தமிழ்மணத்திற்கு விழும் அடி
Oct 21st, 2005 by இரா. செல்வராசு
ஆற்றுப் பாலத்தின் கீழே நிறைய நீர் வழிந்தோடி விட்டது. கூர் கற்களாய்ச் சொற்கள் வண்டிகளில் வந்து இறக்கப் பட்டுவிட்டன. அமைதியாய்த் தனியாகச் சும்மா போய்க் கொண்டிருப்பவன் கூடச் சாலையில் கூட்டமாய் ஒருவனை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்னவென்று தெரியாமலே போர்வையைப் போர்த்திப் ‘போடு இன்னும் ரெண்டு’ என்று சாத்திவிட்டுப் போவதைப் பார்ப்பது போல் இருக்கிறது.
பேச்சை விட, செயலை விட, எழுத்து என்பது சற்றுப் பொறுமையானது, சிந்தித்து நிதானத்தோடு நடந்து கொள்ள வைப்பது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அது எல்லோருக்கும் பொதுவில்லை என்று அறிந்து கொள்ள முடிகிறது. உணர்ச்சி வேகத்தில் எதை வேண்டுமானாலும் கொட்டி விடுவதைத் தடுப்பதற்கு எழுத்து தரும் இரண்டு நொடிப் பொழுதைப் பயன்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ச்சிகளும், விருப்பு வெறுப்புக்களும் உள்ள சக மனிதத்தைக் காட்டாமல் வெறும் மின்னெழுத்துக்களே என்பது போல் காட்டி விடுகிற இணையத்தால் ஏமாந்து விட வேண்டாம்.
எல்லோரும் கூடி வாழும் ஒரு குமுகாயத்திலே கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. ஒரு அமைப்பு எடுக்கும் முடிவுகளை ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்துக் கூறுவது நியாயமானது. இயல்பானது. தேவையானதும் கூட. ஆனால் எதிர்க்கிறேன் பேர்வழி என்று கண்ணை மூடிக்கொண்டு கல்லையும் சொல்லையும் விட்டெறிவது எந்த வகையில் நியாயம்?
காசி என்கிற தனி மனிதனின் உழைப்பில் உருவான ஒரு அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான உரிமைகள் முழுமையாக அவருக்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் உண்டு என்பது பயனருக்கான விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே! தமிழ்மணத்தின் சேவையைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளுக்குத் தானாக ஒத்துக் கொள்கிறோம். இது சமீபத்திலேயே வந்து இணைந்த ஜோசப் அவர்களுக்குத் தெரிகிறது. ஆனால் இங்கேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் பல அறிஞர் பெருமக்களுக்குத் தெரியவில்லை என்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இது தெரியாமல் சர்வாதிகாரம், தன்னிச்சைச் செயல் என்று தூற்றல்கள் வேறு. இத்தனைக்கும் ஒன்றுக்கு மூன்றாய் அறிவிப்புக்களும் முன்பே நினைவுறுத்தல்களும் வெளியிட்டிருக்கும் போது.
ஏற்புடைய பதிவுகள் எவை என்று யார் தீர்மானிப்பது, எந்த அடிப்படையில் தீர்மாணிப்பது என்ற கேள்வியும் காட்டமாய் எழுகிறது. அதற்கும் தான் பதில் இங்கே இருக்கிறது.
thamizmanam.com reserves the right to set out its own norms for acceptance including, but not limited to, nature of content, language and frequency of posting. A blog accepted for listing at the submission may be delisted anytime later based on such norms. In this regard, thamizmanam.com’s decison is final. Bloggers whose contents are shown here as previews are requested not to post content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting terror and violence, or in violation of copyright law.
“அதெல்லாம் முடியாது. நாங்க அப்படியெல்லாம் பார்க்கவில்லை. ஒண்ணாப் பழகிட்டோம். இப்போ இப்படிச் செய்தால் எப்படி?” என்று தன்கண்மூடியிருண்ட உலகில் இருக்கும் பூனைகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? இது போன்ற ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்ற பெருந்தன்மையுடன் இதுவரை இப்படிப் பட்ட சட்டதிட்டங்களைச் செயல்படுத்தாமல் விட்டுவைத்து நட்புணர்ச்சியோடு பழகிய ஒருவருக்கு இவையெல்லாம் ஒரு பாடமாக இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சொல்லுவார் – “A System can never win against (an) Individual(s)” என்று. கிட்டத்தட்ட அது தான் இங்கும் நடப்பது போல் இருக்கிறது.
இந்த சட்ட திட்டங்களுக்கு உடன்பட மறுப்பவர்கள் தங்கள் பதிவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம். அணுகி நோக்கியவர்களுக்குத் தான் இந்தத் திரட்டலில் எவ்வளவு குறைந்த மனிதத் தலையீடு இருக்கிறது என்பது புரியும். அதுவும் பிற தமிழ்த் தளங்கள், மின்மடற் குழுக்கள், மின்மன்றங்கள் இவற்றை எல்லாம் ஒப்பு நோக்கின் இங்கே தானியங்கியாக எவ்வளவு நடைபெறுகிறது என்பது கவனிக்கப் படவேண்டியது. இன்னும் மேம்படுத்தப் பட வேண்டிய வேலைகள் நேரமின்மை காரணமாகச் செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. இவ்வளவிலும் மக்களுக்குப் பிரச்சினை இல்லாமல் இல்லை. “சார், தமிழ்மணத்துல அவன் அப்படி எழுதறானே சார். அது என்னைப் பாதிக்குது. இதையெல்லாம் பாத்துக்கிட்டு சும்மா இருக்கீங்களே” என்று இரண்டு கேள்வி எழாமல் இல்லை. “பிளாக்கரிலே என் பதிவு காணாமப் போயிடுச்சே, தமிழ்மணத்துல என்ன செஞ்சீங்க” என்று இன்னும் தமிழ்மணம் வேறு, பிளாக்கர்/பிளாக்ஸ்பாட் வேறு என்று புரிந்து கொள்ளாமல் வருகிற கேள்விகளும் உண்டு. அப்படியே மிகவும் ஆட்சேபணைக்குரிய இடுகைகளைக் கூடத் தாமாக நீக்கிவிட வேண்டாம் – பொதுவில் பதிவர்களுக்கும் ஒரு குரல் இருக்கட்டும் என்று நீக்க வேண்டிய இடுகைகளைப் பற்றிச் சுட்டிக் காட்ட (சுட்டிக்காட்ட மட்டும்; இறுதி முடிவு தமிழ்மணத்திற்கு) வாசகர்களுக்கே வசதியொன்றும் (சிகப்புப் பொத்தான்) செய்து கொடுக்கப் பட்டிருக்கிறதே! இன்று சுக்குக்காப்பிப் பதிவை ஏன் நீக்க வில்லை என்று தனிப்பட்ட முறையில் ஊரெல்லாம் சென்று தாக்கிக் கொண்டிருக்கிற அன்பர் எத்தனை முறை அந்த வசதியைப் பயன்படுத்தித் தன் ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கிறார்?
