மாண்டவன் கதை
Jul 9th, 2006 by இரா. செல்வராசு
நேற்று இரவு எட்டு மணிக்கு நான் செத்துப் போனபோது எனக்கு வயது நாற்பத்தியிரண்டு தான். நூறு வயது வரை வாழவேண்டும் என்று எண்ணியிருந்தேன். உட்கார்ந்த இடத்திலே வேலை, உட்கார்ந்தே கார்ப்பயணம், உட்கார்ந்தே தொலைக்காட்சி என்று ஊக்கமற்ற வாழ்க்கைமுறைக்கு ஒரு பத்துப் பன்னிரண்டு வருடம் குறைத்தாலும் எண்பத்தெட்டாவது பார்த்திருக்கவேண்டும். அதெல்லாம் இன்றி இப்படி அற்ப ஆயுளிலே சாவேன் என்று நினைக்கவில்லை. என்ன காரணமாய் இருந்து என்ன? ‘போய்விட்டேன்’. அவ்வளவு தான்.
கொஞ்சம் தனிமையாய் இருக்கிறது. இனி என்னவென்று யோசனையாய் இருக்கிறேன். கணக்குப் பார்ப்பதற்கோ தீர்ப்புச் சொல்வதற்கோ யாராவது வருவார்களா என்று சில மணி நேரமாய்ப் பார்க்கிறேன். ஒருவரையும் காணவில்லை. கடவுள் என்றாவது யாரேனும் வந்து அடுத்தது என்னவென்று சொல்வாரா என்றும் இருந்த ஓர் எதிர்பார்ப்பும் நேரம் ஆக ஆகக் குறைந்து கொண்டேயிருக்கிறது.
சாறிழந்த சக்கையாகி வெறும் சதைப்பிண்டமாய்க் கிடக்கும் உடலொன்றின் அருகே அவள் அமர்ந்திருக்கிறாள். வசந்தி! எனது பெயர் தான் இப்போது மறந்து போயிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் பழசு மறந்து கொண்டிருக்கிறது. இன்னும் அவளை மட்டும் மறக்க முடியவில்லை. இடிந்து போய் இருக்கிறாள். கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது. வேறு அரற்றலோ ஆர்ப்பாட்டமோ இல்லை. வசந்தி என்றும் இப்படித் தான். வெகு நிதானம். முன்பும் கூட ஒரு முறை… ஊஹும்… என்ன யோசிக்கிறேன் என்பது நினைவில் இருந்து நீங்கிவிட்டது போலும். அவளின் நிதானம் என்கிற பண்பு மட்டும் ஒரு விளக்கமாய் இருக்கிறது. கூடவே அவளை நினைக்கும்போதே ஒரு குளுமை கூடுகிறது.
எனக்கொன்றும் சோகமாய் இல்லை. சோகமும் இல்லை. நிறைவும் இல்லை. என்னவாய் இருக்கிறது என்று சரியாய் சொல்லத் தெரியவில்லை. இருக்கிறது. அவ்வளவு தான். அந்த இருப்பை மட்டுமே உணர்கிறேன். கொஞ்சம் நாட்கள் கழித்து இவளுக்கும் இந்தச் சோகம் மறைந்து போகும். போக வேண்டும்… காதற் கண்மணி கடைசிவரை துணையாய் இருந்தாள். இன்னும் கூட இவளின் நினைவு மட்டும் தான் துணையாய் இருக்கிறது. இவளுக்கும் நான் நினைவில் துணையாய் இருப்பேன் என்றாலும், வாழ்வில் வேறொரு துணையை அவள் தேடிக் கொள்ள வேண்டும். நல்லவேளை இப்போதெல்லாம் கணவனோடு மனைவியும் உடன்கட்டையேற வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. என்ன ஒரு முட்டாள்த்தனம். ‘அவளை’க் கொல்ல முடியாதென்றாலும் கட்டுடலை மட்டும் எரிப்பதென்ன நியாயம்?
“அம்மா… அம்மா… அப்பா எப்பம்மா எந்திரிப்பாரு…?”
ஏக்கத்துடன் கேட்கும் குரல் ஈரத்தைத் தருகிறது. நடக்கக் கூடாதது என்னவோ நடந்துவிட்டது என்று இனம்புரியாத பயத்தில், இன்னும் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறார் அப்பா என்று கவலையில் எட்டு வயதுப் பையன் கேட்கிறான். விசும்பலுக்கு இடையே தலையைக் கோதி அவனை அணைத்துக் கொள்கிறாள் வசந்தி. பதிலேதும் சொல்லவில்லை.
