அது ஒரு வேனிற்காலத்து வசந்த விழா
Jun 3rd, 2006 by இரா. செல்வராசு
“இப்பவே என்ன அவசரம். இப்பத்தான படிச்சு முடிச்சுருக்கேன். ஒரு வருசமாவது ஆகட்…”, என்றவனை இடைமறித்து, “இதோ, இது தான் பொண்ணு” என்றொரு படத்தைக் காட்டினார்கள் வீட்டில். முனைவர் பட்டப் படிப்பு முடிந்து அலுவத்தில் சேரும் முன் மூன்று வார விடுப்பில் வீட்டில் இருந்தேன். படத்தில் பச்சை வண்ணச் சேலை கட்டித் தீர்க்கமாய் என்னைப் பார்த்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே என் பேச்சு பாதியிலேயே அறுந்தது.
“நாளைக்குப் பொண்ணு பாக்க அவங்க வீட்டுக்குப் போறோம்”
“ம்”, என்றேன் பலவீனமாக.
* * * *
“நான் ஸ்வீட் எல்லாம் சாப்பிடறதில்லீங்க” என்றேன். வீட்டின் பரம்பரைச் சொத்தாக இருந்த சர்க்கரை நோயை எதிர்க்க எனது போர் அப்போதே ஆரம்பித்திருந்தது. ‘சக்கரை போடாமக் காப்பி குடிங்க அப்பா’ என்று சொல்லிவிட்டு அதற்கு அழுத்தம் தருவதற்காக, ‘பாருங்க, நானே சக்கரை சேர்த்துக்கறதில்லே’ என்று சொல்வதற்காகச் செய்த முயற்சி சில வருடங்கள் நீடித்திருந்தது அப்போது. ‘பையன் கொஞ்சம் படம் காட்டறாப்புல இருக்கு’ என்று நினைத்திருப்பார்கள்.
“மொத மொதல்ல வந்திருக்கீங்க, கொஞ்சமாவது எடுத்துக்கங்க” என்பதில் இருந்த வலியுறுத்தலுக்காகப் பாதியை எடுத்துக் கொண்டேன். கொண்டு வந்து கொடுத்த அவருடைய பெண்ணைப் பார்த்தபோது ‘ஹலோ’ சொல்லிச் சிரித்தார் மெல்ல. படத்துல கொஞ்சம் வேற மாதிரி இருந்துதோ? ஓ! கொஞ்சம் கோணயா நிக்கிற மாதிரி இருக்கு…
* * * *
“என்னடா பிடிச்சிருக்கா?”
முன் தினம் படம் பார்த்தே பிடித்துப் போன கதையை மறைத்துவிட்டு, “உங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தா சரி” என்றேன். “சும்மா கொஞ்சம் நேரம் பாத்தத வச்சு என்ன சொல்ல முடியும்?”
“சரி. அப்போ நாளைக்கே உறுதி வார்த்தை சொல்லிரலாம்”
வண்ணப்படம் பார்த்த மூன்றாம் நாள், நேரில் பார்த்ததன் மறுநாள், உறுதிவார்த்தை சொல்லிக் ‘கை நனைக்கச்’ சொந்தங்களோடு இன்னொரு முறை பயணம்.
“அடுத்து வர்றப்ப கல்யாணத்த வச்சுக்கலாம். எப்பப்பா வருவ?”
“இப்போ தான் வேலைல சேரப் போறன். ரெண்டு வாரம் லீவு எடுக்க ஒரு வருசமாவும். ஒரு வருசம் கழிச்சு வரேன். அப்ப வச்சுக்கலாம்”
“அதெல்லாம் வேலைக்காகாது தம்பி. வேணுன்னா ஒரு ஆறு மாசம் தள்ளி வச்சுக்கலாம். அப்போ வந்துருங்க”
* * * *
நேரில் பேசக் கிடைத்த ஒரு வாய்ப்பில் எதிர்பார்ப்புடன் கேள்வி. “ஒரு வாரம் கழிச்சு என் பிறந்த நாள் வருது. அது வரைக்கும் இருப்பீங்களா?”
