தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல்
Jan 16th, 2012 by இரா. செல்வராசு
தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம். இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே. வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும்.
இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம். புதிய தை மாதத்தில், பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன். எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
திரும்பிக் கணக்குப் பார்க்கும் போது தான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து எட்டு ஆண்டுகளாகி விட்டது தெரிகிறது.
“ஆமா, நீங்க இதுவரை நட்சத்திரமா இருந்ததே இல்லையே? ஏன் ஒரு முறை நீங்கள் இருக்கக் கூடாது?” என்று ஒரு நாள் சங்கர் என்னைக் கேட்டே விட்டார்.
பல ஆண்டுகளுக்கு முன், இதன் முந்தைய வடிவான ‘வலைப்பூ ஆசிரியர்‘ ஆக ஒரு வாரம் இருந்திருக்கிறேன் என்று சொல்லிப் பார்த்தேன். பலிக்கவில்லை. ‘தேவைப்படும் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஏறத்தாழ ஐந்து வாரம் முன்பே எச்சரிக்கை மணியை அடித்தும் வைத்தார். நானும் ஒரு தமிழ்மண நிர்வாகியாக இருப்பதால் இந்தத் தனிச்சலுகையை ஆட்சேபிக்காமல் விட்டுவிடும்படியும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். 🙂 இருந்தும் என்ன பயன்? தேர்வுக்குக் கடைசி நாளிரவு படிக்கும் கதையாக இந்த வார இறுதியில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
முதலில், என்னைப் பற்றி அறிமுகமாகச் சொன்னதில் சிலவற்றை இன்னும் சற்று விரித்துச் சொல்ல நினைக்கிறேன். ஏற்கனவே அறிந்த சிலர் தவிர இத்தனையாண்டுகளில் புதிதாக வலையுலகம் வந்தவர்கள் என்னை அறிந்து கொள்ள இது உதவலாம்.
நான் தமிழகத்தில் ஈரோட்டைச் சேர்ந்தவன். ஆனால், ஊரை விட்டு, நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழும் ஒரு அயலகத் தமிழன். வளர்பருவத்தில் முழுதும் ஈரோடு நகரத்திலேயே வளர்ந்திருந்தாலும், தமிழகத்தின் எண்ணற்ற கிராமங்களுள் ஒன்றில் பிறந்தவன் என்று எனது கிராமத்துத் தொடர்பைத் தொட்ட குறை விட்ட குறையாக ஏனோ இன்னும் மிச்சம் பிடித்து வைத்துக் கொள்ளவே தோன்றுகிறது.
எனது பெற்றோர்கள் கொங்கு நாட்டின் குக்கிராமங்களில் விவசாயக் குடும்பங்களில் பிறந்து தங்கள் வாழ்நாளில் கிராமங்களில் இருந்து நகரத்திற்குப் புலம் பெயர்ந்தவர்கள். பள்ளிக்குச் சென்று படிப்பதெல்லாம் சொகுசான வாழ்க்கை முறையாக இருந்த காலத்தைச் சேர்ந்தவர்கள். ‘அஞ்சாவது வரைக்கும் படிச்சது போதும். ஆடு மேய்க்க ஆள் வேணும்’ என்று அம்மா நின்றுவிட்டதாய்ச் சொல்வார்கள். கொஞ்சம் ஆழ விசாரித்தால், “அவங்கல்லாம் ஒன்னும் சொல்லல. நாந்தான் போமாண்டீட்டன்” என்று உண்மை வெளிவரும். 🙂
அப்பா பக்கத்து உண்மையோ இன்னும் கூட எனக்குச் சரியாகப் புலப்பட்டதில்லை. சிறுவயதில் தந்தையை இழந்து ஒற்றைத் தாயின் வளர்ப்பில் சிரமத்தின் இடையே வளர்ந்தவர் பெயருக்குப் பள்ளிக்குச் சென்றிருக்கிறார் என்பதும் வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு கட்டத்தில் எப்படியோ பள்ளியிறுதிப் படிப்புச் சான்றிதழ் வாங்கியிருக்கிறார் என்றுமோ கதை வளரும். ஆக, பள்ளிப்படிப்பு மட்டும் படித்த அப்பா என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு நீதிமன்ற ஊழியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
தலைமுறையில் முதன்முதலில் கல்லூரிக்குச் சென்று படித்தவர் மாமா, ஒரு கல்லூரியில் வணிகத்துறைப் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். இரவு நேரத்தில் தொலைபேசி அலுவலகம், சீட்டுக்கடை என்று வேலைக்குச் சென்றுவிட்டுப் பகலில் கல்லூரி சென்று படித்த அவரது காலத்தை நானே அறிவேன். அவரது வழிகாட்டலில் தான் நான் படித்து வளர்ந்தேன்.
