திருமண உறவுகள் தொடரட்டுமே…
Jan 20th, 2008 by இரா. செல்வராசு
‘திசைகள்’ இணைய இதழின் ஆசிரியர் அருணா கேட்டுக்கொண்டதற்காக, ஒன்றரை ஆண்டுகள் முன்பு எழுதியனுப்பிய ‘திருமணம்’ சம்பந்தப்பட்ட கட்டுரையை இங்கு எனது பதிவில் இட்டு வைக்கிறேன். இது வெளிவர இருந்த மாதத்தில் இருந்து ‘திசைகள்’ நின்றுபோனது! (காக்கை பனம்பழம் கதைங்க. மோசமான எழுத்துன்னு சொல்லிராதீங்க!).
இதற்குத் தூண்டுகோளாய் இருந்தது வாய்ஸ் ஆன் விங்ஸின் முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கும் அது தொடர்பான பதிவும் பின்னூட்டங்களும். (தாலி பத்தி நான் ஒன்னும் சொல்லலை!)
* * * *
திருமண உறவுகள் தொடரட்டுமே…
‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்று தமிழ் முதுமகள் அவ்வை அக்காலத்திற் சொல்லி வைத்ததை, ‘அமிழ்தம் என்போம்’ என்று இக்காலத்திற்கும் வலியுறுத்துகிறான் இற்றை நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் பாரதி. பிறப்பால் உயர்வு தாழ்வு சொல்லும் சாதிப்பிரிவுகள் தேவையில்லை என்னும் முதற்கருத்தின் பின்னாலே ஆண், பெண் என்று இரு சாதிகள் இவ்வுலக மாந்தரில் வேறுபட்டு அமைந்திருக்கும் உபகருத்து இங்கே உள்ளடக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது.
வெளித்தோற்றத்தால், உடலமைப்பால் மட்டுமின்றி எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் தம் ஆழ்ந்த ரசனைகளாலும் கூட ஆண்சாதியும் பெண்சாதியும் வேறுபட்டிருக்கின்றனர். மரபியல் ரீதியாகச் சக்தி வாய்ந்த தலைமுறை உருவாவதற்கு வேறுபட்ட குணநலன்கள் கொண்டவர்கள் அவசியமாயிருப்பதைப் போல, பல்லாயிரமாண்டுகளின், பல்வித சூழல்களின் எதிர்ச்சக்திகளினூடாக மனித குலத்தின் தொடர்ச்சியான இருப்பிற்கு உயிரை உருவாக்கித் தயார்ப்படுத்த, முற்றிலும் வேறுபட்ட குணநலன்கள் கொண்ட ஆணும் பெண்ணும் தேவை என்று ஆதியிலேயே இயற்கைத் தெரிவு முறை ஆக்கி வைத்திருக்கிறது.
இது உயிரியல் அடிப்படையில் பாலுறவின் ஊடாக ஒரு உயிரை உருவாக்குவது மட்டுமல்லாமல், அந்த உயிர் உரமாகி வளர்வதற்கான திறன்களை அளிக்கும் குமுகாய அடிப்படையிலும் ஆணின் அறிவும் பெண்ணின் அறிவும் தேவை என்று அமைந்திருக்கிறது. கற்காலம் தொடங்கி, காட்டு வாழ்க்கையை அடுத்து, வளர்ந்து நாகரீக வாழ்விற்குள் நுழையும் மனித வளர்ச்சி இப்படியான தேவைக்குத் திருமணம் என்று ஒரு கட்டகத்தை அமைத்துக் கொடுக்கிறது. ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று அதன் நிலைத்த தன்மைக்கு நமது குமுகாயமும் உருவகங்கள் உருவாக்கித் தருகிறது.
இயற்கையின் தேவை என்னும் அடிப்படையில் அமைந்திருப்பதாலேயே நாடு, மொழி, மதம், இன பேதங்களின்றி அனைத்திற்கும் பொதுவானதாகத் திருமண உறவு அமைந்திருக்கிறது. இந்தத் திருமண உறவுக்கும் மணவாழ்விற்கும் அவ்வப்போது கேள்விகளும் சோதனைகளும் பலவாய் அமைந்திருக்கின்றன. கால ஓட்டத்தில் மாறும் சிந்தனைகளுக்கு ஏற்பத் திருமண ஒப்பந்தமும் மாற்றங்களை ஏற்றே வந்திருக்கின்றது. காட்டாக, முந்தைய காலங்களின் பலதார மணங்களும், பால்யவயது மணங்களும் இன்றைய குமுகாயத்தில் பெரும்பாலும் இல்லாமல் போயிருக்கின்றன. சட்டத்தாலும் விலக்கி வைக்கப் பட்டுள்ளன.
