கண்கள் சொல்லும் கதை – 6
Feb 12th, 2006 by இரா. செல்வராசு
“ஏம்ப்பா, எதுக்கும் ஒரு கண்ணுல பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு ரெண்டாவதப் பண்ணிக்கலாமில்ல? என்னாலும் ஆயிட்டா என்ன பண்றது?”, கவலையை வெளிப்படுத்தினார் அம்மா.
“ஆமாம். எங்கப்பா கூட நல்லா விசாரிச்சுப் பாத்துட்டு முடிவு பண்ணச் சொன்னாங்க. திடுதிப்புன்னு இப்படி முடிவு பண்ணிட்டீங்களேங்கறாங்க”, என்று மனைவி.
பல்லாயிரக் கணக்கில் மக்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து கொண்டு இருந்தாலும் ‘நமது கண்’ என்று வருகையில் ஒரு எச்சரிக்கை உணர்வு வருவதில் வியப்பேதுமில்லை. பல காலமாய் இது பற்றி யோசித்து வைத்திருந்து விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்ததில் எனக்குத் தயக்கம் பெரிதாய் இல்லை. தவிர, சில சமயங்களில் ஒரு குருட்டுத்தனமான பொதிவுணர்ச்சியை நான் பெற்று விடுவதும் உண்டு. அது போன்ற ஒரு சமயமாய் இருந்திருக்க வேண்டும் அப்போது.
2003 டிசம்பர் இறுதி வாரம். அன்றைய தினத்தில் கோவையிலேயே இரண்டு இடங்களில் லேசிக் சிகிச்சை முறை செய்யப்பட்டது. சுவாரசியமாக இவ்விரண்டு மருத்துவமனைகளும் அவிநாசி சாலையில் அருகருகே அமைந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் இப்போது இந்த வட்டாரத்திலேயே பிரபலம் என்று ஒரு மருத்துவ நண்பன் கூறியதாலும், இற்றை நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதால் என் போன்ற அதிக ‘பவர்’ இருப்பவர்களுக்கு அது அதிகப் பலனளிக்கலாம் என்று எண்ணியதாலும் அந்த இடத்தைத் தெரிவு செய்திருந்தேன். சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், மற்றும் கேரளாவில் இருந்தெல்லாம் பலர் இங்கு வந்து சிகிச்சை செய்து கொண்டு போகின்றனர். இரண்டு கண்களுக்கும் சேர்த்துச் செய்து கொள்வதற்கு அன்றைய விலை ரூ. 30 ஆயிரம்.
இங்குள்ள மருத்துவர்கள் கடந்த சில வருடங்களாகவே இந்தச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் இந்த அனுபவங்கள் நிறைய இருக்கின்றன என்றும் ஒரு ஆறுதல். இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்து கொள்வதில் நான் உறுதியாக இருந்தேன்.
“இதோ பாருங்க. பிரச்சினை வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு நெனைச்சா ஒரு கண்ண மட்டும் பண்ணிக்க நான் முடிவு செய்ய மாட்டேன்”, என்று வீட்டினருக்குத் தைரியம் சொல்லிவிட்டுச் சுற்றம் புடைசூழ ஒரு வேகத்துடன் தான் சென்று இறங்கினேன். அது கிறிஸ்துமஸுக்கு முன் தினம்.
கோவைத் தமிழும் கேரளத் தமிழும் கலந்து வீசி அங்கே கொஞ்சிக் கொண்டிருந்தது. வெவ்வேறு சீருடைகளில் பணிப் பெண்களும், தாதியர்களும், மருத்துவர்களும் நடமாடிக் கொண்டிருந்தனர். ‘Patient Care Executive’ என்று பலகை வைத்து ஒருவர் இன்முகத்தோடு வரவேற்றார். மருத்துவமனை என்றாலே மருந்து வாசமடித்துக் கொண்டிருக்கும் இடம் என்றில்லாமல் இப்படி ஒரு இனிய வரவேற்பைத் தர முயன்றதை வரவேற்கத் தான் வேண்டும். சில பல குறைகள் இருப்பினும் நுகர்வோர் சேவையாகத் திருப்திப் படுத்த எடுத்துக் கொண்ட நடைமுறைகளைக் கொஞ்சமாகவேனும் பாராட்டலாம்.
“வாங்க சார். முதல்ல ரெண்டாயிரம் கட்டிடுங்க. உங்களுக்கு லேசிக் பண்ற அளவுக்கு கண்ணின் ஆடி தடிமனாய் இருக்கா; வேறு அளவுகள் எல்லாம் ஒத்து வருமான்னு முதல்ல பரிசோதனை பண்ணிடுவோம். அது சரியா வந்துருச்சுன்னா பண்ணிடலாம்”, என்று அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொஞ்சம் வேகம் குறைந்து புஸ்ஸென்று தான் ஆகிவிட்டது.