இவற்றை எல்லாம் சொல்லக் காரணம், தமது காலத்தில் கல்வி கற்கச் சிரமப்பட்டாலும், என்னுடைய கல்விக்கும் வளர்ச்சிக்கும் எந்தச் சிக்கலும் இடையூறுமின்றி இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த அரணில் கவலையற்றுத் தொடங்கியது என் பயணம். இன்றைய எனது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் அதற்குக் காரணமாய் இருக்கும் கல்விக்கும், வித்தாய் இருந்தவர்கள் என்று சற்று நினைத்துப் பார்க்கிறேன்.
தொழில்முறையில் நான் ஒரு வேதிப் பொறிஞன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்பொறியியல், அதன் பின்னர் அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் லூயிவில் பல்கலைக்கழகத்தில் முதுநிலையும் முனைவர் பட்டப்படிப்பும் முடித்துப் பின் வேதிப்பொறியல் துறையிலேயே கடந்த பதினாறு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.
இங்கு புதிதாகச் சந்திக்கும் இந்திய/தமிழக நண்பர்களிடம், “இல்லீங்க, நான் சாஃப்டுவேர் துறையில் இல்லை; ஒரு வேதிப் பொறிஞன்” என்று சொல்லிக் கொள்வதும், அவர்கள், “ஓ! அப்படியா… மென்பொருள் துறையைச் சாராத ஒருவரை இப்போத் தான் பாக்கறேன்” என்று வியப்பதும், சற்று மிகையாக இருந்தாலும் ஒருவித அர்த்தமற்ற பெருமையை எனக்குத் தரும்.
தற்போது ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தின் நடுவப்பொறியியல் துறையில் பணி செய்து வருகிறேன். பாறைநெய் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்னைப் பற்றிய ஒரு குறிப்பைப் படித்துவிட்டுப் ‘பாறைநெய்’னா என்னங்க என்று கேட்டார். பெட்ரோலியம் என்பதன் தமிழாக்கமே பாறைநெய் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லி, தமிழ்ச்சூழலில் அதனைப் பரவலாக்க என்னால் ஆன சிறு துரும்பைக் கிள்ளி வைத்திருக்கிறேன். 🙂
இன்னும் என் துறை சார்ந்த பலவற்றை எழுத எண்ணமும் ஆசையும் இருக்கிறது. ஆனால், களிப்பாறை வளிமம் என்று விக்கிப்பீடியாவில் எழுத முடிவதை எளிமையாக எப்படிப் பொதுவில் எழுதுவது என்பது சவாலாகத் தான் இருக்கிறது. கரட்டுநெய் என்று எழுதுவதைப் பார்த்துவிட்டு மதிவாணன் போன்ற நண்பர்கள், “டேய், யாருக்காக எழுதுகிறாய்? இன்னும் எளிமையா எழுதுடா” என்கிறார்கள். எளிமையாகவும் அதே நேரம் ஆழமாகவும் எழுதவேண்டும் என்று தான் நானும் எண்ணுகிறேன்.
தற்போது, வாசிங்டன் டிசி அருகே மனைவி, இரு மகள்களுடன் வசித்து வருகிறேன். எனது பெண்கள் இருவரும் அமெரிக்காவில் பிறந்து வளரும், தமிழைத் தட்டுத் தடுமாறிப் பேசும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை ஊட்டுவது எப்படி என்பதும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. ஊருக்குச் சென்றிருந்தபோது சந்தித்த உறவுகள், “கொழந்தைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுங்க. இல்லாட்டி பூராவும் மறந்தே போயிரும். நம்ம பலக்கவலக்கமெல்லாம் எதுவுமே தெரியாமப் போயிரும்” என்று எளிதில் சொல்லி விடுகிறார்கள். இவ்வருடம் எங்களூரில் வள்ளுவன் தமிழ் மையம் என்றொரு தமிழ்ப்பள்ளியில் நானும் மனைவியும் சேர்ந்து உதவுகிறோம். ஊரார் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்தால் தம் பிள்ளையும் தாமாகத் தமிழ் கற்றுக் கொள்ளுமாம்!
