இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு

February 23rd, 2008 · 4 Comments

முதலில் ‘பரத்தீடு’ சொல்விளக்கம் தந்துவிடலாம். சிலசமயம் சாதாரணமாகப் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குக் கூட ஈடான தமிழ்ச்சொற்கள் தெரியாமல் உறுத்தும். Presentation என்னும் சொல்லை அன்றாடம் பலமுறை பயன்படுத்தினாலும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்று தெரியாமல் இருந்தது. தெரியாத சொற்களுக்கு முதல் முயற்சியாக இராம.கி அவர்களின் பெயரைச் சேர்த்துக் கூகுளில் தேடுவது என் வழக்கம். காட்டாக இன்று தேடியது presentation இராம.கி என்னும் சொற்றொடர். 🙂

வேறு யார் என்ன முன்வைக்கிறார்கள் என்றும் அதன் பிறகு சில அகரமுதலிகளிலும் எப்போதாவது பார்ப்பது உண்டு. Presentationக்குப் பரத்தீடு என்று இராம.கி முன்வைக்கிறார். கிரியாவின் தற்காலத் தமிழகராதியில் பார்த்தபோது ‘பரத்து, பரப்பு’ என்பவற்றிற்கு spread, disseminate போன்ற பொருள் தந்திருந்தார்கள். ஏதோ ஒரு செய்தி, விளக்கம், உள்ளுருமம் பலரையும் சென்று அடையச் செய்யப்படும் பிரசண்டேசன் என்பதற்கு, ‘பரத்து’ என்னும் வினையை வைத்துக் கட்டப்பட்ட பரத்தீடு என்னும் சொல் மிகவும் பொருத்தமானதாகவே பட்டது.

இதனை இங்கு விரிவாகச் சொல்வதன் மூலம் Presentation = பரத்தீடு என்பதை நானும் பரத்துகிறேன். 🙂

* * * *
American Dream

ராசா வேசம் கலைஞ்சு போச்சு என்னும் இடுகையில் அமெரிக்க மக்கள் தலைக்கு மேலே வீட்டுக்கடன் வாங்கிய காரணத்தால் சிக்கல் உண்டானது பற்றி எழுதியிருந்தேன். டைனோவும் இன்னும் சிலரும் கடன்கொடுத்தவர்களின் பித்தலாட்டங்கள் பற்றியும் சொல்லச் சொல்லி இருந்தார்கள். வாங்கியவர்களை விடவும் இந்தக் கடன் முறைகளை ஒரு தீர்க்கமான யோசனையின்றி உருவாக்கியவர்கள் செய்தது பெருந்தவறு. இந்தப் பித்தலாட்டங்கள் எப்படிப் பல நிலைகளைத் தாண்டி பெரும் வலையாகப் பின்னிக்கிடக்கின்றன என்பதும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று.

குறிப்பாக CDO என்னும் Collateralized Debt Options பற்றியும் குறிப்பிட்டு இருந்தனர். இன்று தற்செயலாய் இணையத்தில் இந்தப் படம் கண்ணில் பட்டது. அதைச் சுட்டினால் கூகுள் ஆவணப் பரத்தீடு ஒன்றையும் காணலாம். மிகவும் எளிமையாகவும் வேடிக்கையாகவும் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பரத்தீட்டை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. இணையத்தில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பிடித்து ஒருவர் பதிந்திருந்தார். How SubPrime Really Works.


Sub Prime Mortgage Mess

(மேலே படத்தைச் சுட்டினால் கூகுள் ஆவணப் பரத்தீடு திறக்கும். கீழ் இடது மூலையில் இருக்கும் அம்புக் குறிகள் மூலம் முன்/பின் பக்கங்களுக்குச் செல்லலாம். 45 பக்கங்கள் இருக்கின்றன).

நமது தமிழ் வலைப்பதிவர் புல்லிஷ்தமிழன் என்பவரும் சிலநாள் முன்பு Sub-prime, Mortgage, அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆபத்தா ? என்னும் தன் இடுகையில் இவ்வாறு எழுதுகிறார்:

ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் பலர் இவ்வாறு தான் வீடு வாங்கினார்கள். வங்கிகள் கடன் கொடுத்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வாரி வழங்கின. இப்படி கடன்களை வாரி வழங்கினால் அந்த வங்கிகளுக்கு பணம் வேண்டாமா ? கவலையில்லை. அதற்கும் வழி உண்டு. மார்ட்கேஜ் நிறுவனங்களிடம் இருந்து அவை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிஸ்க (Mortgage Securities) மாற்றம் பெற்று பெரிய நிறுவனங்களிடம் செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDO (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை.

