மிதிவண்டிப் பயணங்கள் – 1
May 15th, 2006 by இரா. செல்வராசு
உயிருமில்லை உணர்வுமில்லையே தவிர, சில சமயம் உற்ற தோழமையைத் தந்துவிடும் மிதிவண்டிகளைப் பற்றிய கதைகள் என்று ஆரம்பித்தால் ஏராளம் எழுதலாம். கைத்தண்டின் உயரம் இருக்கையிலேயே குரங்குப் ‘பெடல்’ முறையாய் ஓட்ட ஆரம்பித்துக் கூடவே வளர்ந்த அவை, வாழ்வின் முக்கிய கட்டங்களுக்கு அமைதியான சாட்சிகளாக அமைந்திருக்கின்றன. வளர்பருவத்திலே நினைத்த போது எடுத்துக் கொண்டு சுற்ற முடியும் தளையறு நிலையை அளித்திருக்கின்றன. முன் தண்டிலோ பின்னிருக்கையிலோ, சமயங்களில் இரண்டிலுமோ சுமந்து நட்புக்களை வளர்த்திருக்கின்றன. நட்போடு கூடிக் குலாவியிருக்கையில் பிணக்கேதுமின்றிப் பொறுமையாய் நின்றுகொண்டோ சாய்ந்து கொண்டோ காத்திருந்திருக்கின்றன. வளர்ந்த ஊரை விட்டுக் கல்லூரிக்குப் போகையில் இரயிலோ பிற பொட்டலச் சேவையோ ஏறிப் பிரியாது கூடவே வந்திருக்கின்றன.
இப்படியாக என்னுடன் சென்னை வந்த மிதிவண்டியின் தோழமை கல்லூரி வளாகத்திலும் வளர்ந்தே வந்திருக்கிறது. வளாகத்தின் உள்ளும் புறமுமாகப் பல காத தூரங்கள் அந்த ஆண்டுகளில் அழைத்துச் சென்றிருக்கிறது. என்னிடம் வண்டியைக் கடன் வாங்கிச் செல்கிற நண்பர்கள் கவனமாய் இருக்கவில்லை என்று கோபம் கொள்ள நேர்ந்திருக்கிறது. அதற்கு ஏற்பட்ட காயங்களுக்காக மனம் வருந்த வைத்திருக்கிறது. நிற்க வைத்த இடத்தில் சுற்றிவிட்ட கம்பிச்சக்கரத்தின் ஓரத்தில் எண்ணெய் படிந்த துணியை வைத்து அழுத்திச் சக்கர விளிம்பைப் பளீரென்று அழுக்கு நீக்கி அதன் மீதான உடமையுணர்வை அதிகரித்திருக்கிறது.
ஆழ்மன அமைதியைத் தேடி எதிரே இருந்த இந்திய நுட்பியல் கல்லூரி வளாகத்தின் ஈசன் கோயிலுக்கு அந்தியிருளில் சென்ற பயணங்களாகட்டும், இனம்புரியாது பொரிந்து கொண்டிருக்கும் உணர்வுகளைச் சாந்தப் படுத்தும் பெசந்த் நகரக் கடற்கரைப் பயணங்களாகட்டும், எப்போதுமே எனது மிதிவண்டி உடன் துணை வந்திருக்கிறது. தேர்வு நாள் அவசரத்துக்கு இரவுத் தேநீர்க் கடைகளுக்கு அழைத்துச் சென்றதும், இரண்டாம் ஆட்டம் திரைப்படம் பார்க்கப் பல மைல் தொலைவென்றாலும் ‘கவலையில்லை ராசா’ என்று அபயமளித்ததும், நண்பர்களோடு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதும், மழை பெய்த நாளின் சாலைநீர்த் தேக்கத்தைக் கிழித்து வெதுப்பகம் அழைத்துச் சென்றதும், வளாகத்தில் தோழியரோடு பேசியபடி சென்ற நடைக்குத் துணையாகக் கூடவே உருண்டு வந்ததுமாக முற்றிலும் தன்னை எம் வாழ்வோடு ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இற்றைத் திங்களில் முறுக்கிக் கொண்டு சீரிப் பாயும் இருசக்கர உந்துவண்டிகளைப் போல அல்ல மிதிவண்டிகள். அளவறு வேகம் இல்லையென்றாலும் சுயத்தோடான மிதிவண்டிகளின் ஒட்டுதல் அதிகம். என்ன தான் உந்துவண்டிகள் குறைந்த நேரத்தில் நீண்ட தூரம் சென்று சேர்த்தாலும், அது வெறும் இயந்திரத்தின் சாதனை. மிதிவண்டிச் செலுத்தங்களோ நம் உழைப்பின் பரிசு.