இருக்கிற எல்லா தமிழ்ப் பதிவுகளுக்குமான வாசல் தமிழ்மணம் தான் என்று எங்குமே பறைசாற்றிக் கொள்ளவில்லை. விருப்பப்படுபவர்களின் பதிவுகளைத் திரட்டித் தொகுத்துக் கொடுக்கிற ஒரு வாசல்/சேவை. இது தான் இன்றும் தமிழ்மணத்தின் அடிப்படைப் பணி. வேறு திரட்டிகளோ சேவைகளோ இருக்கக் கூடாது என்று தமிழ்மணம் என்றும் நினைத்ததில்லை. சில நண்பர்கள் முயற்சி செய்தும் பார்த்துள்ளனர். ப்ளாக்லைன்ஸ் போன்ற திரட்டி சேவைகள் கூடப் போதுமே. இருந்தும், இவற்றிற்கான தொழில்நுட்பங்கள் பரவலாய்க் கிடைத்தும் அவற்றை எல்லாம் ஒழுங்கமைத்து இது போல் ஒரு திரட்டியைத் தர ஏன் யாரும் இதுவரை முன்வரவில்லை? அதற்குச் செலவிடவேண்டிய நேரம், உழைப்பு. மற்றும், தமிழ்மணம் போதுமானதற்கு மேலாக இருக்கிறது என்பதும் ஒரு காரணம். பதிவுத் திரட்டோடு, பலரும் விரும்பும் இன்ன பிற சேவைகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ள ஒரு அமைப்பு இது. இதனால் பதிவர்களுக்குக் கிடைத்திருக்கிற பரவலான வாசகர்களும், வாசகர்களுக்குக் கிடைக்கும் பரவலான தகவல்களும், பின்னூட்டத் தொகுப்புக்களும், சிறப்பான பதிவுகளின் முன்னிருத்தலும், இந்த ஊடாடல்களால் உருவான உலகளவு நட்புக்களும் ஏராளம் என்பதை இன்று முதுகில் தர்ம அடி கொடுக்கும் எந்தப் புண்ணியவானும் மறுக்க முடியாது.
எல்லோரும் ஏற்றுக் கொண்ட, தனக்காகத் தமிழ்மணம் வரையறுத்துக் கொண்ட முழு உரிமைகளுக்குட்பட்டே எடுக்கப் பட்ட இந்த நடவடிக்கைகள் ஒவ்வாமையாக இருப்பின் அவரவர் பதிவைத் தமிழ்மணத்தில் இருந்து நீக்கிக் கொள்ள அவர்களுக்கும் முழு உரிமையும் இருக்கிறது. இதனையும் தான் விதிமுறைகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றதே.
thamizmanam.com reserves the right to list any blog submitted based on its own norms of acceptance. Anyone wishing to delist his/her blog is requested to write an email to thamizmanam.com administrator (adm at thamizmanam.com). However, the right of decision over such request, and over the amount of time it takes to implement the same are reserved with thamizmanam.com. Since it is beyond the means of thamizmanam.com to verify the right of ownership of the blog concerned, such requests for submission or removal will be decided based on merits of the case and available information, and the decision of thamizmanam.com is final.
இது போல் முன்பு தமிழ்மணத்தில் இருந்து நீங்கிக் கொண்ட பலர் இருக்கிறார்கள். அதன்படி செய்வதை விட்டுவிட்டு அவரவர் பதிவில் ‘என்னை நீக்குக’ என்று வேண்டுகோள் வைத்துவிட்டு அதையும் தமிழ்மண நிர்வாகிகள் வந்து படித்து ஆவண செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் மிகையாகத் தெரியவில்லை? இதற்காகத் தானே காசியும் முன்பே, தமிழ்மணத்தின் மன்றத்திலோ, மின்னஞ்சலிலோ அன்றிப் பிற இடங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை என்று கொள்கை அளவில் முடிவைச் சொல்லி இருந்தார். தனியொருவர் எழுநூற்றிச் சொச்சம் பதிவுகளைப் படித்து அவற்றில் இடப்படுகிற வேண்டுகோள்களை ஏற்று அதன்படி செயல்களைச் செய்ய வேண்டும் என்றால் அவர் குடிக்கிற கஞ்சிக்கும் வழி செய்து கொள்ள நேரம் வேண்டாமா? மற்றபடி இதற்காகவெல்லாம் நீங்கிக் கொள்ள அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அதன்பிறகு அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
தனிப்பட்ட வலைப்பதிவன் என்கிற முறையில் தணிக்கைமுறைகள், பதிவு நீக்கம் பற்றி எனக்கும் சில கருத்துக்கள் உண்டு. ஆனால் அவை எப்படி இருந்தாலும், தமிழ்மண சேவையை அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொண்டவன் என்கிற முறையில் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறேன். நிர்வாகத்தில் பங்கு கொண்டவனாகத் தமிழ்மணத்திற்கு விழும் அடிகளுக்கிடையே சரியான புரிதல்களைக் காட்டும் சன்னாசி, அன்பு, அனுராக், பத்மா, ஜோசப், மற்றும் இன்னும் பல சில நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Selva,
Appada thelivaa solliteenga. Thanks for the post.
Moreover, if we see the fundamental thing here, it is just the efforts of Kasi, which allow now others to make comments.
I was keeping quiet because of infinite number of personal things. But as an user i feel i should say that Kasi do have the rights and i beleive in his discretion.
Thanks once again for the post.
(Ithai thamizh-la kooda ezhutha mudiyaathe nilamai ippo 🙁
Anbuan
Balaji paari
அந்த குறிப்பட்ட பதிவை பற்றி பொத்தானை அமுக்க வில்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?
பலமுறை அமுக்கியும் பயன் இல்லாததாலும், கொள்கைகள் எவ்வாறு ஒரே அளவில் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் கூட சுட்டிக்காட்டக் கூடாதா ?
