கண்கள் சொல்லும் கதை – 3
May 15th, 2004 by இரா. செல்வராசு
புதிய நாட்டிற்குக் குடி பெயர்ந்துஒரிரு வருடங்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்தபோது, “அட, நாமும் ஏன் இந்தக் கண்ணுக்கு உள்ளே ஒரு ஆடியைப் போட்டுக் கொள்ளக் கூடாது?” என்று ஒரு ஆசை தோன்றியது. Contact lens (கண்ணுள்ளாடி?) பற்றி எப்படி யோசனை வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை ஒரு அறுபது டாலருக்குப் பரிசோதனை, கண்ணுள்ளாடி, அதற்கு வேண்டிய சாமான்கள் இவை எல்லாம் தருவோம் என்று பார்த்த விளம்பரமாய்க் கூட இருக்கலாம்.
சரிதான் என்று துணைக்கு இரண்டு பேரை அழைத்துக் கொண்டு சென்று விட்டேன். அது ஒரு கண்ணாடிக் கடையை ஒட்டியே இருந்த மருத்துவர் மனை. மருத்துவர் என்று சொல்வதை விடப் பரிசோதகர் என்று மட்டும் சொல்லலாமோ என்னவோ? இந்த ஊரில் இந்தியாவில் போல, கண் விரிய மருந்துஊற்றி நாற்பத்தியைந்து நிமிடம்உட்கார வைக்கவே இல்லை. இது என்னடாவென்று எனக்குநம்பிக்கையே வரவில்லை. “ஏன் அய்யா”என்று வினவ, “அதெல்லாம் தேவையில்லை தம்பீ. உனக்கு வேணும்னா சொல்லு, ஊத்தி விடறேன்” என்றார்!
இப்படி ஒரு சுமாரான பரிசோதனைக்குப் பிறகு, இது தான் உனது “பவர்” என்று ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார். அதோடு, அடுத்த அறைக்குச் சென்றால், அங்கேயே கண்ணுள்ளாடி வாங்கிக் கொள்ளலாம்; முதலில் அதனைப் போட்டுக் கொள்ளும் பயிற்சியும் அங்கேயே என்று அழைத்துச் சென்றார். இந்த உள்ளாடியைக் கருவிழியின் மேலள்ளவா கவனமாய் அணிந்து கொள்ள வேண்டும். சும்மா கண்ணாடி மாதிரி எடுத்துக் காதில் மாட்டிக்க முடிவதில்லையே.
எண்ணிப் பார்க்கையில், என்னவொரு விந்தையான பொருள் இது! இத்துளியூண்டு இருந்து கொண்டு என்னமாய் வேலை செய்கிறது ? சும்மா தொடுவதற்கு ஏதோ ஒரு வெங்காயத் தொப்பையைத் தொடுவது போலத் தான் ஒரு அழுத்தம். மென்மையாக இருக்கும் அதை வெகு சுலபமாக உள்ளிருந்து வெளிப் பக்கமாய் மாற்றி விடலாம். இவ்வளவு சின்ன ஒரு விஷயத்தில் எப்படி அப்படி சக்திக்குத் தகுந்த மாதிரி வடிவமைக்கிறார்கள் ? “இந்தக் காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி பார்” என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போனாலும், கண்ணாடி என்று ஒன்று கண்டுபிடித்து, அது கண் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்று ஆராய்ந்து, அதையும் இப்படிச் சிறிதாகச் செய்தாலே போதும் என்று நிர்ணயித்து, அதைச் செய்யும் முறைகளும் நுட்பங்களும்… வாவ்… எவ்வளவு வளர்ச்சி இந்த மானுடர்களது !
“இந்தாம்மா பொண்ணு. இவருக்கு இந்த உள்ளாடியைப் போட்டுக் கொள்ளப் பயிற்சி கொடு”. கடையில் பணிப் பெண்ணிடம் விட்டுவிட்டு நகர்ந்தார் பரிசோதகர்.
