மைசூர் நெகிழ்ச்சிகள்
Oct 4th, 2005 by இரா. செல்வராசு
மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியைக் கொண்டாடும் நவராத்திரித் திருவிழா இன்று முதல் மைசூரில் ஆரம்பம். மகிஷுர் என்பதன் திரிபான மைசூரில் இன்னும் மிச்சமிருக்கிற மகாராஜா ஸ்ரீகந்த தத்தா நரசிம்மராஜ உடையாரும் அவருடைய தேவியாரும் கையில் கங்கணம் கட்டிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வருடா வருடம் நடைபெறும் இந்தத் தசராத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் என்று கேள்வி. பத்தாம் நாள் அரச பேரூர்வலங்களும் கோலாகலங்களுமாய் இனிதாய் இருக்கும் என்று அறிந்ததால், அடுத்த பத்தாம் நாள் அங்கு சென்று வர ஒரு யோசனையும் இருக்கிறது.
இடையில் சென்ற வாரம் ஒருநாள் மைசூர்ப் பக்கமாய்ச் சென்று வந்ததன் பயனாய்ச் சிறு குறிப்புக்கள். பெங்களூர் போல நெரிசலாய் இல்லாமல் மைசூர் இன்னும் மூச்சுத் திணறாமல் அழுத்தமின்றி ஓய்வாய் இருக்கிறது. ஒரு ஐந்து பத்து வருடங்களுக்கு முன்னர் பெங்களூரும் இப்படித் தான் இருந்தது என்று கேட்டபோது அதன் பழைய ஈர்ப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இன்னும் ஐந்து பத்தாண்டுகளில் மைசூரும் பெங்களூர் போல ஆகிவிடுமோ என்று ஒரு கவலையும் இருக்கிறது.
அதிகமான இடங்களுக்குச் செல்லவில்லை எனினும் குறிப்பாய் என்னைக் கவர்ந்த இரண்டு நிகழ்வுகள் பற்றி எழுத வேண்டும். மகிஷனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியின் கோயில் பகுதிக்குள் நுழையும் போதே ‘இது நெகிழி விலக்கிய பகுதி’ (Plastic Free Zone) என்று தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். மலை மேலே தேங்காய் பூ பழம் விற்பவர்கள் கூட நெகிழிப் பைகள் தருவதில்லை. கேட்டாலும் கூடக் கிடைக்காது. அதற்குப் பதிலாக பழைய செய்தித்தாள்களை மடித்துச் செய்த காகிதப் பைகள் கிடைக்கின்றன. எவ்வளவு நல்ல சூழல் பேணும் செயல் இது என்று மகிழ்வாய் இருந்தது. கீழே சந்தையில் இருந்தே நாங்கள் வாங்கிச் சென்ற நெகிழிப் பையை என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
திரும்பி வரும்போது நிறைய இளைஞ இளைஞிகள் கையில் தடியுடனும் நெகிழி உறைகளுடனும் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அருகே அணுகிய போது அவர்கள் உள்ளூர்ப் பள்ளியொன்றில் இருந்து வந்த மாணவர்கள் என்று தெரிந்தது. அங்கே கிடந்த குப்பைகளை எல்லாம் அள்ளிப் போட்டு ஞாயிற்றுக் கிழமை அன்றும் சுத்தம் செய்து கொண்டிருந்த அவர்களின் சேவைக்கு மானசீகமாய் ஒரு கும்பிடு போட்டுக் கொண்டேன். ‘சுத்தமாய் இருப்பது இறைவனுக்கு அடுத்து இருப்பது’ என்றோ என்னவோ ஒரு சுலோகமும் எழுதி வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல அமைப்பு முறையுடன் அந்தப் பள்ளிக் குழு செயல்பட்டுக் கொண்டிருந்தது. குழுக்களாய்ப் பிரிந்து பகுதிகளாகப் பிரித்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஏற்கனவே நிறையக் குப்பைகளை அள்ளிக் கொட்டியிருந்த ஒரு பெருவண்டி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த போது இவர்களின் செயலால் எவ்வளவு குப்பைகள் அகன்றிருக்கின்றன என்று உணர முடிந்தது.