இன்னொரு பக்கம் திருமணத்தைப் புனிதவெளியில் தள்ளிவிட்டவர்களின் கண்மூடித் தனமான பற்றினாலும் இந்த உறவுநிலைக்குப் பங்கம் உண்டாகிறது. மணவாழ்வில் ஈடுபடும் ஆண்-பெண் தம்பதியினரே சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவர் என்றும் பல வாழ்வாதாரமான சங்கதிகள் அவர்களுக்கே உண்டு என்றும் ஆணித்தரமாய் இருப்பர். அதற்கு மாறாக ஓர்பால் உறவு வைத்துக் கொள்பவர்கள் தங்களுக்கும் அந்த வசதிகள், காப்புக்கள் தேவை என்பதற்காகத் தமக்குள்ளே திருமணம் என்னும் உறவை ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் தேடும்போது திருமணப் புனிதத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு இதனை ஏற்க முடியவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உறவே இயற்கையானது என்று எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ஓர்பால் உறவு பற்றிய இயற்கை நிலையை உணர்ந்து கொள்ள முடியாது என்றே படுகிறது. இது குறித்த வாத எதிர்வாதங்களில் விலகிச் சென்று விடாமல், பெரும்பாலான ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மண உறவை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
ஒரு காலத்தில் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என்று பெண்ணடிமைக் கருத்துக்களையும், கணவன் மறைவில் சிதையில் உயிருடன் எரிக்கப்பட்டும் பெண்ணுக்குப் பெரும் அநீதி இழைக்கப் படவும் இந்தத் திருமண உறவு காரணமாய் இருந்திருக்கிறது. பலதார மனம் அனுமதிக்கப் பட்ட குமுகாயங்களிலும் பெரும்பாலும் ஒரு ஆணுக்குப் பல பெண்கள் என்றே சமனற்ற பால் நிலையும் நிலவி இருக்கிறது. இருப்பினும் வளர்ச்சியும் மாற்றங்களும் கால ஓட்டத்தில் இந்த அநீதிகளைக் களைய முற்பட்டிருக்கின்றன. வீட்டின் மூலையில் ஒரு சமையலறையில் அடைபட்டுக் கிடப்பதற்கு மட்டுமே பெண் என்னும் நிலை மாறி இன்று ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று சமமாக எல்லாத் துறைகளிலும் சிறப்பாகப் பெண்களால் ஈடுபடமுடிகிறது. காதலொருவனின் காரியங்கள் யாவைக்கும் கைகொடுத்துப் பின்னணியிலும் ஒரு சக்தியாக இன்று பெண்ணால் இருக்க முடிகிறது.
இப்படித் திருமணத்தின் குறைகள் களையப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறம் திருமணம் என்கிற இந்த உறவே அவசியம் தானா என்றும் கேள்விகள் எழுகின்றன. எதற்கு இந்த ஒப்பந்தம்? உடலுறவு கொள்வதற்குச் சட்டமும் சமூகமும் வழங்கும் ஒரு உரிமம் மட்டும் தானா இது? காமம் மட்டுமே காரணமெனில் அதற்கு இப்படி ஒரு ஒப்பந்தம் எதற்கு? தளையெதுவும் இன்றி இருந்துவிட்டுப் போகலாமே என்று சில பரீட்சார்த்த முறைகளும் எழுகின்றன. பிரியம் இருக்கும் வரை சேர்ந்திருப்போம். வேறுபாடு வளர்கிறதா? அவரவர் வழியில் சென்று விடுவோம் என்னும் முறைகளும் அங்கங்கே, குறிப்பாக மேற்கு நாடுகளில் நிலவி வருவதைக் காணலாம்.
நிச்சயமாகக் காமமும் ஆண்-பெண் உறவில் ஒரு அங்கம் என்றாலும், மணவாழ்வென்பது அதற்கான உரிமம் மட்டுமே என்பதை ஏற்க இயலாது. அன்பும் பிரியமும் அதன்வழியே கிளைக்கும் நட்பும் காதலுமாகி ஒருவருக்கொருவர் துணையாகி வாழ ஒரு அமைப்பை ஏற்படுத்தித் தருகிறது மணவாழ்வு. இது ஒரு வணிக ஒப்பந்தம் போன்று ஒட்டுதல் இன்றி இருக்க முடியாது. திருமண ஒப்பந்தமின்றிப் பிரியம் இருக்கும் வரை சேர்ந்திருப்போம் என்றிருப்போர் கூட நாளடைவில் தமக்குள் உருவாகும் ஒட்டுதலின் காரணமாக மணம் செய்து தங்கள் வாழ்வை உறுதிப்படுத்திக் கொள்வதையும் பார்க்கலாம்.