“ம்… ஒரு வாரம் பயணத்தத் தள்ளி வச்சுட்டேன். அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சுத் தான் போவேன்”
அவர் பிறந்த நாளுக்கு முன்தினம் இரு குடும்பத்தாருடனும் இரவு விருந்து, கேக். மகிழ்வு. விடைபெறும்போது ‘நாளைக்கும் கூப்பிடறேன்’ என்று சொல்லிவிட்டு முதன் முறையாகச் சொன்ன சொல் தவறினேன். “கூப்பிடுவீங்கன்னு ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன்”
“ஆ…அது வந்து… சென்னையில் இருந்து வந்த நண்பன் ரொம்ப நேரம் இருந்தான். ரயிலில் வழி அனுப்பி வைக்க நேரமாகிவிட்டது. ரொம்பத் தாமதமா கூப்பிட வேண்டாம்… தூங்கியிருப்பீங்கன்னு விட்டுட்டேன்”
“சரி… பரவாயில்ல…”
“…”
“ஊருக்குப் போனப்புறம் லெட்டர் போடுவீங்களா?”
“ம். போடறேன். விடுதி முகவரி தெரியாதே”
“ஒரு நிமிஷம்…”, அவசரமாய்க் கிழித்த ஏட்டுத் தாளில் எழுதிய முகவரி, இன்னும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.
* * * *
கோவை விமான நிலையத்தில் கிளம்பும் முன், “இது நான் எழுதின ‘சுனந்தா கடிதங்கள்’ முதல் தொகுப்பு. என்னைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சிக்க உதவும்” என்று கொடுத்தேன்.
பம்பாய் விமான நிலையத்தில் சர்வதேச வளிப்பறனைக்குள் (airplane) ஏறும்முன் அழைத்தேன். “இல்ல… என்னப் பிடிச்சிருக்கான்னு நானும் கேட்கவே இல்லை. நீயும் சொல்லவே இல்லையே…”
“ம்…. வீட்டுக்கு வர்ற வழியிலேயே உங்க புத்தகம் படிச்சு முடிச்சுட்டேன். எனக்குப் பிடிச்சிருக்கு!”
“ஓ! பக்கத்துல எல்லாரும் இருக்காங்களா?”
* * * *
நான் அப்படி இல்லை என்று தான் நினைத்தேன். வாரா வாரம் மணிக்கணக்கில் பேசி தொலைபேசிக்காரனுக்கு காசு அழும் வேலை என்னிடம் இருக்காது என்று எண்ணினேன். ஆனால், முதலிரு வாரங்கள் ஊர் மாறி, முகவரி மாறி, புது இடம் சென்று அது பற்றிய உள்ளுருமங்கள் (information) தெரியப்படுத்த என்று, பிறகு அந்தப் பழக்கத்தில் அடிக்கடி பேச ஆரம்பித்தேன். சரி, புதுசா திடீர்னு நாடு விட்டு நாடு வரணும்னா நம்மப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சு பழகிக்கணும்ல என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன். “ம்… அப்புறம்”, “சொல்லுங்க”, “நீ சொல்லு” என்று மட்டுமே பாதி நேரம் பேசித் தெரிந்துகொண்டோம்.
அடிக்கடி எழுதிக் கொண்ட கடிதங்கள் அந்தப் பக்கம் ஒரு ‘கொலாஜ்’ ஆக உருமாறிச் சேர்த்து வைக்கப் பட்டதைப் பின்னர் அறிந்து கொண்டேன். பச்சைச் சேலைப் படத்தைச் சட்டையிலேயே வைத்திருந்தேன். ‘சட்டைப் பையில் உன் படம், தொட்டுத் தொட்டு உரச’ என்று பின்னாளில் கவிஞர்கள் கவிதை படைப்பார்கள்!
* * * *
“இங்கிலீசுல ஒரு நூறு பத்திரிக்க இங்க குடுத்து விட்டுருங்க. அப்புறம் இந்தத் தமிழ்ப் பத்திரிக்கய அங்க இருக்கற நண்பர்களுக்கு அனுப்பிருங்க. நாங்க ரெண்டு பேரும் சேந்து அழைக்குற மாதிரி இருக்கு”
வீட்டில் இரண்டு பேர் பேசிக் கொண்டார்கள். “மனசுல காதல் இருந்தா கவிதை தானா வரும்பாங்க. பாருங்களேன் இந்தப் பத்திரிக்கைய…”
ஐந்து மாதங்கள் போன வேகம் தெரியவில்லை. நல்ல நாளும் மண்டபம் கிடைப்பதுமாக இரண்டு வாரங்கள் முன்னரே தேதி குறித்தாயிற்று.
