கண்கள் சொல்லும் கதை – 8
Feb 17th, 2006 by இரா. செல்வராசு
வட்டமாகச் சுற்றிய சும்மாட்டைத் தலை மீது வைத்துக் கீரையும் காயும் கூடையில் சுமந்து விற்கும் பெண்ணொருவரின் “கீரை அரைக்கீரை வெண்டக்கீரை” என்னும் அதிகாலை ராகம் தெளிவாகக் காதில் விழுந்த போது கண்விழித்துத் தான் இருந்தேன். இருந்தும் நெடுநேரமாய் எழுந்து கொள்ளத்தான் மனமின்றிப் படுத்திருந்தேன். ஒரு புலனில் குறையெனில் அதனை ஈடுகட்டும் வண்ணம் மற்ற புலன்கள் அதிகக் கூராகிவிடுமென்று எண்ணியிருக்கிறேன். அதனால் தான் பச்சை வண்ணக் கோழிமுட்டை வடிவக் காப்புக் கட்டியிருந்த என் கண்களுக்குப் பதிலாக, இப்போது காதுகள் தெளிவாகக் கேட்கின்றன போலும் என்று எண்ணிப் புன்முறுவல் செய்து கொள்ள முயன்றேன்.
லேசிக் மறுசிகிச்சைக்காகக் காத்திருந்த அந்த வாரம். முன்னிரவு தூங்கும் முன் ஊற்றிக் கொண்ட சொட்டுமருந்து விளிம்பில் பூழையாக மாறி இருக்கும். மெல்ல முயன்று இமைகளைத் திறந்து நீரில் நனைத்த ஈரப் பஞ்சு வைத்துக் கண்ணுள்ளே சென்று விடாதபடி கண்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கவனமாய் அந்தப் பணிவிடை செய்ய ஒரு மனைவி இருத்தல் சுகம்!
வீட்டுக்குள்ளேயே போட்டுக் கொள்ள ஒரு கருப்புக் கண்ணாடி. ஒரு வாரத்திற்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது என்று மருத்துவர் சொல்லிவிட, அதனால் என் வீட்டினரிடம் விளைந்த அதீத எச்சரிக்கை உணர்வு என்னை முகச்சவரம் கூடச் செய்ய விடவில்லை. குத்தும் முள் தாடியைத் தொட்டு ‘ஆ, குத்துது’ என்று விளையாடும் பெண்கள் சற்றுக் களிப்பூட்டினர்.
மனச்சக்தி குன்றும் சில நேரங்களில் ‘ஒருவேளை இந்த லேசிக் சிகிச்சையில் இறங்காமலே இருந்திருக்கலாமா’ என்று சலனப்படும் மனம். ஆனால், ஒன்றும் இல்லாத விதயங்களுக்கே ‘இப்படி ஆகிவிட்டதே உனக்கு’ என்று வீட்டினர் கவலையும் பச்சாதாபமும் படும் சாத்தியம் இருக்கிறது என்பதால், அதற்குப் பயந்தே அவர்களுக்கும் சேர்த்து மனோதைரியத்தை வளர்த்துக் கொண்டு என் தகைவை உதற முயன்றேன். அதிக பட்சம் என்ன ஆகிவிட்டது? இன்னும் கண் தெரிந்து கொண்டு தானே இருக்கிறது? பார்வைக்குப் பங்கம் இல்லை. ஒரு வாரத்தில் சரியாகவில்லை என்றால் மிஞ்சிப் போனால் வேறு கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டும் அவ்வளவு தானே.
“சத்தரத்து மாரியம்மனுக்குச் சாட்டியிருக்குதப்பா. உன் கண்ணுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கணுமுன்னு, கண்ணமுது சாத்தறதா வேண்டிக்கிட்டேன்”
கண் மருத்துவரை விடக் கருவிழிப் படம் சார்த்தினால் காத்தருள்வாள் மாரியம்மாள் என்று நம்பும் அம்மா.
