ராசா வேசம் கலைஞ்சு போச்சு
Feb 20th, 2008 by இரா. செல்வராசு
பட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு தோணுனாலும், காசு பணத்துல சூதானமா இருக்கக் கத்துக்கணும்னு அவங்களுக்கு யாரு சொல்லித் தர்றது?
அவங்க வளர்ற இந்த அமெரிக்க மண்ணோட அரசாங்கம் நிச்சயமா அதுக்கு உதவப் போறதில்ல. போன வாரஞ் செய்தி கேட்டுருப்பீங்க. என்னமோ நூத்தியம்பது பில்லியன் கணக்குல மக்களுக்கு வரிப்பணத்தத் திருப்பித் தரப்போறாங்களாம். எதுக்குன்னு கேக்கறீங்களா? பொருளாதாரஞ் சரியில்ல. போயி செலவு பண்ணுங்க அய்யா/அம்மான்னு கொஞ்சம் போட்டுக் குடுக்குறாங்க! வரவுக்குள்ள செலவு பண்ணு, முடிஞ்சதச் சேத்து வைய்யுன்னு அறிவு சொல்றத விட்டுப்புட்டு வரவப் பத்தி எதும் பேசாம, கவலப் படாம, சும்மா செலவு பண்ணு செலவு பண்ணுன்னு அவங்கதான் சொல்றாங்கன்னா, இந்த மக்களுக்கும் புத்தி எந்தூருக்குப் போச்சுன்னு தெரியல்ல!
நான் வளந்த காலத்துல எங்காத்தாவும் (அம்மாயி) எனக்கு இப்படிக் கொஞ்சம் கதைங்க சொன்னதுண்டு. கிராமத்துல வெவசாயம் பாத்துக்கிட்டிருந்தவங்க மழையே இல்லைன்னு வெவசாயம் படுத்துக்குட்டப்போ, சில நாளு மூணு வேள சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமக் கஷ்டப்பட்ட கதையையும், நெல்லஞ்சோத்துக்கெல்லாம் வழியில்லைன்னு களி கம்மஞ்சோறு சோளச்சோறுன்னும் சாப்பிட்ட கதையும் சொல்லி இருக்காங்க. அவங்களும் இப்போ என்னை மாதிரி தான் – எதுக்குப் பழங்கதைன்னு அடிக்கடி சொன்னதில்லை. ஆனாலும் பச்ச மண்ணு பாருங்க, மனசுல நல்லா ஒட்டிக்குச்சு.
எனக்குக் கெடச்ச அந்தப் பாடத்த நான் எம்பொண்ணுங்களுக்கும் சொல்லணும்னு ஆசை. வேற ஒண்ணுமில்லீங்க. இன்னிக்கு வசதியா இருக்க முடியுதுன்னாலும், நாம வந்த வழிய மறக்கக்கூடாதுங்கறது ஒண்ணு. நம்மளப் போல இல்லாம இன்னும் வசதிக்குறைவா எத்தனையோ பேர் இருக்காங்கங்கறத ஞாபகத்துல வச்சுக்கரது ஒண்ணு. நேரடியா அதுக்கெல்லாம் முழுசா உதவ முடியாட்டியும், கொறஞ்சபட்சம் அந்த நெலைய எல்லாம் மனசுக்குள்ளயாவது நெனச்சுப் பாக்கணும்னு நான் நெனைக்கிறேன்.
* * * *
இந்த ஊர்ல கொஞ்சம் வேற மாதிரியாத் தான் வேல செய்யுது. ஒரு மாதிரி புரியவுஞ் செய்யுது. நாம செலவு பண்ணி எதையாச்சும் வாங்குனோம்னா, அதை வித்தவனுக்குக் கொஞ்சம் லாபம். அந்த லாபத்துல அவன் செலவு செய்வான். வேலைக்கு ரெண்டாளு வப்பான். அவங்களுக்குச் சம்பளம் கெடைக்கும். சம்பளம் ஒயரும். அப்புறம் அவங்க செலவு செய்வாங்க… இப்படியே எல்லாரும் நல்லா இருக்கலாம்.
