Feed on
Posts
Comments

செருப்பிற்காகக் காலை வெட்டு என்று இராம.கி அவர்கள் சும்மா சொல்லவில்லை என்பதைச் சற்றுப் பொறுமையாக ஆய்ந்து பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். திரு.விஜய் செருப்பைத் தவறாக மாட்டிக்கொண்டு, செருப்பைக் குறை சொல்ல வேண்டாம் என்று கருத்துத் தெரிவிப்பதற்கு முன் வாய்ஸ் ஆன் விங்ஸின் கீதா கயீதா ஆன கதை போன்றவற்றைப் பார்த்திருக்கலாம். இராம.கி அவர்கள் இட்ட தேட்டைச் சிக்கல் பதிவிற்கும் அங்கிருந்து சுட்டி இருக்கிறது.

யூனிகோடு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பவர் என்னும் முறையில் விஜய் போன்றவர்கள் இராம.கி அவர்கள் கூறும் குறைபாடுகளைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவரைப் போன்றவர்களின் முயற்சியால் இக்குறைகள் நீங்க வழி கிடைக்கலாம்.

காலை வெட்டிச் செருப்பிற்குள் திணிக்கும் இந்தப் பதிவில் இருக்கும் காட்டுக்களுக்கு வருவோம். (இவன், இவனை, இவனால், இவனிடம், இவனோடு). Find whole words என்பதைத் தெரிவு செய்யாமல் ‘இவன்’ என்பதைத் தேடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? ‘இவன்’ மட்டுமே கிடைக்கிறது. மற்ற சொற்கள் கிடைப்பதில்லை. சரியான செயல் எல்லாச் சொற்களையும் செயலி தெரிவு செய்திருக்க வேண்டும் என்பது தான். ஏன்? இவனை=இவன்+ஐ, இவனால்=இவன்+ஆல்… தமிழ் இலக்கணப்படி இது தான் சரியானது. அதோடு, ‘இவன்’ நீக்கி ‘அவன்’ என்று போட்டால் அதன் எல்லா வடிவங்களும் மாற வேண்டும் -> (அவன், அவனை, அவனால், அவனிடம், அவனோடு) என்று. குறிப்பு: இங்கு Find whole words என்பது தெரிவு செய்யப் படவில்லை. அப்படித் தெரிவு செய்திருக்கும் பட்சத்தில் ஒரு சொல் (இவன்) மட்டும் அகப்பட்டு மாறி இருக்கும். அது சரியே.

அதெல்லாம் முடியாது. முதல் தேடலில் நீங்கள் ‘இவன்’ தான் தேடினீர்கள். அங்கு ‘இவன்’ ஒருமுறை தான் இருக்கிறது. அதனால் அதை மட்டுமே தெரிவு செய்த செயலியும் ஒருங்குறியும் சரிதான் என்று வாதிடுகிறீர்களா? சரி. இப்போது ‘இவன’ என்பதைத் தேடுங்கள். (ஈற்று அகரம்). இப்போதும் Find whole words தெரிவு செய்யப்படவில்லை. இப்போது என்ன ஆக வேண்டும். ஒரு சொல்லும் அகப்படக் கூடாது. ‘இவன’ என்று ஒரு சொல்லும் இல்லை அல்லவா? ஆனால் நடைமுறையில் என்ன ஆகிறது? ஒவ்வொரு சொல்லும் தெரிவு செய்யப்படுகிறது. இது தவறில்லையா?

காரணம். ஒருங்குறியில் இவனை=இவன+ஐ, இவனால்=இவன+ஆல் என்று அமைந்திருப்பது தான். ‘இவன+ஐ’ எப்படி ஐயா ‘இவனை’ என்று வருகிறது? இவனவய் என்றல்லவா ஆகும்? கீதா கயீதா ஆன கதையும் இப்படித்தான்.

