மங்களூர்ச் சாலையில் குக்கே தர்மசாலா
Dec 8th, 2005 by இரா. செல்வராசு
பெருசுகள் ஆறும் குஞ்சு குளுவான் நான்குமாக மைசூரில் இருந்து மங்களூர் நோக்கிக் கிளம்பிய பயணத்தில், ஒரு குவாலிஸ் வண்டியின் பின்னிருக்கையில் அடைந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். கிளம்பும்போது மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. மூக்கின் நுனியில் சில முத்துக்கள் வியர்த்திருந்த என் சின்ன மகள், பின்னோக்கி நிலை குத்திய பார்வையில் ஏதோ கனாக் கண்டு கொண்டிருந்தாள். சில தினங்களுக்கு முன் தான் ஐந்து வயதாகி விட்டதன் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்திருந்தாள். இந்த வயதில் இவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று வியந்தபடி நந்திதாவின் கனவுலகச் சஞ்சாரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் தள்ளியிருந்து ரசித்துக் கொண்டிருந்தேன். இது இவளுடைய ஆன்மா தன் ஊற்றான இயற்கைச் சக்தியோடு இயைந்து கொண்டிருக்கும் அகப்பாட்டு நேரமா? வெளியே இரு மருங்கிலும் மரங்கள் தலையாட்டியவண்ணம் இருந்தன.
வியர்த்த மூக்கில் என் பார்வையை உணர்ந்து கொண்டவள் சட்டெனத் தன் மோனநிலையில் இருந்து வெளிவந்து சிறு வெட்கத்துடன் புன்சிரித்தாள். அந்தச் சில நிமிடங்களையே மறைத்துவிட வேண்டும் என்று எண்ணியது போல் காட்சியை மாற்றிச் சாலையைச் சுட்டி, “யக்கி மட் (yucky mud) அப்பா”, என்றாள். முன் தின மழைநீரில் நனைந்த செம்மண் ஒரு கலவைச் சேறாகக் கிடந்தது. அங்கே சாலை போடும் இயந்திரம் ஒன்றன் அருகே வாலைச் சுருட்டிக் கொண்டு நாயொன்றும் கூட இருந்தது.
சாலையோரமாய்ச் சறுக்கிச் சாய்ந்திருந்த பொதிசுமந்த லாரி ஒன்றைத் தாண்டிச் செல்லும்போது, “மங்களூர் நெடுஞ்சாலையை அடைந்துவிட்டால் அதற்குப் பிறகு சாலை நன்றாக இருக்கும் சார்”, என்றார் ஓட்டுனர். முன்னர் பயணித்திராத சாலையில் செல்வது எப்போதும் இனிமையான அனுபவம் தான். இடையில் வந்த சிற்றூர் ஒன்றில் சீருடை அணிந்து சிறுவர் சிறுமியர் பள்ளி சென்று கொண்டிருந்தனர். ஊரைத் தாண்டிச் சிலதூரம் இருபுறமும் வயல் சூழ்ந்திருந்தது. சாலையை ஒட்டி ஓடிக் கொண்டிருந்த நீரோடையில் பழைய தயிர்சாத டப்பாவைக் கழுவிக் கொள்ள முடிந்தது. தூரத்தில் பழைய மதில் சுவர் கொண்டிருந்த கட்டிடம் ஏதோ ஒரு கோயிலாய்த் தான் இருக்க வேண்டும். யாரும் எதிர்பாராத நேரத்தில் அங்கிருக்கும் பழைய மணியை யாரோ அடிக்க, சோம்பி எழும் மணியொலியின் திசையை நோக்கி ஆடு மேய்க்கும் பெரியவர் தலைசாய்த்துப் பார்ப்பாராய் இருக்கும் என்று கற்பனை விரிகிறது.
