Feed on
Posts
Comments

ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன்.

வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சிறுவனும் ஒன்பது வயதுச் சிறுமியும் அப்படி என்ன செய்துவிட்டார்கள்? உருவிக் கிடந்த குடலும், உதிரம் சிந்திக் கிடந்த உடலும், பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதிலும் அந்தச் சிறுமி…

Continue Reading »

பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3

வேதியியலுக்கும் வேதிப்பொறியியலுக்கும் சிறிது சம்பந்தம் உண்டு என்றாலும் இரண்டும் வெவ்வேறானவை. இருந்தும் என்னுடைய முழு வரலாறும் அறிந்துமே, “டேய், நீ என்னடா கெமிஸ்டிரி தானே படிச்ச?” என்று பேச்சுவாக்கில் இன்னும் வினவும் என் பள்ளிக் கால நண்பன் போன்றவர்களுக்காக ‘வேதிப்பொறியியல்’ பற்றியொரு எளிய அறிமுகம் இங்கே.

கணியியல், மின்னியல், மின்சாரவியல், எந்திரவியல் போன்ற பொறியியலின் கவர்ச்சிமிகு மற்ற துறைகளைப் போலன்றி வேதிப்பொறியியல் அவ்வளவாகப் பொதுவில் அறியப் படாத ஒன்று. ஏன், கட்டிடவியல் போன்ற அவ்வளவாய்க் கவராத துறைகள் கூட வேதிப்பொறியியலை விட அதிகம் அறியப்படுபவை. இருந்தும் அண்மைய காலங்களில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிச்சூழலில் கட்டிடவியலாளர்களுக்கும் மவுசு அதிகமாகிறது என்று ஒரு சேதி.

A Chemical Plant

பள்ளியிறுதியாண்டு முடித்துக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் பெறும் காலம் வரை எனக்கும் ‘கெமிக்கல் இஞ்சினியரிங்’ பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. எண்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் மொத்தம் ஐந்து கல்லூரிகளில் மட்டுமே வேதிப்பொறியியல் துறை இருந்தது. அவை:
Continue Reading »

“இப்பவே என்ன அவசரம். இப்பத்தான படிச்சு முடிச்சுருக்கேன். ஒரு வருசமாவது ஆகட்…”, என்றவனை இடைமறித்து, “இதோ, இது தான் பொண்ணு” என்றொரு படத்தைக் காட்டினார்கள் வீட்டில். முனைவர் பட்டப் படிப்பு முடிந்து அலுவத்தில் சேரும் முன் மூன்று வார விடுப்பில் வீட்டில் இருந்தேன். படத்தில் பச்சை வண்ணச் சேலை கட்டித் தீர்க்கமாய் என்னைப் பார்த்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே என் பேச்சு பாதியிலேயே அறுந்தது.

“நாளைக்குப் பொண்ணு பாக்க அவங்க வீட்டுக்குப் போறோம்”

“ம்”, என்றேன் பலவீனமாக.

* * * *

“நான் ஸ்வீட் எல்லாம் சாப்பிடறதில்லீங்க” என்றேன். வீட்டின் பரம்பரைச் சொத்தாக இருந்த சர்க்கரை நோயை எதிர்க்க எனது போர் அப்போதே ஆரம்பித்திருந்தது. ‘சக்கரை போடாமக் காப்பி குடிங்க அப்பா’ என்று சொல்லிவிட்டு அதற்கு அழுத்தம் தருவதற்காக, ‘பாருங்க, நானே சக்கரை சேர்த்துக்கறதில்லே’ என்று சொல்வதற்காகச் செய்த முயற்சி சில வருடங்கள் நீடித்திருந்தது அப்போது. ‘பையன் கொஞ்சம் படம் காட்டறாப்புல இருக்கு’ என்று நினைத்திருப்பார்கள்.

“மொத மொதல்ல வந்திருக்கீங்க, கொஞ்சமாவது எடுத்துக்கங்க” என்பதில் இருந்த வலியுறுத்தலுக்காகப் பாதியை எடுத்துக் கொண்டேன். கொண்டு வந்து கொடுத்த அவருடைய பெண்ணைப் பார்த்தபோது ‘ஹலோ’ சொல்லிச் சிரித்தார் மெல்ல. படத்துல கொஞ்சம் வேற மாதிரி இருந்துதோ? ஓ! கொஞ்சம் கோணயா நிக்கிற மாதிரி இருக்கு…

* * * *

“என்னடா பிடிச்சிருக்கா?”