வலைப்பதிவுகளுக்கும் முன்பே, தமிழ் இணையத்தில் செய்திக் குழுமங்கள், மடலாடற் குழுக்கள், இணைய இதழ்கள் என்று பலவற்றில் அதிகமில்லையென்றாலும் அவ்வப்போது எழுதிய அனுபவம் உண்டு. தற்போது ‘விரிவெளித் தடங்கள்’ என்னும் இவ்வலைப்பதிவில் எழுதி வருகிறேன். ஏன்? எதற்கு? எப்படி? அண்மைய ஆண்டுகளில் எழுதுவது குறைந்து போனதற்குப் பல காரணங்கள். அதனைப் பட்டியலிட்டு விவரிக்கவே தனிக்கட்டுரை வேண்டுமென்பதால் இப்போதைக்கு விட்டுவிடுவோம்.
எனது வலைப்பதிவில் சமூகம், அனுபவங்கள், பயணங்கள், நுட்பக்கட்டுரைகள் என்று பலதரப்பட்ட வகைகளிலும், சில சமயம் கொங்கு வட்டார வழக்குகளிலும், பிற சமயம் கணிநுட்பம், வேதிப் பொறியியல் என்று துறைசார்ந்தும் எழுத முனைகிறேன்.
கடந்த காலத்தில் எனது பதிவுகளில் வெளியான சில இடுகைகள் தொகுக்கப்பட்டு ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகளாக ‘மெல்லச் சுழலுது காலம்‘ என்னும் ஒரு நூலாக வடலி பதிப்பகம் வழியாக 2010ல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்மணம் தளத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை நிர்வாகக் குழுவிலும் நுட்பக் குழுவிலும் பங்களித்து வருகிறேன். இன்றும் தமிழ்மணத்தைத் தொடர்ந்து இயக்கி வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் (டி.எம்.ஐ) என்னும் இலாப நோக்கற்ற அமெரிக்க அமைப்பின் அமைப்புக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். தலைவராகவும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள ஆசை தான் என்றாலும் ஏதோ தடுக்கிறது. சில சோதனையான சோர்வான நேரங்களில் இதையெல்லாம் செய்து என்ன சாதித்தோம் என்ற அயர்வு ஏற்படினும், ஒருவகையில் இதுவும் பயனுள்ள ஒன்றே; இன்றில்லையேனும் ஒருநாள் இதன் பயன் தெரியும் என்று சுயமாய் ஊக்கப்படுத்திக் கொண்டு தொடர்கிறோம். தமிழ்ச்சூழலில் நாலுபேர் சேர்ந்து தொடர்ந்து இத்தனையாண்டுகளாக ஒன்றைச் செய்துவருகிறோம் என்பதே ஒரு சாதனையாகத் தான் தெரிகிறது.
டி.எம்.ஐயின் பூங்கா இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராய் இருந்துவந்தேன். ஒரு வருடத்திற்கும் மேல் வந்து நின்று போன இதழை மீண்டும் வெளிக்கொணர வேண்டும் என்று பலர் கேட்டுக் கொள்ளும்போதும் அதற்கான சரியான வாய்ப்பும் நேரமும் இன்னும் அமையாமல் இருக்கிறது. இப்போதைக்குச் சொந்த வலைப்பதிவிலேனும் எழுத்தைத் தொடர்வோம் என எண்ணுகிறேன்.
நிறைய எழுத எண்ணம் இருக்கிறது. இருப்பினும் அதனைச் சரிவர நிறைவேற்றாமல் வாழ்வோட்டத்தில் ஓடிக்கொண்டிருப்போரில் ஒருவனாகவும் இருக்கிறேன். வருடத்திற்கு ஒன்றிரண்டு இடுகைகளை மட்டுமே எழுதுகிற அண்மைய நிலையை நட்சத்திர வாரத்தோடு ஆரம்பிக்கும் இவ்வருடமேனும் மாற்றுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்! மாற்றும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.
நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.
தாங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. நட்சத்திர வாரத்தில் இது தான் முதல் முறையா? ஆச்சரியம் தான். சட்டம்ங்றது சரியா தான் இருக்கனும் போல. சங்கர் நீதிபதியாக இருக்க வேண்டியவர் போல.