மதிய உணவிற்குக் குக்கே சுப்பிரமணியர் கோயிலுக்கும், இரவுணவுக்குத் தர்மசாலா மஞ்சுநாதர் கோயிலுக்கும் சென்று விடலாம் என்ற திட்டம் என்னவோ நன்றாகத் தான் இருந்தது. ஆனால், கிளம்பிய நேரமும், வண்டி மேலே பெட்டி கட்டவும், பெட்டி கட்டக் கயிறு வாங்கவும், வழியிலே பாட்டுக்குறுவட்டு தேடியதும், காலையுணவின் போதே கால்நீட்டி உட்கார்ந்து கொண்டதுமாகச் சற்றுத் தாமதமாகித் தான் போனது.
ஹாசனைத் தொடாமல் தாண்டிச் சென்று கொண்டிருந்தோம். ஓட்டுனர் கூற்று உண்மை தான். நெடுஞ்சாலை நன்றாக இருந்தது. எங்கோ வழியில் ‘இது தான் தேவே கவுடா வீடு’ என்று காட்டினார்கள். சக்லேஷ்பூர் வரைக்கும் சாதாரணமாய் இருந்த சாலை அதன் பிறகு வந்த மலைப்பாதையில் பேரழகைக் காட்டியது. ஏதாவது ஒரு வகையில் பார்த்த இடத்தோடு ஒப்பீடு செய்து கொள்ளும் மனம் இங்கே எனக்கு அமெரிக்க வட கரோலினா, டென்னசீ பகுதியில் உள்ள ‘ஸ்மோக்கி மவுண்டென்ஸ்’ ஐ இழுத்து வந்தது. அங்கங்கே திருப்பங்களில் வண்டிகள் கவிழ்ந்திருந்து ‘பகலிலே போனால் நலம்’ என்னும் நண்பர்களின் எச்சரிக்கைக்கு நன்றி சொல்ல வைத்துக் கொண்டிருந்தது. மலைப்பகுதியில் நெடுமரங்களும் சிற்றோடைகளும் நுண்ணருவிகளுமாய் நிகழ்பொழுது ஒரு மந்திரமாய் இருந்தது.
பிரதான சாலையில் இருந்து கிளை பிரிந்து சுமார் பதினைந்து கி.மீ தொலைவு சென்றால் குக்கே வந்துவிடும் என்றாலும், மிகவும் மோசமாய் இருந்த சாலையால் அரை மணி நேரத்துக்கும் மேலானது. ஒருபுறம் இந்தச் சாலையை எல்லாம் நன்றாகச் செப்பனிட்டுப் பயணிகளின் வசதியைப் பெருக்கி வைக்கலாமே என்று தோன்றியது. மறுபுறம் அப்படி அதிகரித்த வசதி கொண்ட இடங்களுக்குப் படையெடுத்து வரும் நம் மக்களால் இந்தப் பொற்சூழலே மாசுபட்டுப் போய்விடுமே என்ற ஆதங்கத்தை ஆங்காங்கே கிடந்த நெகிழிப்பைக் குப்பைகள் உண்டாக்கின. அதோடு பொதுக் கழிப்பிட வசதிகளும் இல்லாமை இந்தியச் சுற்றுப் பயணங்களில் ஒரு பெருங்குறையாகவே இருக்கிறது.
குக்கே சாமி சுப்பிரமணியரைப் பார்க்க மேற்சட்டையைக் கழட்டி விடவேண்டும். இது போன்ற விதிகள் இன்னும் பல இடங்களிலும் இன்னும் இருக்கின்றன. இது எதற்கு என்று நண்பர்கள் விவாதித்துக் கொண்டோம். பழங்காலத்தில் மேற்துண்டு மட்டுமே போட்டிருக்கும் மக்கள் இறைவன் முன்னிலையில் ஒரு மரியாதை நிமித்தமாய்த் துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ளும் வழக்கமே இந்நாளில் இப்படி மருவி வந்திருக்கிறது என்று நண்பர் கூறினாலும், அந்த மருவல் சட்டையைக் கழட்ட வேண்டியதில்லை என்னும் அளவிற்கும் வந்திருக்கலாமே என்று தோன்றியது. உள்ளே பாதித் தூரத்துக்கு வரிசையாகச் செல்ல வைத்துவிட்டுப் பக்த கோடிகளை ஒரு நிலைக்குப் பிறகு கும்பலாய்ப் போக விட்டுவிட்டதன் சூட்சுமம் எனக்குப் புரியவில்லை. கோயில்களுக்கும் கூட சரியான மானகை, மேலாண்மை, அமைப்புமுறை வேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு சுப்பிரமணிய சாமிக்கு ஒரு ஹலோ மட்டும் சொல்லிவிட்டு வந்தேன்.
