எப்படி ?
Nov 15th, 2003 by இரா. செல்வராசு
‘ஏன்’, ‘எதற்கு’ என்று தலைப்பிட்டுச் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய பின் ‘எப்படி’ என்று ஒன்று பின்வர வேண்டும் என்பது தானே இயற்கையின் நியதி. அதனால் இதோ…
எப்படி எல்லாம் கணிணிகளிலும், அதன் திரைகளிலும் தமிழ் இன்று மிளிர்கிறது என்று எண்ணிப் பூரிப்பாய் இருக்கிறது. இணையமும், வைய விரிவு வலையும், மின்மடல்களும், செய்தி மற்றும் விவாதக் குழுக்களுமாகவும், வளர்கின்ற தொழில்நுட்பங்கள் எல்லாவற்றுடனும் இணைந்தும் ஈடு கொடுத்தும் தமிழ் நிலைத்து வந்திருக்கிறது. அதே உத்வேகத்துடன் இன்று வலைப்பதிவுகள், எழுத்துருக்கள், தானிறங்கி முறைகள், எழுத்துருக் குறியீட்டு முறைகள், பல்வகைச் செயலிகள், நிரல்கள், உலாவிகள், இணைய தளங்கள், என்று சீர் நிறைந்து கிடக்கிறது. பனையோலைகளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்த என் பாட்டன் முப்பாட்டன் காலத்துத் தமிழ் இன்று மின் அணுக்களின் மீதேறி அதிவேகப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அந்தப் பழைய பனையோலைகளையும் காத்து அழைத்துச் செல்லவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நன்றி: முதுசொம் காப்பகம்
தமிழின் காலப்பயணத்தில் மிகமிகச்சிறு பங்கெடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் எனக்குள்ளும் பெருமை. இந்தத் தமிழ் வலைக்குறிப்புக்கள் அமைப்பது எப்படி என்று தெரிய வேண்டுமா ? பலரது உள்ளீடுகளோடு விரிவான உரைகளை மதி அமைத்திருக்கிறார். படங்களோடு விளக்கங்களைச் சுரதா தந்திருக்கிறார். பிற உதவிகளுக்கும் கேள்விகளுக்கும் ஒரு யாஹூக் குழுமம் இருக்கிறது. அங்கே அ.கே.கே பட்டியல் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) அமைக்க ஒரு முயற்சி பிறந்திருக்கிறது. அதை நிர்வகிக்கக் காசி முன் வந்திருக்கிறார்.
இந்த வலைப்பக்கத்தை யூனிகோட்டில் அமைக்கத் தேனீ என்னும் தானிறங்கி உருவைத் தானம் தந்திருக்கிறார் உமர். உள்ளிட உதவும் செயலிகள் சிலவற்றை முரசு, பொங்கு தமிழ், எ-கலப்பை இவை தருகின்றன. UnicodeTamil.Kmx என்னும் தட்டச்சு செலுத்தியையும் பெற்றுக் கொண்டால் வசதி. எழில் நிலா பக்கம் சென்றால், பல செயலிகளை இறக்கிக் கொள்ளலாம். அதோடு தமிழ் யூனிகோடு முதலியன பற்றிச் சுவாரசியமான பல கட்டுரைகளையும் பார்க்கலாம். இலங்கையின் அழகுத் தமிழில் ஒரு ஒலி விவரணக் குறும்படம் இதைப் பற்றி அழகாக விவரிக்கிறது. அங்கே சுரதா தானிறங்கிகளைப் பற்றியும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.
பலவாறாகச் சிதறிக் கிடந்த குறியீட்டு முறைகள் யூனிகோடு/தகுதரம்/த.நா.அரசு முறை TAB/TAM என்று இந்த மூன்றைச் சுற்றி ஒரு முதிர்நிலை பெறத் தொடங்கி உள்ளன. காலப்போக்கில் இவை இன்னும் ஒன்றுபட்டுப் போகும். நல்ல திசையே தெரிகிறது. இதற்காகப் பாடு பட்டவர்களுக்கெல்லாம், பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் நன்றி. அதில் பலபேர் உத்தமத்தில் பொறுப்பு வகித்தும், பங்கு பெற்றும் தொண்டாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
பல திசைகளில் சென்று கொண்டிருந்த குறியீடுகள் தமிழர்களின் வேற்றுமையைக் காட்டின என்னும் வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அது எல்லோருக்கும் தாய்மொழி மீது இருந்த பற்றையும் அளவில்லா ஆர்வத்தையும் தான் காட்டியது என்பது என் எண்ணம். அவை ஒரு ஒருங்கிணைந்த திசையை நோக்கி இப்போது சென்று கொண்டிருப்பதும் நமது ஒட்டுமொத்த முதிர்ச்சி நிலையையே காட்டுகிறது. தற்போதைக்கு மூன்று முறைகளுக்கும் ஏதோ ஒரு பயன் இருக்கத் தான் செய்கிறது. எட்டு பிட்டில் (8-bit) உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் அடக்கிய TAM அச்சுத் தமிழுக்கு உதவலாம். காலப்போக்கில் அச்சுலகம் மின்னுலகமாக மாறிவிடும் சாத்தியம் இருப்பதால் இதன் பயன் குறைந்து போகலாம். கணிணியுலகம் இன்னும் எட்டு பிட்டில் இருப்பதால், பல நேரங்களில் தகுதரம் (TSCII) நமக்கு அவசியம். உதாரணத்திற்கு யாஹூ குழுமங்களில் இன்னும் தகுதர எழுத்துக்கள் தான் சுலபமாகப் பார்க்க முடிகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து பதினாறு பிட்டுக்குப் போகும் போது நாமும் உலகத்தோடு ஒன்றிப் பின்னெப்போதும் யூனிகோட்டையே பயன்படுத்தலாம்.
அந்த யூனிகோட்டில் தமிழுக்கு ஒதுக்கி இருக்கும் இடத்தில் மாற்றம் தேவையா இல்லையா என்கிற அடுத்த களம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. கருத்துப் பேதங்கள் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியம். தனது பயணத்தின் அடுத்த நிலைக்குச் செல்லத் தமிழ் தயாராகத் தான் இருக்கிறது. வாழ்க !
என்ன வரலாற்றுக் கட்டுரையெல்லாம்)
செல்வராஜ், அகேகேவில் எதையாவது முயற்சிக்கிறீர்களா? நேரம் இருக்குதா? அப்புறம் உங்க வீடு எரியிலான்னு கேட்டிருந்தேன்..
ennanga innum training mudiyalaiyaa?
பரி, Training முடிந்தது. ஆனால் (நம்ம காசி பாஷையில் சொல்லணும்னா வேறு ஒரு R&D யில் இறங்கிட்டேன். அடுத்த பதிவு பாருங்க – தெரியும்.
+ வீட்டுல மனைவி கோச்சுக்கராங்க – ரொம்ப நேரம் கணிணியோடு இருப்பதற்கு
மின்னியல், மின்னணுவியல், கணினியியல், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பத் தகவல்தளம்
>>>>>>>>>தொழில்நுட்பம்>>>>>>>>>
http://www.thozhilnutpam.com