இதுல முக்கியமான ஒண்ண மறந்துட்டாங்களா இல்ல இவங்களுக்குத் தெரியாமப் போச்சான்னு தெரியல்ல. செலவு செய்யறதெல்லாம் சரிதான். ஆனா இருக்கறதுல இருந்து செலவு செய்யணும்னு யாரும் சொல்லாம உட்டுட்டாங்க. அத விட மோசம், இல்லாட்டியும் பரவால்ல, கடன வாங்கிச் செலவு பண்ணுங்க, எவ்வளவு வேணும் சொல்லுங்க நான் தர்றேன் நான் தர்றேன்னு போட்டி போட்டுக்குட்டுக் குடுத்தாங்க. மாசா மாசம் சும்மா ஒரு பேச்சுக்குக் கொஞ்சத்த மட்டும் திருப்பிக் கட்டுங்க. மிச்சத்துக்கு வட்டி போட்டு, வட்டிக்கு குட்டி போட்டுக் கணக்குல வச்சுக்கலாம், மெதுவாக் கட்டுங்கன்னு கண்ணக் கட்டி உட்டுட்டாங்க. சரி, கடன் அட்டை தான் இருக்குதுல்ல, சும்மா தேயற வரைக்கும் தேய்ச்சுப் போடு கண்ணுன்னு இவங்களும் கண்ணுமண்ணு பாக்காமச் செலவு செஞ்சுடறாங்க.
கடன்ங்கறதே கெட்ட வார்த்தைன்னு நான் சொல்லலீங்க. அப்புறம் செலவே பண்ணாமக் கஞ்சத்தனம் பண்ணனும்னும் நான் சொல்ல வரல. முக்கியமான விசயத்துக்குச் செலவு பண்ணுங்க. இருக்கறதுல செலவு பண்ணுங்க. சிலதுக்கெல்லாம் கடன வாங்கிக் கூடச் செலவு பண்ணலாம். ஆனா அது எதெதுக்குன்னு ஒரு மொறை இருக்குதுல்லீங்களா! ஒவ்வொருத்துருக்கும் இதுல கொஞ்சம் வேறுபாடு இருக்குந்தான். இருந்தாலும் பொதுவாச் சொன்னா, ஒரு தொழில் பண்றதுக்கோ, கடகண்ணி வக்கிறதுக்கோ, படிப்புக்கோ, இல்ல வீடு கீடு கட்டறதுக்கோ, பின்னால வருமானம் வர்ற மாதிரியான ஒரு மொதலீட்டுக்கோ இப்படியான விசயத்துக்குக் கடன் வாங்கலாம் தான்.
‘நமக்குன்னு ஒரு கூரை’ அப்படீன்னு சொந்தமா வீடு வாங்கறது இங்க அமெரிக்காவுல எல்லாத்துக்கும் ஒரு கனவு மாதிரின்னு சொல்லுவாங்க. அதுக்கு முப்பது வருசக் கடன்னு எல்லாரும் வாங்கறது சகசம் தான். திருப்பிக் கட்டறதுல அசலும் வட்டியும் சேந்த தவணையா மாசம் இவ்வளவுன்னு கணக்குப் போட்டுச் சொல்லிருவாங்க. மொதல்ல எல்லாம் ஒவ்வொருத்தர் நெலமையையும் பாத்து இவருக்கு மாசம் இவ்வளவு தொகையக் கட்டர வசதி இருக்கான்னு பாத்துத் தான் கடன் குடுப்பாங்க. அதிலயும், வீட்டு வெல நூறு ரூவாய்ன்னா, நீ இருவது ரூவா போடு, மிச்சம் எம்பது ரூவாய நான் கடனாக் குடுக்குறேன்னு கண்டிசனெல்லாம் போடுவாங்க.
இங்க தாங்க பிரச்சனை ஆரம்பிச்சுது. மக்கள் செலவு செஞ்சுக்கிட்டே இருந்தாத் தானே இங்க பொருளாதாரம் பெருகும். வீடு வாங்கிக்கிட்டே இருக்கறதும் முக்கியமாகுதே. வாங்க முடியாதவங்களுக்கு என்ன பண்றது? சரிப்பா, நீ இருவது ரூவா தரவேண்டாம். பத்து ரூவா குடு. நான் எம்பது ரூவாய்க்கு ஒரு கடனும், மிச்சம் பத்துக்கு இன்னொரு கடனுமாத் தர்றேன். என்ன? அந்த ரெண்டாவது கடனுக்கு வட்டி கொஞ்சம் அதிகம் கட்டணும். அவ்வளவு தான். அப்படீன்னாங்க. கொஞ்ச நாளுப் போயி, சரி உடு, எம்பது ரூவாய்க்கு மொதக் கடனும், மிச்சம் இருவது ரூவாய்க்கு ரெண்டாவது கடனும் தரேன்னாங்க. நயா பைசாக் கையில இல்லாம வீடு வாங்கிரலாம். அப்புறம் கொஞ்சம் நாளு போயி, நூறு ரூவாய்க்குப் பதிலா, பத்து ரூவா சேத்தி நூத்திப்பத்தாக் கடன் குடுக்குறேன். வீடு வாங்குனாப் போதுமா? அதுக்குக் கொஞ்சம் சோபா, கட்டில், டீவீன்னு சாமான் வாங்கக் காசுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க, வச்சுக்குங்கன்னு சேத்திக் குடுத்தாங்க. வட்டி மட்டும் எச்சாப் போட்டுக்கலாம்னாங்க.