எனக்கும் பாறைநெய் என்பது சற்று குழப்பமாகவே இருந்தது. தொடர்ந்து படிக்கும் போது சிரிப்பு வந்து விட்டது. அடக் கொடுமையே? எத்தனை எத்தனை வார்த்தைகள் இது போல அறியப்படாமல் இருக்கிறதோ?
உங்கள் மெல்லச் சுழலுது காலத்தில் முன்னுரை எழுதி அதிக அளவில் இன்னமும் ஆச்சரியப்படுத்திய அம்மையாரை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கேன். அவர் இந்த பின்னூட்டத்தில் என்ன சொல்லப் போகின்றார் என்பதை காண ஆவல். அதிகமாக எழுதுவதும்இல்லை போலிருக்கு?
வஞ்சனை செய்யாமல் கொஞ்சமல்ல நிறைய எழுதுங்க. இதில் நிறைய இணைப்பு கொடுத்து இருக்கீங்க. ரெண்டு மூணு நாள் விடுமுறை. அத்தனையும் படிக்க முடியும்.
நட்சத்திர வாழ்த்துகள் !!!
கிண்டி பொறியியல் கல்லூரியில் எந்த வருடங்கள் படித்தீர்கள் ?
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
இப்படியெல்லாம் நட்சத்திரமாகப் போட்டுத்தான் சிலரை எழுத வைக்க வேண்டியிருக்கும் போல! 🙂
நட்சத்திர மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!
இரட்டைப் பொங்கலா!
நட்சத்திர பொங்கல் வாழ்த்துக்கள்.
//தேர்வுக்குக் கடைசி நாளிரவு படிக்கும் கதையாக இந்த வார இறுதியில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். //
நாங்க வாரமெல்லாம் படிச்சோமாக்கும்!
வாழ்த்துக்கள். உங்கள் இடுகைகளைப் படிக்கக் காத்திருக்கிறோம்.
அன்புடன்,
இராம.கி.
🙂 நட்சத்திர வாழ்த்துகள் ( இது ஒரு கடமை சொல்லிடனும் )
பூங்கா மீண்டும் வர வாய்ப்பிருக்கு என்பது செய்தி..
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள் செல்வா.
நட்சத்திர மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.
ஆண்டுக்கு இரண்டு இடுகைன்னு கணக்கு வச்சு எழுதினவரை நட்சத்திரமாக்கி 2012ல் நிறைய எழுத வைச்சுட்டாங்க :), அதுக்காக சங்கருக்கு நன்றி சொல்லனும். இந்த ஆண்டு நிறைய இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துகள், இவ்வார தமிழ்மணம் நாள்காட்டுக்காக 😉
அந்தக்காலத்து ஆளுவல்லாம் எழுதக் கிளம்பிட்டீங்க, தை பொறந்தா வழி பொறக்கும்பாங்க, இதானா அது 🙂
அட! நீங்களா!!!!!
நட்சத்திரமே, இனிய வாழ்த்து(க்)கள்.
தமிழ்மண சேவையில் பங்குபெற்று நடத்தி வருவதற்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்.
நல்லா இருங்க!
வாழ்த்துகள்!
//ஈரோடு நகரத்திலேயே // அதும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு? இஃகி இஃகி!!
நண்பர்கள் அனைவருக்கும், வாழ்த்துகளுக்கும் வரவேற்பிற்கும் நன்றி. தொடர்ந்து காணாமல் போகாமல் அவ்வப்போது வந்து எழுத இவ்வருடம் முயலப் போகிறேன். பார்க்கலாம்.
ஜோதிஜி, பாறைநெய் போன்றவை அவ்வளவு புழக்கத்தில் இல்லாதவை. இதுபோன்ற பல தொழில்சார்ந்த சொற்களை இராம.கி ஐயாவும் பரிந்துரைத்திருக்கிறார். ஏற்புடைய இடங்களில் அவற்றைப் பயன்படுத்த எனக்குப் பிடித்திருக்கிறது. அக்கல்லூரிப் பேராசிரியர் மீது குறையில்லை. அவரது புலனம் அல்ல அது என்பதால் இது போன்றவற்றை அறிந்திருக்கவில்லை என்றே எடுத்துக் கொள்கிறேன். சில புதிய சொற்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் எது நிலைத்து நிற்குமோ அது ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு காலத்தில் டேட்டாபேஸ் என்பதற்குத் தரவுதளம் என்பது எனக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், அது இன்று பரவலாய் வழக்கிற்கு வந்துவிட்டது. இது ஒரு காட்டு மட்டுமே.
