Feb 9th, 2006 by இரா. செல்வராசு
“ராஜகுமாரா, கதையில் எனக்குச் சொல்ல இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது”, என்றன கண்கள். உறங்கும் நேரம் ஆகிக் கொண்டிருந்தாலும் அவை இன்னும் விழித்துக் கொண்டிருந்தன. பூப்பூவாய் வெளியே பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்கள் முன் வெளியே சென்று வந்தபோது ஒரு பனிப்பூ விழுந்ததில் நனைந்து குளிர்ச்சி அடைந்திருந்ததாய்க் காட்டிக் கொண்டிருந்தன.
சற்றே அவநம்பிக்கையுடன் கேட்டேன். “நீங்கள் சொல்லித் தான் ‘தொடரும்’ போட்டேன். ஆனால் இரண்டு வருடமாய் மௌனமாய் இருந்துவிட்டு… இப்போது நீங்கள் சொல்வதை நம்பச் சொல்கிறீர்களா?”
“நீ கூடத்தான் அடுத்த வாரம் முதல் உடற்பயிற்சி செய்வதாய்ப் பல வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். செய்கிறாயா?” என்று வகையாக மாட்டி விட்டன.
“…”
“இருந்தாலும், உன்னை நாங்கள் நம்புகிறோம். கடந்த காலம் எப்படி இருந்தாலும் மறந்துவிடு. இனி வருங்காலம் இனிமையாக இருக்கும்; நினைத்தது நடக்கும்; உன்னாலும் எண்ணியது செய்ய முடியும், என்றே நீயும் நம்பு”
எனக்கே அறிவுரை சொல்கின்றனவே என்று தோன்றினாலும் அந்தக் கருத்து எனக்கும் பிடித்த ஒன்றே. மென்மையானவை இந்தக் கண்கள். பனிக்குளிர் தாங்க வீட்டினுள் வெப்பக்காற்று வீச, அதனால் கொஞ்சம் ஈரப்பசை காய்ந்ததில் உறுத்தலுக்கு ஆளாகி இருந்தன. இந்தச் சிரமம் தாங்காமல் கவனத்திருப்பலுக்காக ஏதேனும் விளையாட முனைகின்றனவா என்றெண்ணிக் கேட்டேன்.
“நீங்கள் மீண்டும் தொடரத் தயாராய் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இருந்தாலும், இதனால் யாருக்கு என்ன பயன்? யார் வந்து ‘ம்’ கொட்டிக் கொண்டு கேட்கப் போகிறார்கள்?”
Continue Reading »
Posted in வாழ்க்கை | 2 Comments »
Jan 30th, 2006 by இரா. செல்வராசு
கடிதங்களுக்கென்று ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அதிலும் சின்ன வயதில் இருந்து பள்ளி நண்பன் எழுதிய கடிதத்தில் இருந்து பெரும்பாலானவற்றை இன்னும் சுமந்து திரியும் என்னைப் போன்றவருக்கு அதுவும் ஒரு அசையாச் சொத்துப் போல. இந்தியாவில் இருந்து திரும்பி வந்த இந்த முறை பழைய இரும்புப் பெட்டிக்குள் பொக்கிசமாய்ச் சேர்த்து வைத்திருந்த கட்டுக்களை எடுத்து வந்துவிட்டேன். வேண்டும் போது மீள்சென்று பார்வையிடலாம் என்கிற எண்ணமே ஒரு சுகந்தான். இத்தனையும் வைத்து என்ன செய்வது என்று எண்ணிச் சிலவற்றை எறிய முனைந்து பிறகு முடியாமல் மீண்டும் எடுத்துக் கட்டி வைத்துக் கொண்டவனைப் பார்த்த மனைவியின் பார்வையைக் குறித்தே ஒரு கடிதம் (கதை) எழுதலாம்! (திருமணத்திற்கு முன்பு ஆறு மாதங்கள் அநேகமாய் வாரமொன்றாய் எழுதிய கடிதங்கள் கூட ஒரு தனித் தொகுதியாய் பத்திரமாய் இருக்கிறது என்றே எண்ணுகிறேன் 🙂 ).