ஒருக்கால் பரிசோதனையில் உங்களுக்கு லேசிக் பண்ண முடியாது என்று வந்துவிட்டால் என்ன செய்வது? நீண்ட கால ஆசையை விட்டொழித்துவிட வேண்டியது தான் என்று மனதுக்குள்ளே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் அப்படியொன்றும் இராது; செய்துகொள்ள முடியும் என்று உள்ளூர ஒரு நம்பிக்கை இருந்தது.
வரவேற்பறை நிறைந்திருந்தது. காத்திருந்தேன். காத்திருந்தோம். இரண்டு மூன்று அறைகளுக்குச் சென்று வெவ்வேறு தாதியர், மருத்துவர்கள் சொல்லிய இயந்திரங்களுள் எல்லாம் தலையை நீட்டி விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பெண்கள் இருவருக்கும் வெளியே இருந்த உணவகத்து ஐஸ்கிரீம் கிடைத்துவிடவே காத்திருப்பதில் மகிழ்ந்திருந்தார்கள்!
“பழைய சீட்டுக் கொண்டு வந்திருக்கின்றீர்களா?” என்ற கேள்விக்கு நான் முழித்த முழியைப் பார்த்தே இல்லை என்று அவர்கள் தெரிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். “சரி போட்டிருக்கிற கண்ணாடியக் கழட்டிக் கொடுங்க”, என்று அதன் மீது சில ஆடிகளை வைத்துச் சோதித்துப் பார்த்துக் கொண்டனர்.
மேலும் பல நிமிடங்கள் காத்திருப்புக்குப் பின் Patient Consultant என்றொருவர் அழைத்தார்.
“பரிசோதனை எல்லாம் முடிந்தது. உங்களுக்கு லேசிக் பண்ணி விடலாம். மதிய உணவு முடித்து விட்டு வந்துவிடுங்கள்” என்றார்.
“கறியுணவு மட்டும் சாப்பிடாதீர்கள்” என்று சொல்லி அனுப்பினார். அன்று பார்த்து உணவு சாப்பிடச் சென்ற சித்தி வீட்டில் எப்போதோ தான் வந்து போகிற பையனுக்கு நன்றாகச் சமைத்துப் போடவேண்டும் என்று ‘கோழிக் கறி குழம்பு’ செய்து வைத்திருந்தனர். வேண்டாம் என்று சொல்ல மனம் வராததால், கொஞ்சமாக மட்டும் சாப்பிட்டு விட்டு வந்தேன். சிகிச்சையின் போது மல்லாக்கப் படுத்துக் கிடக்க வேண்டும் என்பதால் அதிகம் சாப்பிட்டு அது நெஞ்சைக் கரித்துக் கொண்டு வந்தால் பிரச்சினை என்று தான் அப்படிச் சொல்லி இருப்பார்கள் என்று நானே ஒரு அலசு அலசி முடிவு செய்து விட்டேன். இல்லாவிட்டால் லேசிக் கதிர்களுக்கும் கோழிக்குஞ்சுக்கும் அப்படி என்ன பகை இருக்க முடியும்?
“என்ன சார் உங்கள இவ்வளவு நேரம் காணோம்?” என்று உள்ளே நுழைந்தவனை வரவேற்று, “போய் சிகிச்சைக்குத் தயாராகுங்க. இந்த சிஸ்டர் வந்து உங்க கண்ணச் சுத்தம் பண்ணி விடுவாங்க” என்று கை காட்டினார்கள். மதிய நேரத்தில் கூட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. பரிசோதனை பெரும்பாலும் காலையில், லேசிக் சிகிச்சை மதியம் என்று பிரித்து வைத்திருப்பதில் மிச்சம் இருந்த சிலர் சிகிச்சைக்கென்று இருந்தவர்கள் போலும். எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை எடுத்துப் போய் வெளியே இருந்த மருந்துக் கடையில் வாங்கி வந்து கொடுக்க வேண்டும். அட! முப்பதாயிரம் ரூவாய் வாங்குபவர்கள் இந்த மருந்து வாங்குகிற வேலையை வருபவர்களிடம் கொடுக்காமல் அவர்களே செய்துவிட்டால் என்ன? வேண்டுமானால் இன்னொரு முன்னூறு ரூவாய் சேர்த்துக் கொள்ளலாமே.