அட, கிறுக்குப் பய புள்ளைக சில பேருக்கு எங்க விசயம் தெரியுது? வட்டியப் பத்தி என்ன சொன்னா என்ன? என்னால மாசம் இவ்வளவு தான் கட்ட முடியும். அதுக்கு என்ன பன்றது சொல்லுன்னு நின்னாங்க. இவ்வளவு தானா விசயம். சரி ஒண்ணு பண்ணலாம். முப்பது வருசக் கடன், ஒரே வட்டிக்கணக்குன்னு இல்லாம, மொத அஞ்சு வருசம் வட்டியக் கொறச்சுக்கலாம். அப்புறம் வருசா வருசம் சந்தையப் பொருத்து வட்டி மாறும்னாங்க. இப்பத்திக்கு மாசத் தவணை கட்ட முடியுதா, சரி சரின்னு பூம்பூம் மாடு மாதிரி தலய ஆட்டிட்டுக் காட்டுன எடத்துல கையெழுத்தப் போட்டுட்டுச் சொந்த வீட்டுக்குக் குடிபோயிட்டாங்க கடங்கார மகராசனுங்க. அஞ்சு வருசத்துல வட்டி ரெட்டிப்பாகும்ங்கறதப் பத்தி எல்லாம் அப்புறம் கவலப் பட்டுக்கலாம். இப்போதைக்கு இன்னும் ரெண்டு கடனட்டை வாங்கித் தேச்சு வாங்கிப்போட்ட வீட்டுக்கு அழகுச் சாமான் வாங்கி அடுக்கலாம்னு யோசிக்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருந்துச்சு.
இதுக்கெல்லாம் நடுவுல பெரியண்ணன் ஒருத்தரு இருக்காரு. மத்தியில வங்கி வச்சுக்கிட்டு, வட்டிக்கணக்குல ஏத்தம் இறக்கம் பண்ணிக்கிட்டுப் பொருளாதாரத்த நாம அசச்சுப் புடலாம்னு அவரு அங்க உக்காந்துக்கிட்டு பலூன் ஊதி விளையாடிக்கிட்டு இருப்பாரு. அதோட, வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகைன்னு அரசாங்கம் சொல்றதுனால, ஒரு ரூவாய்க்கு முப்பது பைசா திரும்பி வருதே அதனால பெரிய கடனா வாங்கி அதிக நாள் வச்சிருந்தா நிறைய வரிச்சலுகை கெடைக்கும்னு மயங்குவாங்க. ஏங்க, அதையே கொஞ்சம் சீக்கிரம் கட்டி முடிச்சிட்டீங்கன்னா ஒரு ரூவாய்க்கு ஒரு ரூவாய் உங்க கைல இருக்குமேன்னு சொல்லிப் பாருங்க. பாதிப் பேருக்குப் புரியாது!
வட்டிக் விகிதம் கொறயரப்போ, மாசத் தவணை கொறையும். அதனால, ஏனுங்க நீங்க கொஞ்சம் பெரிய வீடாப் பாருங்களேன்னாங்க. விக்கரவனுக்கென்ன? பெரிசா வித்தா பெரிய லாபம். கடன் குடுக்குறவனுக்கென்ன? பெரிய கடன்னா நெறயா கமிசன். வாங்கறவனுக்குல்ல அறிவு வேல செஞ்சிருக்கணும்? அளவுக்கு மிஞ்சி வாங்கிப் போடுவாங்க.
சில பேரு இதையே ஒரு தொழிலாப் பண்ணிரலாமேன்னு தெரிஞ்சே பெருசா வாங்கினாங்க. கொஞ்ச நாள் இருந்துட்டு நல்ல லாபத்துக்கு வித்துடலாம்னு கணக்குப் போட்டு வாங்குனாங்க. சிக்கலான விசயம்னாலும் கொஞ்ச நாளைக்கு நல்லா வேல செஞ்சுது. அதுல பாருங்க. இது கொஞ்சம் சூதாட்டமாட்டப் போயிருச்சு. வெலை ஏறிக்கிட்டே இருந்தாச் சரி தான். திடீர்னு வெல கொறஞ்சுட்டுதுன்னா மொதலுக்கே மோசமாயிடுங்களே!
இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, நீங்க நூறு ரூவாய்க்கு வாங்குன வீடு சந்தைல ஒரு வருசத்துல நூத்திப்பத்து ரூவாய்க்குப் போற மாதிரி இருக்கும். அதனால, அந்த மதிப்புக்கு ஈடா இன்னும் கொஞ்சம் கடன் தர்றோம். எதுக்கு வேணாப் பயன்படுத்திக்கோங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு வீட்ட வாங்கீருப்பீங்க. போய் ஜாலியா ஒரு சுற்றுலா போயிட்டு வாங்க. நல்லா செலவு பண்ணுங்க (அப்பத்தான பொருளாதாரமும் நல்லா இருக்கும்!), பணத்தப் பத்திக் கவலப் படாதீங்க. உங்க வீட்டு மதிப்பு மேல கடன் தர்றோம்னாங்க. ஏங்க அடுத்த மாசம் வெல கொறஞ்சு போச்சுன்னா என்ன பண்றதுன்னு கேள்வி கேக்காம, மந்திரிச்சுட்ட பொம்மைங்க மாதிரி அவங்க சொன்னதக் கேட்டுச் செலவு செஞ்சாச்சு. கடசியில என்ன ஆச்சு?
வீட்டு வெல கொறஞ்சு போச்சு டும் டும் டும்…
வட்டிக்கணக்கு ஏறிப்போச்சு டும் டும் டும்…
டாலர் மதிப்பு கொறஞ்சு போச்சு டும் டும் டும்…
வேல எல்லாம் வெளிய போச்சு டும் டும் டும்…
இப்போ கடன் வாங்குனவனுக்கு மட்டுமில்லாமக் கொடுத்தவனுக்கும் மொட்டத் தலைக்கு முக்காட்டுத் துண்டு தான் கெடச்சுது. கட்ட முடியாதவன் என்ன பண்ணுவான்? வீட்ட வச்சுக்க ஆள உடுன்னு போறான். இப்படியே நெறயா வீட்டு நெலமை ஆகிப் போயி அதுனால வீட்டு வெல கொறஞ்சு போச்சு. மதிப்பு மேல கடன் வாங்குனவன் வாங்குனதக் கட்ட முடியல்லே. கடன் கொடுத்த வங்கிக்காரன் இதையெல்லாம் இழப்பாக் கணக்கு காட்ட வேண்டியிருக்கு. அவங்க லாபத்த அது பாதிக்கிறதுனால பங்குச் சந்தை கொறயுது. அப்படியே ஒரு தொடர் சங்கிலியாட்டம் பாதிப்புக் கதை தொடருது. எங்கயோ தேளு கொட்டி எல்லா எடத்துலயும் நெறி கட்டிக்குச்சு.
ஒரு சுழல்லே மேல மேல போற ஒண்ணு, அதே மாதிரி சுழல்ல கீழ கீழ போறதுக்கும் வாய்ப்பிருக்குன்னு இத வச்சுத் தெரிஞ்சுக்கலாம்.
எல்லாத்தையும் சரி செய்யறதுக்கு என்ன பண்ணனும்னு யோசிச்ச அண்ணன்மாருங்க நூத்தியம்பது பில்லியன் டாலரு மக்களுக்குத் தராங்களாம். செலவு செய்யக் காசிருந்தா போதும், சொர்க்கம் தான்னு சொல்றாங்க. இவங்கள நம்புனா வேலைக்காவாது. எதுக்கும், நீங்க முட்டக் கட மொதலாளியாவே இருந்திருந்தாலும், எப்படி ஒடஞ்ச முட்டை சாப்பிட்டு வளந்தீங்கன்னு ஒரு கதையையாச்சும் உங்க கண்மணிங்களுக்குச் சொல்லிக் குடுங்க.
sub prime சிக்கலை நல்லாவே விளக்கியிருக்கீங்க. இந்தச் சிக்கல்லே ஒரு பாதி இந்தியாவிலேயும் நடந்துக்கிட்டிருக்கு.
பொருளாதார நுணுக்கம் பத்தியெல்லாம் தமிழ் வலைப்பதிவுலே யாருங்க பேசுறா? ரொம்பக் குறைச்ச ஆளுக தான் இருக்காக.
நமக்குத் திகட்டுற அளவுக்கு கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் பேசவே பொழுது பத்தலை. இன்னம் பத்து serial பார்ப்பம் வாங்க! 🙂
அன்புடன்,
இராம.கி.
Very Nice post makes one to think about the exoenses Vs. Income.