ரவிச்சந்திரன், இது பற்றி முன்பும் பேசி இருக்கிறோம் என நினைக்கிறேன். ஆனால், நானும் மறந்துவிட்டேன் 🙂
நான் படித்தது பக்கத்துக் கல்லூரியில் – அழகப்பர் நுட்பியல் கல்லூரி. ஆண்டு 87-91.
உங்களின் ஊர் திரும்பிய அனுபவம் இனிமையாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.
முத்துலெட்சுமி, இல்லாததும் பொல்லாததுமா ஏதோ சொல்றீங்க (பூங்கா பற்றி) 🙂 பாக்கலாம்னு சொன்னாலே பந்தல் போட்டுர்ரீங்களே.
சுந்தர், இதக் கொஞ்சம் கவனிச்சு ஆக வேண்டிய வேலையப் பாருங்க. இரமணி என்னன்னா பழைய அட்டைப்படத்தை எடுத்துப் போட்டுக்கிட்டு இருக்கார். (அதோடு, அடுத்து ஒரு நட்சத்திரம் பிடிக்க அந்தப் பக்கமாத் தான் வாராராம் சங்கரு!)
வணக்கம்!
அப்பொழுது எழுத முடியாத எல்லாவற்றையும் இப்பொழுது எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் செல்வா!
நட்சத்திர வாழ்த்துகள் ! தமிழ்மணத்தின் பின்னாலிருக்கும் தங்கள் உழைப்புக்கும் வாழ்த்துகள்!!
’பாறைநெய்’ நல்லாத்தான் இருக்கு. 🙂
’மெல்ல சுழலுது காலம் ’ வாசித்திருக்கிறேன். அதுவே நட்சத்திர வாரத்தை பற்றிய எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
வணக்கம் செல்வராசு(ஜ்)
பாறைநெய் என்றெழுதுவது உங்கள் உரிமை. இருக்கும் தலைமுடிகள் காப்பாற்றப்படவேண்டும் என்ற நைப்பாசையில், புது கலைச்சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை (அடைப்புக்குறிகளுக்குள்) போட்டு வையுங்கள் – நல்லூழ் பெருகும், என வேண்டுவது எமது உரிமை.
நண்பர் இராம. கியின் புகைப்படம் பார்த்திருப்பீர்கள்.
நிற்க.
(உ)வேர்ட்பிரஸ் 2.3 லேயே இன்னும் வைத்துள்ளீர்களே பதிவை… 3.3 க்குச் சீக்கிரம் மாற்றுங்கள்.
வாழ்த்துகள்.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்து;
தொடர்ந்து செய்து வரும் தமிழ்மண தொண்டிற்கு நன்றி.
உங்களைப் படித்து பல நாட்கள் ஆகிறது செல்வா! எழுதுங்கள். நன்றி!
நட்சத்திர வாழ்த்துகள் !!!இப்போதான் முதல் முதலாய்ப் படிக்கிறேன் உங்கள் வலைப்பூ!
வாங்க செல்வராசு. அருமையாக எழுதுகிறீர்கள்.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்!
இவர் வள்ளுவன் தமிழ் மையத்தின் நட்சத்திரம் கூட! எங்கள் பள்ளியில் இவர் பணி ஆற்றுவது எங்களுக்கு பெருமை!
முன்பே அறிந்த நண்பர்களுக்கும், புதிதாய் என்னைப் படித்து உங்கள் கருத்துக்களையும் வாழ்த்துகளையும் பதிவு செய்திருக்கும் நண்பர்களுக்கும், மீண்டும் எனது நன்றி. உங்களது வருகையும் கருத்துக்களும் நல்லூக்கத்தைத் தருகிறது.
பழமைபேசி, ஈரோட்டை நகரமில்லை என்கிறீர்களா? 🙂 ஆளாளுக்கு கோபிச்செட்டிபாளையத்தையே நகரம் என்று திரியும்போது ஈரோட்டுக்கு என்னங்க வந்தது! கதிரிடம் கேட்டுப் பாருங்கள். ஈரோட்டுப் பேருந்து நிலையத்தைப் பற்றியே ஒரு புத்தாக்கம் எழுதுனவர் அவர்.
