தசராவின் மைசூரில் மகராஜன் ஊர்வலம்
Dec 5th, 2005 by இரா. செல்வராசு
மைசூர் சாமுண்டீஸ்வரிக்கும் எனக்கும் முன்பின் அறிமுகம் இல்லை. இப்போது தான் சந்திக்கிறேன் என்றாலும் குறுகிய காலத்திற்குள் நான்கு முறை அவரைச் சந்தித்து விட்டதற்கு அவர் மீது என் நண்பர் ஒருவர் வைத்திருக்கும் அதீத அன்பு தான் காரணம். மைசூர் மகாராஜாவுக்கு அடுத்து மகிஷாசுர மர்த்தினி இவருக்குத் தான் குடும்பத் தெய்வமாக இருப்பார் போலிருக்கிறது! “எனக்கு இங்க வரதுக்கு ரொம்பப் புடிக்கும்” என்று ரொம்பச் சொல்லிவிட்டார். செல்பேசி சகிதம் கோயிலின் உள்ளே இருக்கிற ஒருவரின் தொடர்பு கொண்டு வருகிற நேரம் சொல்லி விட்டால் சிறப்பு நுழைவும் பூஜையும் நிச்சயம் உண்டு இவருக்கு.
தசரா அன்று உட்தொடர்பர் வரச்சொன்ன நேரத்திற்குச் செல்லாமல் சிறிது தாமதித்து விட்டதில் சாமுண்டி மலையில் சிறப்பு வழியிலும் காத்துக் கிடக்க வேண்டியதாகப் போய்விட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த செங்கொடை பூரண கும்ப மரியாதை எல்லாம் பார்த்து, ‘ஆகா நமக்கு இவ்வளவு மரியாதையா’ என்று நினைக்கையில் ‘தள்ளுபா’ என்றொரு கூட்டம் ஓரத்தில் ஒதுக்கி விட, வாசல் வரை வந்து நின்ற காரில் இருந்து மனைவியோடு இறங்கி உள்ளே நடந்தார் கர்னாடக முதல்வர் தரம் சிங். நாலடித் தூரத்தில் எந்த மாநில முதல்வரையும் நான் பார்த்ததில்லை. அது சரி, கர்நாடக முதல்வர் ஏன் ‘சிங்’ என்று சீக்கியர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார் ? 🙂
போனால் போகிறது! மகாராஜாவிற்கு அடுத்து இந்த மக்களாட்சி ராஜாக்கள் இருந்துவிட்டுப் போகட்டும் என்று இவரையும் ஆளுனரையும் உள்ளே விட்டு விட்டு, அதன் பிறகு நாங்கள் சென்றோம். உடன் வந்த ஒரு நண்பரின் மனைவி, “பாத்தீங்களாண்ணா, நாமெல்லாம் முன்பே வந்து காத்துக் கிடக்க, இவங்கல்லாம் ஜம்முன்னு வந்து உள்ளே போறாங்க” என்று பொருமினார். குறுகுறுப்பில் சற்றே நெளிந்து,
“நீங்க சொல்றது சரி தாங்க. ஆனா, ஒரு வகையில நாம கூடத் தான் சிறப்பு வழின்னு மத்தவங்களுக்கு முன்னால போறோம். அதனால…” என்று நான் இழுக்க,
“சரி. சரி. நான் சொன்னதுமே நீங்க இப்படித் தான் சொல்வீங்கன்னு நெனச்சேன்” என்றார்.
