இந்திய அமெரிக்கத் தளையிலாவெளி விமானப்பயண ஒப்பந்தம்
Jan 31st, 2005 by இரா. செல்வராசு
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான விமானப் போக்குவரத்தை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தளையிலாவெளி (Open Skies) ஒப்பந்தத்தை இந்திய உள்நாட்டு விமானத்துறை அமைச்சர் பிரஃபுள் பட்டேலுடன் மூன்றே நாள் பேச்சு வார்த்தைக்குப் பின் முடிவு செய்து அறிவித்திருக்கிறார் அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் நார்மன் மினட்டா.
இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து அதிகரிக்கவும், பயணச்செலவு குறையவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த ஒப்பந்தம் 1956ல் ஏற்படுத்தப் பட்டது. அதில் இக்காலத்திற்கு ஒத்துவராத பல கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாய் எந்த ஊருக்கு விமானங்கள் வர முடியும் என்பதிலும், வாரத்திற்கு எத்தனை முறை வரமுடியும் என்பதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. போக்குவரத்தை அனுசரித்து விமானங்களைக் கூட்டவோ குறைக்கவோ வேறு ஊருக்கு மாற்றவோ அதிக சுதந்திரங்கள் இரு நாடுகளுக்கும் இருக்கவில்லை. இந்தச் சிக்கல்களையெல்லாம் இந்தத் தளையிலாவெளி ஒப்பந்தம் நீக்குகிறது என்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவினுள் பறக்கும் உள்நாட்டு விமானங்களுடன் (இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட், சஹாரா முதலியன) பிற நாட்டு விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் இனி அனுமதிக்கப் படும் என்பதால் க்ளீவ்லாண்டில் இருந்து கோயமுத்தூர் வரை ஒரே பயணச்சீட்டாய் எடுத்து விடலாம். இங்கும் பல ஊர்களில் இருந்து விமானம் புறப்படும் என்பதால் எந்த வழியாகச் செல்லலாம் என்பதன் வாய்ப்பு அதிகரிக்கும். நியுயார்க்கோ, சிகாகோவோ போன்ற சில ஊர்கள் வழியாகத் தான் செல்லவேண்டும் என்பதோ, இணைப்பு விமானத்திற்காகப் பல மணி நேரங்கள் விமான நிலையத்தில் பழி கிடக்க வேண்டும் என்பதோ தேவையில்லாமல் போகலாம்.
பெரும்பாலும் ஏர் இந்தியாவில் தான் நாங்கள் சென்றிருக்கிறோம். அது தான் கொஞ்சம் குறைந்த விலையில் கிடைத்திருக்கிறது. ஏர் இந்தியப் பயண அனுபவம் பற்றிப் பலர் குறைபட்டுக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன் என்றாலும், எனது/எங்களது அனுபவத்தில் எனக்கு பிறவற்றைக் காட்டிலும் ஏர் இந்தியா தான் பிடித்திருந்திருக்கிறது. ஒன்றுமில்லாவிட்டாலும், கொஞ்சம் நம்ம ஊர்ச் சாப்பாடாவது கிடைக்கும். உள்ளே நுழைந்ததும் ஹிந்துஸ்தானி சங்கீதப் பின்னணியில் சேலை கட்டிய பணிப் பெண்கள் கொடுக்கும் மாம்பழச்சாறு உட்கொண்டு அமரும்போது விலகும் ஆயாசம் ஒன்றே போதுமே. என்ன! உள்ளே ஏறும் போது தான் மக்கள் எந்த வரிசை முறைகளுக்கும் ஒத்துவராமல் ஆட்டுமந்தைகளைப் போல் முட்டிக் கொண்டு போவார்கள்! பாவம் அதை விமான நிறுவனத்தாரின் முழுத் தவறாய்ச் சொல்ல முடியாது. அப்புறம் நிலையத்தில் காத்துக் கொண்டு அமர்ந்திருக்கையில் நியுயார்க்காக இருந்தாலும் கவலையில்லாத ஒரு பட்டேல் மாமா நகத்தை வெட்டி அங்கேயே கீழே போட்டுக் கொண்டிருப்பார்! அட, குழந்தைகள் எல்லாம் கீழே விளையாடுகிறார்களே என்ற கவலையோ, குப்பைத் தொட்டி என்ற ஒன்று உள்ளதே என்ற சமூக அறிவோ சிறிதும் இல்லாமல் சொகுசாய் வெட்டித் தள்ளிக் கொண்டிருப்பார்.
