மௌனத்தின் ஊடாக வார்த்தைகள்
Apr 26th, 2006 by இரா. செல்வராசு
சுற்றிலும் கொட்டிக் கிடக்கின்றன வார்த்தைகள். சில அருகிலும் சில தொலைவிலும். பெரும்பாலும் அவ்வார்த்தைகள் சலனமற்றும் சக்தியற்றுமே கிடக்கின்றன. ஒன்றைச் சொல்ல வந்தவை அந்த ஒன்றைச் சொல்ல முடியாமல் சுற்றிச் சுற்றிக் கும்மியடித்துவிட்டுப் பின்னும் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமற் செத்துப் போவதைச் சில சமயம் வேதனையுடன் பார்க்கிறேன். சிலசமயம் பெருவேகத்துடன் வந்து சூட்டுப்புண் உண்டாக்குவதைத் தவிர வேறு எதையும் சாதிக்காத வார்த்தைகள் நிகழ்கணத்தில் உயிரின்றி அள்ள முடியாமற் சும்மா கிடக்கின்றன. ஒன்றோடு ஒன்று மோதிக் குற்றுயிராய்ச் சில சமயம் கிழிந்தும் கிடக்கின்றன. காரணமின்றிச் செத்து வீணாகியே போன வார்த்தைகள்.
வார்த்தைகளை விட மௌனங்களே சிறந்ததோவென ஒரு மயக்கம் உண்டாகினும், அந்த மௌனங்களாலும் சில சமயம் இடைவெளிகளை இணைக்க இயலுவதில்லை. இணைக்க இயலாமை மட்டுமல்ல. அந்த இடைவெளிகளைப் பெரிதாக்கியும் விடுகின்றன மௌனங்கள். ஆக, வார்த்தைகள் சிறந்தனவா, மௌனங்கள் சிறந்தனவா என்னும் கேள்வி எழுகிற போது, எதற்கு என்னும் உபகேள்வியும் கூடவே எழுகின்றது. அவற்றின் குறிக்கோள் என்ன? அவற்றால் எதைச் சாதிக்க நினைக்கிறோம் என்பதைப் பொருத்தது தானே அது?
தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் புரிந்துணர்வை அதிகரித்துக் கொள்ளவும் உதவும் சாதனங்களாக இவற்றைப் பயன்படுத்த நினைக்கிறோமெனில் அந்தத் தொடர்பின், புரிந்துணர்வின், அடிவேர் உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர நேரம் அதிகமாகாது. உள்ளங்களைச் சென்று சேர வேண்டுமெனில், அந்தக் குறிக்கோளை மறந்த கூரீட்டிகளாய் வார்த்தைகளோ மழுங்கம்புகளாய் மௌனங்களோ இருந்தென்ன பயன்? இதமான தென்றலாய், அந்தத் தென்றலில் உதிர்ந்து மெல்ல ஆடியபடி கீழே விழும் மலராய், அது எழுப்பும் ஒலியில்லா ஒலியாய் இருக்க வேண்டும். நோக்கம் தெளிவாகவும் அது செலுத்தும் இயக்கம் சரியாகவும் இருக்கையில் வார்த்தைகளும் தேவையில்லை. மௌனங்களும் தேவையில்லை. தேவையில்லை என்பதை விட எதுவும் ஒரு பொருட்டில்லை என்பதே பொருத்தமான உண்மை.
சிலசமயம் அழுகின்ற ஒரு குழந்தையைத் தேற்றுவதற்குக் கூட என்னிடம் வார்த்தைகள் இல்லை. கோணித்துப் போகும் அதன் முகம் கண்டு, வேதனையில் கிழ்நோக்கிப் பிதுங்கும் உதட்டோரங்கள் கண்டு வருந்தி, அதன் ஏமாற்றத்திற்குக் காரணமாய் இருந்து விட்டோமோ என்று பதைக்கிறது மனம். அதன் பாதிப்பினூடாகப் பயணித்து உள்ளத்தை ஆற்றிப் பரிகாரம் தேடிக் கொள்வதெப்படி என்றும் திகைப்பு உண்டாகிறது.
அழுகைக்கு இடம் கொடுக்கக் கூடாது, அதன் சொடுக்கலுக்கு ஆடக் கூடாது என்று ஒருபுறத்தின் ‘வாயை மூடுகிறாயா இல்லையா’ என்னும் மிரட்டல் அதன் உள்ளத்தில் இன்னும் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று கலக்கம் உண்டாகிறது. ‘தனியாக அறைக்குச் சென்று அழுது வா’ என்று அனுப்பி வைத்துவிட்டு ‘என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்று சொல்லாமற் சொல்லுகிற அதன் கதறலைக் கேட்கச் சகிக்காமல் குப்புறப் படுத்துக் கொள்ளச் செய்கிறது.