சிறப்பு வழியென்றாலும் அங்கும் கூட்டம் தான். வெளியேறு கூட்டத்தில் ஒருவர் இடித்ததில் தடுமாறி விழப்போய் எழுந்தேன். திரும்பி வந்து “ஸாரி” என்று விட்டுப் போனார் ஒரு பெண். ‘அடப் பரவாயில்லையே, வந்து மன்னிப்பு எல்லாம் கேக்குறாங்க’ என்று கொஞ்சம் ஆச்சரியப் பட்டுக் கொண்டு நின்றவனை ‘டே உள்ள வாடா’ என்று அன்போடு அழைத்தது உடன் வந்த கூட்டம். சற்று உள்வெளி இழுபறிகளுக்குப் பின் உள்ளே சென்றுவிட்டோம் என்றாலும் இத்தனை கூட்டத்தில் இப்படி அலைவது மனதிற்குப் பொருந்துவதாயில்லை. சிறப்பு வழிச் சலுகை குறித்தும் ஒரு உறுத்தல் இருந்தாலும் இன்றைக்கு அது பற்றிய தார்மீகச் சிந்தனைகளை ஒதுக்கி வைத்துக் கொள்கிறேன். சில அடி தூரத்திலேயே பார்க்க முடிந்த சர்வ அலங்காரி, சகலருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிற மைசூர்ப் பெயர்க்காரணியின் பால் ஒரு ஈர்ப்பு ஏற்படத் தான் செய்கிறது.
அர்ச்சனை செய்து விட்டு வந்த பின் கிடைத்த பிரசாதத்தின் சுவையோ அருமை. தேங்காயும் சர்க்கரையும் இன்னபிறவும் கலந்திருந்த அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை. பின்னொரு நாள் காரோட்டுனர் ‘ரசாயனா’ என்று ஒன்றைத் தன் தாய் செய்வார் என்று சொன்னதன் விவரணை இந்தப் பிரசாதம் போன்றிருந்தது. பொங்கல் போன்றதொரு ‘காரசோறு’ ஒன்றும் கிடைத்தது. பொதுவாகவே கர்நாடகக் கோயில்கள் நன்றாக இருக்கும், பூஜைகள் எல்லாம் நன்றாகச் செய்வார்கள் என்று நண்பர் கூற, “ம்…ம்..” என்று கேட்டுக் கொண்டு பிரசாதங்களைக் ‘கவனித்துக்’ கொண்டிருந்தேன். தசரா ஊர்வலம் பார்க்க நேரமாகிவிட்டது என்பதும் உறைத்தது. அவசரமாய் வெளியே வந்த போது யாரோ தந்த கை நிறையச் சுண்டலையும் விட்டு விடவில்லை.
காலகாலமாய், மகராஜாக்களின் காலங்களில் இருந்து தசராவின் இந்த ஊர்வலம் நடந்து கொண்டிருக்கிறது. அரண்மனைச் சுவற்றோவியங்களில் கூட இந்த ஊர்வலம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்திற்கென்று சுற்று வட்டார ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து கூடியிருந்தனர். சிறுசுகளோடு போயிருந்ததால் இருநூறு ரூவாய் அனுமதிச்சீட்டு வாங்கி அதற்கென்று அமைக்கப் பட்டிருந்த தனிப்பந்தலில் அமர்ந்து பார்க்கத் திட்டம் இட்டிருந்தோம். சற்றே தாமதமானதால் அரண்மனை அருகே இருந்த சாலைகள் மூடப்பட்டதில் நிறையவே நடக்க வேண்டியதாகப் போய்விட்டது. பந்தலுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம். அந்த நெரிசலில் அரைந்து கொண்டு பந்தலை அடைந்த போது அங்கும் கூட்டம் நிறைந்து விட்டது. கடைசி வரிசையில் நெகிழிருக்கைகள் (plastic chairs) சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டோம்.
எப்படியோ நிம்மதியாய் வந்து சேர்ந்துவிட்டோம் என்று பெருமூச்சு விடுகையில், “டேய்! என் பர்ஸை யாரோ அடிச்சுட்டாங்கடா” என்றார் ஒரு நண்பர் பதைபதைப்புடன்.