கடந்த வருடம் ஆரம்பம் முதல் ரியல் எஸ்டேட் சரிய தொடங்கியது. எந்த ஒரு முதலீடு இல்லாமலும் பலர் வீடுகளை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் செலுத்துவது எல்லாம் வட்டி மட்டுமே. முதலீடு எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் சரிய தொடங்கியதும் 100,000 டாலர் பெறுமானமுள்ள வீடுகள் 90,000, 80,000 70,000 என சரிய தொடங்கின. இப்பொழுது என்ன செய்யலாம் ? முதலீடாக ஏதாவது பணம் செலுத்தியிருந்தால் அந்த வீட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை இருக்கும். தவணையை தொடர்ந்து செலுத்தி கொண்டு இருப்போம். ஆனால் முதலீடு செய்ய வில்லை. வெறும் வட்டி மட்டும் தான். அதுவும் 7 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் ரீபினான்ஸ் (Re-finance) செய்யும் பொழுது வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கும். பலர் தங்கள் தவணையை நிறுத்திக் கொண்டனர். இது வரை அந்த வீட்டிற்காக கட்டியதை வீட்டு வாடகையாக கூட வைத்துக் கொள்ளலாமே…

இது தான் ஆரம்பம். இதன் விளைவுகள் தான் இன்று அமெரிக்கா எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள். சரியாக தவணை செலுத்தாதவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் சரியாக தவணையை செலுத்தியவர்கள், பணத்தை முதலீடு செய்தவர்களின் நிலை தான் பரிதாபம்.

அமெரிக்க நிறுவனங்கள் இவை வெறும் சப்-பிரைம் என கூறி தப்பித்துக் கொள்கின்றன. உண்மை அதுவல்ல. கடன் வழங்கிய முறை தவறு. அதனை சிடிஓக்களாக (CDO) விற்ற முறை தவறு. அந்த சிடிஓக்களை (CDO) மதிப்பீடு (Valuation) செய்த முறை தவறு. ரிஸ்க் மேனேஜ்மண்டில் (Risk Management) குளறுபடி.

மேற்கண்ட சித்திர வடிவுப் பரத்தீடும், புல்லிஷ்தமிழன் இடுகையின் விவரிப்பும் அடுத்தடுத்துப் பார்க்கும் போது இந்த விவகாரம் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிகிறது. இதன் ஆழம் என்ன? இன்னும் எங்கெங்கு வெடிக்கப் போகிறது? இதில் இருந்து இந்நாடு மீண்டு வருவது எப்படி எப்போது என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Tags: சமூகம் · பொருட்பால்

4 responses so far ↓

 • 1 .:dyno:. // Feb 25, 2008 at 9:28 am

  Presentation = பரத்தீடு அருமையான மொழியாக்கம்.

  CDO பற்றிய பரத்தீடு எளிமையாக உள்ளது. இதில் மற்றொரு கயமைத்தனம் இந்த ரேட்டிங் கம்பெனிகள் செய்த தில்லுமுல்லு.
  CDO என்பதே பல மதிபீடுகள் கொண்ட கடன்களின் உருவாக்கமே.
  S&P and Moody’s அகிய ரேட்டிங் கம்பெனிகள் கடன்களுக்கு AAA to R வரையிலான மதிப்பெண்களை வழங்குகிறார்கள். ஆனால் அவ்வாறு வழங்கப்படும் மதிப்பீடுகள் கணிக்கும் மறையை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இந்த மதிப்பீடுகளின் மூலமே வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் கடன்களின் வட்டி விகிதாச்சாரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. தற்போதிய CDOகளில் ஏற்கனவே AAA வழங்கப்பட்ட பல கடன்கள் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் ஜங்க் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

  இந்த வட்டி விகிதங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைக்கும் தன்மை கொண்டவை ஆனால் தனியாரால் எந்த transaparencyயுமின்றி கணிக்கப்படுகிறது. இந்த transaparency அதிகப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துவருகிறது.

 • 2 Jeyapandian Kottalam // Jul 26, 2015 at 9:35 pm

  சில நல்ல வளங்கள் கூகிள் தேடல்மூலம் கிடைக்கா. காண்க: https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc

 • 3 Jeyapandian Kottalam // Jul 26, 2015 at 9:37 pm

  presentation – தோன்றளித்தல், broadcast – அகற்பரப்பு, antigen presentation – நோயெதிர்ப்பூட்டி தோன்றளித்தல்

 • 4 mohan // May 19, 2018 at 4:44 am

  வீட்டுக்கடன் தேவையா??
  சொத்து ஆவணம் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் ஆலோசனை தருகிறோம். மற்றும் வீட்டுக்கடன் அனைத்தும் பெற்றிட நாங்கள் உதவுகிறோம்.
  வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் எங்கள் இணையதளத்தை பாருங்கள்.. நீங்கள் விடை பெறலாம்.மற்றும் வீட்டுக்கடன் வாங்க என்ன என்ன தகுதி மற்றும் என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதையும் முழுமையாக அளித்துள்ளோம்..நன்றி… http://www.mohanconsultant.com
  Mr.Mohan,8489445466