள் வழியே போனபோது பெட்ரோல் பங்க்குகளில் வேகவைத்த கடலை சூடாக விற்றுக்கொண்டிருந்தார்கள். வண்டியில் போகும்போது சாப்பிட வசதியில்லாததால் வாங்கவில்லை. நாம் ஓட்டும்போது நம்மை ஓட்டும் அம்மையார்க்கு கடலை உரிக்க சோம்பல்!

  வரும்போது நிறுத்திய இடங்களில் எல்லாம் விற்கவில்லை 🙁

 • 29 வசந்தன் // Jan 18, 2008 at 1:21 am

  நீங்கள் சொல்லும் பூளைப்பூ எங்கள் ஊர்களிலும் இருந்தது.
  ஆனால் பூளைப்பூ என்ற பெயரை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன். எங்களிடத்தில் அதற்கு வேறு பெயர்தான் இருந்திருக்க வேண்டும்.

  ஆனால் இச்செடியை ‘தேங்காய்ப்பூச்செடி’ என்று அழைத்தது ஞாபகமுள்ளது. எங்கள் வீட்டின் அடிவளவில் மாரி முடியும் தறுவாயில் இச்செடிகள்தாம் பற்றையாக நிறைந்திருக்கும். (இரண்டடி உயரத்துக்க மேல் வளரா)
  வெங்கட் இட்டிருக்கும் படம் இதே செடிதான்.

  இதை மருத்துவத்துக்குப் பாவிப்பது தெரியும். குறிப்பாக சலக்கடுப்புக்கு அவித்துக் குடிப்பது ஞாபகமுள்ளது.

 • 30 chandru // Jan 18, 2008 at 10:27 am

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள்.

 • 31 செல்வராஜ் // Jan 20, 2008 at 9:53 pm

  சந்துரு, நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்து.
  வசந்தன், மேலதிக ஈழத்துத்தகவல்களுக்கு நன்றி. தேங்காய்ப்பூச்செடி எனும் பெயர் பொருத்தமாகத் தான் தோன்றுகிறது.

  நாகு 🙂 ஓட்டுநர் கோவித்துக்கொள்ளப் போகிறார்!

  தஞ்சாவூரான், நீங்கள் ‘வெள்ளை மாடுகள் மட்டும் தான் இருக்கு’ என்பது கிராமத்துப் பகுதியிலேவா? பொங்கல் கொண்டாட்டங்கள் நினைவில் உறைந்தனவாய் இருப்பது இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்திருந்தேன்?

  அன்புசெல்வராஜ், உங்கள் கொண்டாட்ட நினைவுகள் கேட்கவே நன்றாக இருக்கின்றன. நான் அந்த அளவிற்கு அனுபவித்ததில்லை.

  காசி, ‘தைநோம்பி’ தொடரை எழுதுங்கள். சுவையாக எழுதுவது பற்றி நீங்கள் யோசிக்கலாமா? பழைய பதிவு/இடுகைகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே (அரிச்சந்திரன் மகன்?)

  சு.மூ: உங்கள் பக்க வழக்கம் குறித்த விவரங்களுக்கும் நன்றி. பூளப்பூ/பீளப்பூ பற்றிய ஒரு தகவல்களைப் பரவலாக எழுப்ப முடிந்ததில் காரணமற்ற மகிழ்ச்சி எனக்கு!

  அருள்: வருக. விரிவான பல தகவல்களுக்கும், காப்புக்கட்டுக்கு விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நானும் அப்படித் தான் ஊகித்திருப்பேன். ஆனா, உங்கள மாதிரி சரியாத் தெரிஞ்சவங்க சொன்னா இன்னும் நல்லது. வீட்டில் சுட்ட தட்டுவடை முறுக்கு எல்லாம் கொஞ்சம் அபூர்வம் தானோ இப்போது?

  செல்வநாயகி, பொங்கல் என்றாலே உங்கள் கவிதை நினைவுக்கு வரும். முதலில் பிகு.வில் இணைப்புச் சேர்த்திருந்தேன். அப்புறம் தேடியதில், என் பதிவிலேயே முன்னர் இரண்டு முறை அது பற்றிச் சொல்லிச் சேர்த்திருக்கிறேன் என்று விட்டுவிட்டேன். ‘பூளைப்பூ’ வரும் இன்னொரு இடம் என்றாலும் கூகுள் தேடலில் அது வருவதில்லை. ‘ஆடுகழுவும்’ என்று தேடிக் கொள்வேன். 🙂 அதற்கு ஒரே ஒரு முடிவு தான் ! 🙂

 • 32 இரா. செல்வராசு » Blog Archive » தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல் // Jan 16, 2012 at 1:02 am

  […] இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம். புதிய தை மாதத்தில், பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன். எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். […]

 • 33 இரா. செல்வராசு // Jan 17, 2013 at 1:01 am

  மணி.மணிவண்ணன் வழியாக:

  சென்ற நூற்றாண்டில், மேஜர் பக் எழுதி 1917ல் வந்த “இந்தியாவின் சமயங்களும், சந்தைகளும், திருவிழாக்களும் (Faiths, Fairs and Festivals of India) என்ற நூலில் தமிழர்கள் தை முதல்நாளைப் புத்தாண்டு நாளாகக் கொண்டாடிப் பொங்கல் சமைக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்

  http://www.facebook.com/photo.php?fbid=10200356290653396&set=a.1537854889836.70850.1338795892&type=1

 • 34 P.CHELLAMUTHU // Mar 2, 2015 at 10:01 pm

  அன்பு செல்வா,
  உங்கள் “பூளப்பூவும் புதுவருஷப்பொங்கலும்” என்ற பதிவு எனது இளமைக்காலத்தையும், வடமானிலங்களில் வழ்ந்த நாட்களில் அனுபவித்த அனுபவங்களையும் ஒருங்கே நினவூட்டின. நல்ல பதிவுகள். வாழ்த்துகள்!