May 23rd, 2006 by இரா. செல்வராசு
…அன்றிலிருந்து சுமார் ஆறு வருடம் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஒரு விதை துளிர்க்கும் வரை…
அமெரிக்காவின் நடுமேற்கு மாநிலங்களில் ஒன்றான கென்டக்கியின் இரு பெரும் நகரங்கள் லூயிவில் மற்றும் லெக்சிங்டன் என்பவை. இவற்றினிடையே தூரம் சுமார் எண்பது மைல் இருக்கும். மாநிலத்தின் இரு பெரும் நகரங்கள் என்பது மட்டுமல்ல, இவை இரண்டு மட்டும் தான் ஓரளவாவது பெரு நகரங்கள் என்று சொல்ல முடியும். இரண்டிற்குமிடையே இருக்கும் ‘ஃபிராங்க்போர்ட்’ என்னும் சிற்றூரே இதன் தலைநகர். வளம்மிக்க ‘நீலப்புல் மண்டலம்’ என்று சொல்லப்படும் இந்தப் பகுதியை முன்னிருத்தியே கென்டக்கி ‘நீலப்புல் மாநிலம்’ என்று பெயர் பெற்றிருக்கிறது.
லூயிவில்லில் நானும் லெக்சிங்டன்-இல் பள்ளி நண்பர் ஒருவரும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அடுத்தடுத்த வருடம் வந்து சேர்ந்தோம். சென்னைக் கல்லூரியில் என்னோடு பயின்ற நண்பரும் லூயிவில்லில் மாணவராய் அடுத்த பருவத்தில் வந்து சேர்ந்தார்.
கென்டக்கி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது குதிரைகளும், அதன் பிறகு புகையிலையும் தான். தனிமனித வருவாயின் அடிப்படையில் நாட்டிலேயே கடைசிப் பத்தில் ஒன்றாக அமைந்திருந்தாலும், உலகத்துச் செல்வந்தர்கள் எல்லாம் கூடும் புகழ்பெற்ற டெர்பி குதிரைப் பந்தயம் வருடாவருடம் நடக்கும் இடமும் இது தான். இரண்டு நிமிடத்தில் முடிகிற ரோஜாவிற்கான ஓட்டம் பார்க்கப் பெருந்திரளாய்க் கூட்டம் லூயிவில்லின் சர்ச்சில் டவுண்ஸ் மைதானத்தில் கூடியிருக்கும். அந்த மைதானத்தின் அடுத்த தெருவில் தான் இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன் என்றாலும் டெர்பிப் பந்தயங்களுக்குச் சென்று பார்த்ததில்லை.
குதிரைப் பண்ணைகள், பந்தயங்கள், புகையிலைத் தோட்டங்களைத் தாண்டி, அண்மைய காலங்களில் தான் பிற தொழில்களிலும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது கென்டக்கி. குறிப்பாக, டொயோட்டா நிறுவனத்தின் வருகையின் பயனாகவும் தான்நகர்ச்சி (automobile) வண்டிகளைக் கட்டுமானித்தலில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்கிறது. புகழ்பெற்ற இன்னொன்று – அறுபத்தியைந்து வயதுக் கிழவர் கர்னல் சாண்டர்ஸ் ஆரம்பித்த கென்டக்கி வறுகோழிக் கடை. இன்று இந்தியா உட்பட அகிலம் முழுதும் பரவிக் கிடக்கிறது.

கென்டக்கியில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் நிறைய உண்டு. ஆறுகளும், ஏரிகளும், அடர்வனப் பகுதிகளும், மலைகளும், அருவிகளும் நிறைய உள்ள இடம். பெரும் பாறைகளாலான இயற்கைப் பாலங்களும், பல மைல் தொலைவுள்ள நிலத்தடிக் குகைகளும் அங்கு உண்டு. நீலப்புல் விரிவெளிகளையும், வெள்ளைத் தீற்றுக் கட்டை வேலிகளையும், அவற்றினுள்ளே வால்சொடுக்கிப் பாய்ந்தோடும் புரவிகளையும் காண்பதற்கு இதமாய் இருக்கும். அவசரப் பயணமாய் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் விலகிச் சிறிய சாலைகளில் பயணம் செய்வது இனிமையான ஒன்று. அப்படியான இயற்கைக் காட்சிகளில் ஆழ்ந்து மிதிவண்டியிலேயே லூயிவில்-இல் இருந்து லெக்சிங்டன் வரை சென்று வந்தாலென்ன என்று யோசனை விதையாய் விழுந்தது ஒரு நாளில். அந்த விருப்பு அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும், அப்படி நெடுந்தொலைவுப் பயணம் ஏதும் முன்னர் அமெரிக்காவில் பயணித்திருக்காத தயக்கம் வந்து தடுத்துக் கொண்டே இருந்தது.
