கண்கள் சொல்லும் கதை – 2
May 9th, 2004 by இரா. செல்வராசு
“ஒரு வருடம் கழித்து வந்து பாருங்க. மறுபடியும் பரிசோதித்துக் கொள்ளலாம்”, என்று கண் மருத்துவர் அனுப்பி விட, பிறகு அவர் சொல்லிவிட்டாரே என்று தினமும் பாலும் கீரையும் தவறாமல் எனது உணவில் சேர்க்கப்பட்டது. ஏதாவது சிறப்பு நாளன்று மட்டுமே விசேஷமாய் முட்டை சாப்பிட்ட காலம் போய், தினமும் ஒன்றிற்கு பதிலாய் இரண்டு, சிலசமயம் ஒருநாளில் மூன்று வேளையும் முட்டைசேர்ந்துகொள்ளும்.
வளரும் பருவத்தில் இப்படிச் சத்துணவு சாப்பிட்டதால், ‘குள்ளையனாக’ இருந்த நான் கிடுகிடுவென வளரத் தொடங்கினேன். “பாத்துங்க. மூணு முட்டையெல்லாம் வேண்டாம். ஜீரணத்துக்கு நல்லதில்லை”, என்று மறுமுறை மருத்துவர் கூறிய பிறகு தான் சற்று நிதானப்பட்டது. இப்படிச் சத்துணவாய்ச் சாப்பிட்டபோதும், ஒரு வருடம் கழித்துச் சோதனை செய்தபோது கண்பார்வை இன்னும் சற்று மங்கியிருந்தது(-3.5).
“இதத் தடுக்கறது கஷ்டம். வளர்ற வயசாச்சே” என்று மருத்துவர், இருபது இருபத்தியொறு வயது ஆகும் வரை மீண்டும் ஏற வாய்ப்பிருக்கிறது என்றார்.
அடுத்த ஆண்டுகளில் -3.5, -4.5, -5.5, -6.5 என்று அதிகமாகிக் கொண்டே இருந்தது என் கண் (ஆடியின்) “பவர்”. முதல் வருடம் அதிகமானபோது “ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகவேண்டும்” என்று ஏற்பட்ட மனக்கஷ்டம் பிறகு ஏற்படவில்லை. “இது இயற்கை” என்று பழக்கமாகி விட்டது.
ஒரு வசதி என்னவென்றால், “ரெண்டு நாள் கழிச்சு வந்து வாங்கிக்கப்பா”, என்று கண்ணாடிக் கடைக்காரர்கள் சொல்ல மாட்டார்கள். “கண்ணாடி இல்லாமல் கஷ்டங்க”, என்று இரண்டு மணி நேரத்தில் வாங்கிக் கொள்வதாய்ச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். அப்படி ஒருமுறை இரண்டு மணி நேரங்கள் சென்னை பாரீஸ் கார்னரில் எல்லாம் இலக்கின்றி அரைகுறைப் பார்வையுடன் அலைந்து கொண்டிருந்திருக்கிறேன்.
அப்போது சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு பருவத் தேர்வு விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல, வீட்டருகே இருந்த பள்ளி நண்பனொருவன் (மோத்தி), பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம் பற்றித் தகவல் ஒன்று சொன்னான்.
“இயற்கைப் பயிற்சி முறைகள் கொண்டு அரவிந்தர் ஆசிரமத்தில் இந்த மாதிரி கண் கிட்டப் பார்வை உள்ளவர்களுக்குச் சரி செய்கிறார்களாம். கொஞ்சமாவது பவர் குறையுதாம்!”.
அவனும் வருவதாய்க் கூற ஒரு வாரப் பயணமாகப் பாண்டிச்சேரிக்குக் கிளம்பினோம்.