பேச்சை விட, செயலை விட, எழுத்து என்பது சற்றுப் பொறுமையானது, சிந்தித்து நிதானத்தோடு நடந்து கொள்ள வைப்பது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அது எல்லோருக்கும் பொதுவில்லை என்று அறிந்து கொள்ள முடிகிறது. உணர்ச்சி வேகத்தில் எதை வேண்டுமானாலும் கொட்டி விடுவதைத் தடுப்பதற்கு எழுத்து தரும் இரண்டு நொடிப் பொழுதைப் பயன்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும்)- I think we have far way to go in learning process. As a social volunteer worker I can undersatnd the pain
வலியும் நோவும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். எனவே உங்கள் பதிவினை தூக்கி இருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் காசிக்கு ஜால்ரா பார்ட்டி என்பது இன்னொருபுறம் இருக்கட்டும். இத்தனை நாட்களாக அனுமதித்துவிட்டு இன்றைக்கு தூக்கியதால் வந்த கோபத்தில் பேசுகிறார்கள். கண்ணில்லாத ஒருவனுக்கு கண்ணைக் கொடுத்துவிட்டு திடீரெனப் பறித்தால் அவன் படும் வேதனை சொல்லித் தெரிவதில்லை. நீங்களே அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். அங்கே குசும்பர் என்ன தவறு என்று உங்களால் அல்லது காசியால், பரியால் சொல்லமுடியுமா? மிதமான கிண்டல் அவருடையது. அதனால் மனம் புண்பட்டவர் யாருமில்லை. நாங்கள் எல்லாம் யதார்த்தமாகத்தான் எடுத்துக் கொண்டோம்.
எத்தனை ஜாதிப் பதிவுகள் வந்தன? எத்தனை மதப் பதிவுகள் வந்தன? எத்தனை மத துவேஷப் பதிவுகள் வந்தன? அன்றே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அவர்களைக் கண்டித்து இருந்தால் எல்லோரும் திருந்தி இருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் காசி எங்கே புடுங்கவா சென்றிருந்தார்? இப்போதும்கூட ஒழுங்காகச் செயல்படாத பதிவாளர்களுக்குப் பகிரங்கமாக ஒரு எச்சரிக்கை விடுத்து இருந்தால் திருந்தி இருப்பார்கள்.
சரி, நீக்கியதுதான் நீக்கினார். எந்த தளங்கள் நீக்கப்பட்டன என்பதையும் அவை என்ன காரணங்களுக்காக நீக்கப்பட்டன என்பதையும் தெளிவாகக் கூறலாம்தானே? ஏன் பயம்? யாரைப் பார்த்துப் பயம்? தானியத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் என எகத்தாளம் வேறு! நான் என் சொந்த செலவில் நடத்துகிறேன், வாயை மூடிக் கொண்டு இருங்கள், உன் காசு ஒரு பைசா இதில் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். இதனை அவர் சேரும்போதே ஒவ்வொருவரிடத்தும் சொல்லி இருக்கலாம்தானே! அல்லது சேர விரும்புபவர்களிடம் காசு வசூலித்து இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. அன்றைக்கு சும்மா இருந்துவிட்டு இன்றைக்கு தானியத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் குந்தானியில் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
ஜிஞ்சா மற்றும் ஜால்ரா போடாமல் அமைதியாக சிந்திக்கும்படி மூத்த பதிவாளர் செல்வராஜ் அவர்களை நான்கேட்டுக் கொள்கிறேன்.
சிலர் என்ன எழுதுகிறோம் என்பதே தெரியாமல் குண்டக்க மண்டக்க என ஏதோ தோ எழுதுகின்றனர் சிலர் அசிங்கமாக பின்னூட்டமிடுகின்றனர். இதற்கெல்லாம் ஒரு முடிவு இல்லையா என நான் எண்ணியதுண்டு. அடுத்து நடந்த வரலாற்றையே தவறாக இல்லை என மாற்றி எழுதி அதையே மாற்றுகின்றனர். இப்படி ஒரு நடவடிக்கை என்னைப்பொருத்தவரை தேவை.
என்னார்
நண்பர் செல்வராஜ்
நன்று சொல்லியுள்ளீர்கள். நன்றி.
ஒன்றே ஒன்று. எனக்கு தெரிந்தளவில், ஒரு தடவை நண்பர் காசியின் பதிவில் பின்னூட்டமிட்ட போது, எதையும் தமிழர்களுக்கு இலவசமாக செய்து தரக்கூடாது என்பதாக எழுதியிருந்தேன். நான் சொன்ன கருத்து தவறாக இருக்குமோ என மகிழ்வுடன் நினைத்ததுண்டு. இல்லை, இல்லை – நம்மினத்தவரிடம் மாற்றங்கள் ஏதுமில்லை என்பது வருத்தத்தை உண்டு பண்ணுகிறது.
Test
வணக்கம்.
தமிழ்மணத்திலிருந்து வலைப்பக்கங்கள் நீக்கப்பட்டது இதுதான் முதல்தடவையன்று. எனது பக்கமொன்று ஏற்கெனவே நீக்கப்பட்டிருக்கிறது. இந்தப்பக்கம் 5 மாதங்களுக்கு முன்பேயே தமிழ்மணத்திரட்டியிலிருந்து நீக்கப்பட்டது. அதற்கான காரணமேதும் சொல்லப்படவில்லை. ஆனால் நான் இப்பதிவில் எழுதப்பட்ட ஆபாசப்பின்னூட்டம் தான் காரணமென்று நினைக்கிறேன். அதைவிட நியாயமான எந்தக் காரணமுமில்லை. அதேநேரத்தில் மிகப்பரவலாக ஏராளமான வலைப்பதிவுகளில் ஆபாசப்பின்னூட்டச் சண்டைகள் நடந்துவந்தது. ஆனால் என்வலைப்பக்கம் மட்டுமே அக்காரணத்தால் இடைநிறுத்தப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில் நான் இதையிட்டு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை (நியாயம் முழுக்க என்பக்கம் இருப்பினும்கூட). கேட்கவிரும்பவில்லை. பேசாமல் சிறிதுநாட்களின்பின் வேறொரு வலைப்பக்கத்தை அதேபெயரில் திறந்து பதிந்து வருகிறேன்.
ஏனென்றால் எந்த நடவடிக்கைக்கும் நான் கட்டுப்படவேண்டிவன் என்றே என் புரிதல் இருந்தது. இதை இப்போது சொல்வதற்குக் காரணமிருக்கிறது.