புயலுக்குப் பின் ஓய்வைப் போல ஏமாற்றங்களை வெளியே விட்ட நிம்மதியில் கீழிறங்கி வருகிற குழந்தையிடம் ஒட்டுதலை அதிகரிக்க வேடிக்கைப் பேச்சும் வார்த்தைகளும் உதவத் தான் செய்கின்றன. நல்ல வேளை இவை உயிரோட்டமுள்ள வார்த்தைகள். முன் தின நிகழ்வுகளை, தன் வேதனையின் வெளிப்பாடுகளை, மறுதினம் தானே வேடிக்கையாக எடுத்துக் கொண்டு அதனால் சிரிக்க முடிகையில் இதமாய் இருக்கிறது. மானிடத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
இளங்காலைக் குளிரில் எழுந்து தேடி வந்து ‘இதமாய் இருக்கிறீர் அப்பா’ என்று கட்டிக் கொண்டு கொஞ்சுவது சுகமாய் இருக்கிறது. பள்ளியில் இணையாய் விளையாடுகிற சிறுவன் சில தவறுகளைச் செய்துவிடும்போது அதைச் சுட்டிக் காட்டினால் பிடிக்காமல் முரண்டு பிடிக்கிறானே என்று ஆலோசனை கேட்பது நன்றாய் இருக்கிறது. கூராய் இருக்கிற அதன் வார்த்தைகளை இதமாய் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க முடிகிறது. ‘ஃபிலிப், நீ சொல்வது தவறு’ என்று நேராய் வெட்டாமல், ‘ஓ, ஃபிலிப், கிட்டத்தட்ட சரியாகச் சொன்னாய், சின்ன விதயம் தவறாகிப் போய்விட்டது’ என்று ஊக்கப் படுத்தி உற்சாகமூட்டச் சொல்லிக் கொடுக்க முடிகிறது.விதயம் ஒன்று தான், விதம் மட்டும் வேறு என்று புரிய வைக்க முடிகிறது.
வார்த்தைகளும் மௌனங்களுமாக ஈனியல் (genetic) வாரிசின் உள்ளத்தோடு ஒட்டுதலை அதிகரிக்க முடிகிறது என்று சுயநிறைவு கொண்டிருக்க முயலுகையில், ‘அவளின் சொடுக்குக்கு ஆடுகிறீர்’, என்று குற்றம் சாட்டும் மனைவி. உள்ளின் கொந்தளிப்பை வார்த்தைகளில் ஏற்றி அவர் மீது அனுப்பாமல் புன்னகைக்க முயல்கிறேன். ‘இல்லை, அவள் உள்ளத்தைப் பார்க்கிறேன். புரிந்து கொள்ள முயல்கிறேன்’ என்று நான் சொல்வதைக் கேட்டுப் பேச்சற்று நிற்கிறார்.
‘திருத்த முடியாது இவரை’ என்று திரைபோட்டு ஓடுகிறது அவர் மௌனம்.
சொல்லோட்டம் கவர்கிறது.
//வார்த்தைகளை விட மௌனங்களே சிறந்ததோவென ஒரு மயக்கம் உண்டாகினும், அந்த மௌனங்களாலும் சில சமயம் இடைவெளிகளை இணைக்க இயலுவதில்லை//
//விதயம் ஒன்று தான், விதம் மட்டும் வேறு என்று புரிய வைக்க முடிகிறது. //
//முன் தின நிகழ்வுகளை, தன் வேதனையின் வெளிப்பாடுகளை, மறுதினம் தானே வேடிக்கையாக எடுத்துக் கொண்டு அதனால் சிரிக்க முடிகையில் இதமாய் இருக்கிறது. மானிடத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது. //
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இப்பதிவு ஒரு குற்றவுணர்வையே கொடுக்கிறது. எதுவும் எல்லைகள் கடக்கும் போது., வார்த்தைகளின் மதிப்புகள் மறந்துவிடுகின்றன. நல்ல பதிவு. நன்றி.
🙂
//‘திருத்த முடியாது இவரை’ என்று திரைபோட்டு ஓடுகிறது அவர் மௌனம்.//
எல்லாரும் இப்படித்தான் முடிவு செஞ்சுக்கறாங்க..