ஒரு நாட்டோட பொருளாதார சிக்கல இவ்ளோ எளிமையா சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்குங்க. இப்ப நம்ம நாட்டுலயும் அப்டிதானுங்களே நடக்குது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருசத்துல வங்கி கடன வாங்கி வீட்ட வாங்கிய போடறாங்க. ஆனா இதையே கொஞ்சம் பணம் சேர்த்து சொந்தமா வாங்கற பொறுமை இல்ல யார்கிட்டயும்.
எல்லாருக்கும் புரியும் வண்ணம் நல்லா எழுதியிருக்கீங்க..
பாராட்டுக்கள்..
அன்புடன்,
சீமாச்சு
இதே மாதிரி சிங்கையில் வீடு வாங்கி நான் வாங்கிய “அடியை” அழாம சொல்லியிருக்கேன்.
இங்கே!!
படிச்சி சிரிங்க..
நல்லா எழுதியிருக்கீங்க..
அந்த முட்டக் கதைச் சுட்டியயைப் போட்டு விடுங்க..நான் இன்னும் படிக்கலை… 🙂
நல்லா சொல்லிருக்கிறீங்க! இங்க அந்த அளவுக்கு இல்லினாலும் 5000 ரூவா சம்பாரிக்கறவன் கையில 10000 ரூவா கைபேசி,
எங்க போயி முடியப்போகுதோ!
நல்லா சொல்லியிருக்கீங்க செல்வராஜ்!
ஆனாலும் மக்கள்ஸ் இத்தனை முட்டாளாக இருப்பார்கள் என்று சொல்வதற்க்கில்லை. கிடைக்கும்வரை அனுபவித்துவிட்டு வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் வீட்டை ஃபோர்க்ளோஸ் செய்துவிடும் எண்ணத்தில்தான் பலரும் ஜம்போ கடன்களை வாங்கிக்குவித்தார்கள் என்று நினைக்கிறேன். ஜார்ஜியா போன்ற மாநிலங்களில் பலரும் அரசாங்க உதவிகிட்டும் என்ற எண்ணத்திலேயே வீடுகளை வாங்கிக்குவித்திருக்கிறார்கள். வீட்டை வாங்கி சுற்றுலா செல்ல பணமும் கொடுத்தால் யாருக்கு கசக்கும். மேலும் குறைந்த வட்டிக்கு ஹோம் இக்விட்டி கடன் வாங்கி அதை மற்ற இடங்களில் முதலீடு செய்தவர்களையும் நான் அறிந்திருக்கிறேன்.
பல அப்பாவிகள் இதில் மாட்டிக்கொண்டாலும், லாபம் பார்த்தவர்கள் விலகிவிட்டார்கள் என்பதே உண்மை. அவர்கள் பலரும் ஏஜண்ட்களின் ஏமாற்று வார்த்தைகளை நம்பியவர்கள்தாம். அவர்களில் பெரும்பாலானோர் குடிபெயர்ந்த மெக்ஸிகன் / கறுப்பினத்தவர்களே என்பது இன்னும் சோகம்.
சப்-ப்ரைம் பிரச்சனையின் வாடிக்கையாளரின் பார்வையை மட்டுமே விளக்கியிருக்கிறீர்கள். வங்கிகளின் ஏமாற்று வேலைகளும், CDO ஒருங்கிணைப்புகளும் அதன் மற்ற கோரமுகத்தை வெளிப்படுத்தலாம்.
இதே நிலைமை இந்தியாவுல ஆரம்பிச்சு 3-4 வருஷம் ஆச்சு. சிதம்பரம் ஏற்கனவே வங்கிகளுக்கு ஒரு எச்சரிக்கை குடுத்ததும் ஞாபகத்துக்கு இருக்கு. நல்ல தகவல்/விளக்கம் செல்வா
நன்றி இளா. இங்க நடக்கறத வச்சாவது இந்தியாவுல கவனமா இருக்கணும்.
டைனோ வாங்க. நீங்கள் சொல்வது போல, இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானார் பொருள்நிலையில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களே. போதிய விழிப்புணர்ச்சி இல்லாமலும் இருந்திருக்கலாம். அந்த வகையில் அமெரிக்கா ஒரு முன்னேறாத நாடு தான்!
பாராட்டிச் சொன்ன மற்ற நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
அனு, வீடு போன்ற பெரிய முதலீடு தேவைப்படுபவற்றிற்குக் கடன் வாங்குவது பெருந்தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எவ்வளவு பெரிய கடன், தேவைக்கு மேல் பெரிய வீடு, கடன் தவணை தவறாமல் கட்டும் சக்தி போன்றவற்றைக் கவனத்தில் வைக்காமல், ஆழம் தெரியாமல் காலை வைப்பது தான் ஆட்சேபத்திற்குரியது.