ஆபாசப்பதிவுகளல்லாத எந்தப் பதிவையும் நீக்குவதிலே இம்மியளவும் உடன்படாதபோதிலும் நிர்வாகியின் நடவடிக்கைக்குரிய உரிமையை மதிக்கிறேன். நான் சொல்லவிரும்புவது, நடவடிக்கை என்று வந்தபின் ஏற்றத்தாழ்வுகளற்ற பொது அளவீடு கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்பதே. அது இல்லாத பட்சத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் தவிர்க்க முடியாதவை. சுக்குக்காப்பியின் வலைப்பதிவை நிர்வாகிகளே சொல்லும் காரணங்களின் அடிப்படையில், வாக்குப்போட்டுத்தான் நிறுத்த வேண்டுமென்றில்லை. அக்காரணம் ஏற்புடையதன்று. எனினும் இதைக் கருத்தாகத்தான் சொல்கிறேன்.
சர்வாதிகாரம், பாசிசம் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. நடவடிக்கை எடுக்கும் தார்மீக உரிமை நிர்வாகிக்கு உண்டென்பதை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்.
“உனக்கு வந்தால் தெரியும்” என்று சொல்பவர்களுக்கு: எனக்கு நடந்தாலும் பேசாமற் போவேன் என்று உறுதியாகச் சொல்கிறேன், முன்பும் அப்படிப் போனவன் என்பதால்.
செல்வராஜ்,
“போற்றுவார் போற்றலும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றலும்”
பொதுவான விஷயங்களில் ஈடுபடும்போது தனி மனிதனை பாதிக்காது. `பிதாவே இவர்களை மன்னியும், இவர் செய்வது இன்னதென்று அறிகிலர்’ பாணிதான் இதற்குரிய பதில். ஒரு கூட்டைக் கட்டும் குருவியின் மனதை அதைப் பிரித்தெறியும் மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் காசியின் முடிவு வரவேற்கத்தக்கதே, சில கருத்து வேறுபாடுகள் அதில் இருந்தாலும். கணிணி உபயோகிக்கும் அளவு அறிவுள்ள மனிதர்கள் எங்க ஊர் குழாயடிப் பெண்டிரை விட கேவலமான வார்த்தைப் பிரயோகம் செய்வது வருத்தமாக இருக்கிறது.
இது ஒருவிதமான மன வக்கிரமே. புனை பெயர்களில்பதியும் போது வரும் ஒரு type of exhibitionism. நிஜ முகம் தெரியும்போது அதே மனிதர்களின் அந்தர் பல்டி வேறுவிதமாக இருக்கும்.
இதனாலெல்லாம் காசி சோர்வடையமாட்டார் என்ற கணிப்பு எனக்கு இருக்கிறது. பெரிய காரியங்களைச் சாதிக்க முயலும்போது, இவையெல்லாம் பல்லிடை அகப்பட்ட துரும்பு.
ஒரு வகையில் சந்தோஷமாக இருக்கிறது. குஷ்பூ பிரச்னையை புறம் தள்ளி ஒரு ஆரோக்கியமான விஷயத்தில் தமிழ்மணம் விவாததைத் தொடங்கியுள்ளதே!
தமிழ்மணத்தின் மிகச் சில நாட்களே உலா வந்த போதும், நிறைய பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போதுதான் அதிலுள்ள வரம்புமீறல்கள் தெரிந்தது. இடையிடையே அது உறுத்தியதால் சமீபத்தில்கூட ஒரு கவிதை எழுதியிருந்தேன். பெண்கள் அனைவரும் எழுதுவதைத் தவிர்த்து பின்னூட்டம் மட்டுமிட்டால் போதுமோ என்ற நிலை கூடத் தோன்றியது. ஆனால் காசியின் நடவடிக்கை மற்றவர்களுக்கு எப்படியோ,பெண்களுக்கு கொஞ்சம் தெம்பு கூடியுள்ளது. ஜால்ரான்னு சொன்னாலும், கடலைன்னு சொன்னாலும் தப்பே இல்லைங்க.நாம் சக மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையே.
அன்புடன்,
தாணு
பி.கு; ஊர்ப்பக்கமே வரலியா?
தாணு என்ன சொல்றீங்க? காசியின் நடவடிக்கை பதிவுகளைக் கட்டுப்படுத்துமே தவிர அநாமதேயே ஆபாச பின்னூட்டங்களை கட்டுப்படுத்துமா என்ன? விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.
ஒன்னுமேபுரியலே உலகத்தில்லே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!
செல்வராசா, வாசா, அன்பா குடுக்குறாங்கன்னு பினாயிலைக் குடிப்பியா ராசா?
என்னுடைய இந்த பதிவிலிருந்து சில வரிகள் கீழே, என்ன மிஞ்சிபோனால் ஜால்ரானு ஒரு முத்திரை கிடைக்கும் அவ்ளோதானே, ஏற்கனவே பல முத்திரைகளை வாங்கிய என் முதுகில் இன்னொரு முத்திரையை வந்து குத்துங்கோ…
கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் காசியின் அறிவிப்பை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன, காசி பந்தாடப்படும் விதம் சத்தியமாக என்னளவில் ஏற்புடையதில்லை, என் பதிவு நீக்கப்பட்டிருந்தால் காசிக்கு ஒரு தனி மடல் என் பதிவு நீக்கப்பட்டிருக்கின்றதே, தவறுதலாக நீக்கிவிட்டீர்களா? சொல்ல முடிந்த காரணம் இருந்தால் சொல்லலாம் என்ற ஒரு தனி மடல் மட்டுமே அனுப்புவேன், அதைத் தாண்டி எதையும் கேட்க எனக்கு தார்மீக உரிமையும் இல்லை, சட்டப்பூர்வ உரிமையும் இல்லை, சத்தியமாக நக்கல் அடிக்கவோ, கிண்டல் அடிக்கவோ என் மனசாட்சி இடம் தராது காசி என்ற தனிமனிதனின் உழைப்பையும் தமிழ்மண நிர்வாகிகளின் உழைப்பையும் பயன் படுத்தி இத்தனை இணைய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின் கிண்டலடிப்பதும் நக்கலடிப்பதும், காசியை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதும் காசி மீது ஏவப்படும் ஒரு வன்முறையாகத் தான் இதை பார்க்கின்றேன், காசியின் முடிவில் முரண்பட்டால் கருத்தும்,ஆலோசனையும் சொல்வது நிச்சயம் தவறில்லை, அது தேவையான ஒன்றும் கூட, ஆனால் கேலியும் கிண்டலும் மனோகரா வசனம் பேசுவதும்… ஆண்டவா காசி நிலையில் நான் இருந்திருந்தால் ?? எனக்கு எக்காலத்திலும் வேண்டாம்பா இந்த நிலமை.