அதே கோப்பில் இந்தச் சொற்களோடு பல இடங்களில் தெரியாமல் இவன என்று அடித்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவற்றை எல்லாம் இவன் என்று மாற்ற வேண்டுமென்றால் Find whole words போட்டாலும் கூட ‘இவன்’ தவிர எல்லாச் சொற்களும் மாட்டுமே. என்ன செய்வது? அப்போது Search and Replace போட்டால் சில சொற்கள் இப்படி உடைந்து போய் “இவன்ிடம்” “இவன்ோடு” என்று கொக்கி கொம்பெல்லாம் தனியாகத் தொங்கிக் கொண்டு வருகிறதே!

இந்தச் சிக்கல்களைத் தான் இராம.கி பல வருடங்களாக ஆய்ந்து எடுத்துரைக்கிறார். சும்மா போகிற போக்கில் கூறவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். முதலில் sorting பற்றிய பிரச்சினைகளைக் கூறியபோது நானும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். இப்போது search/replace இந்தக் குறைகளை வெளிப்படையாகக் காட்டுகிறது.

எனது புரிந்துகொள்ளலில் குறைபாடு இருந்தாலும் பிற கருத்துடையோர் எடுத்துச் சொன்னால் ஆய்ந்து தெளிந்து கொள்கிறேன். இல்லாவிட்டால் அடிப்படை வடிவமைப்பில் சரியாய் அமைக்காமல் இன்னும் இப்படிச் சிறைப்பட்டு இருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

நிலைப்புப் பொள்ளிகை (stability policy – நன்றி இராம.கி) என்று யூனிகோடு சேர்த்தியம் கூறுவதை நமது எதிர்ப்புக் குரல் கூட இன்றி எப்படி ஏற்றுக் கொள்வது? அதனால் எனது குரலையும் எதிர்ப்பலையில் சேர்த்துக் கொள்கிறேன்.

நீண்டு வளர்ந்த கதையின் முடிவிற்குச் சுருக்கமாய் வருவோமெனில் மறுலேசிக் சிகிச்சை நன்முறையிலேயே முடிந்தது. இன்று எனக்குக் கண்ணாடி உள்ளாடி வெளியாடி எதுவும் அவசியமில்லை.

ஒருவார அவகாசத்தில் மறுமுறை செய்யவேண்டியிருந்ததில் தனிச்சிறப்பான கவனிப்புத் தேவை என்பதால் என்னைக் காத்திருக்க வைத்துக் கடைசியில் பெரியமருத்துவர் தானே வந்து செய்துவிட்டார். விடுமுறை முடிந்து அமெரிக்காவிற்கு மீள இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. இல்லாவிட்டால் சற்றுப் பொறுத்துக் கூடச் செய்திருக்கலாம்.

“உங்களுக்கு வயது என்ன?” என்று அவர் மீண்டும் ஒருமுறை கேட்டபோது “ஏன்?” என்றேன்.

“இல்லை, லேசிக் சிகிச்சை கிட்டப் பார்வையைச் சரி செய்யும். ஆனால் நாற்பதுக்கு மேல் வரும் சாளேஸ்வரப் பார்வைக்கு ஒன்றும் செய்ய முடியாது. அப்போது மீண்டும் கண்ணாடி போட்டுக் கொள்ள நேரிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

“பரவாயில்லை” என்றேன். கண்ணாடியில் இருந்து விடுதலை சில ஆண்டுகளே ஆனாலும் அது மதிப்பில்லாதது.

இம்முறையும் சிகிச்சைக்குத் தயாராகும் எல்லா முஸ்தீபுகளும் (இது என்ன சொல்?) செய்யப்பட்டன. முன்னர் காண இயலாமற் போனவர்களுக்கு வெளித்திரையில் பார்த்து கொள்ள ‘இன்றே கடைசி’ என்றாற்போல் அரிய வாய்ப்பு!

