Apr 7th, 2006 by இரா. செல்வராசு
விட்டுப் போக மனமின்றி இன்னும் இழுத்துக் கொண்டு கிடக்கிறது குளிர்காலம். பச்சைப் பசேலென்று உயிர்த்தெழுகின்ற புல்வெளிகளைத் தொடர்ந்து குச்சிமரங்களில் துளிர்க்கவிருக்கும் இலைகளுக்கு முன்னர் இன்னும் ஒருமுறை பெய்து பார்க்கிறது வெண்பணி. இயற்கைச் சக்திகளுள்ளும் நடக்கின்றன இழுபறிகள். கனக்குளிராடை துறந்து மென்குளிராடை போர்த்தி இரண்டே நாட்களில் மீண்டும் கனத்தாடை தேட வைத்தாலும், அணையும் முன் சிறக்கும் மெழுகொளி போன்றது தான் இது. போய்விடும் இதோ குளிர்காலம் என்று பொறுத்திருக்கிறேன் பொதிவாக.
இதந்தரும் வசந்தமே வருக.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 4 Comments »
Mar 8th, 2006 by இரா. செல்வராசு
ஒரு அளவிற்கு மேல் பெரிதாக வளருகிற, நிறுவனப்படுகிற அமைப்புக்களின் மேல் ஐயங்களும் அதிருப்திகளும் ஏற்படுவது இயற்கை என்பதற்கு மைக்ரோசாஃப்ட் ஒரு உதாரணம் என்றால் அண்மைய மாறுதல்கள் கூகுள் நிறுவனத்தையும் அந்தப் பாதையில் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்று கொள்ளலாம். அதன் விளைவு தான் பரவலாய் ஆங்காங்கே எழுந்து கொண்டிருக்கும் அரவங்கள். காரணங்கள் இல்லாமலும் இல்லை.
மக்களாட்சிச் சீருக்குக் குந்தகம் வரும் வகையில் நடந்து கொள்ளும் அமெரிக்க அரசின் வேண்டுகோளை எதிர்த்துப் பயனர் தகவல்களைத் தர மறுத்து வீரநிலை எடுத்து நின்ற அதே கூகுள் நிறுவனம் தான், வணிகக் காரணங்களுக்காகச் சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்து செல்கிறது. ஒரு வகையில் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், இது போன்றவை கூகுளையும் சாதாரண முதலாளித்துவ நிறுவனமாகத் தான் காட்டுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பெரு அரசியல் விவகாரங்களை ஒருபக்கம் ஒதுக்கி விடலாம்.
ஒரு புதிய தரவுக்காப்புச் சிக்கல் ஒன்று உருவாகியிருக்கிறது. அண்மையில் கூகுள் மேசைத் தேடல் செயலியின் மூன்றாவது பதிப்பு வெளி வந்திருக்கிறது. அதில் பல கணினிகளின் கோப்புக்களைத் தேடும் வசதியை ஏற்றியிருக்கிறது கூகுள். உதாரணமாய் அலுவலகத்தில் இருந்து கொண்டு வீட்டுக் கணினியின் கோப்புக்களைத் தேடுதல் போன்ற வசதி. இந்த வசதி சில சமயங்களில் பெரிதும் உதவியாய்த் தான் இருக்கும் என்றாலும், இதனை அமைக்க, கூகுள் உங்கள் கணினியின் கோப்புக்களைத் தனது வழங்கிகளின் சேர்த்து வைக்க வேண்டும். ஆகா… உங்களின் கட்டில் இல்லாத ஒரு இடத்தில் உங்கள் கோப்புக்கள் சேகரித்து வைக்கப் படுவது ஒரு பெரிய பாதுகாவல் இக்கு/சிக்கல் அல்லவா? உங்களின் கோப்புக்களும் அதில் இருக்கும் அந்தரங்கங்கள் ரகசியங்கள் இவையெல்லாம் எப்படி எப்போது எவர் கையில் மாட்டும் என்கிற ஐயம் எப்போதும் இருக்குமே. இதனால் சில நிறுவனங்கள் தாமாகவே இந்தச் செயலியின் புதுப்பதிப்பைப் பாவிப்பதைத் தடை செய்திருக்கின்றனர்.
Continue Reading »
Posted in கணிநுட்பம் | 16 Comments »
Mar 2nd, 2006 by இரா. செல்வராசு

கொடும்பகை அவற்றொடு
கடும்போர் புரிந்திடக்
குதிரை யானையேறிக்
கைவேலெறிந்து
கூர்வாள் சுழற்றிச் சமராடுகையிற்
கிழிந்து வலித்ததென்
உடல் மட்டும் தான்.
கூடவிருந்த கூட்டம் ஒன்று
காலடிக் கம்பளமுருவிக்
காய்ந்த வஞ்சங்கொண்டு
குறுவாள் பின்னெழுப்பிக்
குத்துகையில் நறுக்கென்று
வலிக்கும்
உள்ளமுஞ் சேர்ந்து.
இடிந்து போயினுமிவை
இச்சகத்தில் இயற்கையெனக்
காயங்கள் சுயமாற்றித்
துயர்
துச்சமென் றுதறியெழுந்து
நிலைத்து நிற்க முயலுகையில்
அச்சோ பாவமென
இச்சுச்சுக் கொட்டியொரு கூட்டம்
இரக்கக்கழிவு காட்டியே
கொன்றுவிட்டதென் உயிரை.
இருந்தும் என் கல்லறையில்
எழுதிவைத்தேன்
இவனொரு வீரன் என்று.
இறந்தவனைப் புதைத்துவிட்டு
இனியும் நடப்பேன்
நெஞ்சம் நிமிர்ந்து.
Posted in கவிதைகள் | 2 Comments »
Mar 1st, 2006 by இரா. செல்வராசு
“மோ குஷ்லா என்றால் என் கண்ணே… என் ரத்தமே… என்று அர்த்தம்”
எச்சரிக்கைக் குறிப்பு: மில்லியன் டாலர் பேபியின் கதை இங்கு வேறொரு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் கதை தெரிய வேண்டாம் என்று எண்ணினால் மேற்கொண்டு படிக்க வேண்டாம். தெரிந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால் மட்டுமே தொடரவும்.

Continue Reading »
Posted in திரைப்படம் | 5 Comments »
Feb 27th, 2006 by இரா. செல்வராசு

என் மோனம் சொல்லாத
காதலையா
என் வார்த்தைகள்
சொல்லி விடப் போகின்றன?
வார்த்தைகள் மட்டுமல்ல
அன்று புதிதாய்க் கொய்த
வண்ண மலர்கள் கூடச்
சொல்ல உதவாது
என் காதலை.
கருகும்
நீரின்றித் துவளும்
நாட்பட உலரும்
ஒரு மலரைப் போன்றதல்ல
என் காதல்.
மலர்கள் சுமக்கும்
நுரை ததும்பியோடும்
நதிநீர்க் கடியில்
நிரந்தரமாய் ஆழக் கிடக்கும்
கறுவெண் மணல் போன்றது.
கங்குப்பொறியல்ல தோழி
அது ஒரு
கால நிகழ்ப்பு.

Posted in கவிதைகள் | 7 Comments »