//வார்த்தைகளை விட மௌனங்களே சிறந்ததோவென ஒரு மயக்கம் உண்டாகினும், அந்த மௌனங்களாலும் சில சமயம் இடைவெளிகளை இணைக்க இயலுவதில்லை. இணைக்க இயலாமை மட்டுமல்ல. அந்த இடைவெளிகளைப் பெரிதாக்கியும் விடுகின்றன மௌனங்கள்.// மிகச்சரி…
அருமையான பதிவு செல்வராஜ்!
//வார்த்தைகளை விட மௌனங்களே சிறந்ததோவென ஒரு மயக்கம் உண்டாகினும், அந்த மௌனங்களாலும் சில சமயம் இடைவெளிகளை இணைக்க இயலுவதில்லை. இணைக்க இயலாமை மட்டுமல்ல. //
மௌனம் நிறைய பேசும் என்று நினைக்கிறேன்.. நல்ல கவிதைகள், சிந்தனை, பேச்சி, செயல், செயல்பாடு எல்லாமே மௌனத்திலிருந்துதான்.. நல்ல பதிப்பு..நன்றாக உள்ளது
வெகு நாட்களுக்குப் பின் வந்தாலும், வீர்யமிக்க பதிவு. கொடுத்து வைத்த குழந்தைகளாய் இருக்கவேண்டும் எம் நந்திதாவும், நிவேதிதாவும், குமுதாவும்(!).
Selvaraj,
Nice post after long time.
Deiva.
நல்லதொரு பதிவு, அழகான வார்த்தைகள் 🙂
///நல்லதொரு பதிவு, அழகான வார்த்தைகள் ///
///நல்லதொரு பதிவு, அழகான வார்த்தைகள் ///
[…] ்படி என்றும் திகைப்பு உண்டாகிறது மேலும்…
No comments yet […]
wow!
அழகாகச் சொல்லியிருக்கீங்க செல்வா.
-மதி
இதமான பதிவு + படங்கள்.
நன்றி.
பெயரிலி உங்கள் பாராட்டிற்கு நன்றி.
மரம், நீங்கள் சொல்லுகிற அந்தக் குற்ற உணர்ச்சியைத் தான் இப்படிப் பதிவு போட்டுத் தீர்த்துக்கொள்வது என்றிருக்கிறேன் :-).
ராசா (எல்லாரும்னு நீங்க யாரைங்க சொல்றீங்க?:-) ), இளவஞ்சி, கவிதா, கிருஷ், தெய்வா, கார்த்திக், செல்வநாயகி, மதி, டிசே உங்களுடைய அன்பிற்கும் நன்றி.
கில்லித் தெரிவிற்கும் நன்றி, பிரகாஷ்.
படிக்க இதமாக இருக்கிறது செல்வா!
இதைப் படிக்கும்போது வேறொன்றும் தோன்றியது:
எல்லாவிதமான விடயங்களையும் மனிதன் தன் குழந்தை மூலம், தான் இதுவரை கற்று,அறிந்துகொண்டவைகளை மறுபரிசீலனை செய்து சிலவற்றை திருத்தியும் கொள்கிறான் என்று எனக்குத் தோன்றும். இப்படியாகத் தெரிந்தும் தெரியாமலும் அவனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சில அழுக்குகளைத் துறக்க, unlearn செய்ய(அகற்க?) அவனுக்கு ஒரு வாய்ப்பு கிட்டுகிறது இல்லையா? ஏனென்றால், குழந்தைகள் கேட்கும் சாதாரணக் கேள்விகளை நாம் நம்மையே பிறிதொரு சமயம் கேட்டுக் கொள்ளும் போது ‘குழந்தைத் தனம்’ என்று ஒதுக்கியோ, ‘அது தான் எனக்குத் தெரியுமே’ என்ற நினைப்பிலோ சிந்திப்பதில் இருந்து தப்பித்துக் கொள்கிறோம். குழந்தைகள் அந்தக் கேள்விகளை நம்மிடம் கேட்கும்போது, அதற்கு நேர்மையான, சரியான பதிலை நாம் தேடும்போது, நாமே சிலவற்றைப் புதிதாகக் கற்றுக் கொள்வதில்லையா?
மற்றபடி, தொடரட்டும் உங்கள் தேடல்!
🙂
கண்ணன், பணிப்பளுவிற்கு இடையிலும் இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்டிருப்பதற்கு நன்றி.