எல்லோருக்கும் அதிர்ச்சி. அவரவர் கால்சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டோம். என் பெண்களின் சிறு தண்ணீர் பாட்டில்களைப் பக்கத்திற்கு ஒன்றாக வைத்திருந்ததில் என் பணப்பை (பர்ஸ்/வாலட்) பத்திரமாய் அடியில் இருந்தது. அத்தனை கூட்டத்தில் எங்கு சென்று தேடுவது என்ற அவநம்பிக்கை இருந்தாலும் பிறரை விட்டுவிட்டு நண்பர்கள் இருவரும் மட்டும் வந்த வழியே சென்று காலையிற் சாப்பிட்ட கடை வரை பார்த்து வந்தனர். போனது பணம் மட்டுமல்ல. மேலும் அதில் இருக்கிற பிற அடையாள அட்டைகள், ஓட்டுனர் உரிமங்கள் என்று எல்லாவற்றையும் பெறுவது எவ்வளவு அலைச்சலான விஷயம்! இப்படிப் பர்ஸ் திருடும் புண்ணியவான்கள், அல்லது கீழே கிடப்பதைக் கண்டெடுப்பவர்கள் காசு பணத்தை எடுத்துக் கொண்டு அதில் இருந்து ஒரு இருபது ரூவாய்ச் செலவில் பிறவற்றைப் பொட்டலம் கட்டி வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். திருடர்களானாலும் மனிதநேயம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது கொஞ்சம் நப்பாசை தான்.
ஊர்வலம் செல்ல இருந்த சாலையும் பகுதியும் சுத்தமாய் அடையாளம் மாறி இருந்தன. சாலை நடுவில் சிலையாக நின்று கொண்டிருந்தார் ஒரு ராயர் பெருமான். ஊர்வலம் சுமாராக இருந்தது என்று சொல்வதா நன்றாக இருந்தது என்று சொல்வதா என்று தெரியவில்லை. மகளொருத்தியைத் தோள்மீது அமர வைத்துக் கொண்டு கையில் சலனப் படம் பிடித்துக் கொண்டு இருந்தேன். தோள்பாரம் ஒரு பக்கமாக இழுக்கிறதே என்று அவ்வப் போது குலுக்கிக் கொண்டு சரி செய்து கொண்டிருந்தேன். பிறகு தான் மேலிருந்த மகள் களைப்பில் உறங்கித் தொங்கிக் கொண்டிருக்கிறாள் என்று பிறர் சொல்லித் தெரிய வந்தது! தெரிந்த பிறகும் ஊர்வலம் முடியும் வரை அங்குமிங்கும் கொஞ்சம் படம் பிடித்து வைத்துக் கொண்டேன். இத்தனை அலைச்சலுக்கு இடையில் என்ன பார்த்தோம் என்பதை ஓய்வாய் ஒரு நாள் வீட்டிற்குச் சென்று பார்த்துக் கொள்ளலாமே. ஊர்வலம் வண்ண மயமாய் இருந்தது. இடையிடையே வித்தை காட்டி வந்த வெவ்வேறு குழுவினரும் கலக்கிக் கொண்டிருந்தனர். வெவ்வேறு அரசாங்க நலத்திட்டங்கள் பற்றிய குறிப்புத் தாங்கிய இரதவண்டிகளும் வந்து போயின. இறுதியாக ராஜ நடையோடு யானைகள் ஊர்வலச்சாமுண்டீஸ்வரியைத் தாங்கி வந்தன. இந்த ஊர்வலத்திற்கென்றே வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டு, சுமார் ஒரு மாத காலம் பயிற்சியிலும் ஒத்திகைகளிலும் இவை ஈடுபடுகின்றனவாம்.
எங்கு சென்றாலும் விடாத இவ்வருட மழை மைசூரிலும் எங்கள் மீது பொழிந்தாலும், மழையிலும் இருட்டிலும் கூட ஒரு நடை லலித் மகால் சென்று வந்து விட்டோம். பெரிய (ஐந்து நட்சத்திர?) விடுதியாக இப்போது மாறியிருக்கும் மகாராஜாவின் சின்னவீட்டிற்குச் (சின்ன அரண்மனை? 🙂 ) சென்று வராமல் எப்படி? எங்கோ காட்டுக்குள் தனியாக இருக்கிற அந்த மாளிகையின் வழவழ தூண்களிலும் சிற்பங்களிலும் பளிங்குப் படிகளிலும், இச்சைக்குரியவருக்கென்று மகராஜன் இழைத்த, இறைத்த பெரும்பணம் தெரிந்தது. “இத்தாலி மார்பிள் சார்”, என்று சில கதைகள் சொன்னார்கள்.