இராம.கி அய்யா, குறைந்தபட்சம் என்னால் முடிந்த போது பயனுள்ளவற்றை எழுத முனைகிறேன். சுயமாய்க் கதை, கவிதை முயற்சிகள் கூடப் பரவாயில்லை தான். அதையும் விட வெறும் பரபரப்புக்கும் வெட்டி அரட்டைக்கும் நேரம்/மனிதவளம் கணக்கில்லாமல் செலவாவது தான் குறை (அதையும் கூட ஒரு அளவிற்கு ஒத்துக் கொள்ளலாம் என்றாலும்)
ஒரேயடியாக சேமிப்பு மட்டுமே செய்வதும் உசிதமில்லை. போகிறவன் வருபவன் எல்லாம் கடன் கேட்டு தொல்லை செய்வான். இது பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_09.html
சிக்கனமாக இருப்பதிலும் புத்திசாலித்தனமாக இயங்க வேண்டும். இது பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2006/11/blog-post_12.html
நீங்கள் சொன்ன உடைந்த முட்டை கதைகள் ரொம்ப முக்கியமானவை. உங்கள் குழந்தைகளுக்கு அதை சொல்லி அவர்களுக்கு நல்லது செய்துள்ளீர்கள். இம்மாதிரியான அனுபவங்களை பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2006/01/blog-post_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லா எழுதி இருக்கீங்க.. குழந்தைகளுக்கு சொல்லும் போதே அது இன்னோர் தடவை நமக்கும் சொல்லிக்கற மாதிரி தான் … கவனம் கவனம்ன்னு…
Nicely writen Post in kongu Thamizh :)..I just felt like speaking to some one in my neighborhood in Tiruppur.
Coming to the issue ,
No matter what kind of crisis the American economy might drive the world into, the trading unit will still be the Dollar.. because..it is not merely economics that drives the world, but political economy. America’s military economic complex is far far superior to anything that is or was in the world for ages and centuries. So, whenever there is recession or fear of a crisis, the Americans will divert their problems or try to do that.They will use methods such as what is called, Military-Keynesianism..(i.e. jump start their economy by triggering a boom in the construction industry or the steel industry through military demand).. which means.. obviously that more wars will be the order..
They will also shift the burden rather than tackle it.. so if it means that they are running on a super huge deficit, they will simply lease out their owning to the developing world (India/ China) through bonds and loans…And they have no obligation to pay out their debt.. I mean..who is going to ask the US to pay their debt ? When they themselves are the monitors of the world?
People don’t understand or do not want to understand this simple fact which is termed as imperialism, but that is the reality. The planet faces extreme poverty on one end and super-duper-exuper-profit lavish riches on the other end. No matter what the economic turn is..this extreme poverty on one end will continue while the extreme riches on the other end will also endure. Only a break in the mode of production will bring any change to this drudgery.
ஏனுங்கோ , இன்னொரு எச்சா சேதி பெடரல் ரிசர்வு தனியாருதாமே? அப்படி இப்படின்னு நாலஞ்சு குடும்பங்கதான் பெடரல் ரிசர்வா இருக்குமோன்னு பேசிக்கிட்டுருந்தோம். :-))
சுத்தமா புரியாம இருந்த விஷயம் ஏதோ உங்க புண்ணியத்தில கொஞ்சூண்டு புரிஞ்சிருக்கு.
நன்றி
கார்த்திக்ராமாஸ் – என்ன இவ்வளவு லேட்டா வந்து கேட்கறீங்க… “ரான் பால்” வெப் சைட்ல விவரமா எழுதியிருக்காரே!
Creature of the Jekyll Island படிச்சுப்பாருங்க… த்ரில்லர் ஸ்டோரி படிச்ச மாதிரியிருக்கும். Edward Griffin எழுதிய மற்ற கட்டுரைகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிச்சுப்பாருங்க… ராத்திரி தூங்ககூட பயப்படுவீங்க :)).