Lasik - Image (c) http://www.allaboutcustomwavefront.com/pics/redlight_hi-res-300.jpgசென்றமுறை செதுக்கிய வில்லையை இம்முறையும் அதே இடத்தில் மருத்துவர் கவனமாகப் பார்த்து மீண்டும் செதுக்க வேண்டும். இப்போதும் இடது கண்ணுக்கு வரும்போது சற்றே அயர்வு உண்டானது. இருந்தாலும் ஒருபுறம் “சொன்னாக் கேளுங்க, ஆட்டாம இருங்க” என்று சத்தமிட்டு கட்டுக்குள் வைத்திருக்க முயன்ற மருத்துவர், மறுபுறம் மிகவும் திறமையோடு தன் வேலையைச் செய்தார்.
Continue Reading »

Bayangaranவட்டமாகச் சுற்றிய சும்மாட்டைத் தலை மீது வைத்துக் கீரையும் காயும் கூடையில் சுமந்து விற்கும் பெண்ணொருவரின் “கீரை அரைக்கீரை வெண்டக்கீரை” என்னும் அதிகாலை ராகம் தெளிவாகக் காதில் விழுந்த போது கண்விழித்துத் தான் இருந்தேன். இருந்தும் நெடுநேரமாய் எழுந்து கொள்ளத்தான் மனமின்றிப் படுத்திருந்தேன். ஒரு புலனில் குறையெனில் அதனை ஈடுகட்டும் வண்ணம் மற்ற புலன்கள் அதிகக் கூராகிவிடுமென்று எண்ணியிருக்கிறேன். அதனால் தான் பச்சை வண்ணக் கோழிமுட்டை வடிவக் காப்புக் கட்டியிருந்த என் கண்களுக்குப் பதிலாக, இப்போது காதுகள் தெளிவாகக் கேட்கின்றன போலும் என்று எண்ணிப் புன்முறுவல் செய்து கொள்ள முயன்றேன்.

லேசிக் மறுசிகிச்சைக்காகக் காத்திருந்த அந்த வாரம். முன்னிரவு தூங்கும் முன் ஊற்றிக் கொண்ட சொட்டுமருந்து விளிம்பில் பூழையாக மாறி இருக்கும். மெல்ல முயன்று இமைகளைத் திறந்து நீரில் நனைத்த ஈரப் பஞ்சு வைத்துக் கண்ணுள்ளே சென்று விடாதபடி கண்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கவனமாய் அந்தப் பணிவிடை செய்ய ஒரு மனைவி இருத்தல் சுகம்!

வீட்டுக்குள்ளேயே போட்டுக் கொள்ள ஒரு கருப்புக் கண்ணாடி. ஒரு வாரத்திற்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது என்று மருத்துவர் சொல்லிவிட, அதனால் என் வீட்டினரிடம் விளைந்த அதீத எச்சரிக்கை உணர்வு என்னை முகச்சவரம் கூடச் செய்ய விடவில்லை. குத்தும் முள் தாடியைத் தொட்டு ‘ஆ, குத்துது’ என்று விளையாடும் பெண்கள் சற்றுக் களிப்பூட்டினர்.
Continue Reading »

மருத்துவர்கள் மற்றும் செவிலிகளின் பழக்கம் ஒன்று பற்றி எனக்குக் கேள்வியுண்டு. தீவிரமான ஒரு மருத்துவச் செய்முறையாக இருக்கும் போதும் அதனூடே வெற்று அரட்டை அடிப்பது போல் பேசிக் கொள்வதைச் சிலசமயம் அவதானித்திருக்கிறேன். என் மகளொருத்தி பிறந்த போதும் மனைவிக்கு மயக்க ஊசி போட வந்த சிறப்புச்செவிலி, தான் கடைவீதி சென்றது பற்றியும், வாங்கிய பொருட்கள் பற்றியும் பேசிக் கொண்டே வேலை செய்தார். பதைபதைப்போடு உள்ளே இருப்பவருக்கு இது ஒரு அலட்சிய மனப்பாங்கு போலத் தோன்றாதா? எதனால் இப்படிச் செய்கிறார்கள்? நாள் முழுதும் உடல் உறுப்புக்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் ஆர்வம்குன்றியோ அருவருத்தோ போய்விடாமல் இருக்கத் தம் கவனத்தைப் பிற கதையாடல்களில் திருப்பிக் கொள்கின்றனரோ தெரியவில்லை.