“உங்களையும் சேர்த்து இன்னிக்கு எட்டுப் பேருக்கு லேசிக் சிகிச்சை சார்”. வருடத்தின் கடைசி வாரம் என்பதாலும், அடுத்த நாள் கிறிஸ்துமஸ் விடுப்பு என்பதாலும் இன்று அதிகம் பேர் வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. “சராசரியா தினமும் நாலு அல்லது அஞ்சு பேர் தான் வருவாங்க”
ஏதோ ஒரு மஞ்சள் நிறத் திரவத்தைப் பஞ்சில் நனைத்து ஒரு கொங்கு சிஸ்டர் கண்களைச் சுத்தம் செய்துவிட்டார். கண்ணோரங்களில் சற்றே அழுந்திய மாதிரி இருந்தது. கண் பரப்பு மரத்துப் போவதற்கு ஒரு சொட்டு மருந்து என்று கொஞ்சம் சொட்டி விட்டனர். அதன் பிறகு அளவு எடுக்கிறேன் என்று ஏதேதோ நுண்கருவிகளைக் கண்ணுள் விட்டு அளந்த போதும் வலி தெரியவில்லை. இருப்பினும் ஒரு புறப் பொருளைக் கண்ணுள்ளே விட்ட கலக்கம் கண்களில் நீராக வெளிப்பட்டுக் கண் சிவந்தும் போனது. சின்ன மருத்துவர், பெரிய மருத்துவர் எல்லோரும் பார்த்த பிறகு என் முறைக்குக் காத்திருந்தேன்.
சிகிச்சை அறையின் வெளியே ஒரு சலனப் படத்திரை வைத்து உள்ளே நடக்கும் சிகிச்சையை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள். என்னுடைய கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டதாலும், கண்களில் இட்ட மருந்துகளின் விளைவாலும் என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒரு கணம் என் பழகிய கண்ணாடியை எண்ணிச் சோகமாய் இருந்தது. தூங்கிய, குளித்த நேரங்கள் தவிர எப்போதும் என்னோடே இருந்த ஒன்றினை இனிப் பிரியப் போகிறேன் என்கிற துயர் தான். சில சமயம் புதிய இடங்களில் குளிக்கிற நேரங்களில் கூடப் போட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். (இல்லாவிட்டால், எந்தக் குழாயை எந்தப் பக்கம் திருப்புவது என்றும் தெரியாமல் போய்விடுமே! 🙂 ). லேசிக் சிகிச்சை முழுவதுமாகக் குணப்படுத்தவில்லை என்றாலும், நிச்சயம் ‘பவ்ர்’ மாறி விடும். கண்ணாடி போட வேண்டி வந்தாலும் இனி இது உதவாதே. பிரியத் தான் வேண்டும் போலிருக்கிறது.
சிகிச்சைக்கு முன்னரே சற்று எச்சரிக்கைகளும் விடுத்தார்கள். “உங்க வயசென்ன?” என்று இரண்டு மூன்று முறை ஏன் கேட்டார்கள் என்று ஒரு புறம் கேள்வி ஓடிக் கொண்டிருந்தது. சில படிவங்களில் கையொப்பமும் வாங்கிக் கொண்டனர். அந்த நிலையில் படித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இது போன்றவற்றை ஏன் கண்களைத் தயார் செய்வதற்கு முன்பே கொடுத்துக் கையொப்பம் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தெரியவில்லை. எப்படியும் இதெல்லாம் ஒரு formality போல் தான் இருந்தது. படித்துப் பார்க்க வேண்டுமா என்பது போல் பொறுமையிழந்து பார்த்த அந்தப் பணிப் பெண்ணிடம், எப்படியும் இது எந்த முடிவையும் மாற்றப் போவதில்லை என்று கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டேன். பிறகு அதன் பிரதி ஒன்றைக் கேட்டும் தர மறுத்தது அமெரிக்காவில் இருந்தவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
ஒவ்வொருவராய் சிகிச்சைக்கு அழைக்கப் பட்டனர். ‘பழைய சீட்டைக் கொண்டு வந்திருக்க வேண்டுமோ?’, ‘எல்லா அளவுகளும் சரியாக எடுத்திருப்பார்களா?’, என்று பல கேள்விகள் தாறுமாறாய்க் குதித்தோடிக் கொண்டிருக்க, அதனூடே ஒரு வித அமைதியோடு கிடா வெட்டுக்குத் தயாராகும் ஒரு வெள்ளாட்டைப் போல் உணர்ந்தபடி என் முறையை எதிர்நோக்கி அமர்ந்திருந்தேன்.
-(தொடரும்).
கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, இது-6, கதை-7, கதை-8, கதை-9
//அதனூடே ஒரு வித அமைதியோடு கிடா வெட்டுக்குத் தயாராகும் ஒரு வெள்ளாட்டைப் போல் உணர்ந்தபடி என் முறையை எதிர்நோக்கி அமர்ந்திருந்தேன்.
//
Me too…