குக்கேயில் கிளம்பி தர்மசாலாவிற்கு வந்து நிற்கையில் இருட்டிவிட்டிருந்தது. தசரா சமயத்தில் போனால் தர்மசாலாவில் கூட்டம் இருக்காது என்று இரண்டு மூன்று பேர் என்னிடம் பொய் சொல்லி விட்டார்கள். சொன்னதற்கு மாறாகப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. இரண்டு மூன்று தங்கும் விடுதி எதிலும் இடமில்லை என்று சொன்னாலும், அங்கும் கூட ஏதோ ஊழல் நடக்கிறது என்கிற சந்தேகம் தான் எழுந்தது. அறை காலியிருப்பு நிலை பற்றிய தகவல் கூடச் சரியாகத் தெரிவிக்கப் படவில்லை. தகவல் பதுங்குகிறதென்றாலே அங்கே ஊழலுக்குக் காலூன்றப் படுகிறது என்பது தான் பொருளாய் இருக்க முடியும். இது ஒத்து வராது என்று அருகில் உள்ள ‘உஜ்ரே’ வுக்குச் சென்று விடுதியில் தங்கிக் கொள்ள முடிவு செய்தோம்.
கோயில் மூடி விடும் முன்னர் மஞ்சுநாதரைப் பார்த்துவிடலாம் என்று அங்கும் இருந்த வரிசையில் சென்றோம். கூட்டத்தில் பார்க்கிற சாமி பெரிதாக நினைவில் இருப்பதில்லை என்றாலும், பயணம் முடிந்து வந்த பின் எங்கு பார்த்தாலும் ‘மஞ்சுநாதர்’ கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தார். டாக்டர். மஞ்சுநாத், மஞ்சுநாதா ஸ்டோர்ஸ், மஞ்சுநாதா ஏஜென்சீஸ், என்று திரும்பிய பக்கமெல்லாம் பெங்களூரிலேயே நிறைந்திருந்தார்.
தர்மசாலாவிற்கு வந்துபோகும் அனைவருக்கும் தொடர்ந்து சாப்பாடு போட்டுக் கொண்டேஏஏ இருக்கிறார்கள். அதுவே ஒரு பெரிய வேலை. சாதனை. காலையில் இருந்து அலைந்த களைப்பிலும் பசியிலும் சோர்ந்திருந்த மகளுக்குப் பருப்பு ரச சாதம் தெம்பை அளித்திருக்க வேண்டும். எல்லோரும் இலை மூடி எழுந்திருக்க இருக்கையில் “அப்பா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்”, என்றாள். மஞ்சுநாதரைப் பார்க்கவென்று இல்லையென்றாலும் பாக்கு மட்டை இலையில் பருப்பு ரச சாதம் வாங்கி என் மகள் நிவேதிதாவுக்குக் கொடுக்கவாவது மீண்டும் ஒருமுறை தர்மசாலாவிற்குச் சென்று வர நான் சித்தமாக இருக்கிறேன்.
பயணச் சோர்வு குழந்தைகளுக்கு மட்டுமல்ல. எனக்கும் தான். கூட்டத்தில் சிக்கிச் சிக்கிக் கும்பிட்ட சாமி கடவுள் போதும் என்று எண்ணி, “போதுண்டா! நாளைக்கு எல்லாக் கோயில்களையும் (பயணத் திட்டத்தில் இருந்து தான்!) வெட்டி விடலாம்” என்றேன்.
