ஜெர்மனிப் பக்கங்கள் – 1
Oct 6th, 2005 by இரா. செல்வராசு
ஜெர்மனி என்றாலே ஹிட்லரும், மொடமொடச் சீருடை அணிந்த கடுகடு முகப் போர்வீரர்களும், கரடுமுரடாய் ஒரு மொழியும், உலகப் போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களும் நினைவுக்கு வந்தாலும், அதன் மென்மையான ஒரு பக்கத்தை எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற பூக்களும் பூச்செடிகளும் காட்டுகின்றன. நகர மையப் பகுதியாக இருந்தாலும் சரி, அடுக்கு மாடிக் குடியிருப்புக்களாய் இருந்தாலும் சரி, சின்னதாய்க் கிடைக்கிற சந்து பொந்துகளில் கூடப் பூச்செடிகள் பூத்துக் குலுங்கி ஜெர்மனி பற்றிப் புதிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.
“ஆமாம், மக்கள் இவற்றிற்கு நிறையத் தான் செலவிடுகிறார்கள் போல் தெரிகிறது” என்றார் ஜெர்மன் நண்பர் அப்போது தான் வண்ண மலர்களைக் கவனித்தாற்போல. ஆற்றோரம் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடி இருந்தவர் சற்றே ஊரைச் சுற்றி அழைத்துப் போகையில் சில கட்டிடங்களைக் காட்டினார்.
“உலகப் போரின் போது பல கட்டிடங்கள் குண்டுவெடிப்பில் அழிந்து விட்டன. அதன் பிறகு அவற்றை முன் இருந்தது போலவே வடிவமைத்துக் கட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் உன்னிப்பாகக் கவனித்தால் பழைய கற்கட்டிடங்களுக்கும் புதியனவற்றிற்கும் வித்தியாசம் தெரியும்” என்றார்.
மான்ஹைம் (Mannheim) நகரம் ஃபிராங்க்ஃபர்டில் (Frankfurt) இருந்து சில மைல் தூரம் தான். விமான நிலையத்தில் இருந்து ரயிலில் (சரியான திசையில் சென்றால்!) சுமார் அரை மணி நேரம் தான் ஆகியிருக்க வேண்டும். சுமார் மூன்று மாதங்கள் முன்பு அங்கு விமானத்தில் இறங்கிய நான், தெரியாமல் எதிர்த்திசை ரயிலில் ஏறிவிட, பரிசோதகர் வந்து சொல்லிப் பின் அடுத்த நிலையத்தில் (ஃபிராங்க்ஃபர்ட் மெயின்) இறங்கித் திரும்பி வந்தேன். நல்லவேளை வேறொரு வண்டியில் ஏறி இருந்தால் அடுத்த நிலையம் பல மணி நேரங்கள் கழித்துத் தான் வந்திருக்கும். திட்டமில்லாமலே வேறு நகரத்தில் சுற்றி இருக்கலாம்.
நீங்கள் பன்றிக் கறி சாப்பிடுபவராய் இருந்தால் ஜெர்மனியில் சாப்பாட்டுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. மற்றபடி கொஞ்சம் திண்டாடத் தான் வேண்டியிருக்கும். ஒரு பத்து நாள் அப்படித் திண்டாடிய என் அனுபவம் இப்போது பேசுகிறது. காலையில் தங்கும் விடுதியிலேயே ‘கண்ட’ காலை உணவு கிடைத்தது (Continental Breakfastங்க, கண்ட கண்ட சாப்பாடுன்னு சொல்றதா நினைச்சுக்காதீங்க! 🙂 ). விதம் விதமாய், கடிக்கக் கடினமான பிரெட்டும் பாலாடைக் கட்டிகளும் (ச்சீஸ்), செதுக்கிய தண்கறியும் (தண்+நீர் போல இது cold meat)கூடக் கிடைக்கும். ஜெர்மன் மட்டுமே பேசத் தெரிந்த விடுதிக் காப்பாளர் இரவுணவுத் தெரிவட்டையில் (menu) இருக்கிற ஆம்லெட் என்பதைச் சைகையிலேயே காட்டி அது வேண்டுமென்று சொன்னால் செய்து கொடுக்கிறார்.