Continue Reading »
Posted in பயணங்கள் | 7 Comments »
May 18th, 2006 by இரா. செல்வராசு
…விட மனமில்லாமல் மறுநாள் பாண்டி மறுபடியும் எங்களை அழைத்துக் கொண்டது.
பாரதியும் பாரதிதாசனும் சில காலமேனும் வாழ்ந்த புதுச்சேரி, பிரெஞ்சிலே எழுத்துப் பிழையால் பாண்டிச்சேரி ஆகியிருக்கிறது. இன்னொரு முறை மொத்தக் குழுவோடும் நகருள் செல்ல முடிவு செய்து போகும் வழியிலே ‘ஆரோவில்’ என்னும் சர்வதேச நகருள்ளும் சென்றோம். அரவிந்தர் ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்புடைய இந்த நகரம் சற்று வித்தியாசமாய் இருந்தது. என்னவோ ஒரு பரிசோதனை முயற்சியாக நிர்மாணிக்கப்பட்டு, பல வெளிநாட்டினர் வந்து வசிக்கும் இடமாக இருக்கிறது. மத்தியிலே வட்ட வடிவமாய் ஒரு பெரிய கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தனர் என்பது மட்டும் நினைவிருக்கிறது. இந்தப் பரிசோதனையின் அடிப்படை என்ன? யார் எப்படி என்ன அன்ன இன்ன பிற கேள்விகள் பற்றியெதுவும் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் ஒரு கூட்டமாய்ச் சுற்றிச் சில படங்கள் பிடித்துக் கொண்டோம். கேட்டாலும் பதில் சொல்வதற்கு அவ்வளவாய் யாரையும் அங்கு காணோம்.

சுற்றியிருந்த முந்திரிக் காடுகளில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் காயமாக்கிக் கொண்ட நாவினைச் சப்புக் கொட்டிக் கொண்டு பயணத்தை பாண்டி நோக்கித் தொடர்ந்தோம். முந்திரிப் பழம் சாப்பிட்டால் நாவு சொரசொரத்துப் போய்விடும் என்று முன்பு யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை.
Continue Reading »
Posted in பயணங்கள் | 6 Comments »
May 17th, 2006 by இரா. செல்வராசு
…எங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றன பாண்டிக்குச் செல்லும் சாலைகள்.
நடைமுறையில் முடியாதது என்றோ, செயல்படுத்தச் சிரமமானது என்றோ, எப்படிச் செய்வது என்ற திகைப்பைத் தருவதாகவோ இருக்கிற மலையான சில காரியங்களைக் கூடச் சிலசமயம் மனசுக்குள் தூவி விடுகிற ஒரு சின்ன விதை சிறுகச் சிறுகத் துளைத்துச் சட்டென ஒரு இனிய பொழுதில் செயலாக்கிவிடும். எண்ணங்களில் விதைக்கப்படும் சின்ன விதைகளுக்கும் சக்தி உண்டு என்று வாழ்வை உற்று நோக்கும் எவருக்கும் புலப்படும்.
சென்னை-பாண்டிச்சேரிப் பயணத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்படி விதையாய் விழுந்த எண்ணம் வடிவம் பெற்று அண்ணா சாலையில் எங்களைச் செலுத்திக் கொண்டிருந்தது. ஒரு தெளிவான குறிக்கோளுடையதாய் இருந்த சென்னை-பாண்டிச்சேரிப் பயணமும், அந்த நான்கு நாட்களும் ஒரு உன்னத அனுபவம்!

இலக்கை அடையச் சுய உந்துதலும் சோர்வை மீறச் சுய தள்ளலும் பழகவொரு அரிய வாய்ப்பு. சுயத்தைத் தெரிந்து கொள்ளலும், நட்பை வளர்த்துக் கொள்ளலுமாக, அனுபவித்து அறிய வேண்டிய பொழுதுகள் அவை. முன்னுணராத சொந்த நாட்டின் சில பகுதிகளை, மக்களை, வாழும் முறைகளைச் சில மணித்துளிகளேனும் நேரடியாக நாடி பிடித்து அறிந்து கொள்ள வைக்கும் அனுபவங்கள்.