“பெரிய டாக்டரு நமக்கு ஒருவகையில சொந்தம் தானுங்க. அவரு சொந்த ஊரு பொலவக்காளிபாளையம் தான். சொல்லியிருந்தீங்கன்னா முன்னாடியே சொல்லி அவரையே செய்யச் சொல்லி இருக்கலாம்” என்று கெவின் பேக்கனில் இருந்து ஆறு பாகைத் தொலைவு என்றாற்போல மருத்துவருக்கும் எனக்கும் முடிச்சுப் போட்ட சொந்தங்கள். சொந்தமென்றால் கவனமாகவும் பிறருக்கு அலட்சியமாகவும் வைத்தியம் பார்ப்பார் மருத்துவர் என்று நான் நம்பவில்லை. இருப்பினும் பெரியவரே செய்திருந்தால் இன்னும் சற்றுச் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற ஐயப்பாட்டை நீக்க முடியவில்லை.
ஆனாலும் இந்த நிலைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். முதலில் கண்களைப் பரிசோதனை செய்த போது தவறாகக் கணித்திருக்கலாம். பலரும் சோதித்துப் பார்ப்பதால் அப்படி இராது என்றாலும், ஒருவர் முதலில் செய்து எழுதிவிட்டால் சிலசமயம் அதன் அருகே இருந்தால் கூட, யோசித்துவிட்டு முதல் நபர் மேல் பாரத்தைப் போட்டு அது சரியாகத் தான் இருக்கும் என்று போயிருக்கலாம். இருந்தாலும், பத்தாம் வகுப்பில் பிப்பெட், ப்யூரட் வைத்துச் செய்த வேதியல் கூடத்துச் சோதனைகளா இவை? அப்படியெல்லாம் அவநம்பிக்கை கொள்ள அவசியம் இல்லை. இது நான் பழைய சீட்டை எடுத்துச் செல்லாததன் உறுத்தல் விளைவு.
சிகிச்சையின் போது கண்களை நிலையாய் வைக்க முடியாததன் காரணமாய் இருக்கலாம். ஆனால் அதற்குத் தான் இறுகத் திறந்து வைத்துச் செய்கிறார்களே. சிகிச்சை முடிவில் வறண்ட போதும் கண்களை திறந்து மூடியது காரணமாய் இருக்கலாம். அல்லது யார் கண்டது? வேண்டாம் என்று சொல்லியும் மதிய உணவில் சாப்பிட்ட கோழிக் குழம்பாகக் கூட இருக்கலாம் !
பலவாறு இப்படி யோசித்தாலும், இறுதியில், தானே வெகுவாக உணர்ந்து மனக்கஷ்டப்பட்டுப் பெரிய மருத்துவர் சொன்ன கருத்தையே ஏற்றுக் கொள்கிறேன். “இது நடப்பது அபூர்வம். இந்த மாதிரி வேறு யாருக்குமே நிகழவில்லை”.
மனிதன் ஒரு உயிரியல் மிருகம். பல பேரின் எதிர்வினையை அளந்து கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்ட போல்மத்தின் (model-இன்) படி செய்கிற சிகிச்சை இது. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஒன்றில் இப்படி சற்று விலகீடு ஏற்பட்டு விடுகிறது என்று விளக்க முயன்றார். “அது உங்களுக்கு ஏற்பட்டதில் வருந்துகிறேன். இருப்பினும் மீண்டும் சரி செய்து விடலாம். சிலருக்கு சிகிச்சைக்குப் பின் சில நாட்களில் சற்றுப் பார்வையளவு மாறும். அதனால் பொறுத்திருப்போம்”, என்றதாலேயே இந்த ஒரு வார ஓய்வு எனக்கு.
