சாகரன்
Feb 18th, 2007 by இரா. செல்வராசு
‘தேன்கூடு கல்யாண்’-ஐ எனக்குச் சாகரன் என்னும் வலைப்பதிவராக மட்டுமே முதலில் தெரியும். அதிகம் பின்னூட்டமிட்டதில்லையாயினும் என்னைக் கவர்ந்த எழுத்துக்களுள் அவருடையதும் ஒன்று. அதனாலேயே ஏதோ ஒரு வலைப்பதிவு மீம் விளையாட்டொன்றில் என்னைக் கைகாட்ட எண்ணி அவர் சொல்லியிருந்த சிறுகுறிப்புக்கும் மகிழ்வாய் இருந்தது. அவருக்கும் என் பதிவுகளில் சிறு ஈர்ப்பு இருந்திருக்கக் கூடுமென மகிழ்வு.
சாகரன் என்ற புனைப்பெயரிலேயே அறியப்பட்ட அவர் பெரிதாகத் தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவரது பதிவின் களன் கொண்டு அவர் சவுதியில் இருக்கக்கூடும் என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இயல்பான நடையில் அமைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர். தன் குழந்தைக்குப் பெயர் வைக்க அலைந்த ஒரு அன்பான தகப்பனுக்கு வேறோர் அடையாளமும் வேண்டுமோ? இன்று அவரை இழந்து நிற்கும் அவரது மனைவி, குழந்தை, பெற்றோருக்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2005 டிசம்பரில் தேன்கூடு அமைத்தது பற்றியொரு மின்னஞ்சலைத் தமிழ்மணம் ஆலோசனைக் குழுவில் இருந்த அனைவருக்கும் அனுப்பிக் கருத்துக்கள் கேட்டிருந்தார். தமிழ்மணம் என்னும் ஒரு வலைத்திரட்டிக்கும் வலைப்பதிவுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் குழப்பிக் கொண்டிருப்பதோடு திரட்டி நிர்வாகத்தை அவதூறாகவும் பேசிக் கொண்டிருந்த சூழலிலே ஆங்கிலத்துக்கு இருப்பது போல நுட்பியல் அளவிலே பல திரட்டிகளும் பல வசதிகளும் கொண்டு வந்து இணையத்தில் தமிழின் இருப்பை இன்னும் நிலைக்கவும் மேம்படுத்தவும் இது ஒரு முயற்சி என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு பல திரட்டிகள் சேவைகள் என்று வளர்ச்சி ஏற்படும்போது மக்களின் புரிதல்கள் அதிகமாக வாய்ப்பிருக்கும் என்றும், அதனால் தமிழ்மணத்துக்கும் தனித்துக் கிடைக்கும் இடிகள் குறையலாம் என்றும் நம்பினார். இரண்டு திரட்டிகளும், இன்னும் அதிகரித்த நுட்பியல் வளர்ச்சிகளும், அடுத்தடுத்த தளங்களும் தமிழின் இணைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பினார்.
அவரது மடல் வந்த நேரம், அப்போது தான் ஆறு மாதங்கள் பணி நிமித்தம் எங்களது இந்தியப் பயணம்/இருப்பு முதலியன முடிந்து அமெரிக்கா திரும்பி வந்திருந்ததாலும், வேறு பல அழுத்தங்கள்/தகைவுகளாலும் உடனடியாக என்னால் பதிலிறுக்க முடியவில்லை. ஆறு மாதங்கள் கழித்துப் பதில் மடல் ஒன்று அனுப்பி வைத்தபோது ‘தேன்கூடு’ தமிழ் வலைப்பதிவர்களுக்கு இன்னுமொரு பயனுள்ள தளமாகப் பரிமளித்திருந்தது. பதில் மடல் அனுப்பாமல் இருந்திருந்தால் இன்று குற்ற உணர்ச்சியில் தத்தளித்திருப்பேன். எனது தாமதத்தையும் பொருட்படுத்தாது, நொசிவாக எடுத்துக் கொள்ளாது பண்போடு மறுமடல் இட்டது அவரது நற்குணத்திற்கு ஒரு சான்றாக இருந்தது. சென்னையில் நடந்த ஒரு ஆரம்பகால வலைப்பதிவர் சந்திப்பிற்குத் தற்செயலாக நானும் சென்றிருந்த அன்று அவரும் வந்திருந்தார் என்பது அவரின் மடல் பார்த்த பிறகு தான் நினைவுக்கு வந்தது. அதில் இன்னும் நிறையப் பேசியிருக்கலாம் என்று அவரும் ஆதங்கப்பட்டிருந்தார். இன்று நானும் அதை நினைத்துக் கொள்கிறேன்.
காசியிடம் இருந்து தமிழ்மணம் திரட்டியை டிஎம்ஐ நிறுவனம் ஏற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களிலும் புதிய நிர்வாகத்திற்குச் சாகரன் வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பியிருந்த மடலில் ‘இனியும் தொடர்ந்து ஒரு ஆரோக்கியமான போட்டியோடு செயல்படுவோம்’ என்று எழுதி இருந்தார். இரண்டு திரட்டிகளுமே ஒருவருக்கொருவர் பல வசதிகளையும் நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தியும் வலைப்பதிவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தொடர்ந்த பயனான சேவைகளை அளிப்பதில் ஆரம்பம் முதல் இதுநாள் வரையிலும் ஆரோக்கியமான ஒரு போக்கையும் போட்டியையுமே கொண்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் அமைக்கும் நல்ல அம்சங்களைப் பாராட்டியும் வந்திருக்கின்றன.