உண்மையில் உங்கள் பின்னூட்டங்களும் சில செய்திகளைச் சொல்லுகின்றன. பலசமயம் அவை தொடர்புடையனவாகவும், எங்கோ யோசித்து நினைவுப் படலமாகவும் இருப்பதை உறுதி செய்வதுமாகவும் இருக்கின்றன. அது எனது தேடலில் இன்னும் சற்றுத் தொலைவு செல்ல வைப்பதுமாக இருக்கிறது. நன்றி.
“வார்த்தைகளை விட மௌனங்களே சிறந்ததோவென ஒரு மயக்கம் உண்டாகினும், அந்த மௌனங்களாலும் சில சமயம் இடைவெளிகளை இணைக்க இயலுவதில்லை. இணைக்க இயலாமை மட்டுமல்ல. அந்த இடைவெளிகளைப் பெரிதாக்கியும் விடுகின்றன மௌனங்கள். ”
Very true. Good one (this article will be in my mind for sometime).
Beautiful post.
What kannan says is also a very important concept about “unlearning” things through children, because you can have very little prejudice against them.
“The single biggest problem in communication is the illusion that it has taken place”-George Bernard Shaw
செல்வராஜ்,
அழகான அருமையான பதிவு.
இப்பெல்லாம் குழந்தைகளிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எல்லாம் தகப்பன்/தாய் சாமிகள்தான்.
ஒவ்வொண்ணையும் அவர்கள் பார்க்கிற கோணமே வேற. புரிஞ்சுக்கிட்டா நமக்குத்தான் பிரமிப்பு.
மனசுல கல்லெறிஞ்சு போனா மாதிரி இருக்குங்க…என்னமோ தோனுது…சொம்பேறிதனம் தடுக்கலைன்னா தனியா எழுதுறேன்.
நல்ல பதிவு செல்வராஜ்! வாழ்த்துக்கள்.
விமலா, கார்த்திக்வேலு, துளசி, நந்தன், ராம்கி, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. குழந்தைகளோடு வாழ்க்கை தனிச்சுவையும் அரிய வாய்ப்பாகவும் இருக்கிறது.
நந்தன், தனியாக என்றாலும் நினைப்பதைத் தயங்காமல் எழுதுங்கள். நன்றி.
எழுதியிருக்கேன் செல்வா. ஏதோ என்னால முடிந்த அளவில்…
லிங்க் சரியாக வேளை செய்யவில்லை.
http://www.mkannadi.blogspot.com
கில்லியிலே பிரகாஷ் சொன்னது போல் தான், இந்தப் பதிவைப் படித்தவுடன் நினைத்தேன்.
“என்னடா இது, மடிச்சு மடிச்சுப் போட்டிருந்தா இந்தப் பதிவு மொத்தமும் இந்தக் காலக் கவிதையாயிருக்குமே, செல்வராஜ் கவனிக்கலையோ?” ன்னு நினைச்சேன். 😉 உள்ளடக்கத்திற்கும் வடிவிற்கும் குழம்புகிற காலத்தில் உள்ளடக்க நேர்த்தியில் ஈடுபாடு கொள்ளுகிறீர்கள் பாருங்கள்; அதற்கே நான் பாராட்ட வேண்டும். மேலும் சொல்லாடற் கலை பழகியிருக்கிறீர்கள்.
என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இராம.கி.
இராம.கி ஐயா, உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிகவும் மகிழ்கிறேன். மேலும் ஊக்கம் தருவதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.
நந்தன், உங்களது பதிவுச் சுட்டியில் “http://” என்பதைச் சேர்க்காததால் தான் சரியாக அமையவில்லை. நான் சரி செய்திருக்கிறேன். இது உங்கள் தகவலுக்கு.
>வார்த்தைகளை விட மௌனங்களே சிறந்ததோவென ஒரு மயக்கம் உண்டாகினும், அந்த மௌனங்களாலும் சில சமயம் இடைவெளிகளை இணைக்க இயலுவதில்லை.
இதையேதான் நானும் அவர்களுமாக பரஸ்பரம் மௌனம் காக்கும் என் நட்புகளைக் குறித்து நானும் யோசித்து வருகிறேன்.
முகத்தைச் சுணுக்கிக் கொண்டு மூலையில் உட்காரும் பையனின் மனவோட்டம் என்னவாக இருக்கும் என்று பல முறை யோசித்துத் தோற்றுப்போயிருக்கிறேன்.
சுவையான பதிவுகள். இராம.கி ஐயா சொல்வதைப் போல மொழியில் மெருகேறிவருகிறது. வாழ்த்துக்கள்.
