Feed on
Posts
Comments

“நாங்க வர்றப்போ தரையெல்லாம் பச்சையா புல் இருந்துச்சு. மரத்துல இலை இருந்துச்சு.
இன்னிக்குக் கிளம்பிப் போனா வெள்ளையா பனி தான் இருக்கும். குளிரும்.
இருந்தாலும் எனக்கு ஜாலி தான்”

MSPaint Art (c) Nandhitha

இந்தப் பட ஓவியர் நந்திதா. என் மகளே. பெரியவளின் படத்துக்குப் போட்டியாக இவளும் வரைவேன் என்று கிளம்பி MSPaint வழியாய் இப்படி ஒன்றைப் படைத்தது எனக்கும் ஆச்சரியமே. ஆரோக்கியமான போட்டி என்பதை வரவேற்கலாம் தான்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

“…நாளைக்கு எல்லாக் கோயில்களையும் வெட்டி விடலாம்” என்றேன்.

விரைந்து செல்லும் வண்டியின் பின்னாலோ பக்கவாட்டிலோ கீழே தரையைப் பார்த்திருந்தீர்களானால், நேர் கீழே உள்ள சாலை ஒரு அவசரகதியில் ஓடிப்போவதைப் பார்த்திருக்கலாம். சற்றே எட்டிப் பின்னே பார்வையைச் செலுத்தினால் ஓடுகிற சாலையின் வேகம் கொஞ்சம் மிதமாவதையும், இன்னும் சற்றே தள்ளி ஒரு சடத்துவ நிலையை அடைவதையும் அவதானிக்கலாம். ஒரு பெரும் சமுத்திரத்தை ஓடிச் சென்றடையும் நதியைப் போல. ஆனால் சாலையோட்டத்தின் இந்த வித்தியாசங்களோ நம் பார்வையில் மட்டும் தான். இருந்து பார்க்கும் இடம் பொருத்து நிலை மாறுபட்டிருந்தாலும், சாலை என்பது ஒன்றே.

பின்னிருக்கையில் அமர்ந்தபடி சாலையாராய்ச்சி செய்தபடி உஜ்ரேவில் கிளம்பி உடுப்பியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ‘எல்லாக் கோயில்களையும் வெட்டி விடலாம்’ என்று முதலில் எண்ணினாலும், இவ்வளவு தூரம் வந்துவிட்டு முக்கியமான இடங்களைப் பார்க்காமல் செல்வது வெட்டியாகத் தோன்றியது. நாள் முழுதும் பயணித்து இன்னும் மூன்று நான்கு கோயில்களுக்கும் சென்று விடலாம் என்றாலும், சிறுசுகளுக்காக ஒரு கடற்கரையைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும் என்று கொடி உயர்த்தப்பட்டது. எந்த ஒரு பயணமானாலும், ஆறோ, வாய்க்காலோ, சிற்றோடையோ, அருவியோ, கடலோ, ஏதோ ஒரு நீர் நிலை உள்ள இடத்தைச் சேர்த்துக் கொண்டோமானால் அது தரும் இனிமையே தனி.

Panambur Waves

இப்படி முன்பதிவில் ஒரு கடற்கரைக்காகப் பாதி நாள் ஒதுக்கப் பட்டுவிட, மிச்சமிருக்கிற நேரத்தில் முடிந்த இடங்கள் போக முடிவு செய்யப் பட்டது. சிருங்கேரியில் துள்ளும் துங்கபத்திரை மீன்களைப் பார்க்கவென்று ஒருவருக்கு ஆசை; எம்.ஜி.ஆர் புகழ் கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்று இன்னொருவருக்கு; ஹொரநாடு(?) அன்னபூர்னேஸ்வரி கோயில் அற்புதமாய் இருக்கும் என்று ஒருவருக்கு; உடுப்பி மிக அருகிலேயே இருக்கு, அங்கு போகாமல் எப்படி என்று ஒருவருக்கு; பேலூர், சரவணபெலகோலா, ஹளபேடு என்று எப்போதும் சேர்ந்து வரும் இந்த மூன்று இடங்களும் பற்றியும் ஒரு யோசனை; ரெண்டு நாள் குடுங்க எல்லாத்தையும் பாத்துரலாம் என்று ஓட்டுனரின் யோசனை; இப்படியாகப் பலவித கலந்துரையாடல்களுக்குப் பிறகு இருக்கிற நேரத்தில் உடுப்பிக்கும் மங்களூருக்கும் மட்டும் சென்று வருதலே உசிதம் என்று முடிவு செய்து கிருஷ்ண பரமாத்மாவைக் காணச் சென்று கொண்டிருந்தோம்.