எந்த வித தார்மீக உரிமையும், சட்ட உரிமையும் இல்லாத போதும், சமூகத்தில் படித்த, ஓரளவு நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் இங்கேயே இப்படியான தாக்குதல் என்றால் நிச்சயமாக தங்கர் நடிகர் சங்கத்திலிருந்து உயிரோடு வெளிவந்ததும், குஷ்பு இன்னமும் தமிழகத்தில் இருப்பதும் மிக ஆச்சரியமான விடயம் தான்.
Jayashree Govindararan சொன்னது:
காசி அவர்களுக்கு,
தமிழ்மணத்தில் நான் உறுப்பினரோ, எனக்கென சொந்த வலைப்பதிவோ இல்லாதபோது இதுபற்றி கருத்துத் தெரிவிப்பது சரியா என்று பலமுறை யோசித்து, தொடர்ந்து இந்தத் தளத்தை உபயோகித்தவள்- வேறு தொழில்நுட்பங்கள் தெரியாததால் இந்தத் தளத்தை மட்டுமே வலைப்பதிவுகள் படிக்க தொடர்ந்து உபயோகித்து வருபவள் என்ற முறையில் என் கருத்தையும் சொல்லநினைக்கிறேன்.
நீங்கள் எடுத்த முடிவு சரியா தவறா என்று யாரும் இங்கு சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை என்று திடீரென நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தமிழ்மணத்தை மேம்படுத்த உதவியவர்கள், தொழில்நுட்ப விஷயங்களை சகபதிவாளர்களுக்கு தேவைப்பட்டபோதெல்லாம் அவர்களுக்குள்ளாகவே முன்வந்து வழங்கியவர்கள், நட்சத்திரப் பதிவாளர்களாக இருந்தும், தங்கள் பின்னூட்டங்களாலும் பிற பதிவாளர்களையும் உற்சாகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பெரும்பாலான பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த நிலையில், 4வது காரணமாக சொல்லப்பட்டிருக்கும்- திடீரென உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை எந்த முன்னறிவிப்பும் யாருக்கும் கொடுக்காமல் நீக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. முழுக்க முழுக்க தமிழ்ப் பதிவாளர்கள் அனைவரும் தமிழ்மணத்தையே நம்பியிருக்கும் வேளையில் திடீரென ஒருநாள் காலையில் ஒவ்வொருவராக திரட்டியில் தன்பதிவு இல்லையென்று புலம்ப வைப்பது… நான் பாஸ், நீ ஃபெயில் என்று மாற்றி மாற்றி உங்கள் பச்சைவிளக்கைப் பார்க்க ஓடவைப்பது.. நாம் எந்த நாகரிக யுகத்தில் இருக்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது.
இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம். அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Golden Handshake என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.
இங்கு இருக்கும்(மன்னிக்கவும், இருந்த) உறுப்பினர்கள் யாரும் கருத்தளவில்/ நடையளவில் உங்களுக்கு(நமக்கு) ஒப்புதல் இல்லாதவர்கள் என்பதால் உங்கள் ஒப்புதல் பெற்ற யாரைவிடவும் ச்க வலைப்பதிவாளர்களாக அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.
முன்பு ஒருமுறை குழுமங்களுக்கும் தமிழ்மணத்திற்குமான வித்தியாசத்தை யாரோ ஒருவரது பதிவில் எனக்குச் சொன்னீர்கள். தேடி எடுத்துப்போட எனக்கு நேரமில்லை என்றாலும் உங்களுக்கும் அது மறந்திருக்காது என்றே நம்புகிறேன். குழுமங்கள் இன்னும் இவ்வளவு மோசமாகவில்லை என்றுதான் தோன்றுகிறது.
உங்கள் இந்தச் செயல் இனி தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதப்போகும் ஒவ்வொரு பதிவாளர்களையும் பதிவுகள் எழுதுவதற்கு முன்னும், புதிதாக சேர நினைப்பவர்களை, சேருவதற்கு முன்னும் கொஞ்சம் யோசிக்கவைப்பதாகவே இருக்கும். உங்கள் ரசனையோடு தங்கள் எழுத்தை ஒருமுறை உரசிப்பார்ப்பதாகவே அது இருக்கும்.
உங்கள் இந்த முடிவால், வலைப்பதிவு உலகத்துக்கு வேறு வேறு புதிய திரட்டிகள் கிடைக்கலாம்; இன்னும் வேகத்துடன் தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம். வலைப்பதிவு அதன் அடுத்தக் கட்டத்துக்கே முன்னேறலாம். …லாம் …லாம் …லாம். மிக மிக நல்ல விஷயம். ஆனால் அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் (காலணா திவச தம்படிக்குப் பிரயோசனமில்லாத) கருத்து! வருந்துகிறேன்!!!
உள்ளபடியே உங்கள் மற்றும் உங்கள் நிர்வாகக் குழுவினரின் சேவைக்கு ஒரு தீவிர வாசகியாக மீண்டும் மீண்டும் என் நன்றிகள்
****
test
Selva,
Thanks for explaining the facts and procedures clearly enough.
அன்புள்ள செல்வராஜ்,
கடந்த சில நாட்களாக இவ்விஷயத்தை பற்றி பல பதிவுகளில் படித்து, யோசித்துக் கொண்டிருக்கிறேன். தர்மசங்கடமென்றால் என்ன என்று இப்பொழுது உணருகிறேன். நீங்க சொல்றது நன்றாக புரிகிறது. நியாயம் தான். அதே சமயம் துளசி சொல்வது போல் ஒரு குடும்பம் என்ற அளவுக்கு இல்லையென்றால் கூட ஒரு குழுமமாக பழகி விட்டதால் சற்று மன வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது.
//அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் (காலணா திவச தம்படிக்குப் பிரயோசனமில்லாத) கருத்து!// இதே என்னுடைய மனநிலையும்.
அன்புள்ள செல்வராஜ்,
உங்கள் பயணக்கட்டுரைகளை விரும்பிப் படித்திருந்தாலும், உங்கள் பதிவில் இதுவே முதல் பின்னூட்டம் (SCT யில் எழுதிக்கொண்டிருந்த அதே செல்வராஜா நீங்கள்?).
