Feed on
Posts
Comments

உறக்கம் கலைந்தும் கண் விழிக்காத காலைப் பொழுதில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். இரவு ஒரு மணி வரை வலைப்பதிவுகளில் உழன்று கொண்டிருந்ததன் விளைவுச் சோம்பல் இன்னும் முறிக்கப் படாமல் என்னுடனேயே படுத்துக் கிடந்தது.

“அது ஏழே கால் மணின்னு போடுங்க”, கிண்டலாய் ஒலிக்கும் மனைவியின் குரலைத் தாண்டி மேலே செல்வோம்.

ஏற்கனவே குளித்துவிட்ட மகளின் மீது பூத்துக் கிடந்த நீர்த்துவாலைகளைத் துவட்டி விட்டபடி இருந்த என் மனைவியிடம் முன் தினப் பள்ளி நிகழ்வுகள் பற்றி நிவேதிதா பேசிக் கொண்டிருந்தாள்.

உடலின் இடதுபுறத்தை வலது மூளையும், வலப்புறத்தை இடது மூளையும் கட்டுறுத்துகின்றன என்பதால் சாதாரணமாக வலதுகைப் பழக்கமுடையோர், அவ்வப்போது இடது கையாலும் எழுதவோ, இடப்பாகத்திற்கு அதிக வேலைகள் தரவோ முயன்றால், வலப்பக்க மூளைக்கும் பயிற்சி கொடுத்தாற்போலிருக்கும் என்று அவளின் வகுப்பாசிரியை கூறினாராம்.

‘அட!’ என்று மனதிற்குள்ளேயே முகவாய்க்கட்டையைத் தேய்த்துக் கொண்டு அதுபற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கையில் ஓரக்கண்ணில் என்னைக் கவனித்தவள் “ஸ்லீப்பி ஹெட் அப்பா” என்றாள். பத்து நாட்களுக்கு முன் தான் முன்பல் விழுந்த ஓட்டை வாயாகியிருந்தாள். இன்னும் கூட அடிக்கடி ‘அப்பா’ என்று அம்மாவையும் ‘அம்மா’ என்று அப்பாவையும் மாற்றி மாற்றி விளித்துக் கொண்டிருக்கிறாள்.
Continue Reading »

ஒரு தட்டுக் கோழிப் பிரியாணி ஓட்டல் சரோவரில் ஐம்பத்தெட்டு ரூவாய். முக்குக் கடையில் வாங்கிய வாடிலால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஐந்து ரூவாய். தண்ணீர் என்று நினைத்துத் தெரியாமல் வாங்கிய கின்லீ பாட்டில் சோடா பன்னிரண்டு ரூவாய். தள்ளுவண்டிப் பெரியவரிடம் புரியாத மொழியில் பேரம் பேசி வாங்கிய மூன்று பச்சை நிற வாழைப்பழங்கள் ஐந்து ரூவாய். இருட்டைக் கிழிக்க முயன்று தோற்று விகசித்துப் போன தெருவிளக்கொளியில் மாடு கன்றுகளோடு வித்தியாசம் பாராமல் திரிந்து கொண்டிருக்கும் தாராப்பூர்-பொய்சர் மக்களூடே நடந்து சென்று வந்த நேரங்களோ விலை மதிப்பில்லாதவை.

மும்பையில் இருந்து மூன்று மணி நேரக் கார்ப்பயணத்தில் இருக்கிற தாராப்பூருக்குச் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு முறை உற்ற தோழி ஒருவரைச் சந்திக்கவென்று வந்திருக்கிறேன். எப்படி இங்கு வந்தேன், ரயிலா, பேருந்தா, போன்றவை சரியாக நினைவில் இல்லை. ஆனால் திரும்புகையில் தோழி ரயில்வண்டியில் மும்பை வரை உடன் வந்ததும், வழியில் தன் காதல் கதையைச் சொன்னதும் பசுமையாய் நினைவிலிருக்கிறது. தெரிந்த கதையின் தெரியாத ஆரம்பங்களை அன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

