Feed on
Posts
Comments

thamizmanamஆற்றுப் பாலத்தின் கீழே நிறைய நீர் வழிந்தோடி விட்டது. கூர் கற்களாய்ச் சொற்கள் வண்டிகளில் வந்து இறக்கப் பட்டுவிட்டன. அமைதியாய்த் தனியாகச் சும்மா போய்க் கொண்டிருப்பவன் கூடச் சாலையில் கூட்டமாய் ஒருவனை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்னவென்று தெரியாமலே போர்வையைப் போர்த்திப் ‘போடு இன்னும் ரெண்டு’ என்று சாத்திவிட்டுப் போவதைப் பார்ப்பது போல் இருக்கிறது.

பேச்சை விட, செயலை விட, எழுத்து என்பது சற்றுப் பொறுமையானது, சிந்தித்து நிதானத்தோடு நடந்து கொள்ள வைப்பது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அது எல்லோருக்கும் பொதுவில்லை என்று அறிந்து கொள்ள முடிகிறது. உணர்ச்சி வேகத்தில் எதை வேண்டுமானாலும் கொட்டி விடுவதைத் தடுப்பதற்கு எழுத்து தரும் இரண்டு நொடிப் பொழுதைப் பயன்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ச்சிகளும், விருப்பு வெறுப்புக்களும் உள்ள சக மனிதத்தைக் காட்டாமல் வெறும் மின்னெழுத்துக்களே என்பது போல் காட்டி விடுகிற இணையத்தால் ஏமாந்து விட வேண்டாம்.

எல்லோரும் கூடி வாழும் ஒரு குமுகாயத்திலே கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. ஒரு அமைப்பு எடுக்கும் முடிவுகளை ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்துக் கூறுவது நியாயமானது. இயல்பானது. தேவையானதும் கூட. ஆனால் எதிர்க்கிறேன் பேர்வழி என்று கண்ணை மூடிக்கொண்டு கல்லையும் சொல்லையும் விட்டெறிவது எந்த வகையில் நியாயம்?
Continue Reading »

DE2 Ladenburgமான்ஹைம் தவிர அருகே இருக்கிற ஹைடல்பர்க், லாடன்பர்க் என்னும் சிறு நகரங்களுக்கும் சென்றிருந்தேன். இந்த மூன்று ஊர்களும் ரைன், நெக்கர் என்னும் இரு நதிகளின் கரைகளில் அமைந்திருக்கின்றன. ஆற்றங்கரையை இங்கே அழகாகப் பயன்படுத்துகின்றனர். இம்மூன்றையும் இணைக்கும் பொது வாகன வசதி இங்கு நன்றாக இருக்கிறது. ரயிலோ, பேருந்தோ, டிராம்வண்டியோ ஏறிச் சுற்றி வந்துவிடலாம். அப்படிச் சுற்றி வந்த ஒரு ஞாயிற்றுப்பொழுதில் ஒருபுறம் தெரிந்த மலைத்தொடர்க் காட்சிகள் அருமை. உள்ளேயோ ஜெர்மனின் வயதான குடிகளின் தொண தொணப் பேச்சு. ஊரெல்லாம் பயங்கர அமைதியாய் இருந்தது. இங்கு மட்டும் இப்படி என்ன பேச்சு? ஒரு சீக்கியடித்து “அமைதி” என்று கத்தலாம் போல் ஒரு கண எண்ணம் எழுந்து அமிழ்ந்தது.

ஹைடல்பர்க் ஒரு ஆறும், அதன் இருபுறங்களை இணைக்கும் பாலங்களும், மலையும், அதன் உச்சியில் இடிந்த பழங்காலக் கோட்டையும், இருக்கிற ஊர். ஒரு பல்கலைக்கழகமும் பிரதானமாய் இருப்பதால் இளைய சமுதாயம் அதிகம் நிறைந்திருக்கிற இனிய ஊர். நண்பரோடு இங்கு சென்று வந்ததன் தாக்கத்தில் எழுந்த ஜெர்மன் கிராமத்தினளின் நேரிலிக் கதை இங்கே. ரோட்டோரத்தில் ஒரு இரும்புக் குதிரைப் படத்தை அங்கே பார்க்கலாம்.

DE2 Ladenburg Stone Road DE2 Ladenburg Street

Continue Reading »

DE Poo 1ஜெர்மனி என்றாலே ஹிட்லரும், மொடமொடச் சீருடை அணிந்த கடுகடு முகப் போர்வீரர்களும், கரடுமுரடாய் ஒரு மொழியும், உலகப் போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களும் நினைவுக்கு வந்தாலும், அதன் மென்மையான ஒரு பக்கத்தை எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற பூக்களும் பூச்செடிகளும் காட்டுகின்றன. நகர மையப் பகுதியாக இருந்தாலும் சரி, அடுக்கு மாடிக் குடியிருப்புக்களாய் இருந்தாலும் சரி, சின்னதாய்க் கிடைக்கிற சந்து பொந்துகளில் கூடப் பூச்செடிகள் பூத்துக் குலுங்கி ஜெர்மனி பற்றிப் புதிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

DE Poo 4“ஆமாம், மக்கள் இவற்றிற்கு நிறையத் தான் செலவிடுகிறார்கள் போல் தெரிகிறது” என்றார் ஜெர்மன் நண்பர் அப்போது தான் வண்ண மலர்களைக் கவனித்தாற்போல. ஆற்றோரம் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடி இருந்தவர் சற்றே ஊரைச் சுற்றி அழைத்துப் போகையில் சில கட்டிடங்களைக் காட்டினார்.