காலையில் சிறு பணப்பை தொலைத்த எம் நண்பர் கடனட்டை முதலியனவற்றை ரத்து செய்து விட்டு வந்தார். இந்த இழப்பிற்கு வருத்தம் இருந்தாலும், வேறொன்றும் செய்ய இயலாத நிலையின் நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர்வோம் என்றார் பெரும் முதிர்ச்சியுடன். நானாக இருந்திருந்தால் தொங்கப்போட்ட மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தேடிக் கொண்டிருந்திருப்பேன்.
பயணத் திட்டமிடலில் வரிசையாக இடங்களைச் சேர்த்துக் கொண்டு கற்பனையில் மைசூரில் இருந்து புறப்பட்டு கோவா வரை சென்றாலும், போய்விட்டு இரண்டு நாளில் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பதால் வெகுவாக வெட்டி விட்டுச் சில இடங்களை மட்டும் சேர்த்துக் கொண்டோம். அங்கங்கு வேண்டுமானால் மறுபடியும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம் என்று முடிவு. நடைமுறையில் சாத்தியமேயில்லை என்று தெளிவாகத் தெரிந்தாலும், “காலையில ஏழு மணிக்குக் கிளம்பிவிடலாம்” என்று திட்டமிட்டுவிட்டுத் திருப்தியாக உறங்கச் சென்றோம்.
முன்னடியே உங்களிடம் ஒருதடவை சொன்ன மாதிரி, இந்தியாவுக்கு போகணும் என்கிற உந்துதலை தருகின்றன ,நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி போய் எழுதி வரும் பதிவுகள்.. ஹூம் ..
சிங் என்கிற குடும்ப பெயர் வடவிந்திய இந்துக்களுக்கும் உண்டல்லவா..? அல்லது வி.பி.சிங் மீசை/தாடி இல்லாத சீக்கியரோ..?
நன்றி நண்பர் செல்வராஜ்.
Dharam Singh is not a Kannadiga. He orginated from Rajasthan. He was appointed as CM for Karnataka by his Italian boss. So he has that name Dharam Singh. Singh is a common name even found with many Tirunelveli Nadars like Guna Singh, Ratna Singh etc.
செல்வா,
மற்றுமொரு நல்ல பயணக்கட்டுரை – பயணத்துக்கேயுரிய அனைத்து நிகழ்வுகளுடன்.
முதலமைச்சர் தரம் சிங் பற்றிய இந்தத்தளம் சொல்வது. அவர் கர்நாடகத்தின் வெகுசொற்ப இனமான ராஜபுத்திர வம்சாவளி வந்தவர். வாசன் குறிப்பிட்டபடி (எனக்குத்தெரிந்தவரை) வி.பி.சிங் அவர்கள் இந்த வம்சாவளிதான். அதனால் அவர்களுக்கு சிங் என்று பெயர்கொண்டு அழைப்பது வழக்கம்போல…
நாலடித் தூரத்தில் எந்த மாநில முதல்வரையும் நான் பார்த்ததில்லை.
நானும்தான்… ஆனால் இந்நாள்/முன்னாலென மூன்று பிரதமர்களையும் பார்த்துள்ளேன். அமைச்சரொருவர் வாராவாரம் திங்கள் இரவு எங்கள் பக்கத்து அடுக்ககத்துக்கு ‘மக்களைச் சந்திப்போம்’ நிகழ்ச்சிக்கு வருவார். இந்த தகவல் படி பிரதமரை அவருடைய பகுதியில் வியாழக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு மக்கள் சந்திக்கலாம்!