தமிழோவியத்தோடு இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி மூலம் பலரது எழுத்துக்களையும் ஊக்குவித்ததும், எளிமையாகப் பல அகராதிகளைத் தொகுத்தளித்ததுமான நற்செயல்களைத் தேன்கூடு செய்து வந்ததை ஒருமுறை பாராட்டியிருந்தேன். சிறுகதைப் போட்டி இரண்டில் நானும் கூடக் கலந்து கொண்டேன். வலைப்பதிவர்களின் எழுத்து முயற்சிக்கும் ஆர்வத்தினைத் தூண்டுதற்கும் அந்தப் போட்டிகள் உதவின என்பது தெளிவு.
இளவஞ்சியால் மரணம் என்ற தலைப்பிட்டு நடந்த போட்டி வாரத்தில் நான் எழுதிய கதையின் நாயகன், தன் மனைவி குழந்தையை விட்டுவிட்டு இளவயதிலேயே மரணத்தை எய்தியிருந்தான். ஒரு கதை தானே என்று எதையும் எழுத முடிகிறது. ஆனால் புனைவுகளே நிகழ்வாகும் போது அழுத்தமும் வருத்தமும் தருவதாக இருக்கிறது.
இவை தவிரவும் சாகரன் பலரோடு தொடர்பு கொண்டும், தமிழும் நுட்பமும் கலந்து மேலும் பல எண்ணங்களை மனதில் கொண்டிருந்ததும் இன்று பலரது பதிவுகளைப் படிக்கும் போது தெரியவருகிறது. வலைப்பதிவராக மட்டுமல்ல, தேன்கூடு நிறுவும்போதும் அன்றைய சூழலின் காரணமாகவும் வேறு என்ன காரணங்களாலுமோ சாகரன் தன்னை எங்கும் முன்னிறுத்தாமல் செதுக்கியிருந்தார்.
“உங்கள் அடையாளம் வெளியே தெரியாதவாறு அமைத்திருப்பதும் உங்களைப் பாதுகாக்க உதவும். அதனால் இதற்கான அங்கீகாரத்தைப் பொதுவாகப் பெற முடியாத இழப்பு உங்களுக்கு ஏற்படுகிறதே”
என்று நான் எழுதியிருந்ததற்கு, அவர் சொன்னது:
“நிஜமாகவே ரொம்ப நிம்மதியாக இருக்கிறது. யார் இந்த தளத்தை நடத்துவது என்பது அதிகம் யாருக்கும் தெரியாது என்னும் போது. அங்கீகாரம் அவசியமே இல்லை செல்வராஜ், அமைதியாக அழகாக சத்தமே காட்டாமல் இது போல முடிந்த சேவைகளை செய்துவிட்டு சென்று கொண்டே இருக்கலாம்…”
எண்ணியபடி செய்துவிட்டுச் சென்றுவிட்டார் இன்று!
தமிழ்ச்சமூகத்திலே சீரிய முயற்சிகளையும் கூடக் குறை சொல்பவர்கள் பற்றி ஒரு ஆதங்கமாகவும், அந்தச் சூழலிலும் ஒருவர் கொண்ட குறிக்கோளில் உறுதியாய் இருக்க வேண்டியதன் அவசியத்தைத் தெரிவிப்பதாகவும் அவர் எழுதிய ஆரம்ப காலப் பதிவொன்று கண்ணிற் பட்டது. ‘வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை உலகம்’ என்று அவர் ஆதங்கப் பட்டது எதனால் என்று தெரியவில்லை! ஆனால் இன்று தமிழ் வலையுலகில் சாகரனுக்கும் ஒரு தனி இடம் உண்டென்பது மிகத் தெளிவு.
முயற்சியும் குறை சொல்பவர்களும்..
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும், அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! இதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதும், அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்…இன்று செய்ய ஆரம்பிக்கும் முயற்சி நாளை எல்லோரும் பாராட்டப்படுவதாக மாறலாம்..! அல்லது அப்படி இல்லாவிட்டாலும் செய்வதைச் செய்து விட்டோம் என்ற ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்…
வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை.. அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.
இன்று தூக்கி வைத்துக்கொண்டாடும், பாரதிக்கு அவர் வாழ்ந்த காலதில் என்ன மரியாதை கிடைத்தது என்று யோசித்துப்பார்த்தால் அது புரியும்.
posted by சாகரன் @ 6/30/2004 12:54:00 PM
[…] http://blog.selvaraj.us/archives/223 http://vedhagamam.blogspot.com/2007/02/blog-post_21.html Dear all Please check the following website for Sakaran’s funeral rites schedule updates . http://djanakiraman.googlepages.com […]
கல்யாண் சாகரனின் நாமம் தமிழிலக்கிய உலகில் நிச்சயம் நிலைத்து நிற்கும்.
சாகரனை அருகிலிருந்து பார்த்தவன் எனுமுறையில் அவரின் இழப்பு மறக்க முடியாத ஒன்று.
//வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை.. அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.
இன்று தூக்கி வைத்துக்கொண்டாடும், பாரதிக்கு அவர் வாழ்ந்த காலதில் என்ன மரியாதை கிடைத்தது என்று யோசித்துப்பார்த்தால் அது புரியும்.//
அவரின் இந்த வரிகள் எங்கேயோ பதுக்கிவைத்த என் கண்ணீரை வெளிக்கொணர்ந்தது என்பது உண்மை.
அன்புடன்,
சுபைர்.
ரியாத்.
மறைந்த அந்த மனிதரின் பண்புக்கும், தொண்டிற்கும் என் வணக்கங்கள்