Continue Reading »

ஒரு தமிழ்மீடியப் பையனின் பீட்டர் ஸாங்க்ஸ் அனுபவத்தை விட ஆங்கில மிடையவழி வந்த எனது ஆங்கிலப் பாடல் கேள்விஞானம் மிகவும் குறைவு. சற்றேறக்குறையச் சுழி என்றே சொல்லலாம். அமெரிக்கா வந்தபின் சதா பாட்டுக்களில் திளைத்திருந்த அறைத்தோழர்களும் நண்பர்களும் காரணமாய் அங்கங்கு ஒட்டிக் கொண்ட சில பாடல்களில் இரண்டு மட்டும் குறிப்பிடத் தக்கவை. நினைவில் நிற்பவை. ஒன்று மடோன்னாவின் ‘இது என் விளையாட்டரங்காய் இருந்தது’ (This used to be my playground). இரண்டாவது, பாப் மார்லியின் ரெக்கே பாட்டு என்று இத்தனை நாள் தவறாக எண்ணியிருந்த ‘வருத்தம் விடு, மகிழ்ந்து இரு’ (Dont Worry Be Happy). பாடலை எழுதியவர் – பாப் மெக்ஃபெரின் என்னும் ஜாஸ் இசைக் கலைஞர். ‘கெப்பெல்லா’ என்று அதிக இசைக்கருவிகள் இல்லாது வாய்வழியே பாடி இசையமைக்கும் மரபுடையவர். அண்மையில் யூட்யூப் வழியாய் கிடைத்த ஒளிப்படத்துண்டு உந்தியதில் தமிழாக்கம் செய்ய முயன்றேன்.

ஒரு கதையையோ, கட்டுரையையோ, ஏன் ஒரு கவிதையைக் கூடத் தமிழாக்கம் செய்து விடல் எளிதாக இருக்கலாம். ஒரு பாட்டைப் பெயர்ப்பது என்பது மிகவும் சிரமமானது என்பதை உணர்கிறேன். இசையோடு ஒவ்வாத அசைகளும், பாட்டில், பெயர்ப்பில் இருக்கிற குறைகளும், எல்லாமும் என்னையே சேரும்.

Don’t Worry, Be Happy – Bobby McFerrin

வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
-தமிழில்: செல்வராஜ்.

இதோ நான் எழுதியதோர் சிறிய பாட்டு
வரிக்கு வரி விடாமல் நீயும் பாடிப்பாரு
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு

நம்ஒவ்வொரு வாழ்விலும் சில சிக்கலுண்டு
நீ வருந்தும்போது அது இரட்டிப்பாகுது
வருத்தம் விடு, மகிழ்ந்து இரு
Continue Reading »

Rajini - Img from Rajinikanth.comஅடிப்படையில் நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை வெளி வந்து 400 நாட்களுக்கு மேலான நிலையில் அண்மையில் வீட்டில் மகள்களுடன் பார்த்த சந்திரமுகி படத்தின் போது மீண்டும் உணர்ந்து கொண்டேன். படம் வந்த முதல் நாளோ முதல் வாரமோ கிழித்துப் போட்ட காகிதப் பூச்சொரியலின் பின்னணியில் பார்த்துக்கொண்டு சீக்கியடிக்கிற தீவிர ரசிகன் இல்லையென்றாலும், வாய்ப்புக் கிடைக்கிற போது தவறவிடாமல் பார்த்ததுண்டு. பாபா வந்தபோது கூடப் பல நாட்கள் கழித்துத் தான் பார்த்தேன் என்றாலும் அது அவ்வளவாகப் பிடிக்காமல் போனதற்கு அடிப்படை ரஜினி படத்திற்குத் தேவையான விதயங்கள் கூடச் சரியாய் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தான் காரணம் என்று நினைக்கிறேன். சொந்த வாழ்வின் ஆன்மீகத் தேடல் மந்திரங்களையும் புகுத்தி ஒரு இரண்டும்கெட்டானாக ஆக்கியிருந்தது தான் பரவலான படத்தோல்விக்குக் காரணமாயிருக்கலாம். அந்த ஆன்மீகச் சமாச்சாரங்களே படத்தைப் பிடிக்கச் சிலருக்குக் காரணமாயிருந்தது என்றாலும் அப்படிப்பட்டோரின் எண்ணிக்கை குறைவு. அது வேறொரு கூட்டம்.

வில்லனாயிருந்து தீவிர நாயகனாகிப் பின் வேடிக்கை கலந்த கதாநாயகனாகிய ‘தம்பிக்கு எந்த ஊரு’ காலகட்டத்தில் நன்றாக ரசித்திருக்கிறேன். ரஜினியின் நடிப்புக்கோ திறமைக்கோ எதிராக எழுந்த/எழுகிற விமர்சனங்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘நான் பொல்லாதவன், பொய் சொல்லாதவன்’ என்றவனின் ‘பொதுவான சிங்க மனதை’ பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ‘வாழும்போதும் செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதனா’ என்று கிளம்புகிறவனைக் கண்டு சிலிர்த்திருக்கிறேன். எல்லோரையும் போல், அவருக்கு நடிக்கத் தெரியும் என்று சொல்லவென்றே வந்த சில படங்களாக ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, என்று நானும் சிலவற்றை அடுக்கியிருக்கிறேன். கமலா ரஜினியா என்று காலத்தில் நீங்காதெழுகிற வாதங்களில் பெரிதான ஒரு காரணமோ (reason) ஏரணமோ (logic) இன்றி ரஜினி பக்கமாகச் சாய்ந்திருக்கிறேன்.
Continue Reading »

« Newer Posts - Older Posts »