வாசன், முக்கியமான ஒரு புள்ளியை எனக்கு மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறீர்கள். முன்பெல்லாம் இப்படித்தான் அரிய தமிழ்ச்சொற்களுக்கு அடைப்புக்குறி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் எப்படியோ அதனைத் தொடராது போய்விட்டேன். நான் விரும்பும்படி முடிந்தவரை தமிழிலேயே எழுதி, அதே நேரம் வாசகருக்கும் புரியும்படியாகவும் எழுதுவதற்கு இந்த முறை கைகொடுக்கும். நன்றி.
வோர்டுபிரசு இற்றைப் படுத்த வேண்டும் தான். இந்த வாரத்திற்குள் செய்திருக்கவேண்டும். திட்டமிருந்தது. ஆனால், ஆண்டிறுதியில் எங்களூர்த் தமிழ்ப்பள்ளி இணையதளம் குறித்து நேரம் செலவிட்டமையாலும், இரண்டு வாரங்களாக வெளியூரில் (கனடா) இருப்பதாலும் இயலவில்லை.
இராம.கி படம் பற்றிய குறிப்பு விளங்கவில்லை. சிலம்பின் காலம் வெளியீட்டு விழாப் படங்களைச் சொல்கிறீர்களா? பார்த்தேன். அவரைப் பல ஆண்டுகளுக்கு முன் (2005) ஒரு முறை நேரிலேயே சந்திக்கும் பேரும் பெற்றிருந்தேன்.
உங்களுக்கான ஒரு குறிப்பு: தமிழ்நேசன் (அட! தமிழில் எழுதினால் வேறு பொருள் வருகிறது! 🙂 ) தளம் உயிர்ப்பித்திருக்கிறது, பார்த்தீர்களா? (இது பற்றி முன்னொரு முறையும் நாம் உரையாடியது நினைவுக்கு வந்தது).
வாழ்த்துக்கள் செல்வராசு!
உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்…
//ரவிச்சந்திரன், இது பற்றி முன்பும் பேசி இருக்கிறோம் என நினைக்கிறேன். ஆனால், நானும் மறந்துவிட்டேன்
நான் படித்தது பக்கத்துக் கல்லூரியில் – அழகப்பர் நுட்பியல் கல்லூரி. ஆண்டு 87-91.
உங்களின் ஊர் திரும்பிய அனுபவம் இனிமையாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.//
நன்றி செல்வராசு!
நான் கிண்டி பொறியியல் கல்லூரி 1985-1989 ECE Batch.
இன்னும் செட்டில் ஆகிக்கொண்டேயிருக்கிறேன் 🙂
நட்சத்திர வாழ்த்துகள்!
தங்களது ‘மெல்லச் சுழலுது காலம்’ வாசித்தேன். மிக நன்று. எட்டு வருட கால இடைவெளி என்பது மிக அதிகமல்லவா? இனி தொடர்ந்து எழுதுங்கள்.
கல்நெய் அல்லது கன்னெய் என்று சொல்கிறார்கள் இங்கு இது பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிந்த சொல்
பார்த்தா, நன்றி. நீங்களும் எழுத ஆரம்பிப்பதாகச் சொன்னீர்களே…
ராமலட்சுமி, நன்றி. எட்டு வருடம் இடைவெளி இல்லைங்க. இவ்வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து எட்டு வருடம் ஆகியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே வருடத்திற்கு ஒன்றிரண்டு இடுகைகள் தான் எழுதியிருப்பதில் பெரிய இடைவெளியாகத் தோன்றுகிறது.
செந்திலான், கல்நெய் என்றும் ஒரு சொல் உண்டு தான். ஆனால், பாறைநெய்க்கும் கல்நெய்க்கும் வித்தியாசம் உண்டு. ஆங்கிலத்தில் petroleum, petrol (gasoline in US) இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். முன்னது நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் கரட்டுநெய். பின்னது, அதனைத் தூய்விப்பாலையில் காய்ச்சி வடித்துத் துளித்தெடுத்த பின்னம். இதுபற்றித் தமிழ் விக்கிப்பீடியாவிலும் சிலர் சேர்ந்து எழுதியிருக்கிறோம்.
பார்க்க: பாறைநெய் தூய்விப்பாலை