“சர்வாதிகாரம்” என்ற சொல்லை நானும் இந்த விவாதத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். எழுதப்படும் பதிவுகளுக்கும், கருத்துக்களுக்கும் தனிப்பட்ட பதிவர்களே பொறுப்பு. இதில் தமிழ்மணத்திற்கோ, அதை உருவாக்கிய காசிக்கோ, நிர்வகிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கோ எந்தவிதத் தொடர்பும் இல்லை. சர்ச்சைக்குரிய பதிவுகளால் தமிழ்மணத்தோடு தொடர்புடைய யாருக்கும் களங்கமில்லை. ஆகவே அவற்றைக் கட்டுப்படுத்துவது தேவையில்லை என்பதே என் கருத்து. சில அதிதீவிரமான பதிவுகளை நீக்க வேண்டுமெனக் கருதியிருந்தாலும் ஒரு வாக்கெடுப்பு நடத்திச் செய்திருக்கலாம். முன்பு இதை காசி செய்துக்காட்டியிருக்கிறார்.
இப்படிச் சொல்வதற்காக தற்போது காசியின் மீது வீசப்படும் வசைகளுக்கு துணைபோவதாக நினைக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். வசவுகளை எதிர்கொள்ளும் காசிக்கும், உங்களைப் போன்றவர்களும் தார்மீக ரீதியான முழு ஆதரவும் உண்டு.
இதைத் தவிர்த்திருக்கலாம். இதை “ஒரே குடும்பம், குழுமம்” என்ற உணர்ச்சிப்பூர்வமான காரணத்துக்காக சொல்லவில்லை. பலத்தரப்பட்ட கருத்துக்களும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்கவேண்டுமென்ற ஆர்வத்திலேயே சொல்லகிறேன்.
machaan,
yaar enna sonnalum don’t worry. Dhanu sonnatha enga talai ‘arasiyal vaazhkayilae ithellam sahajamappa’nu oru variyila sollirukaaru… 🙂
machaan,
yaar enna sonnalum dont worry. arasiyal vazhkiyila ithellam sahajamappa…nu …er… i think…. valluvarea solli irukaaru
anbudan
babu
எந்த ஒரு தளத்தில் இயங்க வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட நியமங்களுக்குள் தான் இயங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நியாயமாக எல்லோரும் இயங்க முடியும்.
கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது தான் எங்களது விருப்பம் என்பவர்கள் தங்கள் சுதந்திரம் மற்றொருவரின் சுதந்திரத்தில் தலையிடுவதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஆபாச பின்னூட்டமிடும் அநாமதேயங்களின் கொள்கை தான் பிறரின் சுதந்திரத்தில் தலையிடும் அருவெறுப்பான கொள்கை.
இவர்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கும் பொழுதோ அல்லது என் அடையாளங்களைச் சொல்லியே நான் தவறான படைப்புகளை முன்வைப்பேன் என விதண்டாவாதம் புரியும் நண்பர்களின் வலைப்பூக்களையோ தடை செய்து வைப்பதில் யாருக்கு என்ன தயக்கமிருக்கப் போகிறது என்று புரியவில்லை.
நியாயமான வழியில் செயல்பட்டும் தங்கள் பதிவுகள் நீக்கப்படுகின்றன என்று எண்ணுபவர்கள் அதை நியாயமான வழிமுறைகளிலே தெரிவித்துக் கொள்ளலாமே?
என்றாலும் – இங்கு ஒரு நண்பர் கூறியிருந்தார் – ஆபாச பின்னூட்டங்களை இது தவிர்க்காது, மாறாக மொத்த படைப்பையும் தான் நீக்க முடியும் என்னும் பொழுது யாருடைய படைப்பையும் நீக்க வேண்டும் என்று அநாமதேயங்கள் நினைத்தால் ஒட்டுமொத்தமாக அந்தப் பதிவிற்குப் போய் தரங்கெட்ட பதிவுகளைக் கொண்டு தாக்குதல் தொடுக்கத் தான் செய்வார்கள். அப்பொழுது அந்த படைப்பின் தரத்தை விட, அதை எழுதிய மனிதன் மீதுள்ள அசூயையே போதுமானது இத்தகையவர்களுக்கு.
அப்படியானால் ஒரு வலைப்பதிவாளரின் பாதுகாப்பு எப்படி? அவருக்கு யாரேனும் தகவல் கொடுத்து – உங்கள் பதிவிற்கு வரும் ஆபாச பின்னூட்டங்களை நீக்குங்கள் என்று தகவல் தருவார்களா?
இன்னமும் கூட கொஞ்சம் விளக்கம் தேவையானதாகத் தான் இருக்கிறது.
நன்றி செல்வராஜ்.
சில பதிவுகள் நீக்கப்பட்டது சரியா தவறா என்பது விவாதத்துக்கு உரியதல்ல. ஏனெனில் அவை ஒரு பொதுக்கருத்துக்கு கீழ் வருமா என்பதுதான் கேள்வி. இன்னொன்று ஒரு குடும்ப/குழு உணர்வைப்பற்றி பேசும் போது தமிழ்மணத்துக்கு தங்களுடைய பதிவில் தொடுப்புக்கொடுப்பதைக்கூட உரிமை பாதிப்பாக பார்த்ததையும், அதற்கான உரிமையை விட்டுக்கொடுக்காத 100 க்கு மேற்பட்ட பதிவுகளையும் இங்கு நினைவுகூற வேண்டும். (இது குறித்து எனக்குத் தெரிந்து இரண்டு முறை காசி அறிவிப்பு செய்ய வேண்டிய அவலம் நேர்ந்தது) இத்தகைய குடும்ப/ குழுச்சூழ்நிலையில் தமிழ்மணத்தின் விதிகளுக்கு உட்பட்டு சிலபதிவுகளை காசி நீக்கியது பற்றி மாற்றுக்கருத்துகள் இருக்கலாமே தவிர கண்டனத்துக்கும் அவதூறுக்கும் உரியதல்ல.
இது வரியேய்பு, சுரண்டல், அலட்சியமனப்பான்மை, கடமையைச் செய்யமறுத்தல் இப்படி ‘அன்னியன்’ கண்டிக்கும் அத்தனை குணங்களையும் வெகுவாக பயிற்சி செய்துகொண்டே ‘அன்னியனை’ சமூக அக்கறை மிக்க அற்புதமான படம் என்று சிலர் வியந்தோதி வந்ததை நினைவுக்கு கொண்டு வருகிறது.