* * * *
விமான நிலையத்திற்கு வரவேற்க அவர் வந்திருந்தார். வளிப்பறனையில் இருந்து இறங்கி வெளிவருகையில் சுற்றங்களுக்குப் பின்னால் ஒளிர்ந்தது மங்கல முகம். ஐந்து பறனைகள் மாறி வந்திருந்தேன். ஒரு வாரம் முன்பு முடி வெட்டி விட்ட தாத்தாக்கிழவர் முதல், பக்கத்து இருக்கையில் ஆரம்பத்தில் உட்கார்ந்திருந்த மூதாட்டி வரை ‘என் கல்யாணத்துக்குப் போறேன்’ என்று சொல்லிக் கொண்டேன்.
இன்னும் ஒரு வாரம். ஐந்து மாதங்கள் தொலைபேசியில் பேசியதும் கடிதங்கள் போட்டுக் கொண்டதுமாய் இருந்து விட்டு நேரில் எதுவும் பேசத் தோன்றவில்லை. “ஓய்வெடுத்துக்கிட்டு நாளைக்கு வீட்டுக்கு வாங்க”
“நான் கடைசியாப் போட்ட கடிதம், அஞ்சல்மதிப்பு பத்தலைன்னு திரும்பி வந்துடுச்சு. திருப்பி அனுப்பறதுக்குள்ள நானே வந்துடுவேன்னு கையிலயே கொண்டாந்துட்டேன். இதோ…” என்று அஞ்சல்காரராய் மாறினேன். நானே வந்தேன் தூது.
* * * *
“நேத்துத் தாண்டா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்தோம். அப்புறம் இன்னிக்கும் நீ போகாட்டி என்ன?”
“இல்ல. நான் தனியாப் போய்ப் பாத்துட்டு வரணும்”
“சரி. டிரைவர அனுப்பறோம். கார்ல போய்ட்டு வந்துடு”
“இல்ல, நான் தனியா, பஸ்லயே போய்க்கறேன்”
குடும்பத்தில் சிறிது நேரம் ஆலோசனை நடந்தது. “சரி சரி. போய்ட்டு வா”.
வெளியேறும் போது அப்பா, “நால்ரோட்டுல மல்லிப்பூக் கிடைக்கும், வாங்கிட்டுப்போ!” என்கிறார். ‘எனக்குத் தெரியாதா?’ என்று நினைத்துக் கொள்கிறேன்.
பட்டும் படாமலே நடந்த பாரியூர்க் கோயில் பிரகாரத்தில் லேசாய்ப் பட்ட கையில் பாய்கிறது மின்சாரம். “அச்சச்சோ, கல்யாணத்துக்கு முன்னால நீங்க என்னத் தொடக் கூடாது”, வேடிக்கையாய் ஒரு அச்சுருத்தல்.
“ஹேய்! தெரியாமக் கை பட்டிருச்சு. நான் என்ன பண்ண? அதான் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் ஆயிருமே!”
“அதுனால?”
பிரகாரச் சுற்று அதற்குள் முடிந்துவிட்டது. அது என்ன சாமி என்ன கோயில் என்பது நினைவில்லை.
* * * *
இரண்டு நாள் முன்னரே வந்துவிட்ட நண்பர் குழாம். “டேய்! வாடா போய் பாத்துட்டு வரலாம்”
“இல்லைங்க. நான் நேத்துத் தான் போய்ட்டு வந்தேன்”
“அட! நாங்க பாக்க வேணாமா? கிளம்பு கிளம்பு!”
“சரி… உங்களுக்காக வேணும்னா வர்றேன்!”
ஐஸ்கிரீம் கடையில் என் நண்பர் குழாமும் இருவர் வீட்டுக் குளுவான் கூட்டமும். ஒன்றுக்கு இரண்டாய் உள்ளே போய்க்கொண்டிருந்த ஐஸ்கிரீமுக்கு இடையில் அவர் தங்கையிடம் பேசுகிறேன். “உங்கள எனக்குப் பிடிக்கல மச்சான்”
“பிடிக்கலயா? ஏன்?”
“எங்க அக்காவ எங்க கிட்ட இருந்து தூரமாக் கூட்டீட்டுப் போயிருவீங்களே!”