“இப்படி வாங்க சார்”, அமெரிக்கப் பெண்மணி ஆங்கிலத்தில் தான் பேசினார்.
“முதலில் இந்த உப்புத் திரவத்தில் நனைச்சுக்குங்க. அப்புறம் வலது ஆள்காட்டி விரலின் மேல் நுனியில் இந்த ஆடியை இப்படி உட்கார வச்சுக்குங்க. இடது கைவிரல்களாலே இமைகளை விலக்கிப் பிடிச்சுக்குங்க. அப்படியே ஒரு ஓரமாப் பார்த்துக் கொண்டு உள்ளே கொண்டு வையுங்க. அது அப்படியே ஜம்மென்று உட்கார்ந்து கொள்ளும்”
இடது கைவிரல்களை மீறி இமைகள் படபடத்தது தான் மிச்சம். கண் சிவந்ததே தவிர உள்ளாடி ஜம்மென்று எல்லாம் அமரவில்லை. கண்ணைப் பாதுகாக்கப் பழகிய இமைகளுக்கு, இந்த உள்ளாடி பகை பொருளல்ல என்று பழக்கச் சில மணித்துளிகள் பயிற்சி நிச்சயமாய்த் தேவைப்பட்டது. தூசு பட்ட மாதிரி ஒரு உறுத்தல், எரிச்சல்.
“ஆரம்பத்தில, தினமும் கொஞ்ச கொஞ்ச நேரம் போட்டுக்குங்க. மெல்ல மெல்ல அப்படியே பழகிவிடும்”
சிவந்த கண்களுடன் சற்றே சோர்வுடன் “சரிங்க” என்றேன்.
“எப்போதுமே முதலில் இடம்; பிறகு வலம் என்று அதே வரிசையில் போட்டுக்குங்க. குழம்பாம இருக்கும்” என்ற அவரது அறிவுரையைக் கடைசி வரை கடைப்பிடித்தேன் நான். இரண்டு கண்களிலும் வேறு வேறு “பவர்” என்பதால், சரியானதைச் சரியான கண்ணில் போட வேண்டுமே. அடுத்த ஆண்டுகளில், ஓரிரு முறைகள் தவறாய்ப் போட்டுக் கொள்ள நேரிட்டபோதும் உடனே தெரிந்து விட்டது. இரண்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் இருந்ததால் எனக்குப் பிரச்சினை இல்லை. இருப்பினும் அது ஒரு நல்ல அறிவுரை.
கழட்டி வைக்க மூடிகளுடன் கூடிய, L R என்று இரு அறைகள் கொண்ட ஒரு டப்பா. இரவில் அதனுள்ளே வைத்து ஊற வைக்க ஒரு உப்புத் திரவம். கண்களின் வழியே வந்து ஒட்டிக் கொள்ளும் புரதங்களைக் கழுவ ஒரு திரவம். கண்ணை அழுத்தி மூடிக் கொள்வதால் காற்றோட்டம் இன்றிக் காய்ந்து போகும் கண்களில் நீர் சுரக்கச் செய்ய ஒரு செயற்கைக் கண்ணீர்ச் சொட்டு மருந்து. இப்படியாக எல்லாச் சாமான்களையும் ஒரு பொட்டலமாய்க் கட்டி ஒரு கும்பிடும் போட்டு வழி அனுப்பி வைத்தார்கள்.
ஆரம்பத் தடங்கல்களுக்குப் பிறகு இந்தக் கண்ணுள்ளாடிகளைப் போட்டுக் கொள்வதும் கழட்டி வைப்பதும் வெகு சுலபமாகி விட்டது. தினமும் காலையில் எழுந்து போட்டுக் கொண்டு, இரவில் கழட்டி ஊற வைத்து, மீண்டும் உள்ளங்கையில் வைத்துத் தேய்த்துக் கழுவி என்று நிறைய வேலை வாங்கியது. இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.