தங்கமணி – சுந்தரவடிவேல் இடையேயான கடிதங்கள் தனி வகையானவை. என்னுடைய, எனக்குவந்த கடிதங்கள் அந்த அளவிற்குச் சென்று ஆய்ந்ததில்லை. டீசே தமிழன் தனக்கு வந்த வெவ்வேறு வகையான கடிதங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவை வேறு வகை. ஆயினும் சுவையானவை. எல்லா வகைக் கடிதங்களுக்கும் பொதுமையான ஒன்று உள்ளதென்றால் அது வெறுங்காகிதம் வழியாய் உணர்வுகளை அனுப்பி உள்ளம் விடுகிற தூது தான். அதனால் தான் பழைய கடிதங்களானாலும் பழையதாகிவிடாத உணர்ச்சிகள் எப்போதும் பசுமையான நினைவுகளை மீட்டெடுக்கின்றன.
Continue Reading »
Posted in கடிதங்கள் | 11 Comments »
Jan 27th, 2006 by இரா. செல்வராசு
ஆகா, புல்லரிக்கிறது! கருத்துச் சுதந்திரக் காவலர்கள் உருவிய வாளுடன் களத்தில் குதித்து விட்டார்கள். தாறுமாறாய்க் காற்றில் வீசிக் கொண்டு அவர்கள் போடுகிற சத்தத்தில் எதைச் சொன்னாலும் காதில் விழாமல் போகிற இக்கு இருக்கிறதென்றாலும் சில தெளிவுகளை முன்வைக்க வேண்டும். முதலில், ஒரு சக வலைப்பதிவாளராகவே இதனை எழுதுகிறேன்.
உங்களது சுதந்திரத்திற்கு இப்போது என்ன ஐயா ஊறு நேர்ந்துவிட்டது? பதிவுகளின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது உங்கள் கொள்கைக்குப் புறம்பானது என்றால் விட்டுவிடுங்கள். யாரும் குரல்வளையைப் பிடித்துக் கொண்டு மிரட்டவில்லையே!
உங்களுக்கு என்று ஒரு உரிமை இருப்பதைப் போலத் தமிழ்மணம் என்கிற அமைப்பிற்கும் தனது கொள்கைகளை நிர்ணயித்துக் கொள்ளவும், வேண்டும் போது மாற்றிக் கொள்ளவும் உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது என்பதை நியாயம் உணர்ந்த எவரும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அந்த நியாயம் உணராதவர்கள் இவ்வமைப்பில் இணைத்துக் கொண்ட போது ஒப்புக் கொண்ட Terms and Conditions-ஐ மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி நினைவுறுத்திக் கொள்கிறேன்.
Continue Reading »
Posted in இணையம் | 22 Comments »
Jan 25th, 2006 by இரா. செல்வராசு
மடத்துவாசல் பிள்ளையார் கானாபிரபா மூன்று வருடங்களுக்கு முன்சென்று வந்த ஜப்பான் பயணம் பற்றி அருமையான ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நல்ல படங்களுடன் உணவு, கலாச்சாரம், எழுத்து, பழக்க வழக்கங்கள் என்று சகலமும் தொட்டு எழுதியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

அது சுமார் பதின்மூன்று வருடங்களுக்கு முன் ஜப்பான்/கொரியாவிற்கு நான் சென்று வந்த ஒரு பயணத்தை நினைவுபடுத்தி விட்டது. நினைவுகளின் மூலையைச் சுரண்டி ஒரு பதிவு எழுதலாம். அதைவிட, திரும்பி வந்தபின் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் அந்தப் பயணம் பற்றி ஒரு பத்தி எழுதியிருந்ததை எடுத்துப் போடலாம் என்று தோன்றியது.