அலுவலகம் நடை தூரம் தான். சற்று அதிக தூரம் என்றால் செல்ல ரயில் மற்றும் டிராம் வண்டிகள் இருக்கின்றன. மதிய உணவிற்கு அலுவலகக் கேண்டீனிலேயே சாப்பாடு என்பதால் பிரச்சினை இல்லை. அங்கும் உடன் ஒருவர் வந்து மொழிமாற்றம் செய்து எது எது என்ன என்ன என்று சொல்லி விட்டாரென்றால் நலம். கேண்டீனில் சாப்பாடு நன்றாக இருக்கிறது. விலை குறைவாயும் இருக்கிறது. ஒரே பிரச்சினை என்னவென்றால், உடன் சாப்பிடுபவர்களின் வேகத்திற்கேற்பச் சாப்பிட வேண்டியிருக்கிறது. நானெல்லாம் சாதாரணமாகக் கல்யாண வீட்டுப் பந்தியிலேயே வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அரை வயிற்றோடு எழுந்து வந்துவிடுகிற ஆசாமி. மடமடவென்று சாப்பிடுகிற ஜெர்மானியர்களோடு எப்படிப் போட்டி போடுவது! இத்தனைக்கும் பெரும்பாலும் (ஜெர்மன் மொழியில்) பேசியபடியே வேறு சாப்பிடுகிறார்கள். காரியத்திலேயே கண்ணாக எதுவும் பேசாமல் சாப்பிட்டாலும் நான் எப்போதும் கடைசி தான்.
இரவு உணவுக்கு வேட்டையாடியதும் சுவாரசியமாக இருந்தது. எங்கே சாப்பிடுவது என்று தீர்மானிக்க முடியாமல் தேடியபடியே போய்க் கடைசியில் கடைகள் எல்லாம் சாத்திவிடுகிற நேரத்தில் ஏற்கனவே தெரிந்த மெக்டானல்ட்ஸில் போய்ச் சாப்பிட்டேன் ஒரு நாள். இந்திய உணவகம் என்று ஒன்றைப் பார்த்தாலும் இங்கும் வந்து அதையே சாப்பிடாவிட்டால் என்ன என்று வித்தியாசமாய்ச் சாப்பிட எண்ணிக் கடைசியில் அப்படி ஆகிவிட்டது.
பிறகொரு நாள் அலைந்ததில் ‘டோனர் கபாப்’ என்று ஒரு கடைக்குப் போனேன். துருக்கியருடையது. இந்த டோனர் கபாப் வகையறா ஒரு சங்கிலி போலப் பல இடங்களில் இருக்கிறது. ஜெர்மனியில் பல துருக்கியர்கள் குடியேறி இருக்கிறார்கள். ஆனால் அங்கும் கடையை வைத்திருப்பவர் ஜெர்மன் மொழி மட்டுமே பேசுகிறார். இத்தனை ஏன், ஒரு சைனீஸ் உணவகத்திற்குச் சென்ற போதும் அங்கும் சீன மொழி அல்லது ஜெர்மன் மொழி மட்டுமே பேசுகிறார்கள்.
உணவு தெரிவட்டைகள் கூட ஜெர்மனில் தான் இருக்கின்றன. வேண்டுமென்று கேட்டால் சில இடங்களில் ‘இங்கிலீஷ் கார்டு’ கொண்டு வந்து தருகிறார்கள். ‘இண்டியன்’ உணவு வகை என்பதை ஜெர்மன் நண்பர் ‘இண்டீஷ் ஃபுட்’ என்று ஏன் தவறாகச் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொலைபேசி மஞ்சள்பக்கங்களைப் புரட்டிய போது அங்கும் ‘இண்டீஷ்’ என்று தான் இருந்தது. பிறகு தான் ‘இண்டியன்’ என்பது ஆங்கிலம் என்று உறைத்தது.