பேச்சில்லை என்னிடம். பல்லுணர்வுத் தாக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அசடாய் என்னவோ சமாதானம் சொல்கிறேன்.
* * * *
சுற்றமும் நட்பும் கூடும் நன்னாளில் சீர்கள் நடக்கின்றன.
அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமணம். நிதானமாய் யோசிப்பதற்குள் மாலையை மாற்றித், தாலியைக்கட்டி முடித்தாயிற்று. அவர் அவசரம் அவருக்கு. “அடுத்த கல்யாணத்துக்குப் போகணும்”.
கைகோர்த்து மணவறையை மூவலம் வருகையில் யார் கையை யார் கிள்ளியது?
மண்டபத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் பயணம். காரின் பின்சீட்டில் கைகள் கோர்த்தபடி புதியதோர் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம். அழுத்தமாய்ப் பற்றிய கைகள் ஆயிரம் உணர்வுகளைப் பேசிக் கொள்கின்றன.
* * * *
விரைந்து ஒடிவிட்ட பத்து ஆண்டுகள் ஒரு சாதனைக்குச் சாட்சியாகின்றன.
பாடங்களுக்குக் குறைவில்லை. கற்றது நிறைய. ஆனால் கற்றது குறைவே. இன்னும் தொடர்கிறோம் எங்களின் பாதையில். வழித்துணையாய்ச் சேர்த்துக் கொண்ட வாழ்த்துச் சொல்லும் உள்ளங்கள் இரண்டு பாசமும் காட்டியெங்கள் பட்டறிவையும் பெருக்குகின்றன.
Vaazhthukkal Selvaraj.
அன்புள்ள செல்வராஜ்,
எங்களிடமிருந்து உங்கள் இருவருக்கும் இனிய மண நாள் வாழ்த்துகள்
செல்வராஜ் உங்களுக்கும் உங்கள் வழித்துணைக்கும் -தசாப்த- திருமண வாழ்த்துக்கள்!
…
/ “இது நான் எழுதின ‘சுனந்தா கடிதங்கள்’ முதல் தொகுப்பு. என்னைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சிக்க உதவும்”/
இது புதுவிடயமாக -எனக்கு- இருக்கிறது.இதை நாங்களும் எங்கேயேனும் எடுத்து வாசிக்கமுடியும் என்றால் அறியத்தாருங்கள்.
செல்வா,
திருமணநாளா? அடிச் சக்கை.
வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.
இந்தத் திருமணநாள் வருதுன்னாவே போதும், மனசு ‘கொசுவத்தி’ ஏத்தி விட்டுருது இல்லே.
அதுவும் ஒரு வாரம், பத்து நாளைக்கு முன்னாலேயே:-)))))
நானும் இங்கே ஏத்திக்கிட்டு இருக்கேன். நாளைக்கு இந்த அக்காவின் திருமணநாள்.
வருசம் ஓடிருச்சு.32!
வாழ்த்துக்கள் செல்வராஜ். போட்டோவை பாத்து யாராவது பயந்துடுவாங்களோன்னு நாங்க போட்டொவெல்லாம் எடுக்கறதில்லை.
செல்வராஜ் சார்,
இனிய மண நாள் வாழ்த்துகள்.
வாழ்க வளர்க 😉
இன்னும் பதின் பத்து ஆண்டுகள் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
ஜானா
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய செல்வராஜ் அண்ணன் அவர்கட்கு,
தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் என் இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.
நன்றி,
அன்புடன்
வெற்றி
Wish you a happy 10th wedding anniversary
இச்சுகமான நினைவலைகளை ஈராயிரம் 🙂 ஆண்டுகள் சுமந்து செல்ல, எனது இனிய வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் செல்வராஜ்
வாழ்த்துக்கள்.
இந்த பதிவின் ஒவ்வொரு வரியைப் படிக்கும் போது , அதற்கு இணையாக சொந்தக் கதை மனத்திரையில் மின்னியது. அதுவே படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
//“ம்… அப்புறம்”, “சொல்லுங்க”, “நீ சொல்லு” என்று மட்டுமே பாதி நேரம் பேசித் தெரிந்துகொண்டோம்//
நினைவுகளை மிக அழகாகப் பிரதி எடுத்து உள்ளிர்கள்.