புதிய ஒப்பந்தம் இதையெல்லாம் மாற்றப் போவதில்லை. ஆனால், இந்த மாற்றங்களால் இனிமேல் இருவழிப் பயணச் செலவு சுமார் 700 டாலருக்குக் குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுவரை ஒரு சீட்டுக்குச் சுமார் 1500 டாலராவது கொடுத்துத் தான் பயணம் செய்திருக்கிறோம். அதிலும் என்னை மாதிரி கடைசி நிமிடம் தான் சீட்டு வாங்க அலைபவர்களுக்கு அந்தக் குறைந்த விலைச் சீட்டுக்கள் தீர்ந்து போய், 1800 டாலர் என்று கூறிவிடுவார்கள். எல்லாம் அதே பயணச்சீட்டுத் தான். அதே இருக்கை தான். கால நேரத்திற்குத் தக்க விலை. இரண்டு பெண்களும் இரண்டு வயதைத் தாண்டி விட, அவர்களுக்கும் கிட்டத்தட்ட முழுச்சீட்டு வாங்க வேண்டும். மொத்தமாய் ஒருமுறை போய் வர 6500 டாலர்களாவது வேண்டும். இது இனிமேல் 3500க்குள் என்று வந்துவிடுமானால் பெரிய சேமிப்பாக இருக்கும். என்றோ ஆசைப்பட்டபடி வருடம் ஒருமுறை கூடப் போய் வரலாம். சுற்றுவழிப் பயணத்திற்கு 500 அல்லது 600 டாலர் மட்டுமே கொடுத்துச் செல்கிற பக்கத்து இருக்கைச் சீனத்து நண்பரைப் பார்த்து வயிறு எரிய வேண்டியது இல்லை.
புதிதாய் நேராகப் பெங்களூருக்குப் போகும் லுஃப்தான்ஸா விமானம் நன்றாய் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். அது பற்றியும் பார்க்க வேண்டும். அரைகுறையாய்க் கூடத் தெரியாத இந்தியை வைத்துக் கொண்டு அரைகுறையாய்க் கூட ஆங்கிலம் தெரியாத ஒரு வாடகைக் காரோட்டியிடம் மும்பையான பம்பாயில் பட்ட கஷ்டம் இனிப் போதும். இந்தி பேச அவசியமின்றி நேராகக் கோயமுத்தூருக்குக் (ஜெட்) கொண்டு போய் விட்டாலும் சரி.
இந்த மாற்றங்கள் உடனடி அமுலுக்கு வரும் என்று கூறுகிறார்கள். பயணச்சீட்டு விலை எப்போது குறையப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். வரும் கோடை காலத்தில் ஊருக்குப் போகலாமா என்று எண்ணம் உண்டு. வீட்டு முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல், விலை குறைந்த பின் போய்க்கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நாங்கள் இதுவரை இரண்டு முறை சென்றிருக்கிறோம், எப்போதுமே ஏர் இந்தியாவேதான். நீங்க ரசித்த அளவுக்கெல்லாம் நான் ரசிக்கவில்லை:( ஆனாலும் இருமுறையும் சென்னைக்கே சென்றுதான் வெளியே வந்தோம், எனவே மும்பாய் டாக்சிக்காரர்கள் பிரச்னை அனுபவிக்கவில்லை. சென்னையில் பன்னாட்டு முனையத்திலிருந்து உள்நாட்டு முனையத்துக்கு பெட்டிகளுடன் தள்ளுவண்டியில் கடக்கும்போதுதான் சிரமப்பட்டோம், ஏதோ வேலை நடப்பதால் சாலையிலேயே சுற்றிக்கொண்டு தள்ளிவரவேண்டியதானது. சரிவில், சரியாக பிரேக் பிடிக்காத தள்ளுவண்டிகளுடன் நாங்கள் ஆடிய கூத்து யாராவது பார்த்திருந்தால் நன்றாக ரசித்திருப்பார்கள்.