ஜெர்மனியில் புகைபிடிப்பவர்களுக்கு இன்னும் (!) சலுகைகள் இருக்கின்றன. உணவகங்களில் புகை பிடிக்காதவர் பகுதி என்று தனியாக ஒன்று இல்லை. எங்கள் பன்னாட்டு அலுவலகத்தில் கூடப் புகை பிடிப்பதற்குத் தனியிடம் இருந்தாலும், சிலர் தமது இருக்கைகளில் இருந்தே புகை பிடித்துக் கொண்டு எனக்குத் தலைவலியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். பிறரிடம் இது பற்றிக் கேட்ட போது, என்ன செய்வது, பல ஆண்டுகள் அனுபவம் இருப்பவர், அதனால் பொறுத்துப் போய்விடுகிறோம் என்றார்கள்.
இரவுணவுப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு நாள் அலுவலகத்திலேயே ஒருவரிடம் நல்ல இடம் எது என்று தெளிவாகக் கேட்டுவிட்டுச் சென்றேன். கோழிக் கறி கிடைக்கும் என்று அவர் சொல்லிய இடம் சென்றால், அங்கோ மாடு, பன்றி தவிர வான்கோழிக் கறி மட்டும் தான் இருந்தது. சரி பரவாயில்லை, வான்கோழி, கோழிக்கு மச்சான் மாதிரி தானே என்று வாங்கிவிட்டேன். அதற்குப் பதிலாக கரித்துண்டைக் கேட்டிருக்கலாம். அப்படி ஒரு கட்டை மாதிரி இருந்தது. சாப்பிட்டுவிட்டுத் தொண்டைக் குழாயில் ஏற்பட்ட சிராய்ப்பிற்கு நியோஸ்போரின் மருந்து சாப்பிடலாமா என்றும் கூட யோசித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
நீங்கள் சந்தித்த ஜெர்மானியர்கள் வேகமாக சாப்பிட்டார்களா என்ன..என் சகப் பணியாளர்கள் ஊர் கதை உலகத்துக் கதை எல்லாம் பொறுமையாக ஜெர்மனில் பேசி விட்டு தான் எழுகிறார்கள்..அதற்குள் வேக வைத்த உருளைக் கிழங்கை “விதியே” என்று தின்று முடித்து விடுவேன் 🙂
ரொம்பவேதான் கஷ்டப்பட்டிருக்கிறீங்க 😉
🙂 😉 🙁
ரவிசங்கர், சுட்டி தரலாம் என்று உங்க பக்கத்தைத் தான் தேடிக்கொண்டிருந்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை என்று விட்டுவிட்டேன். நீங்கள் ஜெர்மன் அனுபவங்கள் எழுதிய போது தான் நான் அங்கிருந்தேன்.
ராதா, ஆமாங்க. ஸ்விஸ் பரவாயில்லை.
ஆஆ! நீங்க யாரு? சிரித்து மகிழும்படி பதிவு இருந்ததில் சந்தோஷம்.
அலுவலகக் கேண்டீனில் பல பதார்த்தங்களை வைத்திருந்தாலும், அவற்றைப் பார்த்தவுடன் நம்மைப் போல இது அவியல், இது பொரியல், இது குழம்பு, இது கூட்டு என்று அவர்களுக்கே கண்டுகொள்ளத் தெரியாது போலும். வரிசையில் நிற்கும் நண்பரிடம் ‘இது என்ன பதார்த்தம்?’ என்று கேட்டால் அவர் கேண்டீன் சிப்பந்திகளிடம் அக்கேள்வியைக் கேட்பார். நுட்பமான சுவைகள் என் நாவிற்கு மட்டும் தர்ம சங்கடத்தை விளைவிக்கும் போது அவர்கள் மாவரைக்கும் இயந்திரத்தனத்துடன் உணவை மென்று விழுங்குவதாய்த் தோன்றும்.
சாயங்காலம் மக்டொனல்டில் ‘கெம்யூஸெ மாக்’ (veg burger) மற்றும் ‘பொம்மஸ் ஃப்ரெயிட்ஸ்'(உருளைக் கிழங்கு வறுவல்) தினமும் சாப்பிட்டு அதன் மேல் வெறுப்பே வந்து விட்டது.
ஆனால் ‘பியரை’ப் பொறுத்த மட்டில் அவர்கள் (குறிப்பாக பெவேரியர்கள் [Bavarians] ) மகா ரசிகர்கள் என்பதை தெண்டனிட்டு ஒப்புக்கொள்கிறேன் 🙂