முதல் நிறுத்தமாகச் சுமார் மூன்று மணியளவில் செங்கல்பட்டு சென்று சேர்ந்தோம். அங்கு இருந்த வகுப்புத் தோழி ஒருவரின் வீட்டில் ‘வீரர்கள்’ எங்களுக்கு ஒரு விருந்து. நினைத்தபடி மதியத்திற்குள் சென்று சேர முடியாமல் போய் விட்டது என்றாலும் களைப்பு நீங்க உதவியது அந்தச் சில மணி நேர ஓய்வு.
வாழ்வின் ஆச்சரியக் கணங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் அமைந்து விடுவதுண்டு. தங்கமணியின் மொழியில் சொன்னால் ஆறாக ஓடும் வாழ்வு இயல்பானது தான்; மனது தான் அதில் ஆச்சரியங்களைச் சேர்த்துக் கொண்டு எதிர்வினைக்கிறது எனலாம். அப்படித் தான் அன்றும் தோழி கூந்தலிற் சூடியிருந்த ஒரு மஞ்சள் ரோசா தூண்டிவிட்ட உணர்வுகளும், அதையொட்டி மிதிவண்டியில் உடன்வந்த நண்பர் மனதில் விழுந்த விதையும் அடுத்த நான்காண்டுகளில் துளிர்விட்டு வளர்ந்து, இன்று அது அவர்களின் இனிய மணவாழ்வாய் இரு மகவுகளோடு மலர்ந்து பெருமரமாகியிருக்கிறது. ஆனாலும் மூன்றடிக்குள் கூடவே இருந்த எனக்கு இந்த மஞ்சள் ரோசாச் சம்பவம் தெரியப் பின்னொரு மூன்றாண்டுகள் ஆனது என்பதை என்னவென்று சொல்ல!
Continue Reading »
Posted in பயணங்கள் | 3 Comments »
May 15th, 2006 by இரா. செல்வராசு
உயிருமில்லை உணர்வுமில்லையே தவிர, சில சமயம் உற்ற தோழமையைத் தந்துவிடும் மிதிவண்டிகளைப் பற்றிய கதைகள் என்று ஆரம்பித்தால் ஏராளம் எழுதலாம். கைத்தண்டின் உயரம் இருக்கையிலேயே குரங்குப் ‘பெடல்’ முறையாய் ஓட்ட ஆரம்பித்துக் கூடவே வளர்ந்த அவை, வாழ்வின் முக்கிய கட்டங்களுக்கு அமைதியான சாட்சிகளாக அமைந்திருக்கின்றன. வளர்பருவத்திலே நினைத்த போது எடுத்துக் கொண்டு சுற்ற முடியும் தளையறு நிலையை அளித்திருக்கின்றன. முன் தண்டிலோ பின்னிருக்கையிலோ, சமயங்களில் இரண்டிலுமோ சுமந்து நட்புக்களை வளர்த்திருக்கின்றன. நட்போடு கூடிக் குலாவியிருக்கையில் பிணக்கேதுமின்றிப் பொறுமையாய் நின்றுகொண்டோ சாய்ந்து கொண்டோ காத்திருந்திருக்கின்றன. வளர்ந்த ஊரை விட்டுக் கல்லூரிக்குப் போகையில் இரயிலோ பிற பொட்டலச் சேவையோ ஏறிப் பிரியாது கூடவே வந்திருக்கின்றன.

இப்படியாக என்னுடன் சென்னை வந்த மிதிவண்டியின் தோழமை கல்லூரி வளாகத்திலும் வளர்ந்தே வந்திருக்கிறது. வளாகத்தின் உள்ளும் புறமுமாகப் பல காத தூரங்கள் அந்த ஆண்டுகளில் அழைத்துச் சென்றிருக்கிறது. என்னிடம் வண்டியைக் கடன் வாங்கிச் செல்கிற நண்பர்கள் கவனமாய் இருக்கவில்லை என்று கோபம் கொள்ள நேர்ந்திருக்கிறது. அதற்கு ஏற்பட்ட காயங்களுக்காக மனம் வருந்த வைத்திருக்கிறது. நிற்க வைத்த இடத்தில் சுற்றிவிட்ட கம்பிச்சக்கரத்தின் ஓரத்தில் எண்ணெய் படிந்த துணியை வைத்து அழுத்திச் சக்கர விளிம்பைப் பளீரென்று அழுக்கு நீக்கி அதன் மீதான உடமையுணர்வை அதிகரித்திருக்கிறது.
