இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வசந்தமே வருக!

April 7th, 2006 · 4 Comments

விட்டுப் போக மனமின்றி இன்னும் இழுத்துக் கொண்டு கிடக்கிறது குளிர்காலம். பச்சைப் பசேலென்று உயிர்த்தெழுகின்ற புல்வெளிகளைத் தொடர்ந்து குச்சிமரங்களில் துளிர்க்கவிருக்கும் இலைகளுக்கு முன்னர் இன்னும் ஒருமுறை பெய்து பார்க்கிறது வெண்பணி. இயற்கைச் சக்திகளுள்ளும் நடக்கின்றன இழுபறிகள். கனக்குளிராடை துறந்து மென்குளிராடை போர்த்தி இரண்டே நாட்களில் மீண்டும் கனத்தாடை தேட வைத்தாலும், அணையும் முன் சிறக்கும் மெழுகொளி போன்றது தான் இது. போய்விடும் இதோ குளிர்காலம் என்று பொறுத்திருக்கிறேன் பொதிவாக.

இதந்தரும் வசந்தமே வருக.


Vasantham 2004சரியான காலத்தின் வரவிற்கு முன்பே ஒரு தேர்ந்த விவசாயி தயாராய் இருப்பான். இரண்டு தலைமுறைகளுக்கு முன் விவசாயமே முழுமுதற் தொழிலாய் நம்பியிருந்த குடும்ப வம்ச ஈற்றனெனக்கு விவசாய அறிவென்பது குண்டுமணி அளவு தான். இருந்தாலும், ஊரில் இருந்து வாங்கி வந்திருக்கும் இரண்டு மம்மட்டிகளுக்கும் (மண்வெட்டி), கடப்பாறைக்கும் வேலை கொடுப்பதற்கேனும் களத்தில் இறங்கி மண் வெட்ட எண்ணியிருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் தட்டு நிறைய அறுவடை செய்த தக்காளிப் பழத்திற்கும் எண்ணி நான்காய்க் கிடைத்த வெண்டைக்காய்க்கும் மகிழ்ந்த இரண்டு பிஞ்சுக் குட்டிகளுக்காகவாவது சில காய்கறிகளைப் பயிரிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். பூக்கள் என்றால் தமக்குப் பிடிக்கும் என்று புன்னகைத்துச் சிலிர்த்துக் கொள்கிற அவர்களுக்காகவேனும் வீட்டைச் சுற்றிச் சில பூக்களை வளர்க்கலாம்.

இன்னூக்கம் தரும் வசந்தமே வருக.

குளிர்காலத்திற்குக் கலிபோர்னியா போய்விட்ட பக்கத்து வீட்டு அமெரிக்கரின் தாய், எண்பதுகளில் பாட்டி விவசாயக் காலத்திற்கு ஒஹையோவிற்கு வந்து கொண்டே இருக்கிறார். பொழுதெல்லாம் வெளியே ஏதேனும் வேலை செய்து கொண்டு ஊக்கமாய் இருப்பது தான் இன்னும் அவரைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அத்தனை வயதான பாட்டிக்கு மட்டுமல்ல; அரை டவுசரோடு மண்டி போட்டுக் கொண்டு களை பிடுங்குவது எனக்கும் கூட ஒருவகையில் தகைவுதறிச் செயலாகத் தான் இருக்கிறது.

தகைவுதற இன்னொரு வழி வசந்தகாலச் சுத்திகரிப்பு. இது ஏப்ரல் மாதத்துப் போகிப் பண்டிகை. வருடம் பூராவும் சேர்த்து விடுகிற குப்பைகளைக் களைய ஒரு வழி. வேண்டாத குப்பைகளை நீக்கி வெற்றிடம் நிறையச் சேர்த்துச் சுத்தம் செய்து வைப்பதும் வாழ்வில் தகைவுகளை உதறிக் கொள்ள ஒரு நல்ல வழி.

இடர்தகைவுதற இனிய வசந்தமே வருக.

குளிரென்று சாக்குச் சொல்லி முடங்கிக் கிடந்த நாட்கள் மறைய, ஊக்கத்துடன் செயல்பட ஒரு உந்துதலாய் வந்து கொண்டிருக்கும் வசந்தத்தை வருகவென்று வரவேற்கிறேன். கடந்தவை எப்படியாயினும் வருபவை எப்படியும் சிறப்பாய் இருக்குமென்ற அதிகரித்த பொதிவுணர்ச்சியே என் வாழ்வை உந்தும் பெருஞ்சக்தி.

இனிய வசந்த வாழ்த்துக்கள். இச்சகமனைத்துக்கும்.

Tags: வாழ்க்கை

4 responses so far ↓

  • 1 தாணு // Apr 8, 2006 at 2:05 am

    வசந்தகாலத்தில் தந்தை மண்வெட்டி பிடிக்க, மலர்ச்சோலையில் வாண்டுகள் துள்ளிக் குதிக்க, மந்தகாசப் புன்னகையுடன் மனையாட்டி கண்டு களிக்க, பொங்கட்டும் புது வசந்தம்!!!

  • 2 Sam // Apr 8, 2006 at 7:25 am

    உங்கள் தோட்ட அனுபவங்கள் பற்றித் தொடர்ந்து எழுதுங்கள். நான் முதல் முறையாக இந்த வருடம்
    காய்கறி பயிர் செய்யப் போகிறேன். உங்கள் ஊர் எப்படியோ தெரியாது. எங்களூரில் மே மாதம் இருபதாவது தேதிக்கு மேல் தான் காய்கறி பயிர் செய்யச் சொல்கிறார்கள். பூச்சிக் கொல்லி இல்லாமல் பயிர் செய்த அனுபவம் உண்டா? இந்த முறை, முதல்
    முறை, அப்படிச் செய்து பார்க்கப் போகிறேன். என்ன இருந்தாலும் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த
    கறியின் சுவை கடையில் வாங்கும் காய்கறியில் இருக்காதே என்பதால் இந்த முயற்சி.
    அன்புடன்
    சாம்

  • 3 KRISHNARAJ.S // Apr 8, 2006 at 8:45 pm

    dear selvaraj

    I live here in SouthAmerica,we are into the autumn.But still I am trying to plant and harvest the ladies-fingers , which is a never seen item in these areas.

    we are indians, decents from agricultural families, the idea is from the blood.

    pls keep it up and keep in touch

    with warm regards / krishna

  • 4 செல்வராஜ் // Apr 8, 2006 at 10:39 pm

    தாணு, நன்றி. பதினெட்டு வருட நிறைவில் நிறைவாய் இருப்பீர்கள் போலிருக்கிறது.:-)

    சாம், கிருஷ்ணா, உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. பெரிதாய்ப் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. வீட்டுப்பயிரின் சுவை தனி தான். இவ்வருடமும் சில முயற்சிகள் செய்ய எண்ணியிருக்கிறேன். கிருஷ்ணா சொன்னபடி ரத்த சம்பந்தம் விடுவதில்லை போலும் 🙂