நான் பின்னுட்டுவிட்டு பார்த்தால்…
நண்பர் test (ஏன் சார் சோதிக்கறீங்க:) அதையே குறிப்பிட்டுள்ளார், நன்றி.
நெல்லை-ப்பகுதி நண்பர் ஒருவர் பெயரிலும் இந்த சிங் வரும். அதனால் test கொடுத்துள்ள கூடுதல் தகவலும் பயனுள்ளது, நன்றி.
சலனப் படம்(வீடியோ கவரேஜ்?) எடுப்பவர்களால் ஒன்றுமே சரியாகப் பார்க்க முடியாது என்பதை நிறைய சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். கடல் கடந்து செல்லுமுன் இந்தியா முழுவதும் சுற்றித் தீர்த்துவிட முடிவெடுத்துவிட்டீர்களா?
Adutha vara iruthiyil Mysore aruge ulla Aruvikku sellalaam endru irukkirom.. pogum munneye aarvam athigamakirathu ungal pathivai padikkum pothu…
கோவையிலிருந்து என் வகுப்பு முழுவதும் ஹைதராபாத்திற்கு புகைவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தோம். வண்டி சுமார் மூன்று மணிக்கு ரேணிகுண்டாவை அடைந்தது. அனைவரும் உறங்கிகொண்டிருந்தார்கள். வண்டி கிளம்பி சற்றே வேகமெடுத்ததும், வகுப்புத்தோழி ‘அய்யோ, என்னோட ஹாண்ட்பேகை திருடிட்டு போறான்’னு சத்தம் போட்டார். என்ன செய்ய, போனது போனதுதான். அப்புறம், ஹைதராபாதில் ‘CSI Meet’ முடிச்சுட்டு ஊருக்கு திரும்பி வந்திட்டோம். ஒரு ரெண்டு வாரம் கழிச்சு கான்ட் பேகை பறிகொடுத்த தோழிக்கு ஒரு பார்சல் வந்தது. திறந்து பார்த்தா.., அந்த ரேணிகுண்டா புண்ணியவான், பணத்த எடுத்துட்டு மத்த எல்லாத்தையும் நல்லா பேக் பண்ணி அனுப்பிச்சிருந்த்தார்.
திறந்து பார்த்தா.., அந்த ரேணிகுண்டா புண்ணியவான், பணத்த எடுத்துட்டு மத்த எல்லாத்தையும் நல்லா பேக் பண்ணி அனுப்பிச்சிருந்த்தார்.
அப்படியா…..!
செல்வா நீங்கள் கேட்டுக்கொண்டது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதாம்… அதனால் எதற்கும் முகவரி எழுதிவைத்தே தொலைப்போம்:)
Pokira pokka partha, payana katturai Thilagam Maniyan Idathai pidithu viduveeragal pola theriyuthe!!
வாசன், அன்பு, டெஸ்ட்: நன்றி. ஆமாம், கோவையில் கூட செல்வசிங் கடைகள் இருப்பது இப்போது தான் நினைவுக்கு வருகிறது (அப்போதும் கூட ‘சிங்’ என்று எப்படிப் பெயர் வைத்தார்கள் என்று யோசித்திருக்கிறேன்). திருநெல்வேலிக்காரர்களாய் இருக்கும். ஊர் ஊராய்ச் சென்று கடை வைப்பதில் பெயர் பெற்றவர்களாயிற்றே (ஈரோடு சங்கீதா, கண்ணன் கடைகள்…).
ஜெகா உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். அது என்ன அருவி?
தமிழன், அன்பு: பரவாயில்லை. ரேணிகுண்டாக்காரர் புண்ணியவான் தான்.
வாசன், தாணு, கிருஷ்: பயணக்கட்டுரைக்காரர் என்று முடிவு ஏற்படுவதற்குள் இன்னும் ஒன்றிரண்டையும் (!)முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். (நேரில் பார்த்தபோது தாணு அன்றே கேட்டுவிட்டார்கள் – ‘நீங்க பயணக் கட்டுரை தான் அதிகமா எழுதுவீங்க போலிருக்கு’! 🙂 )