//இது இவளுடைய ஆன்மா தன் ஊற்றான இயற்கைச் சக்தியோடு இயைந்து கொண்டிருக்கும் அகப்பாட்டு நேரமா? வெளியே இரு மருங்கிலும் மரங்கள் தலையாட்டியவண்ணம் இருந்தன.//
இதைக் கண்டு கொண்டீர்களா? இந்தத் தருணங்கள் தான் வாழ்க்கையை பற்றி ஏதோ சொல்லுகின்றன. இதில் இருந்துதான் நானும் இந்தவாழ்வும் வெவ்வெறானதல்ல என்ற அனுபவத்தை பெறமுடிகிறது. இதில் தான் சிறுமையெல்லாம் கழுவிவிட்டாற்போல, தெளிந்த ஆற்று நீர் கழுவியோடும் படித்துறை ஒன்று உச்சிவெயிலில் காய்ந்துகொண்டிருப்பது போன்ற குளிர்ச்சியும் வெம்மையும்; நிறைவும் இன்மையும் நிலவுகின்ற ஒரு போதம் வாய்க்கிறது. அந்தத் தருணங்கள் கூடுவதற்காகவே செம்மண் சாலைகளில், ஆடு மேய்கிற ஆட்களற்ற கோவில்களில், ஓளி ஊடுறுவி விளையாடும் இலைகள் நிறைந்த மரங்கள் நிற்கும் சாலையில்…இப்படி வாழ்க்கை போய்க்கொண்டிருக்காதா என்று விருப்பம் ஊறுகிறது.
இதுதான் எத்தனை காலியான, பொதிவான பொழுது! நன்றி!
சிருங்கேரி போனீர்களா? அருமையான ஊர். சூழல். கோவிலில் பார்ப்பனர்களுக்கும், மற்றவர்களுக்கும் தனித்தனியான சாப்பாட்டு வரிசைகள். ஆனால் கோவிலையும் சங்கரமடத்தையும் இணைக்கும் பாலத்தில் இருந்து துங்கா ஒரு அற்புதமான அனுபவமாக கரைகளில் இருந்து கறைகளை கழுவிக்கொண்டே ஓடிக்கொண்டிருப்பதைக் காணுவது ஒரு அனுபவம். ஒளி மின்ன சின்னத்தனங்களை பார்த்து சிரித்துக்கொண்டே ஒடுகிறது வாழ்வே நதியாய்.
அது ஒரு அற்புதமான இடம்.
பதிவுக்கு நன்றி.
இன்று அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு இளைப்பாற நினைத்து முடியாமல் இழுத்து போட்ட பல்வேறு நிகழ்ச்சிகளால் கனத்து போன மனதிற்கு இதமான பதிவு. பழைய இடங்களை சென்று பார்க்க இதமாய். குழந்தைகளிடம் நாம் கற்று கொள்வது நிறைய. அவர்களையே கசக்கும் முரடர்கள் எதை இழக்கிறோம் என்று தெரியாமல் இழப்பதும் நிறைய.
தர்மசாலா இதமான இடம். சிருங்கேரியில் தனி வரிசையா? எனக்கு தெரியவில்லை. அருமையான நதியும் குளிர்ச்சியான காற்றும். நன்றி செல்வராஜ்.
ஆமாம் பத்மா. தனித்தனி டோக்கனும், சாப்பாட்டுக்கூடமும். என் நண்பன் இதனால் வருந்தி என்னுடனேயே சாப்பிட வந்துவிட்டான். அவன் வருந்த எந்தக் காரணமும் இல்லை என்பதைச் சொன்னேன். அது போன்ற அற்புதமானஒரு இடத்திலும்/ சூழலிலும் கூட தங்களது சின்னத்தனக்களை சுமப்பதும் காட்சிப்படுத்துவதும் தான் எத்தனை பரிதாபமானது. மலைக்காற்றும், நதிநீரும், துள்ளும் மீன்களும், தூய்மையும் ஒளியும் விடுதலையை எல்லோருடைய காதுகளிலும் விடுதலையை ஓதிக்கொண்டிருக்கிற இடமாக அது தெரிந்தது. அங்கும் கேட்கமுடியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே அன்றி வேறென்ன?
