இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

எண்ணெய் விலை ஏறிப் போச்சு…

January 3rd, 2008 · 5 Comments

முதல் முறையாகக் கரட்டுநெய் (Crude Oil) விலை இன்றைய சந்தையில் ஒரு பீப்பாய்க்கு நூறு டாலர் அளவைத் தொட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் வள உச்சம் என்று நான் முன்பு எழுதிய இடுகையின் போது விலை ஐம்பது டாலர் அளவில் இருந்தது. நாள் முடிவில் சற்றே கீழிறங்கி $99.62 என்று முடிந்தாலும், சுமார் மூன்றே வருடங்களில் இதன் விலை இரட்டிப்பாகி இருக்கிறது.

பலவித எரிபொருட்களுக்கும் இயல்பொருளாய், ஆரம்ப மூலப்பொருளாய்க் கரட்டுநெய் அமைந்திருப்பதால், அதன் விலை உயர உயரப் பிற எரிபொருள்கள் யாவும் விலை ஏறிக்கொண்டிருக்கின்றன. பெட்ரோல் (கன்னெய்) விலை அமெரிக்காவில் ஒரு ^கேலனுக்கு மூன்று டாலர் அளவைத் தாண்டி நாட்கள் பலவாகிறது.

பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டினாலும், கரட்டுநெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதில்லை. அது பெரும்பாலும் சந்தை நிலவரங்களையும் தேவை மற்றும் உற்பத்தி நிலவரங்களையும் பொறுத்தே அமைகின்றது.

ஒரு ^கேலன் பெட்ரோல் விலையில் நூற்றுக்கு அறுபது சதவீதம் மூலப்பொருட்செலவாகக் கரட்டுநெய்யின் மதிப்புக்குப் போகிறது. அதற்கு மேல் உற்பத்திச் செலவும், பிற செலவுகளும், வரிகளும் சேர்த்துப் பார்த்தால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ^கேலன் பெட்ரோல் விற்றால் அவர்களுக்குக் கிடைக்கும் நிகர இலாபம் ஒரு செண்ட் அளவு தான் இருக்கும். ஒரு ^கேலனுக்கு ஒரு செண்ட்டு இலாபம் என்னும் நிலையிலும் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்ட வேண்டுமானால் எத்தனை ^கேலன்கள் விற்க வேண்டும்! அதனால், கரட்டுநெய் விலை ஏறும்போது அவர்களுடைய வருமானத்துக்கும் அடி உண்டு. நட்டமென்பதில்லை, இலாபத்தில் குறைவு உண்டாகும்.

தற்போதைய உச்ச விலைக்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

 • ஒன்று:
  எரிசக்தியின் தேவை உலகில் அதிகரித்துக் கொண்டே இருப்பது ஒரு முக்கிய காரணம். குறிப்பாக, மக்கட்தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளான இந்தியா, சீனா இவ்விரண்டு நாடுகளின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்விரண்டு நாடுகளும் உலக அரங்கில் எண்ணெய்க் கிணறுகளையும், நிறுவனங்களையும் கைப்பற்ற முனைவதும் இதனை ஒட்டியே. உலக சக்தித் தேவை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன.
 • இரண்டு:
  எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் திடமற்ற அரசு நிலை. இன்றைய நிலையில் பெரும்பான்மையான எண்ணெய் வள நாடுகளின் நிலை திடமானதாக இல்லை. ஏதேனும் ஒரு பிரச்சினை இருந்து வருகிறது. ஈராக்கில் நடக்கும் சண்டை மட்டும் அல்ல. வெனிசுவேலாவில் எண்ணெய் வளங்கள் அரச உடைமையாக்கப் பட்டது, மத்தியக் கிழக்கு, மற்றும் ஆப்பிரிக்கா தேசத்து உள்நாட்டுக் குழப்பங்கள், போர், தீவிரவாதம், ருசியாவின் அரச அதிகாரம், இவை அனைத்தும் தொடர்ந்த எண்ணெய் உற்பத்திநிலைக்கு இக்கை (risk) உள்ளடக்கி இருக்கின்றன. இவ்வாரத்தில், ஆப்பிரிக்காவின் முதன்மை உற்பத்தி நாடான நைச்சீரியாவில் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களும், அரச எதிர்ப்புப் போர்களும் நைச்சீரிய எண்ணெய் குறித்த திடமற்ற நிலையை உண்டாக்கி இருக்கின்றது. வட ஈராக்கில் துருக்கி இராணுவத் தாக்குதல் நடத்துவதால் ஈராக் எண்ணெய் குறித்த ஐயப்பாடும் உண்டு. எத்தனை காலம் அமெரிக்கா அங்கே குந்தியிருக்கும் என்பதும் தெரியாத ஒன்று.
 • மூன்று:
  எண்ணெய்க் கிணறுகளின் மூப்பு நிலையால் எளிதாக எடுக்க முடிந்தவை எடுக்கப்பட்ட நிலையில், உற்பத்திக் குறைவும், தரக்குறைவும் உண்டாகின்றன. அதனால், தரம் குறைந்த கச்சா எண்ணெய்யை விண்டெடுக்கச் செலவும் அதிகரிக்கின்றன. புதிய எண்ணெய்க் கண்டுபிடிப்புக்கள் வசதியற்ற மூலை முடுக்குகளில் இருப்பதும் ஒரு காரணம். காட்டாக, மிகவும் தொலைதூரக் கடலில், மிகுந்த ஆழத்தில் கரட்டுநெய் கண்டுபிடிக்கப் பட்டாலும், அதனைத் தோண்டி எடுக்கச் சிரமமும் செலவும் அதிகம். அதன் பின் அதனைக் கரை சேர்க்கவும் பெருஞ்செலவு ஆகும்.
 • நான்கு:
  உலக கரட்டுநெய்ச் சந்தையில் வணிகம் அமெரிக்க டாலர் கொண்டு நடத்தப் படுகிறது. அண்மைய அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, டாலரின் மதிப்புக் குறைந்து கொண்டே இருப்பதும் இந்த விலையேற்றத்துக்கு ஒரு காரணம்.