“இங்க வா சாமி” என்று தன் அழுகையினூடே அவனைத் தேற்றுவதற்காகக் கையைப் பிடித்த அம்மாயியை உதறிக் கொண்டு அம்மாவிடமே புரண்டு கொண்டிருக்கிறான் பையன். அம்மா அழுகிறாளே என்று, காரணம் புரியாவிட்டாலும் அவனும் அழுகிறான். அது தான் அன்பின் அடையாளமா? குழந்தைக்கு வசந்தி ஆசைப்பட்ட பெயரையே வைத்திருக்கலாம். அதற்காக இட்ட சண்டை லேசாக நினைவுக்கு வருகிறது. இது என்ன வருத்தமா? அப்படியாகத் தெரியவில்லை. சும்மா ஓர் எண்ணம் ஓர் அலையாய் எழுந்து அமிழ்கிறது.
அது ஒன்று தான் சண்டையா? சண்டை என்று நினைத்ததெல்லாம் சண்டை தானா? பையன் அழுகையில் வெளிப்படும் அன்பு போல எங்கள் சண்டைகளும் ஒரு அன்பின் வெளிப்பாடு தான். அந்த உயிரோடு நான் செய்து கொண்ட ஒரு கணுக்கம். விளையாட்டு. அந்தத் தொடர்பை எண்ணித் தான் கண்சிவந்து கிடக்கிறாள் போலும் இப்போது.
தோளில் போட்ட வெள்ளைத் துண்டை வாயில் புதைத்தபடி அறைக்கு வெளியே ஆண்கள் குலுங்கிக் கொண்டிருக்கிறார்கள். காலை நீட்டிக் கொண்டு, “வயசான என்னைக் கூப்டுக்கிட்டிருக்கலாமே கடவுளே” என்று அம்மா கதறுகிறார்.
சின்ன வயசிலேயே செத்தவனைப் பார்த்து வேறு சிலருக்குச் சாவு குறித்த அச்சம் தோன்றுவதை உணர முடிகிறது. வயசென்று உடலுக்குச் சொல்லலாம். உயிருக்கு எப்படி வரையறுப்பது? செத்தவனுக்கு வயது நாற்பத்தியிரண்டு. எனக்கு எத்தனை? யார் என்னவென்றே புரியாத இடத்தில் வயசு, காலம், ஆண்டு என்பதெல்லாம் அர்த்தமில்லாததாகப் படுகிறது இப்போது.
“உன் மூஞ்சியிலேயே இனி முழிக்க மாட்டேண்டா” என்று சத்தமிட்டுச் சென்றுவிட்ட பெரியப்பா கூட இடிந்து போய்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். அப்பா செத்ததுக்குக் கூட வந்து பாராதவர் இன்று வந்திருக்கிறார். உள்ளுக்குள்ளே எதையாவது உணர்ந்திருக்க வேண்டும். காசு, பணம், நிலம், இடம், கவுரவம் என்று இட்ட சண்டைகளெல்லாம் மண்ணுலக நாடகம் தானா? மௌனமாய் உட்கார்ந்திருக்கும் அவரின் மனசு என்ன சொல்கிறது? மரணம் என்பதை ஒரு முடிவாக மட்டுமே அறிந்தவர் அந்த எல்லையைத் தாண்டி என்ன சிந்திக்க முடியும்? “பெரீப்பா, நீங்கள் செத்தாலும் ‘நீங்கள்’ சாகமாட்டீர்கள்” என்று ஆறுதல் சொல்லவேண்டும் போலிருந்தது. ஆமாம், அவர் பெயர் என்ன?
அப்பா பெயர் கூட இப்போது குழப்பமாய் இருக்கிறது. கொஞ்சம் ஆழச் சென்றால் உணரலாம். பெயரைத் தெரிந்து தான் என்ன செய்யப் போகிறேன்? ரெண்டு மாசம் முன்னர் செத்துப் போன அவரைத் தேடுகிறேன். ‘கடவுளடி சேர்ந்தார்’ என்று தினசரியில் படம் போட்டுச் சாவுச்செய்தியைச் சொல்லியிருந்தது. கடவுளைக் காணாதது போலவே அவரையும் காணவில்லை. கடவுளை முன்பு அறிந்திருக்கவில்லை என்பதால் அவரைக் காணாதது ஒரு பொருட்டில்லை. ஆனால் அப்பாவைத் தெரியுமே. எங்கு போயிருப்பார்?
செத்த உடலைச் சுற்றிலும் கூட்டமாய்க் கூடியிருக்கும் பலரைத் தெரியவில்லை. சிலரைத் தெரிந்தது போலிருக்கிறது. தெரியவில்லை. ஈரப்பஞ்சின் நீரைப் பிழிந்தது போல் நினைவுகள் விடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. பந்தல் போட்டுப் பாடை கட்டிக் கொண்டிருக்கையில் இன்னும் சற்றுத் தொலைவை உணர்கிறேன்.