விவரங்களுக்கு நன்றி தங்கமணி. இந்த நூற்றாண்டிலும் தனி டோக்கண், வரிசை.. வருத்தமாக இருக்கிறது. உயிருக்கு ஆபத்து என்கின்ற போதாவாது மாறுமா?
மற்றுமொரு இனிமையான பகிர்வுக்கு நன்றி…
We wish you to have many official tours and u must pay us back for the wishes with nice write ups. be careful as regards your daughters. Dont burden them with your high vision. Hope u can undersatnd what I mean. let them be children and let them enjoy their childhood.
முன்னரே பத்மா, அருள் உட்படப் பல நண்பர்கள் சொல்லியிருந்தும் சிருங்கேரி செல்லமுடியவில்லை என்று சிறு வருத்தம் என்றாலும், இந்த அளவுக்கேனும் பயணங்களும் அனுபவங்களும் வாய்க்கப் பெற்றதற்கு நன்றியுடையவனாகவே இருக்கிறேன். துங்கபத்ராவில் துள்ளும் மீன்களை என்றாவது ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று பட்டியலில் இட்டுக் கொள்கிறேன்.
தங்கமணி, நீங்கள் சொல்கிற அந்த வாழ்வோடொன்றும் அனுபவங்களுக்காகவே சிரமங்களுக்கிடையிலும் பயணங்கள் மேற்கொள்ள எனக்குப் பிடித்திருக்கிறது. அதை எழுதும்போது சில நிகழ்வுகள் மறைந்துபோகாமல், இன்னும் கொஞ்சம் நினைவலைகளில் இழுத்துப் பிடிக்க முடிகிறது. உங்களுடையதைப் போன்ற பின்னூட்டங்கள் அவற்றின் ஆழத்தை அதிகரித்து இன்னும் வாழ்வார்வத்தை ஊட்டுகின்றன. நன்றி. “காலியான” பொழுது என்று சொல்ல வருவது புரிகிறது என்றாலும் முடிந்தால் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்.
பத்மா, உங்கள் பளுவில் இருந்து இதமளிப்பதாய் இருப்பதற்கு மகிழ்ச்சி. எழுதுவதும் கூட எனக்கு அப்படி ஒரு இதத்தையும், தகைவுகளில் இருந்து ஒரு விடுதலையையும் தருகிறது.
குழந்தைகளைப் பற்றி நீங்களும் கிருஷ்ணமூர்த்தியும் சொல்வது சரிதான். அவர்களின் வளர்ப்பிலும் ஒரு சமநிலை கொண்டிருக்க வேண்டும். அவர்களோடான வாழ்வு நமக்கும் ஒரு பேரனுபவம் தான். என்ன? சதா ஓடிக் கொண்டே இராமல் சற்று நின்று பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அன்பு, உங்கள் அன்பிற்கும் 🙂 நன்றி.
Selvaraj,
Interesting post. I’m still planning to make a trip to Kollur, Subramania temple, Dharmaasla & Uduppi. Hope you can guide me. Nice report!
migavum arumaiyana pathivu. Ungal pathivukalil irunthum, atharkkana pinnoottangalil iruthum niraiya katruk kolkiren.. Nandri..
ராம்கி, காவிரியாட்டம் பதிவில் அலெக்ஸ் பாண்டியன் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அது உங்களுக்கு உதவியாய் இருக்கக் கூடும்.
ஜகதீஸ்… உங்களுக்கும் நன்றி.