யூனிகோடு, வலைப்பதிவு இவற்றிற்கெல்லாம் முந்திய காலம் அது. ஏன், அப்போது வலை என்பதே இன்றைய நிலையில் இல்லை. பலருக்கும் அனுப்ப வேண்டும் என்று, கனடாவின் முனைவர் ஸ்ரீனிவாசன் உருவாக்கிய ஆதமி என்னும் ஆங்கிலம்-தமிழ்-உருமாற்றி ஒன்றினைக் கொண்டு எழுதிய கடிதத்தின் நகல் ஒன்றைப் பத்திரமாக வைத்திருந்ததற்கு இன்று ஒரு பயன். அதிலிருந்து ஒரு பகுதி கீழே:
Continue Reading »
Posted in கடிதங்கள், பயணங்கள் | 4 Comments »
Jan 13th, 2006 by இரா. செல்வராசு
இரண்டு புள்ளிகளை வைத்து அவற்றினிடையே ஒரு நேர்க்கோடு வரையச் சொன்னால் சிறு குழந்தை கூட அழகாக வரைந்து விடும். நேர்க்கோடு எளிமையானது. அதனை வரைவதும் எளிமையானது. வரைகோட்டைப் பல வண்ணங்களால் அமைக்கலாமே தவிர வடிவம் என்பது அதற்கு ஒன்றே தான். அதே இரண்டு புள்ளிகளிடையே ஒரு நேரிலிக் கோட்டை வரையக் கிளம்பினால், வரம்பிலியாகக் கோடுகளை வரைந்து கொண்டே இருக்கலாம். நேரிலிக் கோடுகளின் சாத்தியங்கள் கணக்கில் அடங்காதவை.
வாழ்க்கையும் அதனையொட்டிய அனுபவங்களும் ரசனைகளும் கூட இப்படித் தான். ஆரம்ப நிலையில் ஒரு நேர்க்கோடாய் இருந்து புரிந்து கொள்ள எளிமையாகவும் சுளுவாகவும் இருக்கிறது. அது ஒரு குழந்தைக்கான புரிந்துகொள்ளலாய்க் குறுக்கிய வடிவம் கொண்டதாய் இருக்கிறது. அதுவே போதும் என்று நினைப்பவர்களுக்கு அந்த நிலையே ஒரு திருப்தியைத் தருகிறது. அதையும் தாண்டிச் செல்ல நினைப்பவர்களுக்கு நேரிலியாய்ப் பல அனுபவங்களைத் தந்து சுவை கூட்டுகிறது. இன்னும், ஒரு பரிமாணம் தாண்டிப் பல பரிமாண வெளியில் நோக்குகையில் நேரிலிக் கோடுகள் நேரிலி வடிவங்களாகி அவற்றின் பலக்கிய அழகைக் காட்டி ஆச்சரியப் படுத்துகின்றன.
காலச் சுழற்சியில் மாறிய காட்சியில் ஒரு அமெரிக்க இரவில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளியே குளிர். சென்ற வருடத்தை விட இந்த வருடம் சற்று மிதமான குளிர் தான். சில தினங்களுக்கு முன்னர் பனிக்கொட்டி வெட்ட வெளியில் வெண்மை விரிந்து கிடந்தது. சில நிமிடங்களே ஆனாலும் அன்று, பெற்ற பிள்ளைகள் பனியெறிதல் விளையாட்டில் குதூகலித்தது நிறைவாய் இருந்தது. கதிரவனைக் காண்பது அரிதாய் இருக்கிற காலம் என்றாலும் சமீபத்தில் வீசிய கதிரொளி பனியைக் கரைத்துச் சென்றுவிட்டது. காலம் சுழலும். மீண்டும் பனி வரும். பனியெறிதலும் பனிச்சறுக்கும் கூடவே வரும்.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 12 Comments »