தாராப்பூரில் ஊரைப் பகுதி பகுதியாக வகுந்து போட்டுப் பல நிறுவனங்களுக்கும் ஆலைகளுக்கும் கொடுத்துவிட்டார்கள். மருந்துக் கம்பெனிகளில் இருந்து இரும்புக் கம்பெனிகள் வரை நிறையப் பார்க்க முடிகிறது. ‘மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்’ (MIDC) அமைத்துக் கொடுத்திருக்கும் தொழிற்சாலைப் பகுதியில் சாதாரண மக்களின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் அடிப்படை வசதிகளுக்கும் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.
Continue Reading »

கிழிந்த வாழையிலை ஒட்டிக் கொண்டிருந்த தண்டெடுத்து மண்டபத்துக் குரங்கை ஒருவர் துரத்தியதை வேடிக்கை பார்த்தபடி பண்ணாரியம்மன் கோயில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அர்ச்சனைக்கு நட்சத்திரம் என்னவென்று கேட்ட அர்ச்சகரிடம் என்னுடையதும் மனைவியினதும் நினைவு இருந்து கூறிவிட்டாலும் மகள்களது நட்சத்திரம் சரியாக நினைவில்லாததால், நானும் மனைவியும் ஒத்தையா இரட்டையா என்று குத்துமதிப்பிட்டுச் சொன்ன நட்சத்திரங்களைக் கூட வந்த நண்பரே கூட ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பெயர் மட்டும் போதும் நாமக’ என்று ஏதோ சொல்லிக் கொண்டார் அர்ச்சகர்.

ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கிய பயணத்தில் முதல் நிறுத்தம். கிட்டத்தட்டப் புனிதத் தலங்கள் உலா என்றாகிவிட்ட எங்கள் பூசைவிடுமுறைச் சுற்றுப் பயணம் அங்கு தான் ஆரம்பம் என்று கொள்ளலாம். சத்தியமங்கலம் தாண்டிய பின் போக்குவரத்துக் குறைந்து அமைதியாக இருந்த சாலைப்பகுதியில் அழகு சேர்க்கத் தூரத்து மலைப்பகுதியும் அடர்வனமும் சேர்ந்து கொண்டன. தொலைவில் இருந்து காட்சி தந்த அந்த மலைப்பகுதியின் வழியாகத் தான் மேலேறிக் கர்னாடகத்துக்குள் செல்ல வேண்டும். இது வீரப்பன் காடு என்ற எண்ணம் மனவோரத்தில் ஒரு புறம் இருந்து கொண்டே இருந்தது. வீரப்பன் இல்லாத நிகழ்காலத்துச் சாலைச் சோதனைச் சாவடிகள் எந்த நடவடிக்கையும் இன்றிப் பரபரப்பற்றிருந்தன. வீரப்ப வெற்றிடத்தை நிரப்பவென்று பிற நக்ஸலைட்டுகளும் தீவிரவாதிகளும் இந்தக் காடுகளுக்குள் ஊடுருவுகிறார்கள் என்று செய்திகளில் படித்த நினைவு இருக்கிறது. எங்கள் கண்களில் ஒருவரும் தென்படவில்லை!

மலைச்சாலையின் நுழைவாயிலில் காவல் தெய்வம் போல் பண்ணாரி அம்மன். இந்தப் பக்கம் போகும் வரும் வண்டிகள் எல்லாம் இங்கு நிற்காமல் செல்வதில்லை என்றார் நண்பர். பிற வண்டிகள் நிற்கிறதோ இல்லையோ ஓரிரு வருடங்கள் மைசூரில் வாழ்ந்த இவர் ஒவ்வொரு முறையும் இங்கு வந்து வணங்காமல் சென்றதில்லை என்பது புரிந்தது. “இல்லப்பா! எல்லா வண்டியும் நிக்கும். உறுதியா நிக்கும்”, என்றார்.

முன் தினமே ஆயுத பூசைக்காகச் சன் தொலைக்காட்சியில் பாளையத்து அம்மன் முட்டைக் கண்ணு மீனாவைப் பார்த்துக் கொஞ்சம் பக்திப் பரவச நிலை அதிகரித்துத் தான் இருந்தது. அதிலும் அந்தச் சாமி வண்ண வண்ணமாய் உருவெடுத்துக் காட்சி கொடுத்ததே!