இது போல இளைய சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகப் பொறுப்புணர்ச்சியை, பற்றுணர்ச்சியை, வளர்க்க வேண்டும். கோயில் வரிசையில் பல வெளியூர்களில் இருந்து (உத்தமபாளையம் SAB பள்ளி, ஈரோடு நந்தி மெட்ரிகுலேஷன்) வந்திருந்த பள்ளி/கல்லூரி சுற்றுலாப் பயணிகளின் இளமையைப் பூரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். இவர்கள் அடுத்த கட்டத் தேசச் சக்தி. வளரும் தேசத்திற்கு உறுதி சேர்ப்பார்கள். நன்று.
* * * *
மைசூர் அரண்மனை வாயிலில் ஒரு ஒட்டகமும் குதிரையும் சவாரி செய்தாலும் விலங்கியல் பூங்காவிற்குச் செல்லச் சிறுசுகள் இன்னும் ஆசை கொண்டிருந்தன என்று அங்கும் ஒரு நடை சென்று வந்தோம். பூங்கா மூடும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பு தான் செல்ல முடிந்தது. தலைக்கு இவ்வளவு (இருபது?) என்று கட்டணம் வசூலிப்பதோடு, படக்கருவிக்கும் தனிக் கட்டணம் என்று வாங்குவது சற்றே அநியாயம் என்று நான் கருதுகிறேன். இது போலவே இந்தியாவில் இன்னும் சில இடங்களிலும் வசூலிக்கிறார்கள்.
விலங்கியல் பூங்காவின் சுத்தம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக இங்கும் நெகிழிப்பைக் குப்பைகளுக்குத் தடை விதித்திருந்தார்கள். பெயரளவில் இல்லாமல் நுழைவாயிலில் எல்லோருடைய பைகளையும் சோதித்து, நெகிழிப்பைகள் இருந்தால் அவற்றை எடுத்துக் கொண்டு அதற்குப் பதிலாகக் காகிதப் பைகள் தருகிறார்கள். தவறி உள்ளே எடுத்துச் சென்று விட்டால் ஐநூறு உருவாய் அபராதம் கட்ட வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள். சிறுசுகளுக்கு அவசரத்துக்கென்று வைத்திருந்த ரொட்டியைக் (Bread) கூட எடுத்துக் காகிதப் பையில் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது சற்று மிகையாகத் தெரிந்தது. நெகிழிக் குப்பைகளைத் தவறுதலாய் உட்கொள்ளும் விலங்குகளின் உயிருக்கே ஆபத்தாய் அமைந்து விடும் என்று இந்தக் கவனம் என்கிறார்கள். அதிகக் கூட்டமில்லாத அந்த மாலை நேரத்தில் விலங்கியல் பூங்காவினுள் சுற்றிய இடமெங்கும் குப்பையின்றிப் பார்க்க முடிந்ததில் மனது நெகிழ்ந்து மைசூர் மீது ஒரு பிரியத்தை உண்டுபண்ணுகிறது.
தசராக் கொண்டாட்ட மைசூரையும் ஒரு நடை பார்த்துவர மனது தயாராகிக் கொண்டிருக்கிறது.
மைசூரின் அரண்மனையையும், அருங்காட்சியகத்தையும் தவற விடாதீர்கள். அந்த வாட்கள் எனக்கு இன்னும் ஆச்சரியமூட்டுபவை. அதை தூக்குவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எப்படிதான் குதிரையின் மீதேறி சண்டைப் போட்டார்களோ? 🙂
கார்த்திக், அரண்மனைக்குள் ஏற்கனவே ஒரு சுற்றுப் போய் வந்துவிட்டோம். நீங்கள் சொன்ன அருங்காட்சியகத்தைத் தவற விட்டுவிட்டோம். வாளை எப்படித் தூக்கினார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகளைத் தூக்கிக் கொண்டே ரொம்ப நேரம் சுற்ற முடியவில்லை!! 🙂