“உலகப் போரின் போது பல கட்டிடங்கள் குண்டுவெடிப்பில் அழிந்து விட்டன. அதன் பிறகு அவற்றை முன் இருந்தது போலவே வடிவமைத்துக் கட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் உன்னிப்பாகக் கவனித்தால் பழைய கற்கட்டிடங்களுக்கும் புதியனவற்றிற்கும் வித்தியாசம் தெரியும்” என்றார்.

DE Poo 3மான்ஹைம் (Mannheim) நகரம் ஃபிராங்க்ஃபர்டில் (Frankfurt) இருந்து சில மைல் தூரம் தான். விமான நிலையத்தில் இருந்து ரயிலில் (சரியான திசையில் சென்றால்!) சுமார் அரை மணி நேரம் தான் ஆகியிருக்க வேண்டும். சுமார் மூன்று மாதங்கள் முன்பு அங்கு விமானத்தில் இறங்கிய நான், தெரியாமல் எதிர்த்திசை ரயிலில் ஏறிவிட, பரிசோதகர் வந்து சொல்லிப் பின் அடுத்த நிலையத்தில் (ஃபிராங்க்ஃபர்ட் மெயின்) இறங்கித் திரும்பி வந்தேன். நல்லவேளை வேறொரு வண்டியில் ஏறி இருந்தால் அடுத்த நிலையம் பல மணி நேரங்கள் கழித்துத் தான் வந்திருக்கும். திட்டமில்லாமலே வேறு நகரத்தில் சுற்றி இருக்கலாம்.

Continue Reading »

மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியைக் கொண்டாடும் நவராத்திரித் திருவிழா இன்று முதல் மைசூரில் ஆரம்பம். மகிஷுர் என்பதன் திரிபான மைசூரில் இன்னும் மிச்சமிருக்கிற மகாராஜா ஸ்ரீகந்த தத்தா நரசிம்மராஜ உடையாரும் அவருடைய தேவியாரும் கையில் கங்கணம் கட்டிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வருடா வருடம் நடைபெறும் இந்தத் தசராத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் என்று கேள்வி. பத்தாம் நாள் அரச பேரூர்வலங்களும் கோலாகலங்களுமாய் இனிதாய் இருக்கும் என்று அறிந்ததால், அடுத்த பத்தாம் நாள் அங்கு சென்று வர ஒரு யோசனையும் இருக்கிறது.

Mysore Palace Entranceஇடையில் சென்ற வாரம் ஒருநாள் மைசூர்ப் பக்கமாய்ச் சென்று வந்ததன் பயனாய்ச் சிறு குறிப்புக்கள். பெங்களூர் போல நெரிசலாய் இல்லாமல் மைசூர் இன்னும் மூச்சுத் திணறாமல் அழுத்தமின்றி ஓய்வாய் இருக்கிறது. ஒரு ஐந்து பத்து வருடங்களுக்கு முன்னர் பெங்களூரும் இப்படித் தான் இருந்தது என்று கேட்டபோது அதன் பழைய ஈர்ப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இன்னும் ஐந்து பத்தாண்டுகளில் மைசூரும் பெங்களூர் போல ஆகிவிடுமோ என்று ஒரு கவலையும் இருக்கிறது.

அதிகமான இடங்களுக்குச் செல்லவில்லை எனினும் குறிப்பாய் என்னைக் கவர்ந்த இரண்டு நிகழ்வுகள் பற்றி எழுத வேண்டும். மகிஷனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியின் கோயில் பகுதிக்குள் நுழையும் போதே ‘இது நெகிழி விலக்கிய பகுதி’ (Plastic Free Zone) என்று தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். மலை மேலே தேங்காய் பூ பழம் விற்பவர்கள் கூட நெகிழிப் பைகள் தருவதில்லை. கேட்டாலும் கூடக் கிடைக்காது. அதற்குப் பதிலாக பழைய செய்தித்தாள்களை மடித்துச் செய்த காகிதப் பைகள் கிடைக்கின்றன. எவ்வளவு நல்ல சூழல் பேணும் செயல் இது என்று மகிழ்வாய் இருந்தது. கீழே சந்தையில் இருந்தே நாங்கள் வாங்கிச் சென்ற நெகிழிப் பையை என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

Continue Reading »

சுமார் மூன்றடிக்கு மூன்றடி அளவில் அமைந்திருக்கும் ஒரு தொட்டியின் முன் நண்பரோடு சம்மணங்காலிட்டு அமர்ந்திருந்தேன். மூன்று அல்லது நான்கு அடி ஆழமிருக்கும் என்று கணித்த அந்தத் தொட்டியில் தண்ணீர் நிறைந்திருந்தது. அதில் மிதந்து கொண்டிருந்த வண்ண வண்ணப் பூக்களில் ஓரமாய் ஒதுங்கி இருந்த செம்பருத்தியை எனக்கு அடையாளம் தெரிந்தது. ஒரு கணம் முன்பு கொட்டப்பட்ட சிறு மஞ்சளும் குங்குமமும் மெல்லப் பரவிக் கொண்டிருந்தன.

Thala Kaveri 1

என் இடது கையில் ஒரு ஒடுங்கிய வெண்கலத் தட்டு. இது நாள் வரை அது பல கைகளைப் பார்த்திருக்க வேண்டும். அதனோரத்தில் இருந்த சிறிய தட்டில் குவிந்திருந்த குங்குமத்தைப் பெருவிரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் எடுத்து, எதிரில் இருந்தவர் எனக்குப் புரியாத மொழியில் ஏதோ சொல்லிச் சுவாஹா என்று முடிக்கையில், பெரிய தட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கொண்டிருந்தேன். மனைவி கையால் ஒரு தேக்கரண்டி தண்ணீரை என் உள்ளங்கையில் ஊற்ற அதைக் கீழே அவர் சொன்ன இடத்தில் வார்த்து விட்டேன்.

Continue Reading »

« Newer Posts - Older Posts »