அது சரி தான். ஆனால் கண்களில் தூசு படாதிருக்க வெளியே எங்கும் செல்லாதிருக்க வேண்டும் என்று வீட்டுள்ளேயே சிறையிருந்தது தான் சிரமமாக இருந்தது. தொலைக்காட்சி பார்க்க வேண்டுமெனில் ஒரு கண்ணைப் பொத்திக் கொண்டு பார்ப்பதும், பத்திரிக்கைகள், செய்தித் தாள் படிக்க மறுகண்ணைப் பொத்திக் கொள்வதுமாகக் கழிந்தது நேரம்.
அதிலும் மருத்துவரே சிகிச்சையின் மறுநாளே எதையும் படிக்கலாம் என்று கூறியிருந்த போதும், எதையேனும் படிக்க அமர்ந்தால், “அதையும் இதையும் படிச்சுக் கண்ணுக் கெட்டுப் போயிரப் போவுது. வேண்டாம்னு சொல்லும்மா”, என்று வீட்டில் மனைவி வழியாகத் தூது வந்தது.
இருப்பினும் எதையும் நீண்டநேரம் செய்யமுடியாதபடி கண்ணயர்வு ஏற்பட்டு விடும். தவிர அடிக்கடி சொட்டுமருந்து இட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். சவரமில்லாத முகத்தாடி வேறு சற்றே அரிப்பெடுக்கும்.
“பாரியூர்ல தேர் பார்க்கப் போறோம். நீங்களும் வர்றீங்களா?” என்று பரிதாபப் பட்டுக் கேட்ட மனைவியிடம், வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இரண்டு நாள் கழித்து, “டைலர் கடை வரை போகணும். கடைவீதிக்குப் போறோம்” என்றவர்களிடம், “நானும் வரேன். காரிலேயே உட்கார்ந்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வெளியுலகம் பார்த்து வரப் போனேன். வழியில் தூரத்துச் சுவற்று விளம்பரங்களைப் படித்துப் பார்த்து “கண்ணு இப்போ நல்லாத் தெரியுற மாதிரி இருக்குது” என்று மகிழ்ந்து கொண்டேன், ஒற்றைக் கையில் ஒன்றைப் பொத்தி மறைத்தபடி!
ஒரு வாரம் ஓடிய போது, “இப்போ கொஞ்சம் முன்னேற்றம் இருக்குதுன்னு நினைக்கிறேன். அப்படியே விட்டுறலாம்னு டாக்டர் சொல்லியிருவாரு” என்றபடி மருத்துவமனைக்குச் சென்றேன். நன்றாகச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், மீண்டும் ஒருமுறை அந்த லேசிக் சிகிச்சைக்கு ஆட்படத் தயக்கமாகத் தான் இருந்தது.
முதலில் பரிசோதித்த சின்ன மருத்துவர்கள் “எப்படி இருக்கு?” என்று கேட்டதற்கு “நீங்க தான் சொல்லணும்” என்றேன்.
“ஆமாம் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு. இருந்தாலும் பெரிய டாக்டர் தான் பார்த்துச் சொல்ல வேண்டும்”, என்று சொல்லி விட்டார்கள்.
2004-ஆம் ஆண்டு அன்று பிறந்திருந்தது. மறவாமல் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னார்கள். சில மணி நேரக் காத்திருப்புக்குப் பின் பெரிய மருத்துவரைப் பார்த்தபோது, “கொஞ்சம் முன்னேற்றம் இருப்பது போல் இருக்குது. அப்படியே விட்டுவிட்டால் சரியாகிவிடுமா?” என்று கேட்க, “இல்லை. இன்னொரு முறை செய்துவிடுவது நல்லது. இன்னிக்கே ரெண்டு கண்ணிலும் மீண்டும் ஒரு முறை பண்ணி விட்டுடறேன்” என்றார்.
-(தொடரும்).
கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, கதை-7, இது-8, கதை-9
இப்ப படிக்க நல்லாயிருக்கு! ஆனா அப்ப?
என்னோட லேப் மேட் ஒரு பொண்ணு இந்த சிகிச்சை செஞ்சுகிட்டாங்க.