லேசிக் சிகிச்சையின் போதும் மருத்துவரும் உடனிருந்த செவிலிகளும் இப்படி வெற்றுப்பேச்சில் ஈடுபட்டிருந்தபோது எனக்குச் சிறு கவலை ஏற்பட்டது. வெகு நேரமாய்க் காத்திருந்த பின் லேசிக் சிகிச்சை என்பது சுமார் இருபது நிமிடங்களில் முடிந்து விட்டது. அதிலும் கண்ணுள் லேசர் கதிர்கள் பாய்ச்சும் நேரம் ஒரு கண்ணுக்குச் சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்திராது.

மல்லாக்கப் படுத்திருந்தேன். மரத்துப் போன கண்களை நன்கு விழிக்க வைத்து இமை மூடாதிருக்கும் படி இழுத்துப் பிடித்துக் கொள்ள ஒரு சாதனம். வலியொன்றும் உணரவில்லை. கொஞ்சம் மேலே தெரிந்த ஒரு செந்நிற ஒளிப்புள்ளி தான் லேசர் கதிரின் மூலமாய் இருக்க வேண்டும். கண்கள் ஆடாமல் அதனையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
Continue Reading »

“ஏம்ப்பா, எதுக்கும் ஒரு கண்ணுல பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு ரெண்டாவதப் பண்ணிக்கலாமில்ல? என்னாலும் ஆயிட்டா என்ன பண்றது?”, கவலையை வெளிப்படுத்தினார் அம்மா.

“ஆமாம். எங்கப்பா கூட நல்லா விசாரிச்சுப் பாத்துட்டு முடிவு பண்ணச் சொன்னாங்க. திடுதிப்புன்னு இப்படி முடிவு பண்ணிட்டீங்களேங்கறாங்க”, என்று மனைவி.

பல்லாயிரக் கணக்கில் மக்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து கொண்டு இருந்தாலும் ‘நமது கண்’ என்று வருகையில் ஒரு எச்சரிக்கை உணர்வு வருவதில் வியப்பேதுமில்லை. பல காலமாய் இது பற்றி யோசித்து வைத்திருந்து விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்ததில் எனக்குத் தயக்கம் பெரிதாய் இல்லை. தவிர, சில சமயங்களில் ஒரு குருட்டுத்தனமான பொதிவுணர்ச்சியை நான் பெற்று விடுவதும் உண்டு. அது போன்ற ஒரு சமயமாய் இருந்திருக்க வேண்டும் அப்போது.

2003 டிசம்பர் இறுதி வாரம். அன்றைய தினத்தில் கோவையிலேயே இரண்டு இடங்களில் லேசிக் சிகிச்சை முறை செய்யப்பட்டது. சுவாரசியமாக இவ்விரண்டு மருத்துவமனைகளும் அவிநாசி சாலையில் அருகருகே அமைந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் இப்போது இந்த வட்டாரத்திலேயே பிரபலம் என்று ஒரு மருத்துவ நண்பன் கூறியதாலும், இற்றை நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதால் என் போன்ற அதிக ‘பவர்’ இருப்பவர்களுக்கு அது அதிகப் பலனளிக்கலாம் என்று எண்ணியதாலும் அந்த இடத்தைத் தெரிவு செய்திருந்தேன். சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், மற்றும் கேரளாவில் இருந்தெல்லாம் பலர் இங்கு வந்து சிகிச்சை செய்து கொண்டு போகின்றனர். இரண்டு கண்களுக்கும் சேர்த்துச் செய்து கொள்வதற்கு அன்றைய விலை ரூ. 30 ஆயிரம்.

இங்குள்ள மருத்துவர்கள் கடந்த சில வருடங்களாகவே இந்தச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் இந்த அனுபவங்கள் நிறைய இருக்கின்றன என்றும் ஒரு ஆறுதல். இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்து கொள்வதில் நான் உறுதியாக இருந்தேன்.

“இதோ பாருங்க. பிரச்சினை வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு நெனைச்சா ஒரு கண்ண மட்டும் பண்ணிக்க நான் முடிவு செய்ய மாட்டேன்”, என்று வீட்டினருக்குத் தைரியம் சொல்லிவிட்டுச் சுற்றம் புடைசூழ ஒரு வேகத்துடன் தான் சென்று இறங்கினேன். அது கிறிஸ்துமஸுக்கு முன் தினம்.
Continue Reading »

« Newer Posts - Older Posts »