செல்வராஜ், சுழண்டு ஓடிய நேத்திராவதி என்ன அழகு இல்லை? மஞ்சுநாத் பொறியியல், மருத்துவ, சட்டம் எக்ஸ்ட்ரா கல்லூரிகள் பட்டியல்கள் கோவில் வாசலில் கண்ணில் படவில்லையா, வெளியில் ஒரு சிதலமடைந்த பழைய தேர்? அதன் அருகில் மூடி வைத்திருந்த சிறு விமானம் 🙂
கர்நாடக முழுவதுமே (மந்திராலயம் உட்பட) கோவில் பந்திகளில் இம்முறைத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. கடையில் இதைக் குறித்து லேசாய் விசாரித்தப் பொழுது, கோவில் தர்மகர்த்தா ஹெக்டே, ஜெயின் அவர் பொது பந்தியில்தான் சாப்பிட முடியும். வழக்கமாய் வருகிறதைக் கடைப் பிடிக்கிறோம் என்றார் வெகு சாதாரணமாய்.
தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தால் சாதி பிரிவினை தவறு என்ற எண்ணம் உருவானது. ஆனால் வட இந்தியாவில் சர் நேம் கேட்காமல் பேச்சு ஆரம்பிக்காது என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
Hi Selva,
Your blog is listed in dinamalar.
http://www.dinamalar.com/2005dec07/flash.asp
செல்வா,
இப்படியான வெளிப்பயணங்கள் நம்மை மேலும் உள்ளே பார்க்கச் செய்வது விந்தை. உள்ளிற்கான தேடலை நீங்கள் வெளியே சென்று நிகழ்த்துவதும், அது சார்ந்த உங்கள் கண்டுபிடிப்புக்களும், அதை நீங்கள் அழகாய் எழுதுவதுமே உங்கள் பயணக்கட்டுரைகளை எனக்கு மிகவும் பிடிக்கச் செய்கிறது என்கிறமாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன்.
நீங்கள் எப்பொழுதேனும் சுயசரிதை எழுதினால் உங்கள் பயணங்களின்(கட்டுரைகளின்) தொகுப்பே அந்தத் தேவையையும் நிறைவு செய்துவிடும் என்று தோன்றுகிறது
🙂
தர்மஸ்தலா போனீங்களா செல்வராஜ்! அந்த அழகான மலைப்பாதைகளைச் சொல்ல வேண்டும். அடடா! மலைக்க வைக்கும்.
குக்கே சுப்பிரமணியா இன்னும் போனதில்லை. நான் போவதெல்லாம் காட்டி சுப்பிரமணியாதான். பெங்களூருக்கு மிகவும் பக்கத்தில் இருப்பதால்தான் பைக்கிலேயே போய் வருவோம். குக்கே சென்று முருகனைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் நிறைய இருக்கிறது. என்றைக்கு அந்த வாய்ப்பை எனக்குக் கந்தன் தருகின்றானோ!
தர்மஸ்தலாவில் இடம் கிடைப்பது சிரமமே. அந்த ஆளிடம் ஒரு பத்து இருபது ரூபாயைக் கொடுத்திருந்தால் இடம் கிடைத்திருக்கும். அதற்கென்றே புரோக்கர்கள் இருக்கின்றார்களே. சார் ரூம் இதே சார். பன்னி கரக்கொண்டு ஹோகுதினின்னு கூப்புடுவாங்களே. பெஸ்ட்…லாட்ஜ்தான். காசு கொடுத்தால் நிம்மதியா இருக்கலாம் பாருங்க.
அங்க எல்லா போர்டிலும் தமிழும் மலையாளமும் பாக்கலாம். சாப்பாடும் அருமை. அத்தனை பேருக்கும் போடுவார்கள். எப்படிக் கட்டுப்படியாகிறதோ. தர்மஸ்தலா என்றில்லை சிருங்கேரியிலும் அப்படித்தான். உடுப்பியிலும் அப்படித்தான்.
நேத்ராவதியில் குளித்தீர்களா?