நல்ல கட்டுரை. எனக்கும் இந்த கடன் ஒவ்வாமை (Loan Alergy) நிறைய இருக்கிறது. நம்ம ஊர் வளர்ப்பு அப்படி. பழைய அமெரிக்க நண்பர் கடன் வாங்க யோசிப்பதைப் பார்த்து சிரிப்பார். அமெரிக்க குடிமகன்களின் சராசரி வங்கி இருப்புத் தொகை $100 மட்டும்தானாம். மீதமெல்லாம் முதலீடாக வைக்கப்படுமாம். பொருளாதாரக் கட்டமைப்பு தரும் வசதிகளை உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனம் என்பார். அது சரி, புத்திசாலித்தனமாய் அதை உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டுமே. 🙂
சத்யராஜ்குமார், நன்றி. நீங்கள் சொல்வது புரிகிறது. அவசியமானவற்றிற்கு (கார், வீடு…) என்பது தவிர வீணான செலவுகளுக்குக் கடன் வாங்குவதற்கு ஒவ்வாமை இருப்பது மிக மிக நல்லதே.
கார்த்திக், க்ளீவ்லாண்டில் இருந்தபோது பெடரல் ரிசர்வ் வங்கி பற்றிப் படித்து எழுதலாம் என்று ஒருமுறை யோசித்திருந்தேன் (அங்கு ஒரு கிளை உள்ளது). ஆனால் செய்யவில்லை. நீங்கள் என்ன இப்படிக் குழப்புகிறீர்கள், – ‘ஃபெட்’ என்பது அரசினைச் சார்த்த ஆனால் தனிச்சுதந்திரம் உள்ள அமைப்பு என்று தானே நீங்கள் சுட்டிய கட்டுரையிலும் போட்டிருக்கிறார்கள். தனியாருடையது என்று இல்லையே – சரியாய்ப் படித்தீர்களா என்று கேட்க எண்ணினேன். அதற்குள் டைனோ வேறு விவகாரமாய் ஏதோ சொல்கிறார். எனக்குத் தான் ஒன்றும் தெரியவில்லையோ என்று எண்ணுகிறேன். டைனோ, Ed Griffin புத்தகத்தை மேலோட்டமான விமர்சனம் படித்தேன். ஆவலைத் தூண்டுகிறது. எடுத்துப் படிக்க முயல்கிறேன்.
தருமி – இது கொஞ்சம் தான், கதை இன்னும் பெரிது, முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்று எண்ணுகிறார்கள். அதோடு முன்னொரு கருத்தில் டைனோ சொன்னது போல் பாதிப்பு என்னவோ கருப்பர் இனத்தவருக்கும், லத்தீனோ மக்களுக்கும் தான் அதிகம் என்று சொல்கிறார்கள்.
முத்துலட்சுமி – குழந்தைகளுக்குச் சொல்வது நமக்கும் சேர்த்துச் சொல்லிக் கொள்வது போன்றது என்பது உண்மை தான். இன்று தான் வேறொரு விசயமாகச் ‘செய்வன திருந்தச் செய்’ என்று அறிவுரை சொல்லி எனக்கு நினைவுறுத்திக் கொண்டேன் 🙂
டோண்டுராகவன், உங்களுக்கும் நன்றி. நீங்கள் சுட்டிய இடுகைகளின் சாரமும் நன்றே.
கோபாலன் ராமசுப்பு – வேறொரு கோணத்தில் சில சுவாரசியமான கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள். டாலர் தான் உலகப் பொது நாணயமாக இருந்தது என்பது உண்மை தான். ஆனால், அது அப்படியே நிலைத்திருக்கிறதா? நிலைத்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. சிறிது காலமாய், கரட்டுநெய் (க்ரூடு ஆயில்) வியாபாரத்திற்கு டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றலாம் என்று பேச்சு அடிபடுகிறதே. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே (மைக்கேல் மூர் படத்திலா பார்த்தேன் – நினைவில்லை). இந்தக் கருத்தும் நீங்கள் சொல்வதைத் தான் வலியுறுத்துகிறதோ? டாலருக்கு ஆபத்து நேர்கையில் புகையெழுப்பிப் போர்தொடுக்கப் புறப்பட்டுவிடுவார்களோ? ஆட்சிமாற்றம் ஏதேனும் மாறுதலைத் தருமா என்றும் தெரியவில்லை… உங்கள் பாராட்டிற்கு நன்றி.
செல்வராஜ்,
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். அந்த புத்தகத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி தோன்றிய சூழலையும் அதன் தாக்கத்தையும் அருமையாக் வழியுறுத்தியிருக்கிறார். பல அமெரிக்கர்களுக்கே இதைப்பற்றிய அறிவு மிகவும் கம்மி. பெடரல் ரிசர்வ் வங்கி Quasi Govt organization.
Its a Cartel of multiple banks and the Govt. அதன் மெம்பர் வங்கிகளின் பங்கு விபரம் அமெரிக்க ஜனாதிபதிக்குகூட தெரியாத ரகசியம் (due to a law passed in 1984). தட்டச்ச அயற்ச்சியாக உள்ளது. Seach for “Fiat Empire” in google videos and watch that movie (about 1 hour). That movie is based in Ed Griffin’s book.