//தமிழ்மணத்தின் விதிகளுக்கு உட்பட்டு சிலபதிவுகளை காசி நீக்கியது பற்றி மாற்றுக்கருத்துகள் இருக்கலாமே தவிர கண்டனத்துக்கும் அவதூறுக்கும் உரியதல்ல.
//
இதே என்னுடைய மனநிலையும்.
Well said Thangamani Sir.
—காசி என்கிற தனி மனிதனின் உழைப்பில் உருவான ஒரு அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான உரிமைகள் முழுமையாக அவருக்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் உண்டு —
100 சதவீதம் ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய வலைபதிவில் எனக்குப் பிடிக்காதவர்களுக்கு தொடுப்பு நீக்கி, ரசிப்பவர்களின் முகவரியை கொடுப்பது போல் தமிழ்மணமும் இயங்குகிறது.
இதற்கு மாற்றாக பொது அமைப்புகள், கூடிய மட்டும் விருப்பு வெறுப்பற்று சேவை செய்கிறது. கூகிள் தன்னுடைய தேடலில் ஏற்படும் சறுக்கல்களை அவ்வப்போது சரி செய்து கொள்வதில்லை. சமீபத்திய நினைவாக ‘thalaivar’ என்று தேடினால் ‘http://www.rajinifans.com/’ முகவரி வருகிறது. ‘failure’ என்று தேடினால் புஷ்-ஷை வரவழைத்தார்கள்; இன்றும் நிவர்த்தியாகவில்லை. :-> (குடியரசு கட்சியின் இணைய சார்பாளர்களின் முயற்சியில், இப்போது http://www.michaelmoore.com/ இரண்டாவதாக கொண்டு வந்திருக்கிறார்கள்.)
லாப நோக்கில் இயங்கும் பலரும், ஒருதலை பட்சமான முடிவெடுப்பது பெரிய விஷயம் இல்லை. சீனாவில் ஒருவனை காட்டிக் கொடுத்த எட்டப்பன் யாஹூ நினைவுக்கு வருகிறார். மாற்றுக் கருத்து சொன்னவன் மேல் யாஹுவுக்க்கு கோபம் இல்லாவிட்டாலும், அதிகார பலத்துக்கு இணங்கி சந்தையாக்கத்துக்கு (market forces) அடிமையானது.
தமிழ்ப்பதிவுகள் தோன்றிய காலம் முதல் சுதந்திரமான காற்று என்று தென்றலாகவும் வாடையாகவும் வீசப்போவதாக எழுதினார்கள். பிற தமிழ்த் தளங்கள், மின்மடற் குழுக்கள், மின்மன்றங்கள் போன்றவை போல் இல்லாமல், தமிழ்மணம், வலைப்பூ போன்றவை தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம் தராமல் ‘இந்த வார நட்சத்திரம்’, ஓடை சேகரிப்பு, தேடல் போன்றவற்றைக் கொடுக்கிறது என்னும் பிம்பம் தகர்ந்ததே என்னுடைய வருத்தம்.
—மக்களுக்குப் பிரச்சினை இல்லாமல் இல்லை. “சார், தமிழ்மணத்துல அவன் அப்படி எழுதறானே சார். அது என்னைப் பாதிக்குது.—
நீங்கள் குறிப்பிட்ட பிற தமிழ் வலையகங்களிலும் இது போன்ற கேள்விகள், அவதூறுகள் எழுந்து கொண்டேதான் இருந்தது; இருக்கிறது. டிஸ்கியில் இருந்தால் ஏழுத்துரு பிரச்சினை; ‘நிறைய மடல் வருகிறதே?’ ‘ஆங்கில மடல் அனுப்பலாமா?’ ‘எனக்கு ஏன் பதில் கிடைக்கவில்லை’ என்று தினமும் பலமடல்கள் வந்து போகும். தானியங்கியாக எவ்வளவு சிறப்பாக தமிழ்மணம் நடைபெறுகிறது என்று கவனித்து சந்தோஷப்பட்ட காலம், கடந்தகாலமாகிப் போனது.
—-எல்லாம் ஒழுங்கமைத்து இது போல் ஒரு திரட்டியைத் தர ஏன் யாரும் இதுவரை முன்வரவில்லை? —
திரைப்படத்தை, புத்தகங்களை, எழுத்தை விமர்சனம் செய்பவர்களிடம் கேட்கப்படும் கேள்வி. என்னிடமும் காம்கார்டர் இருக்கிறது. நானும் படம் எடுக்க வேண்டியதுதானே என்று கேட்கிறீர்கள்.
தொண்ணூறுகளின் இறுதியில் டாட்காம் உச்சத்தில் இருந்தபோது, ‘இலவசமாக ஈமெயில்’, ‘இலவசமாக backup’, இலவச இணைய இணைப்பு என்று அள்ளித் தந்தார்கள். எல்லோரையும் கட்டிபோட்டபின், யாஹூவோ, எக்ஸ்ட்ரைவோ விருப்பமிக்க நிரலியான பின், பயனர்கள் வேறெந்த பிராண்டுக்கும் மாறமுடியாது என்னும் நோக்கம் பின்னணியில் இருந்தது.
இதே போல், தமிழ்மணத்திற்கு அடிமையான பின், இவ்வாறு தணிக்கைக்குள்ளாவதின் அதிர்ச்சியின் வெளிப்பாடே, என்னுடைய இந்த பின்னூட்டம்.
Well said Bala..
For god’s sake… one decent review of the situation !
செல்வராஜ், அனுராகின் சமீபத்திய பதிவை பார்த்தால் அவரின் புரிதல் கேள்விக் குறியாகிறதே?
ரம்யா, சென்று பார்த்தேன். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அது அவர் தான் எழுதிய பதிவு என்றால், நீங்கள் சொன்னபடி அவரது புரிதல் கேள்விக்குரியது தான் ஆகிறது. இப்போதைக்கு அதை உதாசீனப் படுத்தி விடப் போகிறேன். இப்போது தான் நேரம் கிடைத்துப் பிற கருத்துக்கள் சொன்னவர்களுக்கு மறுமொழியை எழுதிக்கொண்டிருக்கையில் இந்த இடையீடு. (குழலி அங்கே சொன்னபடி இது நேரக் கொடுமை தான்!)
எனக்கும் அவர் எழுதியது தானா என்று சந்தேகமாக இருந்ததினால் இங்கு கேள்வி எழுப்பினேன். சில காலமாக எது உண்மையான பின்னூட்டம் என்றே தெரிவதில்லை. வலைப்பதிவுக்கும் அந்த நிலமை என்றால் என்னைப் போன்றவர்கள் (சற்றே பலவீனமான இதயம் படைத்தவர்கள்) மூட்டையை கட்ட வேண்டியது தான்.