Continue Reading »

பெங்களூர்ல நாலஞ்சு நாளா மழையில்லை. நல்லா வெய்யலடிக்குது.
சென்னையில தான் புயல்/மழை வருதுன்னு சொல்றாங்களே 🙁

Sunny Day - by Nivedhitha, 08 Dec 2005

ஓவியர் நிவேதிதா, என் மகள். அறி|புனை அருளிடம் சிஷ்யையாகச் சேர்த்து விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். 🙂

…”காலையில ஏழு மணிக்குக் கிளம்பிவிடலாம்” என்று…

பெருசுகள் ஆறும் குஞ்சு குளுவான் நான்குமாக மைசூரில் இருந்து மங்களூர் நோக்கிக் கிளம்பிய பயணத்தில், ஒரு குவாலிஸ் வண்டியின் பின்னிருக்கையில் அடைந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். கிளம்பும்போது மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. மூக்கின் நுனியில் சில முத்துக்கள் வியர்த்திருந்த என் சின்ன மகள், பின்னோக்கி நிலை குத்திய பார்வையில் ஏதோ கனாக் கண்டு கொண்டிருந்தாள். சில தினங்களுக்கு முன் தான் ஐந்து வயதாகி விட்டதன் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்திருந்தாள். இந்த வயதில் இவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று வியந்தபடி நந்திதாவின் கனவுலகச் சஞ்சாரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் தள்ளியிருந்து ரசித்துக் கொண்டிருந்தேன். இது இவளுடைய ஆன்மா தன் ஊற்றான இயற்கைச் சக்தியோடு இயைந்து கொண்டிருக்கும் அகப்பாட்டு நேரமா? வெளியே இரு மருங்கிலும் மரங்கள் தலையாட்டியவண்ணம் இருந்தன.

வியர்த்த மூக்கில் என் பார்வையை உணர்ந்து கொண்டவள் சட்டெனத் தன் மோனநிலையில் இருந்து வெளிவந்து சிறு வெட்கத்துடன் புன்சிரித்தாள். அந்தச் சில நிமிடங்களையே மறைத்துவிட வேண்டும் என்று எண்ணியது போல் காட்சியை மாற்றிச் சாலையைச் சுட்டி, “யக்கி மட் (yucky mud) அப்பா”, என்றாள். முன் தின மழைநீரில் நனைந்த செம்மண் ஒரு கலவைச் சேறாகக் கிடந்தது. அங்கே சாலை போடும் இயந்திரம் ஒன்றன் அருகே வாலைச் சுருட்டிக் கொண்டு நாயொன்றும் கூட இருந்தது.

சாலையோரமாய்ச் சறுக்கிச் சாய்ந்திருந்த பொதிசுமந்த லாரி ஒன்றைத் தாண்டிச் செல்லும்போது, “மங்களூர் நெடுஞ்சாலையை அடைந்துவிட்டால் அதற்குப் பிறகு சாலை நன்றாக இருக்கும் சார்”, என்றார் ஓட்டுனர். முன்னர் பயணித்திராத சாலையில் செல்வது எப்போதும் இனிமையான அனுபவம் தான். இடையில் வந்த சிற்றூர் ஒன்றில் சீருடை அணிந்து சிறுவர் சிறுமியர் பள்ளி சென்று கொண்டிருந்தனர். ஊரைத் தாண்டிச் சிலதூரம் இருபுறமும் வயல் சூழ்ந்திருந்தது. சாலையை ஒட்டி ஓடிக் கொண்டிருந்த நீரோடையில் பழைய தயிர்சாத டப்பாவைக் கழுவிக் கொள்ள முடிந்தது. தூரத்தில் பழைய மதில் சுவர் கொண்டிருந்த கட்டிடம் ஏதோ ஒரு கோயிலாய்த் தான் இருக்க வேண்டும். யாரும் எதிர்பாராத நேரத்தில் அங்கிருக்கும் பழைய மணியை யாரோ அடிக்க, சோம்பி எழும் மணியொலியின் திசையை நோக்கி ஆடு மேய்க்கும் பெரியவர் தலைசாய்த்துப் பார்ப்பாராய் இருக்கும் என்று கற்பனை விரிகிறது.
Continue Reading »