கன்னெய்க்குப் (petrol) பெற்றோரிடம் காசு வாங்க வேண்டியிராமல் ‘சொந்தக் காலிருந்தால் போதும்’ என்று முழுமையான சுதந்திரத்தை வெகு ஆரம்பத்திலேயே அளிப்பது மிதிவண்டிகள் தாம். என்னுடைய திருமண நாள் கூட அடுத்த மாதம் மூன்றாம் தேதியா ஆறாம் தேதியா என்று சில சமயம் நினைவில் மயங்கும். ஆனால், முதன் முதலாய் எனக்கென்று வாங்கிய மிதிவண்டி 1985-ஏப்ரல்-17 என்பது இன்னும் மறக்காதிருக்கும்.
கில்லி வழியாக, பெங்களூர்-சென்னை சாலைப்பயணம் சென்ற கிருபாவின் பதிவு தந்த உந்தலில் என் வாழ்க்கை வண்டியின் கம்பிச் சக்கரம் பின்னோக்கி ஒரு பதினெட்டு வருடம் சுழல்கிறது. சென்னை அழகப்பர் நுட்பியல் கல்லூரியில் முதலாண்டு. தேசிய சமூக சேவையின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த வேதியல் பேராசிரியர் ஒருவர், மாணவர் மன உறுதி வளர்ச்சித்திட்டம் என்பது போன்ற ஒன்றின் சார்பாக ஒரு நெடுந்தூரச் சாலைப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். நான்கு நாட் பயணமாய்ச் சென்னை முதல் பாண்டிச்சேரி வரை பயணம். நாங்களும் வருகிறோம் என்று முதலாண்டில் இருந்தும் நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டோம்.
ஒருவழித் தூரம் சுமார் 220 கி.மீ. இருக்கும். போக இரண்டு நாள், திரும்ப இரண்டு நாள். ஒரு நாளுக்குச் சுமார் 100 கி.மீ ஓட்ட வேண்டும். சுமார் இருபத்தியிரண்டு பேர் சேர்ந்து ஒரு நாள் காலை ஒன்பது மணியளவில் கிளம்பிவிட்டோம். நெடுந்தொலைவுப் பயணங்கள் அதற்கு முன் சென்றதில்லை என்றாலும் எந்தத் தயக்கமும் கொள்ளவில்லை. பெரிதாய் முன்னேற்பாடுகள் செய்யவில்லை. கூட்டத்தில் இருவரிடம் மட்டும் சக்கர ஓட்டை அடைப்புச் சாதனங்கள். வண்டியின் பின்சுமப்பியில் ஒரு பையும், தலையில் முன்மாலையில் வாங்கிய தொப்பியுமாய்க் கிளம்பியபோதே ஒரு சாதனை செய்துவிட்ட கிளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. பெருந்திரளாய்க் கல்லூரியின் மாணவ மாணவியரும் (ஒரு பத்துப் பேராவது இருந்திருப்பார்கள் 🙂 ) வழியனுப்பி வைத்த புல்லரிப்பும் சேர்ந்து கொண்டது.
கிளம்பிய சிறிது நேரத்தில் வழுக்கும் அண்ணா சாலையில் விரைகிறது வண்டி. எங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றன பாண்டிக்குச் செல்லும் சாலைகள்.
-(தொடரும்).
என்னைக் கவர்ந்த வலைப்பதிவு எழுத்துக்களில் உங்களுக்குத் தான் முதலிடம். அழகான தமிழில் ஆற்றொழுக்கான நடை. வளரும் பருவத்து உற்ற தோழனாம் மிதிவண்டி நினைவுகளை நிழலாட வைத்துள்ளீர்கள். இந்திய நுட்பியல் கழகத்தில் படிக்கும் போது நாங்களும் அவ்வப்போது மகாபலிபுரம் வரை மிதிவண்டியில் சென்று வருவதுண்டு. மிதிவண்டிக்கான வரிசையில் எளிதாக சிட்டு கிடைக்கும் என்பதற்காகவே அதில் திரையரங்குகளுக்கு சென்ற காலமும் உண்டு –இப்போது மனைவியையும் மகளையும் பெண்கள் வரிசையில் வாங்கச் சொல்வது போல :)))
ஆஹா, அடுத்தது மிதிவண்டியா…(இதைப் பற்றி எழுதச் சொன்னது வீட்டம்மாதானே!?).
நல்ல ஆரம்பம். பயணம் தொடரட்டும் இதே பாதையில், இது போன்ற சுகந்தங்களுடன்.
மீண்டும் பழைய நினைவு ஓடையில் குளிக்க வைத்துவிட்டாய். எம்மில் பெரும்பாலோர் தம் மிதிவண்டி நாட்களுக்கு சென்றிருப்பர், உன் பதிவைப் படித்தபின்.
