கச்சா எண்ணெய் வள உச்சம்
Feb 7th, 2005 by இரா. செல்வராசு
‘கரும்பொன்’ என்று சொல்வார்கள். தங்கத்தைப் போல நிலத்தடி எண்ணெய் அவ்வளவு விலைமதிப்பு மிக்கதாய் அமைந்து விட்டது. உலகின் சக்தித் தேவைகளில் சுமார் 40 சதவீதத்தைக் கச்சா எண்ணெயே தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேராய் அமைந்திருப்பதும் இந்த எண்ணெய் வளமே என்றாலும் மிகையாகாது. சுமார் 90 சதவீதப் போக்குவரத்துக்குக் கச்சா எண்ணெயே ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருக்கிறது. பல பொருட்களுக்கும் வளங்களுக்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது கச்சா எண்ணெய் தான். ஏன், இன்றைய மத்தியக் கிழக்குப் பிரச்சினைகளுக்கும் ஈராக் போருக்கும் கூட அரசியலாய் இருப்பது இந்த எண்ணெய் வளம் தான் என்பது ஓரளவு கூர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்தது தான்.
கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று விரிவாய்ப் பார்க்காமல், சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமென்றால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரிகள் மரித்துப் போன பின், கடல் மடியில் மண்ணுள் புதையுண்டு, அங்கு ஏற்பட்ட அழுத்தத்திலும் வெப்பத்திலும் அழுகி, பாக்டீரியாக்களால் சில மாற்றங்கள் அடைந்து, சுற்றி இருந்த மண்ணோடும், உப்புக்களோடும் சில வேதிவினைகளின்பாற்பட்டும் இப்படிக் கச்சா எண்ணெயாகவும் நிலத்தடி வாயுவாகவும் மாறுகின்றன. பிறகு உயர் அழுத்தங்களால் பூமிப் பாறை வெடிப்புக்களுக்குள் செலுத்தப்பட்டு எண்ணெய் வளங்களாக மாறின. இன்றும் பல எண்ணெய்க் கிணறுகள் கடல்களின் மீது இருப்பதையும் கவனித்தால் இது புலப்படும்.
இற்றையாண்டுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருப்பது சவுதி அரேபியா தான். ஆனால் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவே எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட தொழில்கள் சிறந்து விளங்கின. இந்த வளமும் போகமும் தொடர்ந்து நிலைக்கும் என்று பலரும் கனவு கண்டிருந்தனர். ஆனால் இந்த வளமான நிலை எப்போதும் நிலைக்காது என்று 1950 வாக்கில் ஒரு எண்ணெய் வள ஆய்வு நிபுணர் கணித்துக் கூறியிருந்தார். அவர் பெயர் மேரியான் கிங் ஹப்பர்ட் (Marion King Hubbert). பொதுவாக எண்ணெய் கண்டுபிடிப்பு, உபயோகம், இவற்றையெல்லாம் வைத்து ஆய்ந்து உருவகப் படுத்தி, ஒரு கணிப்பைச் சொல்லி இருந்தார். ஒரு கோயில்-மணி-வளைவு (bell curve) போல எண்ணெய் வளம் உச்சத்தை (Hubbert Peak) அடைந்து பிறகு குறைந்து விடும் என்று அவர் கணித்தபடியே எழுபதுகளில் (1970) எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து போனது.
அமெரிக்க எண்ணெய் உற்பத்தியைப் போலவே உலக எண்ணெய் உற்பத்தியும் (உற்பத்தி என்பதே தவறான சொல்லாடல் என்று சிலர் கருதுகின்றனர் – கண்டுபிடிப்பு என்பதே சரி) அதே கோயில்-மணி-வளைவைத் தழுவி இருக்கிறது என்றும், தற்போது (2000-2010) அந்த வளைவின் உச்சத்தில் இருக்கிறோம் என்றும் சில ஆய்வாளர்களும் அறிஞர்களும் கருதுகின்றனர் (The End of the Age of Oil). ஆனால் இத்தகைய கணிப்புக்கள் எல்லாம் தோராயமானது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இயற்கையில் இருந்தது/இருப்பது எவ்வளவு என்று கணக்கிட்டதும் ஒரு குத்துமதிப்பான கணக்குத் தான். இருப்பினும் எந்த இயற்கை வளத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதன் அடிப்படையிலும், கண்டுபிடித்து வெளியெடுக்கும் வேகத்தைவிட உபயோகிக்கும் வேகம் அதிகமாய் இருப்பதாலும், இந்த ஹப்பெர்ட் உச்சம் உலக எண்ணெய் வளத்திற்கும் உண்டு என்பது ஒரு வாதம்.
கச்சா எண்ணெயின் இன்றைய விலை, ஒரு பேரலுக்கு ஐம்பது அமெரிக்க டாலர் என்னும் அளவில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 அமெரிக்க கேலன்கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் லிட்டர். கூட்டிக் கழித்துப் (பெருக்கிப்) பார்த்தால் ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள். (இது இந்த எண்ணெய்க் கணக்கு மட்டும் தான். இதுவே ஒரு பேரல் சிமெண்ட்டு என்பது 375 பவுண்டு, அட நம்ம ஊர்க் கணக்கிலே சொல்லணும்னா, சுமார் 170 கிலோ).