Continue Reading »

Blind Justice - (c) phoenix.edc.org/hec/pubs/images-catalyst/cat15-blindjustice.jpg
நீதித்துறையின் நேர்மை, நடுநிலை, உயர்ந்த குறிக்கோள்களில் நம்பிக்கை வைக்க எனக்கு ஒரு அவசியம் இருக்கிறது. குமுகாயத்திலே சந்திக்கின்ற அநியாயங்களை முறையிட்டு நியாயம் பெற இருக்கும் கடைசி அமைப்பு என்கிற ஆறுதலைத் தரவல்லது. அதை நாட வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லையெனினும், விருப்பு வெறுப்பின்றியும் பாகுபாடுகள் இன்றியும் நீதி ஒன்றே குறிக்கோளாய் இருந்து ஒரு பாதுகாப்புணர்வைத் தரவல்லது. அது வளையாத செங்கோல் போலிருக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் இறுதியில் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான்.

வழக்கறிஞராக இருக்கும் நெடுநாள் நண்பரைச் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஊரிலேயே வேறு எந்த வழக்கறிஞரும் எடுத்து நடத்தத் தயங்கிய ஒரு வழக்கை இன்னொரு நண்பருக்காகத் தான் முன்வந்து எடுத்து நடத்தி வெற்றி கண்டிருக்கிறார் என்று மனதாரப் பாராட்டியபடி பேசிக் கொண்டிருந்தோம். அதிலும் எதிராளி ஊரில் சக்திவாய்ந்த ஒருவர் என்று அறியச் சற்றுப் பெருமையாகக் கூட இருந்தது. ஆனால் ஊதிய பலூனில் குத்திய ஊசியாக என் மகிழ்வுணர்ச்சிகள் குறைந்தன, அங்கும் பணம் விளையாடியிருக்கிறது என்கிற செய்தி கேட்டு.
Continue Reading »

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இந்த விவாதத்தை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டாம் என்று தோன்றினாலும், சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த மறுமொழிப் பதிவு. புதிய பதிவர்கள் சிலருக்கும் இது சில தெளிவுகளைத் தரலாம்.

என் பதிவைத் தூக்கி எறிந்திருந்தால் தெரியும் என்று சொல்பவருக்கு: தமிழ்மணம் தரும் விரிவான வாசகர் வட்டத்தை இழந்திருப்பேன் என்கிற வருத்தம் இருக்கும் என்றாலும், அதனால் என் வலைப்பதிவு நின்றிருக்கப் போவதில்லை. எனது எழுத்திற்கான ஆதாரண காரணத்தையோ உந்துதலையோ தருவது தமிழ்மணம் இல்லை. தமிழ்மணத்திற்கு முன்னரே எனது பதிவு இருந்தது. தமிழ்மணம் இல்லையென்றாலும் என் பதிவு இருக்கும். தினமலரிலும் கல்கியிலும் என் பதிவு பற்றி வந்தால் மகிழ்வேனே தவிர வரவில்லை என்கிற காரணத்திற்காக எழுதாமல் இருக்கப் போகிறேனா?

முப்பது பேர் மட்டுமே பதிவு வைத்திருந்த காலத்திலேயே (அப்போது பிளாக்கரில் RSS/Atom வசதிகள் கிடையாது) யார் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு இருந்த சிரமத்தையும், நேர விரயத்தையும் போக்குவதற்கு ஒரு திரட்டி/வசதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஏங்கி அதற்காகச் சில முயற்சிகள் கூடச் செய்ததுண்டு. இன்னும் சிலரும் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்றாலும் அதற்கு முழு வடிவம் கொடுத்துச் செய்து முடித்தவர் தமிழ்மணத்துக்காரர் தான். தமிழ்மணம் ஒரு திரட்டி + சில கூடுதல் வசதிகள். அவ்வளவு தான்.

Continue Reading »

« Newer Posts - Older Posts »