அழகான தமிழ்நடையோடு எழில் கொஞ்சும் கர்னாடக காடுகளில் புதைந்திருக்கும் கோவில்களை விவரித்து கேட்கும் சுகமே தனி, அதிலும் சென்ற இடங்களை அவை நினைவிற்கு கொண்டு வரும் போது. போகும் வழியில் குடகு செல்ல வில்லையா ?
பதிவு தரும் இனிமைக்காக நன்றி.
//பாக்கு மட்டை இலையில் பருப்பு ரச சாதம் வாங்கி என் மகளுக்கு கொடுக்கவாவது// -எங்கள் வீட்டுப் பயணங்கள் அனேகமாக இதுபோன்ற தேவைக்காகவே ஏற்பாடு செய்யப்படும். தந்தையரின் அன்பு ரொம்ப உணர்வுபூர்வமானது என்பதை நான் நிறைய நேரங்கள் ரசித்திருக்கிறேன், என் வீட்டில். தாயின் அன்பு ரொம்ப இயல்பானது, பொண்ணு தூங்கி விழும்போது கீழே விழுந்திடக் கூடாதேங்கிற பாட்துகாப்பு உணர்வுதான் அதிகமிருக்கும். நல்ல வெளிப்பாடு செல்வராஜ். சேரனின் `தவமாய் தவமிருந்து’ ஒரு ideal தகப்பனின் கதை என்று விமர்சனம் படித்தேன். முடிந்தால் பார்த்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்!!!
உஷா, நாங்கள் தர்மசாலாவை அடையும் போது இருண்டுவிட்டது. அதனால் நீங்கள் சொன்ன காட்சிகள் பலவற்றைப் பார்க்கவில்லை. பகற்பொழுதில் ஒரு முறை போக வேண்டும். மங்களூர் ரயில்பாதை சரியாகட்டும் பார்ப்போம். பிறகொருமுறை இந்தப் பக்கம் வர எப்போது வாய்ப்புக் கிட்டும் என்றும் தெரியவில்லை.
பிரசன்னா, தினமலர்ச் சுட்டியை நேற்றே மாயவரத்தான் கொடுத்திருந்தார். உங்களுக்கும் நன்றி. ஒருபுறம் மகிழ்வு தானென்றாலும், தினமலர் சும்மா கடனுக்காகப் போடுவது போலிருக்கிறது. அது அவ்வளவாய் ஈர்ப்பைத் தராது போகிறது.
கண்ணன், உங்கள் பின்னூட்டம் மூலமும் யோசிக்க வைக்கிறீர்கள். ஒருவகையில் இந்த உட்தேடல் சாத்தியமாவதே வெளிப்பயணங்களில் தான் என்று தோன்றுகிறது. அன்றாட இரைச்சலற்ற நிதானமான இந்தப் பொழுதுகளைத் தான் ‘காலியான’ பொழுதுகள் என்று தங்கமணி கூறுவதாகவும் நினைக்கிறேன்.
இராகவன், உண்மை தான். அந்த மலைப்பாதையின் அழகு மிகவும் கவர்ந்தது. இந்தியாவிலும் இப்படி எல்லாம் இடங்கள் இருப்பதை அறியாமல் போனோமே என்றும் தோன்றியது. தர்மசாலாவில் நீங்கள் சொன்ன பத்து இருபது ரூவாய்த் தொல்லை தான். வேண்டாம் என்று உஜ்ரே சென்றுவிட்டோம்.
மணியன் நன்றி. குடகுப் பயணம் தான் சற்று முன்னர் காவிரியாட்டம் பதிவில் பார்க்கலாமே.
தாணு, உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி. சேரனின் புத்தகம் நினைவில் கொள்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் படிக்கிறேன்.
அடுத்த முறை நிறைய நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்க்க வேண்டும். இனிமையான பயணம். பதிவும் இனிமையாக இருக்கிறது.
செல்வராஜ்
நான் சொன்னது சினிமா, புத்தகமல்ல