தம்பதியர் தம் அன்பு கலந்து வளர்த்தெடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான சூழலையும் உருவாக்கித் தருவதும் மணவாழ்வின் இன்றியமையாத பங்காகிறது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகமாகத் தேவையான கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதோடு, காலத்தில் நட்பும் அன்பும் கலந்த நல்லதொரு உறவாகப் பரிமளிக்கிறது.
எனினும் எல்லாத் திருமணங்களும் நல்லதொரு சூழலை ஏற்படுத்தித் தருகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கும் அந்த மணவாழ்வில் ஈடுபடுவோரின் நிறைகுறைகள், அவர்களின் சூழல் போன்றவை காரணமாக இருக்கலாம். திருமணம் என்கிற அந்த உறவையே குறை சொல்வதென்பது சரியாகாது.
பெரும்பாலும் முந்தைக் காலத்தில், ஆணோ பெண்ணோ தன் இணை என்ன செய்தாலும் பொறுத்துப் போக வேண்டும் என்று (திருமணத்தின் புனிதத்தைக் காக்க) வாழ்நாள் பூராவும் நிம்மதியின்றியே மணவாழ்வில் சிறைப்பட்டிருந்தது ஒருவகைத் தவறு என்றால், இப்போது அதன் மறு எல்லையில் புரிந்துணர்வையும் பொறுமையையும் கைக்கொள்ளாது நினைத்தவுடன் தம் விவாகத்தை முறித்துக் கொண்டு சென்று விடும் அமைதியற்ற நிலையும் ஒரு தவறு தான். இவ்விரண்டு அதிநிலைகளுக்கும் இடையே சமன்பட்ட நிலை ஒன்று இருக்கும்.
வீட்டில் பெற்றோர்களால் நன்கு பார்த்து ஆய்ந்து நிச்சயிக்கப் படுகிற திருமணங்களாய் இருந்தாலும் சரி, தாமே சந்தித்துக் காதலித்துக் கைப்பிடித்த திருமணங்களாய் இருந்தாலும் சரி, மண வாழ்வில் பல சவால்களைச் சந்திக்க நேர்வது இயற்கை. இந்தச் சவால்கள் வெளிச்சூழலால், சூழ்ந்திருக்கும் உறவு முதலியவற்றாலும் ஏற்படலாம். அல்லது உட்காரணங்களால் அவரவரின் கொள்கை, சிந்தனை இவை காரணமாகவும் இருக்கலாம். இவை இல்லாத நல்லியல் திருமணங்கள் (ideal marriages) இருக்காது என்று சொல்ல முடியாவிட்டாலும், மிகவும் அபூர்வம் என்று கூறலாம். மணவாழ்வின் முக்கியம் கருதி இவற்றினூடாக, பிரச்சினைகளைச் சமாளித்துக் கொண்டும் பேசித் தீர்த்துக் கொண்டும் இருக்க முடியும். அதே சமயம் மணவாழ்க்கை என்பது உச்சாணிக் கொம்பில் தூக்கி வைக்க வேண்டிய ஒரு புனித நிலையும் அல்ல. தீராத பிரச்சினைகளும் உடல்/உயிருக்குத் தீங்கு நேரும் வன்முறைகளும் இருக்குமிடத்துத் தூக்கி எறிந்துவிட்டுத் தனித்தே வாழ்வதும் ஏற்றுக் கொள்ளப் படவேண்டிய ஒன்றே.
இருவருடைய சுயங்களும் காயப்படாத வரையில், எவ்வித வன்முறையும் இல்லாத வரையில், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும் அவரவர் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் நல்ல நட்பின் அடிப்படையில் நீண்ட காலத் துணையாக வாழ்வதற்கோர் வாய்ப்பாக அமைந்திருக்கும் மணவாழ்வை உறுதியாகப் பற்றிக் கொள்ளலாம். அப்போது இந்த ஆயிரங்காலத்துப் பயிர் பல்லாயிரங்காலத்துப் பயிராகச் செழித்து நிற்கும்.