ஆழ்மன அமைதியைத் தேடி எதிரே இருந்த இந்திய நுட்பியல் கல்லூரி வளாகத்தின் ஈசன் கோயிலுக்கு அந்தியிருளில் சென்ற பயணங்களாகட்டும், இனம்புரியாது பொரிந்து கொண்டிருக்கும் உணர்வுகளைச் சாந்தப் படுத்தும் பெசந்த் நகரக் கடற்கரைப் பயணங்களாகட்டும், எப்போதுமே எனது மிதிவண்டி உடன் துணை வந்திருக்கிறது. தேர்வு நாள் அவசரத்துக்கு இரவுத் தேநீர்க் கடைகளுக்கு அழைத்துச் சென்றதும், இரண்டாம் ஆட்டம் திரைப்படம் பார்க்கப் பல மைல் தொலைவென்றாலும் ‘கவலையில்லை ராசா’ என்று அபயமளித்ததும், நண்பர்களோடு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதும், மழை பெய்த நாளின் சாலைநீர்த் தேக்கத்தைக் கிழித்து வெதுப்பகம் அழைத்துச் சென்றதும், வளாகத்தில் தோழியரோடு பேசியபடி சென்ற நடைக்குத் துணையாகக் கூடவே உருண்டு வந்ததுமாக முற்றிலும் தன்னை எம் வாழ்வோடு ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறது.
Continue Reading »
Posted in பயணங்கள் | 5 Comments »
Apr 26th, 2006 by இரா. செல்வராசு
சுற்றிலும் கொட்டிக் கிடக்கின்றன வார்த்தைகள். சில அருகிலும் சில தொலைவிலும். பெரும்பாலும் அவ்வார்த்தைகள் சலனமற்றும் சக்தியற்றுமே கிடக்கின்றன. ஒன்றைச் சொல்ல வந்தவை அந்த ஒன்றைச் சொல்ல முடியாமல் சுற்றிச் சுற்றிக் கும்மியடித்துவிட்டுப் பின்னும் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமற் செத்துப் போவதைச் சில சமயம் வேதனையுடன் பார்க்கிறேன். சிலசமயம் பெருவேகத்துடன் வந்து சூட்டுப்புண் உண்டாக்குவதைத் தவிர வேறு எதையும் சாதிக்காத வார்த்தைகள் நிகழ்கணத்தில் உயிரின்றி அள்ள முடியாமற் சும்மா கிடக்கின்றன. ஒன்றோடு ஒன்று மோதிக் குற்றுயிராய்ச் சில சமயம் கிழிந்தும் கிடக்கின்றன. காரணமின்றிச் செத்து வீணாகியே போன வார்த்தைகள்.
வார்த்தைகளை விட மௌனங்களே சிறந்ததோவென ஒரு மயக்கம் உண்டாகினும், அந்த மௌனங்களாலும் சில சமயம் இடைவெளிகளை இணைக்க இயலுவதில்லை. இணைக்க இயலாமை மட்டுமல்ல. அந்த இடைவெளிகளைப் பெரிதாக்கியும் விடுகின்றன மௌனங்கள். ஆக, வார்த்தைகள் சிறந்தனவா, மௌனங்கள் சிறந்தனவா என்னும் கேள்வி எழுகிற போது, எதற்கு என்னும் உபகேள்வியும் கூடவே எழுகின்றது. அவற்றின் குறிக்கோள் என்ன? அவற்றால் எதைச் சாதிக்க நினைக்கிறோம் என்பதைப் பொருத்தது தானே அது?

தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் புரிந்துணர்வை அதிகரித்துக் கொள்ளவும் உதவும் சாதனங்களாக இவற்றைப் பயன்படுத்த நினைக்கிறோமெனில் அந்தத் தொடர்பின், புரிந்துணர்வின், அடிவேர் உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர நேரம் அதிகமாகாது. உள்ளங்களைச் சென்று சேர வேண்டுமெனில், அந்தக் குறிக்கோளை மறந்த கூரீட்டிகளாய் வார்த்தைகளோ மழுங்கம்புகளாய் மௌனங்களோ இருந்தென்ன பயன்? இதமான தென்றலாய், அந்தத் தென்றலில் உதிர்ந்து மெல்ல ஆடியபடி கீழே விழும் மலராய், அது எழுப்பும் ஒலியில்லா ஒலியாய் இருக்க வேண்டும். நோக்கம் தெளிவாகவும் அது செலுத்தும் இயக்கம் சரியாகவும் இருக்கையில் வார்த்தைகளும் தேவையில்லை. மௌனங்களும் தேவையில்லை. தேவையில்லை என்பதை விட எதுவும் ஒரு பொருட்டில்லை என்பதே பொருத்தமான உண்மை.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 39 Comments »