பெரும்பாலான காரணங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கும் என்பதால், கரட்டுநெய் விலை பெரிதும் குறைய வாய்ப்பு இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகள் உற்பத்தியைப் பெருக்கினால் ஒரு வேளை விலை குறையலாம். ஆனால், சென்ற ஆண்டு இந்த விலையை ஐம்பது டாலர் அளவில் வைத்திருக்க முயலப் போவதாய்ச் சவுதி அரேபியா சொல்லியபோதும் இன்றைய விலை நூறு டாலரைத் தொட்டிருப்பதால், ஒன்று அவர்கள் யாதொரு முயற்சியும் செய்யவில்லை, இல்லை அவர்களின் முயற்சிக்குப் பலனில்லை என்றாகிறது.

maadu to santhai?

எத்தனை தான் ‘எண்ணெய் விலை ஏறிப் போச்சு’ என்று பாட்டுப் பாடினாலும், பொதுச்சனம் என்னவோ வண்டியில் ‘மாட்டைப் பூட்டு’ம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதால் கரட்டுநெய் விலைக்கு அதிகரிக்கவே அழுத்தம் இருந்து கொண்டிருக்கும். இன்னொரு புறம், எண்ணெய் விலை அதிகரிப்பால் தேவை குறையும், அதனால் விலை வீழும் என்று ஒரு எண்ணமும் சந்தையில் சிலரிடம் இருக்கிறது. எனக்கென்னவோ அதில் பெரும் நம்பிக்கை இல்லை.

Tags: சமூகம் · வேதிப்பொறியியல்

5 responses so far ↓

 • 1 Sridhar Naryanan // Jan 3, 2008 at 12:45 am

  //எண்ணெய் விலை அதிகரிப்பால் தேவை குறையும், அதனால் விலை வீழும் என்று ஒரு எண்ணமும் //

  அப்படி குறைந்தால் அது மீண்டும் எண்ணெய் விலையேற்றத்தில்தானே முடியும்? சரியாக புரியவில்லை.

  //கரட்டு நெய்//

  அருமையான வார்த்தை அமைப்பு 🙂

 • 2 செல்வராஜ் // Jan 4, 2008 at 12:18 am

  ஸ்ரீதர் நாராயணன்: நன்றி. கரட்டு நெய் என்கிற சொல் இராம.கி அவர்களின் வளவு பதிவு வழியாக அறிந்து கொண்ட ஒன்று.

  எண்ணெய் விலை அதிகரிப்பதால், மக்களின் பயன்வழக்கங்கள் மாறும், குறையும்; அதனால் சந்தையில் எண்ணெய்யின் இருப்பு அதிகமாகும்; அது விலையைக் குறைக்கும் என்பது ஒரு எண்ணம். நீங்கள் சொன்னது போல், விலை குறைந்தால் மீண்டும் பயன் அதிகமாகும், இருப்பு குறையும், விலை ஏறும் தான். இது சந்தையின் இழுபறிகள் தான். அதோடு இவை எல்லாம் தேற்றங்கள் தான்.

 • 3 நட்டு // Jan 15, 2008 at 8:54 am

  எனக்கெல்லாம் நீங்க சொல்ற கரட்டு எண்ணை சல்லிசா கிடைக்குது.பதிலா உணவுப் பொருட்களுக்கும்,வீட்டு வாடகைக்கும் கூட வசூலிச்சறாங்க.

 • 4 சிமுலேஷன் // May 23, 2008 at 5:22 am

  கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலருக்கு மேலே போய்விட்டதே.

  200 டாலருக்கும் மேலேயும் போகும் என்று சொல்றாங்களே!

  – சிமுலேஷன்

 • 5 செல்வராஜ் // May 23, 2008 at 8:13 am

  சிமுலேஷன், உண்மை தான். கச்சா எண்ணெய் விலையின் மீதான அழுத்தம் சிறிதும் குறைவதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் விலை குறையும், எழுபது டாலர் அளவிற்கு வரும் என்று கூறினாலும், விலை அதிகரிக்கும் என்றும் 200 டாலர் அளவைத் தொடும் என்றும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக, 40 டாலர் அளவில் இருந்த போது, நூறைத் தொடும் என்று அணுமானித்த அர்ஜுன் மூர்த்தி என்னும் மெர்ரில் லின்ச் கோல்டுமன் சாக்சு நிபுணர் இப்போது விலை 200 டாலரை எட்டும் என்கிறார்.