என்னமோ போங்க…ஒரே கன்பூசன் 🙂
திருமண பந்தத்தில் எப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் வாழலாம்ன்னு சொல்லியிருக்கீங்க. அப்படி ஒரு idealized context எல்லாருக்கும் ஏற்பட்டு விடுவதில்லை என்பதுதான் இன்றைய நிலை. ஒரு சில வருடங்களிலேயே ஒருவருக்கொருவர் துளியும் ஒன்றுபட முடியாமல் போய் விட வாய்ப்பிருக்கிறது (irreconcilable differences). அப்படி ஏற்படும் போது, அதைப் பொறுத்துக் கொண்டு ஆயுள் தண்டனை மாதிரி அதை அனுபவிப்பவர்கள் பலர். பொறுக்க முடியாமல் விவாக ரத்து கோருபவர்கள் சிலர் (இப்பொது இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது). இரு வகையினருக்குமே திருமணம் என்ற நிகழ்வு ஒரு சொல்ல முடியாத துயரத்தையே தருது. விவாக ரத்து செய்து கொள்ளும் துணிவும் பலருக்கு, குறிப்பா பெண்களுக்கு ஏற்படுவதில்லை (அதன் பிறகு அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சத்தால்). அதனாலயே கட்டாய நீடிப்பு மேற்கொள்ளப்படுது.
ஒரு வேலை பிடிக்கலைன்னா விட்டுட்டு வேற வேலை தேடற மாதிரி, அவ்வளவு எளிமையா தன்னோட வாழ்க்கையை அமைச்சிக்க முடிவது ஒவ்வொரு தனிநபரின் உரிமையும் ஆகும். அந்த உரிமை இப்பொ இருக்கிற சந்ததி வரை மறுக்கப்பட்டே வந்திருக்கு. இனி வரும் சந்திதியினருக்காவது இந்த உரிமை கிடைக்கணும்.
என்னமோ போங்க…ஒரே கன்பூசன்
Prakash, you are getting married soon, thats why all this
confusion :). Once you are married there will be absolute
clarity :).
பிரகாஷ், அனாமிகன் சொன்ன மாதிரியும் வச்சுக்கலாம். இல்லைன்னா, ஒரு பத்துப் பன்னிரண்டு வருடம் கழிச்சே இன்னும் ஒரே ‘கன்பூசன்’ல இருக்கவங்கல்லாம் இருக்கோம். நீங்க அதுக்குள்ள தெளிஞ்சுக்கலாம்னு பாக்கறீங்களே? நியாயமா ? 🙂
வாய்ஸ், நீங்க சொல்லியிருக்கிற irreconcilable differences இருக்கும்போது, சமரசமும் விட்டுக்கொடுத்தலும் உதவப் போவதில்லை. பிரச்சினை என்னவென்றால், அப்படியான நிலை எது என்று வரையறுப்பதும் தான். அந்நிலைக்குத் தள்ளுவதும் எது என்பதும் பிற கேள்விகள். ஒவ்வாத் திருமணங்களில் வாழ்வை நரகமாக்கிவிடும் ஒரு விலங்காகவும் திருமணம் ஆகிவிடக்கூடாது என்பது உண்மைதான். இருபாலார்க்கும் சுதந்திரம் வேண்டும். ஆனால், இருவராய் மட்டுமின்றிக் குழந்தைகள் என்று அமைந்துவிடும்போது வேறு பல காரணிகளும் கவனிக்கப் படவேண்டியவை. தவிர திருமணம் என்பது என்ன என்பதற்குப் பல கருத்தாக்கங்கள் கலாச்சாரத்தாக்கங்கள் சமூக உள்ளீடுகள் உண்டு என்பதனால் எண்ண வேறுபாடுகள் இருப்பது இயல்பே என்னும் நிதர்சன நிலையையும் எல்லோரும் உணரவேண்டும்.
செல்வராஜ்:
//இருவருடைய சுயங்களும் காயப்படாத வரையில், எவ்வித வன்முறையும் இல்லாத வரையில், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும் அவரவர் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் நல்ல நட்பின் அடிப்படையில் நீண்ட காலத் துணையாக வாழ்வதற்கோர் வாய்ப்பாக அமைந்திருக்கும் மணவாழ்வை உறுதியாகப் பற்றிக் கொள்ளலாம்// இந்த புரிந்துணர்வும் நட்பும் காலப்போக்கில் வளருகிறது. ஆனால் திருமணம் முடிந்த உடனே இந்த புரிந்துணர்வு வரும் என்று எதிர்பார்ப்பது இருபாலாருக்கும் சரி இல்லை. இங்கேதான் பொறுமை தேவையாய் இருக்கிறது.
மேலும் மணவாழ்க்கை தேவையில்லா இடங்களில் குழந்தைகள் நிறைய துன்பம் அனுபவிப்பார்களோ என்ற கவலையும் வருகிறது, போலித்தனமான திருமணத்திலும் இந்த கவலை இருக்கத்தான் செய்கிறது. உங்கள் கட்டுரை வழக்கம் போலவே அருமை.
நன்றி பத்மா. உங்களுடைய மேலதிகக் கருத்துக்களுக்கும்.