கட்டணம் குரையும் என்பது வரவேற்கத்தக்க செய்தி. நடக்கட்டும்.
செல்வா,
உங்கள் முகப்பில்மறுமொழி முன்னோட்டம் கட்டுவதில் இறுதியில் உள்ள குறைபாடு சரிசெய்ய இதைப் பாருங்கள்.
சரியாகச் சொன்னீர்கள் இராதாகிருஷ்ணன். அந்த இரண்டு விமான நிலையங்களுக்கிடையே மாறிச் செல்லும் சிக்கல் வேண்டாம் என்று தான் சென்ற முறை ஏர்-இந்தியாவிலேயே சென்னை வரை செல்ல முடிவு செய்திருந்தோம். விமானம் தாமதமானதால், பிறகு இந்தியன் ஏர்லைன்ஸிற்கு மாற்றித் தருவதாகவும் தாங்களே அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்வதாகவும் கூறிப் பின் கடைசி நிமிடத்தில் நீங்களே எப்படியாவது போய்க் கொள்ளுங்கள் என்று கை விரித்துவிட, அப்போது தான் டாக்ஸிக்காரரிடம் சிக்கி அவர் வேறொரு டெர்மினலில் இறக்கி விட, அதிகாலையில், குடும்பத்தோடு, பயணக் களைப்போடு, பெட்டிகளோடு… பெரும் சிரமமாகப் போய்விட்டது. இது போன்ற அனுபவங்கள் தாம் கசப்பைத் தருகின்றன.
எப்போதுமே ‘மலேசியன் ஏர்லைன்ஸ்’ (MAS)தான்
இந்த இரண்டுதடவையும் ஏர் இன்டியாவில் பயணம்.
>> உள்ளே நுழைந்ததும் ஹிந்துஸ்தானி சங்கீதப் பின்னணியில் சேலை கட்டிய பணிப் பெண்கள் கொடுக்கும் மாம்பழச்சாறு உட்கொண்டு அமரும்போது விலகும் ஆயாசம் ஒன்றே போதுமே. என்ன! உள்ளே ஏறும் போது தான் மக்கள் எந்த வரிசை முறைகளுக்கும் ஒத்துவராமல் ஆட்டுமந்தைகளைப் போல் முட்டிக் கொண்டு போவார்கள்! >>
எல்லாமும் சரி செல்வராஜ் ஆனா இந்த டாய்லெட்? நினைத்தால்..
சென்னை சென்று சேரும்வரை சீட்டைவிட்டு எழுந்திருப்பதேயில்லை 🙁
>>சரியாக பிரேக் பிடிக்காத தள்ளுவண்டிகளுடன் நாங்கள் ஆடிய கூத்து யாராவது பார்த்திருந்தால் நன்றாக ரசித்திருப்பார்கள்.>>
யாரும் பார்த்திருந்தாலும் கண்டுக்க மாட்டாங்க ‘காசி
அவங்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும் 🙂
எனக்கும் அதே அனுபவம்! ட்ராலியைத் தள்ள்ள்ளிக் கொண்டு
போகும்போது மனசுக்குள் ரயில்லேயே கோவை
போயிருக்கலாமேன்னு தோணும்.
இந்த ஒப்பந்தத்தால் அவ்ளோ விலை குறைந்துடுமா… என்ன, கொடுத்துவைத்தவர்கள்:)
/மும்பையான பம்பாயில் பட்ட கஷ்டம் இனிப் போதும்.// மொழியால் மட்டுமில்லை, சகல விதத்திலும் அந்த ஊர் விமான நிலையம் எனக்கு சரியில்லாததாகவே படுகிறது. காட்டாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான வாயில்களைப் பிரித்து வைத்துள்ள விதமும், அவற்றிற்கிடையேயான தூரமும். இதை சர்வதேச விமானநிலையம் என்று வேறு சொல்லிக்கொள்கிறோம்!! சீக்கிரமாக கோவை விமானநிலையத்தை விரிவுபடுத்தினார்கள் என்றால் நன்றாக இருக்கும்.