செல்வராஜ்,
ரொம்ப யோசிக்கவைக்கும் பதிவு இது. மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். இரண்டு மூன்று தடவை படித்து விட்டேன் – ஒவ்வொரு தடவையும் புதுப் புது அர்த்தங்கள் புரிகிறது. எப்பொழுது வார்த்தைகளால் misunderstanding வருமோ, அப்பொழுது பேசாமல் இருப்பதே சிறந்தது என்று தோன்றுகிறது. ஆழமான கருத்துகளுக்கு நன்றி.
வெங்கட், நித்யா, உங்களது கனிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. அவை நிச்சயமாய் எனக்கு ஊக்கத்தை அதிகரிப்பதாய் இருக்கின்றன.
செல்வராஜ்! இங்கே உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பிரமித்து நிற்கிறேன்
\\ உள்ளங்களைச் சென்று சேர வேண்டுமெனில்,இதமான தென்றலாய், அந்தத் தென்றலில் உதிர்ந்து மெல்ல ஆடியபடி கீழே விழும் மலராய், அது எழுப்பும் ஒலியில்லா ஒலியாய் இருக்க வேண்டும். \\ அடடா!
ஏதோ என்னவென்று சொல்ல முடியாத ஓருணர்வு உள்ளத்தினுள்ளே!
வாழ்த்துகள்,
அன்பு
மீனா
வாங்க வாங்க. ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிறேன் உங்களை. பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மீனா.
// கோணித்துப் போகும் அதன் முகம் கண்டு, வேதனையில் கிழ்நோக்கிப் பிதுங்கும் உதட்டோரங்கள் கண்டு வருந்தி, அதன் ஏமாற்றத்திற்குக் காரணமாய் இருந்து விட்டோமோ என்று பதைக்கிறது மனம்//
ஒரு கணம் நெஞ்சை தொட்டு விட்டீர்கள், நண்பரே!
எப்பேர்பட்ட உணர்வு அது..
மனிதனின் மிக பெரிய பலவீனம் குழந்தைகள்தான்.
இதயத்தில் ஒளிந்துகொண்டிருந்த மயிலிரகு ஒன்றை வலுக்கட்டாயமாக இழுத்து சிரிது நேரம் மெஞ்யான நிலையில் பறக்கு விட்டு எம்மை பரிதவிக்க விட்ட உம்மை சபிக்கிரேன்
நெருப்பு
சில்வியா, நெருப்பு சிவா, உங்களுடைய கருத்துக்களுக்கும் (சாபங்களுக்கும் 🙂 ) நன்றி. பலவீனத்தோடு பலமுமாக இருப்பவர்கள் என்றே நான் எண்ணுகிறேன்.
செல்வராஜ் வழக்கம் போல் அழகான எழுத்து. இப்போதுதான் படித்தேன்.
அருள், ஊக்கமூட்டும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
[…]
செல்வராஜ்
அழகாக எழுதி இருக்கிறீர்கள்.மொழியின் சிறப்பௌ உங்கள் கட்டுரையில் தெரிகிறது. ஆனால் சில இடங்களில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. இரண்டு முறை படித்து விட்டும் அதனால்தான் யோசித்து கொண்டிருந்தேன்.
குழந்தைகள் நிறைய சிந்திக்கிறார்கள். அது என்னவாக இருக்கும், அழுகைக்கோ மனவருத்ததிற்கோ என்ன காரணம் என்று யோசிப்பது சகஜம். ஆனாலும் அது என்ன என்று கேட்டு அவர்களை பலவந்தப்படுத்துவதைவிட, உனக்கு சொல்ல வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் கேட்க நான் இருக்கிறேன் என்பதை புரிந்து கொள் என்கிற நட்பை நம்பிக்கையை தருவது ஒன்றே பெற்றோர்கள் செய்ய கூடிய காரியம் என்று நினைக்கிறேன்.
பத்மா, உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் கருத்தை மாற்றுக் கருத்து என்று கொள்ள வேண்டியதில்லை. ஒரு ஆற்றாமை இருக்கும் என்றாலும், அவர்களை வற்புறுத்தாமல் அவர்கள் பிரியப்பட்ட போது எண்ணங்களைச் சொல்லட்டும், பகிர்ந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுதலே சிறந்தது என்றே நானும் நினைக்கிறேன். செயலிலும் காட்டுகிறேன். இக்கட்டுரையில் எங்கோ அதனெதிரான தொனி வந்துவிட்டது போலும். தெளிவுபடுத்த உதவியமைக்கும் நன்றி.