பெரியதொரு கண்ணாடியை அணிந்திருந்தேனே, அதைக் காணோமே என்று பார்ப்பவர்களெல்லாம் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்த்து ஆய்வுக் கூடம் சென்றவனுக்கு ஒரு ஏமாற்றம் தான். பெரிதாய்ப் பலரும் அதை அவ்வளவு கண்டு கொள்ளவில்லை. ஓரிரு சிறு விசாரிப்புக்கள் அவ்வளவு தான்.
இருந்தாலும் என்ன ? சுமார் பத்துப் வருடங்களுக்குப் பிறகு, கண்ணாடிச் சட்டங்களுக்குள் சிக்கி இராத எனது கண்களும் முகமும் எப்படி இருக்கின்றன என்று என்னாலேயே, தெளிவாகப் பார்க்க முடிந்த அந்தச் சந்தோஷம் அன்று எனக்குப் பெரிதாக இருந்தது !
-(தொடரும்)
கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, கதை-7, கதை-8, கதை-9
Dear Selva,
Without the ‘KANNAADI’ you look very handsome.
Anbudan,
Tulsi
நல்ல பதிவு.
போச்சு கண்ணாடியைக் கழட்டிட்டார், கதையை முடிக்கப் போறார்னு நினைச்சேன். நல்ல வேளை தொடரும் போட்டீங்க!
//அமெரிக்கப் பெண்மணி ஆங்கிலத்தில் தான் பேசினார். //
லேசாய் விசிறிவிட்டுப் போகும் நகைச்சுவை!
ஆமா நீங்க இந்த பச்ச கலரு ஜிங்குச்சா கண்ணுள்ளாடியெல்லாம் வைக்கிறதில்லையா? 🙂
contact lens: தொடர்பு/தொடுப்பு/தொடு வில்லை??
/ஆமா நீங்க இந்த பச்ச கலரு ஜிங்குச்சா கண்ணுள்ளாடியெல்லாம் வைக்கிறதில்லையா? :)/
சுந்தரவடிவேலரே, போகிறபோக்கிலே அவரை நீயா பட ஸ்ரீபிரியா ஆக்கித்தான் விடுவீங்கபோலருக்கே 🙂
* நன்றி துளசி. தொடரும்போது என்ன சொல்றீங்க பார்க்கலாம் 🙂
* என்னங்க சுந்தர், சும்மா ஒரு படம் ஓசியில இணையத்துல புடிச்சுப் போட்டேன். அது ஒரு நீல நிறத் “தொடுவில்லை” மாட்டும் எதோ ஒரு பெண் (விளம்பரப்)படம். அதுக்காக நீங்க என்னைப் ஜிங்குச்சா கலர்லே போட்டுக்கலையாண்ணா கேட்பீங்க ! 🙂 அநியாயம்!
* இரமணி, என்னைச் ஸ்ரீபிரியா மாதிரி ஆகிவிடாமல் காப்பதற்கு நன்றி. contactக்குத் தொடு/தொடர்பு போல யோசித்துப் பார்த்தேன். சரியாய் வரவில்லை என்று தான் கண்ணுள்ளாடி எனப் பாவித்தேன். இலங்கையில் இது ஏற்கனவே பாவனையில் உள்ளதா ? வில்லை என்றால் எனக்குச் சூடம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
selvaraj, your photos remind ‘before…and..after’ type of advertisements!!!!
you can also try lasik laser. this will get you rid off the possible side effects of wearing contact lens. power correction using laser is excellent. this is my personal experience.
கண்ணாடி போட்டிருந்த போது சொட்டிய அறிவுக்களை கண்ணாடி இல்லாத போட்டோவில் மிஸ்ஸிங்.
ஆனா (வித்தியாசமா) நல்லாத்தான் இருக்கு.
செல்வராஜ், Lasik ஏற்கனவே செய்து கொண்டவரென்றால் சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் என்னிடம் தனியாக ஒரு வார்த்தை கேளுங்கள்.