எழுதியமைக்கு பாராட்டுக்கள், இனிய நினைவுகளை மீட்டதற்கு நன்றி…
//மிதிவண்டிக்கான வரிசையில் எளிதாக சிட்டு கிடைக்கும் என்பதற்காகவே அதில் திரையரங்குகளுக்கு சென்ற காலமும் உண்டு //
ஆகா, செல்வராஜ் சொல்லாத ஒரு பயனைச் சொல்லி நம் இருப்பையும் காட்டிக்கொள்ளலாம் என்றால் மணியன் முந்திக்கொண்டாரே! வேண்டுமானால் வி-பெல்ட்டால் செய்த இரட்டைச் சுருக்குக்கயிறால் இரு குடங்கள் கட்டி நீர்கொண்டுவந்து வீட்டில் பித்தளை அண்டாவிலும் சிமெண்ட் தொட்டியிலும் கொட்டி நிறைந்துவரும்போது ஆனந்தித்ததைச் சொல்லலாமா? ஊர் மைதானத்தில் கழைக்கூத்தாடியின் இன்னொரு வடிவமாக நாளெல்லாம், இரவெல்லாம் சுற்றிவந்து, ஓலிபெருக்கியில் பாடல் போட்டு, இரவில் கொச்சையாய் நடனம்/பல்குரல் செய்யும் வித்தைக்காரரை நினைவூட்டுவதைச் சொல்லலாமா…
செல்வா உங்கள் நடை அருமை. தொட்டுச்செல்லும் நினைவுகள் அருமை. தொடரட்டும்…
இன்னொரு மோட்டார் சைக்கிள் டைரியா? 😉
சைக்கிள் சவாரியோட ‘The moment’ஏ வண்டியை பாலன்ஸ் செய்யும் சூட்சமம் தான். அது சொல்லி வருவதில்லை. மன்மதகளை போல.
அந்த சூட்சமம் கை வரும் வரை, கற்றுக் கொடுப்பவர் எவ்வளவு தான் முதுகில் அறைந்தாலும், ‘நிமிர்ந்து உட்கார்’ என கத்துனாலும் ஹுஹூம்….
எப்படி என்று அறியும் முன் ஒரு magical நோடில சட்டென வந்துவிடம் அந்த திறமை.
அப்பறம் எவ்வளவு தான் முயன்றாலும் அதை மறக்கவே முடியாது.
இன்னும் ஞாபகத்தின் ஊடே இட்டு செல்லுங்கள் செல்வா.
மணியன், உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி. மகிழ்வாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. மாமல்லபுரம்-சென்னை சாலைப்பகுதி மிக அருமை தான்.
கிருஷ், காசி, நந்தன் உங்களுக்கும் நன்றி. பலருக்கும் இப்படியாக மிதிவண்டிகளுடனும் நினைவுகளும் உறவுகளும் இருக்கும் என்று நானும் நினைத்தேன். ஆனால் தலைமுறைகளில் இழக்கின்றவற்றில் இதுவும் ஒன்றா தெரியவில்லை – கையால் எழுதும் கடிதங்களைப் போல?
காசி, கின்னஸுக்குச் சாதிப்பது போல், சுற்றிச் சுற்றி நாள்/இரவு பூராவும் ஒரு சிறிய மைதானத்துக்குள் சுற்றுகிறவரின் காட்சி எனக்கும் நினைவில் இருக்கிறது. நினைவுக்கு நன்றி. நிச்சயமாய் அதனை இனிமேல் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒருவேளை கிராமப்புறங்களில் இருக்கின்றனவோ தெரியவில்லை. ‘பின்னிருக்கையில் ரெண்டு பக்கம் தண்ணிக்கொடம்’ – அதுவும் நல்லதொரு நினைவுக்காட்சி. நான் கூடச் செய்திருக்கிறேன்.
நந்தன், நட்சத்திரத்திற்கு வாழ்த்து. நீங்களும் நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள். நீங்கள் சொன்னபடி அந்த ஒரு நொடியில் பழகிவிட்ட ஆனந்தம் இருக்கிறது பாருங்கள் – ஆகா! அதன்பிறகு நின்ற இடத்தில் ஏறி மிதிக்காமல், வேகமாக உருட்டிச் சென்று லாவகமாய் ஏறி உட்கார்ந்து சல்லென்று போகும் பாய்ச்சல்… (சில முறை தடுக்கி விழுந்து ‘சுழற்றுமிதி’ இடித்து எரியும் கால்…) என்று சொல்லிக் கொண்டே போகலாமே…