ஜந்து நட்சத்திரப் பதிவு !!!
வாழ்த்துக்கள்.
இனிய மணநாள் வாழ்த்துக்கள்
இனிய மணநாள் வாழ்த்துக்கள்
ur article is very nice and also brought our old memories in our mind. Visiting without any cause and also talking hours together without any matter is very fine
வாழ்த்துக்கள் !!!
..aadhi
இனிய மணநாள் வாழ்த்துக்கள் Selvaraj & Mrs.Selvaraj.
A very touching post. Thanks a lot for inspiring us.
-Mathy
Happy Anniversary!
It is nice to so much LOVE. May you live happily ever after.
Regds,
Sathya
வாழ்த்துக்கள் செல்வராஜ் 🙂
ஒரு இனிய சிறுகதை படித்த உணர்வு.
//“ஒரு நிமிஷம்…”, அவசரமாய்க் கிழித்த ஏட்டுத் தாளில் எழுதிய முகவரி, இன்னும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.// ஹூம்.. ஒன்றும் சொல்வதற்கில்லை 😉
வாழ்த்துக்கள் செல்வராஜ்!
வாழ்த்துக்கள் செல்வராஜ்
செல்வராஜ்,
வாழ்த்துக்கள்!!!
//பிரகாரச் சுற்று அதற்குள் முடிந்துவிட்டது. அது என்ன சாமி என்ன கோயில் என்பது நினைவில்லை. //
அடடா! அடடா!! ஒரு வரில ஒரு சிறுகதையவே சொல்லறீங்களே! :)))
உங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் கூட இருப்பேன் நண்பா.. 🙂
என்றும் அமைதியும் மகிழ்ச்சியுமாய் விளங்க ஆசிர்வதிக்கின்றேன். திருமண வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் செல்வராஜ். உங்களுடைய கணக்கில் பாதி எங்களுக்கும் இதே நாள். :O)
ம். இப்பத்தான், ஒண்ணுக்கு, மூணா ஐஸ்கிரீம தள்ளியமாதிரி இருக்கு, விசா வாங்க அலஞ்ச அலைச்சலுக்கு கூட இருந்தாப்பல இருக்கு, திடீர்னு கெடா வெட்டுக்கு கிளம்பினாப்பல இருக்கு, புதுமணத் தம்பதிய தனியா இருக்க விடாம, தொந்தரவு கொடுத்த மாதிரி இருக்கு, அம்மணி விட்ட சாபத்தால, சென்னை டிரெயின்ல ஏறாம, பெங்களூர் வண்டியில ஏறி காலையில திருதிருன்னு முழிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள, 10 வருஷமாச்சின்றான் இவன்…
பதிவு போட்ட மாதிரியும் ஆச்சு, அங்க ஒரு காயிதம் இன்னும் இருக்கு, இங்க ஒரு சாமி பேரு மறதின்னு சொல்லி, அம்மணி ரேட்டிங்ல உசரத்த தொட்ட மாதிரியும் ஆச்சி.. சாமியோவ், உங்க இனிய வாழ்க்கைக்கான ரகசியம் என்னான்னு புரிஞ்சுபோச்சுங்கோ…
மணநாள் வாழ்த்துக்கள் நண்பா, இனிய சகோதரி.
வாழ்த்துக்கள் செல்வராஜ்!
(வழக்கம் போல முணு தடவை பொறுமையா படிச்சுட்டேன்.. என்ன மந்திரம்ங்க போடுறீங்க எழுத்துல.. )
வாழ்த்துக்கள் செல்வராஜ் !!!
Many more happy returns of the day.You have written in your inimitable style.I am sure
that had you not ventured in to further
research you would have turned out to
be a wonderful writer and poet, and perhaps
a director.all the best to you and your family
on this happy occassion.
இப்போதுதான் பார்க்கிறேன் செல்வராஜ். அழகான விவரணை. உங்களுக்கும், குமுதாவுக்கும் இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!