மணிப்பாலில் இருந்து விடுப்புக்கு வந்திருந்த இன்னொரு பள்ளி நண்பன், எங்கள் கூட்டத்திலேயே கொஞ்சமாவது கலைக்கண் கொண்டிருந்த சம்பத்து (அல்லது அம்பத்தான்!) என்கிற, இன்று அமெரிக்காவில் சாம் (Sam) ஆகிப் போன சம்பத், தானும் உடன் வருவதாய்க் கிளம்பினான். அவனுக்கு இன்று வரை கண் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், architecture படித்துக் கொண்டிருந்த அவன் ஒரு தன்னார்வம் கொண்டு “பாண்டிச்சேரியின் பழைய காலத்து வீடுகள், கட்டிடங்கள் வித்தியாசமாய் இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை நான் கண்டு வரைந்து கொள்ள வேண்டும்”, என்று தன் நோட்டையும் பென்சிலையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டான்! இப்படியாய்த் தான் ஈடுபட்ட துறையில், செய்யும் தொழிலில் ஆர்வம் இருப்பது தான், இன்று சர்வதேச அளவில் பன்னிரண்டு நாடுகள் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் முதல் பரிசு வாங்கும் தகுதியை இவனுக்குத் தருகிறது என்று நான் நம்புகிறேன்.
பாண்டிச்சேரியில், அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த ஒரு வார அனுபவம் வித்தியாசமானது. தினமும் காலையில் கண்ணில் சொட்டு மருந்து விட்டுக் கொண்டு சூரிய ஒளியில் நிற்க வேண்டும். டென்னிஸ் பந்து ஒன்றை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என்று கண்களால் அதன் பாதையைப் பார்த்துக் கொண்டே கைகளில் மாற்றி மாற்றிப் பிடிக்கும் பயிற்சி ஒன்று. இருட்டறையில் மெழுகுவர்த்தி ஒளியில் சிறு எழுத்துக்களைப் படித்தல், கண்களுக்கு ஆவி பிடித்தல், இத்யாதி. இந்தப் பயிற்சிகளால் எல்லாம் பெரும் பயன் விளைந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாண்டிச்சேரியில் சுற்றிய அனுபவங்கள் இனிமையானவை.
காலையில் ஒரு மணி நேரத்தில் பயிற்சி முடிந்து விட, சம்பத் உடன் பல வித வீடுகள், கட்டிடங்கள் பார்க்கச் சென்று விடுவோம் (வெளியில் இருந்துதான்!). ஒருமுறை வாடகைக்கு மிதி வண்டி எடுத்துக் கொண்டு அரவிந்தர் இயக்கத்தினரால் நிர்மாணிக்கப் பட்டுக் கொண்டிருந்த சர்வதேசப் பகுதி என்று வழங்கப் பட்ட ஆரோவில் வரை சென்று பார்த்து வந்தோம். உருண்டை வடிவில் என்னவோ ஒரு கட்டிடம் (மந்திர்?) கட்டிக் கொண்டிருந்தார்கள்.
பிற நேரங்களில் கடற்கரைச் சாலையில் நடை, தமிழ்நாடு காபி ஹவுஸ்(?)ல் சாப்பாடு, நூலகம், எதிரே உள்ள பூங்கா என்று சுற்றித் திரிந்தோம். ஆசிரமத்தில் காலையில் ஓட்ஸ் (?) கஞ்சி. வாழ்க்கையில் முதன்முறையாக அங்கு தான் ஓட்ஸ் சாப்பிட்டதாய் நினைவு. மாலையில் ஆசிரமத்தில் தியான நேரமும் அமைதியான ஒன்று.
பயிற்சியின் முடிவில், “கண் ‘பவர்’ ஒரு 0.5 அளவிற்குக் குறைந்துள்ளது, பயிற்சியைத் தொடருங்கள்”, என்றார்கள். அரைகுறை நம்பிக்கை, சந்தேகம் இவற்றோடு மீண்டும் சென்னை விடுதிக்கு வந்து சேர்ந்தேன். டென்னிஸ் பந்து முதலான பயிற்சிகளை நண்பர்களின் கிண்டலையும் பொருட்படுத்தாமல் சிறிது காலம் தொடர்ந்து பார்த்து விட்டுப் பிறகு விட்டுவிட்டேன். கொஞ்சம் நஞ்சம் என்றால் பரவாயில்லை. என் போன்ற பெருங்கண்ணாடிகளுக்கு இந்த விளையாட்டுக்களால் எல்லாம் தெளியப்போவதில்லை என்று தெளிந்துவிட்டது.