>>> The word ‘Federal’ in the Federal reserve is as good as the word Federal in FederalExpress<<< Ed Griffin
If you read the book and watch the movie, you will understand why Ron Paul has been suggesting the abolition of the IRS and dissolving the Federal Reserve system. Ron Paul is featured in the movie too 🙂 (this movie was released way before he announced his candidacy for president). I mistyped the name of the book in the previous comment… The book is “The Creature from Jekyll Island : A Second Look at the Federal Reserve”
http://www.amazon.com/Creature-Jekyll-Island-Federal-Reserve/dp/0912986212
Fiat Empire:
http://video.google.com/videoplay?docid=5232639329002339531
It would be a great eye opener if you could write an article (in Tamil) after watching / reading those.
I’ll scavenge through my bookmarks and see if I could find some more links and post it here.
டைனோ, நன்றி. நீங்கள் சொன்ன புத்தகத்தை இன்று மாலை ஏற்கனவே நூலகத்தில் சொல்லிவைத்துவிட்டேன். கிடைத்தவுடன் படிக்கிறேன். பிற சுட்டிகளையும், படங்களையும் பார்க்கவும் ஆவல் உள்ளது. ஆழ இறங்கிப் பார்க்கவேண்டும் போல் உள்ளது. கொஞ்சம் நிதானமாகச் செய்கிறேன். பிற சுட்டிகளையும் கொடுங்கள். நானும் கூகுளில் தேடுகிறேன்.
அருமை.
[…] Comments « ராசா வேசம் கலைஞ்சு போச்சு […]
எல்லோருக்கும் புரியுற மாதிரி நல்லா எழுதிருக்கீங்க…
நல்ல பதிவு. நன்றி.
எனக்கு வரைபடமெல்லாம் எங்கே புரியுது?புரியறதெல்லாம் சூதானமா இருக்கணும்ங்கிற கொங்கு மொழிதான்.
I agree that the kids should know the value of money. Well written and I didn’t know that Fed reserve is a quasi govt org.
Dyno, Thanks for the links. will see it when get a chance.
Selva, My notion was also to point out the normal assumption (I for one) towards the word “FED” is “FEDERAL GOVERNMENT” but in reality the government has very little role in the FED system. If it is for better or worse is different agenda.
நல்ல பதிவு . கொங்கு தமிழில் படிக்க மகிழ்வாக இருந்தது. நன்றி 🙂
[…] ராசா வேசம் கலைஞ்சு போச்சு என்னும் இடுகையில் அமெரிக்க மக்கள் தலைக்கு மேலே வீட்டுக்கடன் வாங்கிய காரணத்தால் சிக்கல் உண்டானது பற்றி எழுதியிருந்தேன். டைனோவும் இன்னும் சிலரும் கடன்கொடுத்தவர்களின் பித்தலாட்டங்கள் பற்றியும் சொல்லச் சொல்லி இருந்தார்கள். வாங்கியவர்களை விடவும் இந்தக் கடன் முறைகளை ஒரு தீர்க்கமான யோசனையின்றி உருவாக்கியவர்கள் செய்தது பெருந்தவறு. இந்தப் பித்தலாட்டங்கள் எப்படிப் பல நிலைகளைத் தாண்டி பெரும் வலையாகப் பின்னிக்கிடக்கின்றன என்பதும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. […]
அருமையான பதிவுங்க.. இத படிசதும் எது தெரிஞ்சுசோ இல்லீயோ, ஆரம்பத்தில எழுதுனதே படிசதும்..என் சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு. எங்கம்மா தோட்டத்துக்கு போயிட்டு வரும்போது, பொன்ன கவுண்டர் தோட்டத்திலிருந்து நாடுக்கோழி முட்ட வாங்கிட்டு வரு.. சாயந்தரம் வீட்டுல எல்லாரு வந்தததும், அந்த முட்டைய ஒடச்சு வாக்கனதிலே ஊத்தி அடுப்புக்குள்ள வச்சு வறுத்து குடுக்கும்… அந்த மனம் சுவை திடம் இப்ப எங்க கெடைக்குது.. இப்ப கோவையில் காந்திபுரம் 5-ஆவது வீதில இருக்கிற ஹரி பவன் ஓட்டல்லே நான் சொன்ன மாதிரி வாக்கனதிலே ஊத்தி ஆம்லேட்டு விக்கறாங்க….அதுக்குபேறு கரண்டி…ஆம்லேட்டு