வாழ்க வாழ்க.. நிறைய கற்க 😉
தலைப்பைப் பார்த்துட்டு, “வேனி”க்காலமா “வேணி”க்காலமா ந்னு கிண்டல்பண்ணாலாம்னு வந்தா இந்த லவ்ஸா? 😉
மணநாள் வாழ்த்துச்சொல்லிய இனிய நெஞ்சங்கள் அனைத்திற்கும் என்/எங்கள் மனமார் நன்றி. உங்கள் அன்பில் மகிழ்வெய்துகிறோம். தனிவாழ்வு நிகழ்வென்றாலும் இனிய பொழுதை இப்படிப் பகிர்ந்துகொள்ள முடிவது அவ்வினிமையைப் பெருக்குகிறது. ஓரிருவர் தவிர ஏனையோர் முன்பின் சந்தித்திராத மின்வழிச் சொந்தங்களாய் அமைந்து எமது நன்னாளில் பங்குகொண்டமைக்கு மகிழ்கிறேன். மீண்டும் நன்றி.
டிசே, ‘சுனந்தா கடிதங்கள்’ பற்றிக் கேட்டிருந்தீர்கள். அவை 12, 13 ஆண்டுகளுக்கு முன் Soc.Culture.Tamil என்னும் இணையக் குழுமம் ஒன்றில் எழுத ஆரம்பித்தது. அவற்றைத் தொகுத்துத் தனிச்சுற்றுக்கு மட்டும் பகிர்ந்து கொண்டேன். இரண்டாம் பாகம் ஒன்றும் எழுதி (அது எங்கும் வெளியாகவில்லை) இருந்தேன். அவற்றை வலைப்பதிவில் மீள்பதிவு செய்யலாம் என்று ஆரம்பித்து அது ஐந்தாறு கடிதங்களோடு நின்று போய்விட்டது. இரண்டு பாகங்களையும் சேர்த்து, எடுவித்துப் புத்தக வடிவில் பார்க்கும் எண்ணமும் சிறிது இருக்கிறது.
ஒரு அறிமுகமாய் இக்கடிதங்கள் பற்றி அறிய வலைப்பதிவுரை ஒன்று உள்ளது – பார்க்கலாம். விரும்பினால் சொல்லுங்கள் – பிடிஎஃப் வடிவக் கோப்பு ஒன்றும் உள்ளது.
ஷ்ரேயா, உங்களுக்கும் அதே நாள் என்பதறிந்து மகிழ்ச்சி. மேலும் பல்லைந்தாண்டுகள் களிப்புடன் வாழ்க என்று எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்குமுண்டு.
* * * *
மணநாள் வாழ்த்துக்கள் தவிர, எழுத்திற்கும் நடைக்கும் பாராட்டிச் சொன்னவர்களுக்கும் மிக்க நன்றி. இவை என்றும் எனக்கு ஊக்கமளிப்பனவாய் இருக்கின்றன.
இருவருக்கும் belated ஆனால் இனிய மணநாள் வாழ்த்துக்கள்.
PDF Please!!! (also Phone number)
karthikramas@gmail.com
10 years have gone by so fast….I do remember the invitation and Sunandha Kadithangal.
Belated wishes for your 10th wedding anniversary!!
காலந்தாழ்ந்த(belated) வாழ்த்துகள்!
போன வருஷம் எதோ ஒரு இடுகையில்(ஆஸ்திரேலியப் பயணம் பற்றியது?) ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டதை நினைவுகூர்ந்த ஞாபகம்.
மீண்டும் வாழ்த்துகள்!
Selvaraj,
Belated Wishes !
You have excellent flow in your writings, enjoyed it lot. Keep up the good work.
Thanks
குமார், மற்றும் ஏனைய நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நன்றி.
அட..இது எப்படியோ என் கண்லயே படல. வாழ்த்துக்கள் செல்வராஜ்.
//“உங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தா சரி”//
//“உங்க புத்தகம் படிச்சு முடிச்சுட்டேன். எனக்குப் பிடிச்சிருக்கு!”//
நீங்களும் சரி. அவங்களும் சரி. குறிப்பால் உணர்த்தறதுல கில்லாடிங்க போலிருக்கு..
ரமணி, உங்கள் வாழ்த்திற்கும் நன்றி. எனது மகள்களின் படங்கள் பற்றி வேறொரு இடத்தில் வினவியிருந்தீர்கள். அவர்களின் வாழ்த்தட்டையை இங்கு இடும்போது அதை நினைத்துக் கொண்டேன். நினைவு கொண்டிருந்ததற்கும் விசாரித்ததற்கும் நன்றியும்.