இந்நேரம், என்னேரமும் என்னுடனேயே ஒட்டியிருந்த கண்ணாடி வாழ்க்கை பழகிப் போய் விட்டது. உறங்கும், நீராடும் நேரங்கள் தவிர, என்னேரமும் அது என்னுடனேயே இருக்கும். காலை எழுந்தவுடன் கண்ணாடி வைத்த இடத்தைத் தான் முதலில் கை தேடும்.
நாட்கள் நகர்ந்தன. “பவர்” ஏறியது. கண்ணாடியும் அதன் சட்டங்களும் கூட மாறின. உடைந்து போய் விட்டால் என்ன செய்வது என்று ஒன்றிற்கு இரண்டு ஜோடிக் கண்ணாடிகளோடு அமெரிக்காவுக்கும் ஒருநாள் வண்டி ஏறினேன்.
-(தொடரும்)
கண்கள் சொல்லும் கதை-1, கதை-2, கதை-3, கதை-4, கதை-5, -இடையுரை, கதை-6, கதை-7, கதை-8, கதை-9
கண்ணாடி உண்மையிலேயே உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குங்க….
You look handsome.. 🙂
டுபுக்கு, பாரி, நன்றி ! நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட் !! 🙂 🙂
பாருங்க; கண்ணை விட்டுட்டு கண்ணாடியப் புடிச்சிக்கிட்டாங்க. ஆனால், உங்கள் படங்களிலே இருக்கும் கண்ணாடிகளிலே “வலு” ஏறியிருப்பதாகத் தெரியவில்லையே.
ஆமா உங்க படத்தை எப்ப போடப் போறீங்க? :))))
உங்க முகம் எனக்கு பார்த்த மாதிரி நினைவுக்கே வரலயே, நீங்க வேறமாதிரி இருப்பீங்களோ!:)
ரமணிதரன், இந்தக் கருப்பு வெள்ளைப் படங்களிலெல்லாம் “வலு” அவ்வளவு சரியாத் தெரியாது. அதோடு கடைக்காரர்கள் கொஞ்சம் பரிதாபப்பட்டு சில நுட்ப விஷயங்கள் செய்து அதைக் கொஞ்சம் மறைக்க உதவினார்கள். சரி உங்க படத்தையும் போட்டுருங்களேன். ரெண்டு பேர் இங்க கேட்டிருக்காங்க. (சுந்தரவடிவேல், ரமணியிடம் தானே கேட்டீர்கள்?) பெயரிலி முகமூடி விலக்கினப்போ ஒன்னு போட்டிருந்தீங்களே.
தங்கமணி, நான் வேற மாதிரி இருப்பேன்னு எதிர்பார்த்தீர்களா ?
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்கமுடியுமா?
இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே!
😀
இல்லை செல்வராஜ், உங்களிடம்தான் கேட்டேன். அது ஜோக்கு :))
சுந்தர், “சரியான ட்யூப்-லைட்டா இருக்கியே”ங்கறீங்களா ? 🙂 என்ன செய்வது ? கொஞ்சம் புரியற மாதிரி தான் இருந்தது. இருந்தாலும் எல்லாம் விளக்கமா தெரிஞ்சுக்கணும்னு… நான் இப்படி எல்லாவற்றையும் ஆதியில இருந்து விளக்கு என்றிருப்பது சமயத்தில் சொல்ல வந்ததின் சுவையையே குறைக்கிறது என்று என் மனைவியும் என்னைக் கிண்டல் செய்வதுண்டு. (சில சமயம் சற்றே ஒரு எரிச்சலுடன்! 🙂 )
பரி, என்ன எங்க பார்த்தாலும் ஒரே பாட்டாப் போட்டுத் தள்றீங்க ? 🙂