அதை அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதே என் புரிதல். சர்வாதிகாரி என்று சொன்னவர்களுக்கு- அவரையே அதற்காக மாற்றவா முடியும் என்ற கேள்விதான் அந்தத் தலைப்பு.
http://balaji_ammu.blogspot.com/2005/10/blog-post_22.html
//சில பதிவுகளை காசி நீக்கியது பற்றி மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாமே தவிர கண்டனத்துக்கும் அவதூறுக்கும் உரியதல்ல/// தங்கமணி சொல்வதுதான் எல்லோர் மனதிலும் இருக்கும் உண்மையான கருத்து. அவரவரின் பதிவுகளின்/பின்னூட்டங்களின் தரம் போலவே விமர்சனக்களும் அள்ளி வீசப் படுகின்றன. துளசியின் செண்டிமெண்ட்டல் கருத்து,சிலரின் கவலையான வெளிப்பாடு, மற்றவர்களின் வரைமுறையற்ற ஏசல்கள் எல்லாமே. ஒவ்வொரு கருத்துக்கும் விளக்கம் கொடுப்பதென்பது முடியாத காரியம். காசியே ஒரு தெளிந்த அறிவிப்பு கொடுக்கும் வரை காத்திருக்கவேண்டுமென்பதே என் கருத்து. குறைப் பிரசவங்கள் குடும்பத்துக்கு ஆகாது!!!
உஷா, நான் பதிவு நீக்கம் பற்றி மட்டுமே கருத்து சொல்லியுள்ளேன்.பின்னூட்டங்களின் பிரச்னை எல்லோருமே சேர்ந்து சிந்தித்து எடுக்கவேண்டிய ஒரு முடிவு. குறைந்தபட்ச identitiy யாவது, நிர்வாகிகளுக்கு மட்டுமாவது தெரிந்திருப்பது கட்டாயம் என்று ஆக்கப்பட்டால்தான், ஓரளவு சரியாகும். பெயருடன் வந்தும் நிலை தவறி பின்னூட்டமிடுபவர்களின் பதிவை தற்காலிகமாக நிறுத்திவைக்க முறையீடு செய்யலாம், இன்னும் நிறைய கருத்துக்கள் உள்ளது, அது குறித்து பிறகு யோசிக்கலாம்தானே!
அனுராக் அவர்களின் கருத்துக்கணிப்பு பற்றி இங்கும் விவாதிக்கப்படுவதால் அவருடைய பதிவுகளில் எழுதிய கருத்துக்களை இங்கும் பதிவு செய்கிறேன். (ஒரு தகவலுக்காக, என் கருத்தை முகமூடி போன்றவர்களின் பதிவுகளில் எழுதாமல் அனுராக், சன்னாசி, செல்வராஜ் ஆகியோரின் பதிவுகளில் மட்டுமே எழுதியிருக்கிறேன்)
“தமிழ்மண தணிக்கையும் வலைப்பதிவர் பிணக்கங்களும்” பதிவில்
M. Sundaramoorthy கூறுவது…
அனுராக் Sr.
தொழில்நுட்பக் காரணங்களுக்காக சில முடிவுகளை எடுப்பது காசியின் உரிமை. ஆனால் கொள்கை முடிவுகளை பயனர்களை கலந்தாலோசித்தே எடுப்பது ஜனநாயகம். முன்பு செய்ததைப் போல (“ஆபாசப் பதிவுகள்” சம்பந்தமாக)வாக்கெடுப்பு நடத்தி புதிய கொள்கைகளை வகுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் செய்தது சரியில்லை. வாக்கெடுப்பில் அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் அதைச் செய்யாத வரையில் தற்போதைய நடவடிக்கைகள் சர்வாதிகாரத் தன்மை கொண்டவையே.
“சர்வாதிகாரியை நீக்குவோம்” பதிவீல் எழுதியது:
M. Sundaramoorthy கூறுவது…
அனுராக்,
உங்களின் முந்தைய பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் நானும் பயன்படுத்தியிருந்த “சர்வாதிகாரத் தன்மை” என்ற சொற்றொடரும் உங்களை இந்த வாக்கெடுப்பு நடத்தத் தூண்டியதென்றால் அதற்காக காசியிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சிலர் வாக்களித்திருக்கிறார்கள். காசிக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு நீங்கள் இதைச் செய்திருப்பதாகத் தெரிந்தாலும் கூட இதிலுள்ள முட்டாள்தனத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
செல்வராஜ், ரம்யா
கேள்வி கேட்டபின் பலரும் இதென்ன முட்டாள்தனம், இது காசியுடையதிலிருந்து அவரை எப்படி நீக்கலாம், அதற்கு நீயார் என்று கேள்வி வந்திருக்கறதே. இது -ve psychology போல. எதிர்மறையில் சொல்லி புரியவைத்தல். அவருக்கு என் பாராட்டுக்கள்.
ஜெயஸ்ரீ
நீங்கள் சொன்னதை அப்டிக்காமலேயே அனுராகின் நோக்கம் எனக்கு புரிந்துவிட்டதே.அப்பாடி இப்ப கொஞ்சம் புரிய ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்:) அது என் subjectப்படிங்கறதாலே
கருத்துச் சொன்னவர்களுக்கு நன்றி. இந்தச் சிந்தனைகளின் தொடர்ச்சியாய் இட்டிருக்கும் பதிவில் இவற்றிற்கு மறுமொழியும் இருக்கும். பினாயில் போன்ற ஒவ்வாத உவமைகளுக்குத் தனியான மறுமொழியில்லை.
தாணு, ஊர்ப்பயணம் குறித்துத் தனி மடல் ஒன்று அனுப்புகிறேன்.
சுந்தரமூர்த்தி, SCTயில் எழுதி வந்த அதே செல்வராஜ் தான் நான்.
அடுத்த பதிவும் இது விதயம் குறித்தே இருப்பதால், இனிப் பின்னூட்டங்களை அங்கே தொடர்வதே சிறப்பாய் இருக்கும் என்பதால் இந்த இடுகையில் பின்னூட்ட வசதியை நிறுத்தி வைக்கிறேன்.
[…] அவதூறாகவும் பேசிக் கொண்டிருந்த சூழலிலே ஆங்கிலத்துக்கு இருப்பது போல […]