செல்வா,
இன்றுதான் இந்த தொடரின் எட்டு பதிவையும் படித்தேன்.கோர்வையாக அழகாக எழுதி உள்ளீர்கள். நானும் என் அக்காவிற்காக பாண்டிச்சேரி எல்லாம் சென்று உள்ளென்.
ஆனா செல்வராஜ் , கண்ணாடியில் நீங்க ரொம்ப அழகாக உள்ளீர்கள். எந்த பெரிய பிரச்சினையும் இல்லாட்டி நீங்க கண்ணாடியை கன்டினியு பண்ணலாமே?
நீங்க எந்த ஊரு? எங்க ஊருக்கு பக்கம் என்று ஒருமுறை சொல்லி உள்ளீர்கள்.
போல்மம் – நறுக்கென்ற வார்த்தை. போல, ஒப்ப -வெல்லாம் வேற்றுமை உருபுகள்னு நினைவுக்கு வந்தது.
//வேண்டாம் என்று சொல்லியும் மதிய உணவில் சாப்பிட்ட கோழிக் குழம்பாகக் கூட இருக்கலாம் !// அரண்ட கண்ணுக்குக் கோழியெல்லாம் பேய்!
//போல, ஒப்ப -வெல்லாம் வேற்றுமை உருபுகள்னு நினைவுக்கு வந்தது.//
எழுதி முடிச்சப்ப என்னமோ இடிச்சுச்சு. கூகுள்ள தேடிப் பாத்தப்ப தப்பா சொல்லிருக்கேன்னு தெரியுது. சரியானது கீழே, நன்றி மதுரைத்திட்டம்.
“உவம உருபுகள்”
போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே.
அழகாக எழுதி இருக்கிறீர்கள். ஒருமுறை என் கண்களில் UV தாக்கி (DNA பார்க்கும் எதிர்பார்ப்பில் இல்லாத ஒன்றை தேடி தேடி நீண்ட நேரம் அதன் அடியில் இருந்ததால்) இரண்டு நாட்களுக்கு கண்ணே தெரியவில்லை. பார்வை போய்விடுமோ என்ற பயம் வர மீண்டும் தெரியும் வரை நிம்மதி இல்லாமல் இருந்தது.
உவம உருபுகள் பாடல் மட்டும் எப்படியோ மறக்காமல் மூளையில் பதிந்துவிட்டது. அதை மீண்டும் படிக்க நேர்ந்ததற்கு நன்றி சுந்தரவடிவேல்
நண்பர்களுக்கு நன்றி.
சுந்தரவடிவேல், ‘போல்மம்’ எனும் சொல்லை இராம.கி அவர்களிடம் இருந்து தான் பிடித்து வைத்திருக்கிறேன். எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. உவம உருபுப் பாடலைக் காட்டியதற்கு நன்றி.
முத்து, ‘என்னைப் பற்றி’ இடது மேற்புறச் சுட்டியைப் பார்த்தால் கண்டிருப்பீர்கள் – எனது ஊர் ஈரோடு.
பத்மா, இரண்டு நாள் கண் தெரியவில்லை என்றால் சற்று பயப்படத் தான் வேண்டும் 🙂
பாவாணருக்கு நன்றி சொல்லுங்கள். நான் படித்ததைச் சொன்னேன். நல்ல சொற்கள் பரவினால் சரி.
எதுவும் தமிழால் முடியும் என்று எண்ணுவோம்.
அன்புடன்,
இராம.கி.
நன்றி இராம.கி ஐயா – பாவாணருக்கும் அதைப் பரப்பும் உங்களுக்கும். இது போன்ற பெரும்பாலான புதுச்சொற்களை நான் கற்றுக் கொள்வது உங்களின் பதிவுகளில் இருந்து தான். முடிந்த அளவு அவற்றைப் பாவிக்கவும் முனைகிறேன்.