… கொட்டிக் கொண்டிருந்த மழையினூடே இன்னும் கொஞ்சம் குண்டுகுழியில் குலுங்கிக் கொண்டு மைசூர் நோக்கித் தொடர்ந்தோம்.

மைசூர் சாமுண்டீஸ்வரிக்கும் எனக்கும் முன்பின் அறிமுகம் இல்லை. இப்போது தான் சந்திக்கிறேன் என்றாலும் குறுகிய காலத்திற்குள் நான்கு முறை அவரைச் சந்தித்து விட்டதற்கு அவர் மீது என் நண்பர் ஒருவர் வைத்திருக்கும் அதீத அன்பு தான் காரணம். மைசூர் மகாராஜாவுக்கு அடுத்து மகிஷாசுர மர்த்தினி இவருக்குத் தான் குடும்பத் தெய்வமாக இருப்பார் போலிருக்கிறது! “எனக்கு இங்க வரதுக்கு ரொம்பப் புடிக்கும்” என்று ரொம்பச் சொல்லிவிட்டார். செல்பேசி சகிதம் கோயிலின் உள்ளே இருக்கிற ஒருவரின் தொடர்பு கொண்டு வருகிற நேரம் சொல்லி விட்டால் சிறப்பு நுழைவும் பூஜையும் நிச்சயம் உண்டு இவருக்கு.

Chamundeeswari 1

தசரா அன்று உட்தொடர்பர் வரச்சொன்ன நேரத்திற்குச் செல்லாமல் சிறிது தாமதித்து விட்டதில் சாமுண்டி மலையில் சிறப்பு வழியிலும் காத்துக் கிடக்க வேண்டியதாகப் போய்விட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த செங்கொடை பூரண கும்ப மரியாதை எல்லாம் பார்த்து, ‘ஆகா நமக்கு இவ்வளவு மரியாதையா’ என்று நினைக்கையில் ‘தள்ளுபா’ என்றொரு கூட்டம் ஓரத்தில் ஒதுக்கி விட, வாசல் வரை வந்து நின்ற காரில் இருந்து மனைவியோடு இறங்கி உள்ளே நடந்தார் கர்னாடக முதல்வர் தரம் சிங். நாலடித் தூரத்தில் எந்த மாநில முதல்வரையும் நான் பார்த்ததில்லை. அது சரி, கர்நாடக முதல்வர் ஏன் ‘சிங்’ என்று சீக்கியர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார் ? 🙂

Chamundeeswari 2

போனால் போகிறது! மகாராஜாவிற்கு அடுத்து இந்த மக்களாட்சி ராஜாக்கள் இருந்துவிட்டுப் போகட்டும் என்று இவரையும் ஆளுனரையும் உள்ளே விட்டு விட்டு, அதன் பிறகு நாங்கள் சென்றோம். உடன் வந்த ஒரு நண்பரின் மனைவி, “பாத்தீங்களாண்ணா, நாமெல்லாம் முன்பே வந்து காத்துக் கிடக்க, இவங்கல்லாம் ஜம்முன்னு வந்து உள்ளே போறாங்க” என்று பொருமினார். குறுகுறுப்பில் சற்றே நெளிந்து,

“நீங்க சொல்றது சரி தாங்க. ஆனா, ஒரு வகையில நாம கூடத் தான் சிறப்பு வழின்னு மத்தவங்களுக்கு முன்னால போறோம். அதனால…” என்று நான் இழுக்க,

“சரி. சரி. நான் சொன்னதுமே நீங்க இப்படித் தான் சொல்வீங்கன்னு நெனச்சேன்” என்றார்.
Continue Reading »

« Newer Posts - Older Posts »