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஐம்பது டாலர் என்பது மிகவும் அதிகம். சராசரியாய் இருபது டாலர் அளவில் இருந்த விலை இவ்வளவு தூரம் அதிகமாகியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் கப்பல்கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள் (refineries) புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் மேற்சொன்ன ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். விலை உயரும் போது உற்பத்தியை அதிகரித்தால் நல்ல லாபம் ஈட்டலாம். ஆனால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்கின்றனர்.
யார் கண்டது ? அப்படி ஒரு எண்ணெய்ப் பற்றாக்குறை வராமலேவும் போகலாம். அப்படி வாதிடவும் இன்னொரு சாரார் இருக்கின்றனர். ஆனால், இன்றில்லாவிட்டாலும் வருங்காலத்தில் நமது சந்ததியினர் காலத்தில் அப்படி ஒரு பற்றாக்குறை ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் என்று தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் உள்ள இந்தியா சீனா முதலிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் இன்னும் அதிகரிக்கும். இது அந்தப் பற்றாக்குறைச் சாத்தியத்தை மேலும் அதிகரிக்கிறது.
எண்ணெய் வளம் குறையக் குறையப் பிற மூலங்களில் இருந்து சக்தியைப் பெறும் முறைகள் அதிகரிக்கலாம். அதிகரிக்க வேண்டும். இன்னும் நுட்பியல் வளர்ச்சிகள் அதிகரித்த எண்ணெய் கண்டுபிடிப்புக்கும் உற்பத்திக்கும் உதவலாம். மீண்டும், சக்தித் தேவைகளுக்கு உலகம் கரிக்கும் அணுச்சக்திக்கும் அதிக முக்கியத்துவம் தரக் கூடும். கரிச்சக்தி மாசு நிறைய உண்டு பண்ணுவது. ஆனால் கரி வளம் இன்னும் நிறைய இருக்கிறது என்று கருதுகின்றனர். இவை தவிரப் பிற புதிய மூலங்கள் மூலமும் (!) சக்தியை உருவாக்கலாம் என்று ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கனடாவின் எண்ணெய் மணல்வெளிகள், காற்று, சூரிய ஒளி, கடல் பேரலைகள், ஹைட்ரொஜன் இவற்றில் இருந்தெல்லாம் சக்தியை உருவாக்கும் முறைகளைச் சிறப்பாகச் செய்ய முடிந்தாலும் பயனுள்ளதாய் இருக்கும். வளர்ந்து கொண்டே இருக்கும் மனிதத்தொகையின் சக்தித் தாகத்திற்கு ஈடு கொடுக்க, இன்னும் பல புதிய நுட்பங்களும் பெருக வேண்டும்.
பின்குறிப்பு:
துறைசார் பதிவுகள் எழுத வேண்டும் என்று சிறிது காலமாகவே இருக்கிற ஆர்வத்தில் கொஞ்சம் (கொஞ்சூண்டு) வேதிப்பொறியியல் சம்பந்தப் பட்ட சிறு முயற்சி. இந்த முயற்சி தொடரும் என்றே நினைக்கிறேன்.
டிட்ராய்ட்(Detroit) காரங்க மாற்று வழிகள் கண்டுபிடிக்கிறதுல முனைப்பா இல்லேன்னு பேசிக்கிறாங்களே(ரொம்ப வருஷமாவே) அதப் பத்தி,மெக்ஸிகோ வளைகுடா(Gulf of Mexico)வுல இருக்கற அமெரிக்க எண்ணை குடோன் பத்தி, சோவியத் யூனியன் கிட்டேர்ந்து விலைக்கு வாங்கின அலாஸ்காவுல இன்னும் தோண்டாம, ‘பின்னாடி தேவைப்படும்’-னு ‘ரிசர்வ்’ல வச்சிருக்கிறது பத்தி, துருவங்கள்ல இன்னும் தோண்டாம இருக்கறது பத்தி, அதுல இருக்கற நடைமுறை சிக்கல்கள்(குளிர்) பத்தி, எண்ணை கம்பெனிங்க தங்களோட ‘சொத்து’ன்னு காட்டுறது வெறும் ‘கணக்கு பண்ணினது’ மட்டுங்றதுதான்… இப்படி இன்னும் நிறைய எழுதுங்க.
ஆமாம், நானும் அரசல்புரசலாக் கேள்விப்பட்டதுதான் பரி சொன்னதும். அதைப்பத்தியும் எழுதுங்க.
நானும் அங்கங்கே கேட்டது தான். கொஞ்சம் படிச்சுமிருக்கேன். அப்புறமா எழுதறேன். இதுக்கெல்லாம் நிறைய இடத்துல படிக்க வேண்டியிருக்கு ! 🙂 இருந்தாலும் நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க. நன்றி.
Please, modifying this article a bit, and adding to Tamil Wikipedia.
What I meant to above was, Please consider modifying this and/or similar other articles and adding to Tamil Wikipedia. Thanks.
“கச்சா எண்ணெய்க்கு ஒரு வாழ்த்து” என்ற எனது இடுகைக்கு…
http://simulationpadaippugal.blogspot.com/2006_02_01_simulationpadaippugal_archive.html
[…] நூறு டாலர் அளவைத் தொட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் வள உச்சம் என்று நான் முன்பு எழுதிய இடுகையின் […]
very good start, follow up,