தொலைவில் இப்போது ஒரு அசைவைப் பார்க்கிறேன். லேசாக உணர்கிறேன். சுழன்றடிக்கும் காற்றில் இயல்பாய்க் கலக்கிறேன். காற்றோடு பறக்கையில் பழசு இன்னும் விலகுகிறது. பாடையில் சுமந்து எங்கோ காட்டில் ஒரு உடலை எரித்துக் கொண்டிருப்பதை அரைகுறையாய் உணர்கிறேன். ஒரு பெண்ணும் அவளின் பையனும் ஒரு மனிதக்கூட்டப் பின்புலத்தில் தெரிகிறார்கள். யார் இவர்கள்?
மிச்சமிருந்த சிந்தையை வெட்டித் தெறிக்கிறது ஒரு மின்னல். பல்லாயிரம் துளிகளாய்த் தெறிக்கிறேன். வேறாயிரம் பல்லாயிரம் துளிகளைப் பார்க்கிறேன். அவற்றோடு அண்டவெளியில் உயிர்த்துளிகளாய் மிதக்கிறேன். காலத்தின் அலகு இங்கு வேறாய் இருக்கிறது. இந்தக் கணம் மட்டுமே இப்போது தெரிகிறது. இது ஒன்றே உண்மை. உன்னத உணர்வில் நிறைகிறேன். கணப்பொழுதில் கதிரில் காய்கிறேன். காய்ச்சுகிறேன். ஒரு கதிரின் ஒளியாகி மிதக்கும் நீர்த் திவலையில் ஊடுபரவி வண்ண வில்லாய்ப் பிரிகிறேன். தூவுகின்ற நீர்த் திவலைகளில் காடு மலை நாடு நகரம் எல்லாம் பயணம் செல்கிறேன். மீண்டும் வளியில் கலந்து வீசுகையில் ஒரு பட்டாம்பூச்சியின் சுவாசம் கலந்து சிறகடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் வண்ணங்களில் திளைத்து மிதந்து இருக்கையில் பூவொன்றில் அது அமர, வெளிவந்து பூவோடு மணமாகிறேன். அதன் வண்ணங்களில் கலக்கிறேன். காயாகிப் பழமாகி விதையாகி மண்ணில் வீழ்கிறேன். காற்றிலே கொஞ்சம், நிலத்திலே கொஞ்சம், நீரிலே கொஞ்சம், நெருப்பிலே கொஞ்சம், வான வெளியிலே கொஞ்சம் என்று சகல இடங்களிலும் கலந்து ஒரே கணத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறேன். கோள்களையும் சுழற்றுகிறேன். நானே இயல்வனாய் இருக்கிறேன்.
உயிர்க்கால்வாயில் நீந்தும் விந்தொன்று அண்டத்தை அடைகிற அந்த மந்திர நேரத்தில் உட்புகுந்து மூச்சுக்காற்றாய் ஒரு உயிரைத் துடிக்க வைக்கிறேன். இனிச் சில பொழுதுகள் இதுவே என் இருப்பிடம். கொஞ்சம் கொஞ்சமாய் எங்கும் நிறைந்திருந்த உன்னத நிலையை மறந்து கொண்டிருக்கிறேன். காலத்தில் உருமாறிக் கொண்டு பனிக்குடத்துள் நீந்தும் இந்த உருவில் ஒன்றிக் கொண்டிருக்கிறேன். ‘நான்’ என்பதற்கு இந்த வடிவை முடிச்சுப்போட்டுக் கொண்டிருக்கையில், அதன் மூளை நரம்பு முடிச்சுக்களில் கொண்டுவந்து சேர்த்து வைத்த பழைய நினைவுகள் ஒன்றொன்றாய் நீங்கிக் கொண்டிருக்கின்றன.
முழுதாகி முடிவாகி வழுக்கிக் கொண்டு உலகம் பார்க்க வந்த ஒரு நாளில் கனிவான முகமொன்று என்னைப் பார்க்கிறது. களையான முகத்தில் சிறு களைப்பு என்றாலும் என்னைக் கையில் ஏந்திக் கொண்டு, ‘நீயே என் உயிர்’ என்று சொல்வது போல் பார்க்கிறது. சிரிக்கிறது. அழுகிறது. இதுவும் கூட உன்னதம் தான்.
இவரை இனி அறிந்துகொள்ள வேண்டும் என்று ‘என்’ கண்களில் நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அண்டம் சுற்றியவன் இப்போது உள்ளங்கையளவே இருக்கிறேன் என்று நினைத்த தருணத்தில் அண்டமெங்கும் நிறைந்திருந்த நினைவுகள் மொத்தமாக நீங்கின. இன்னும் எனக்கும் ஆனந்தமாகத் தான் இருக்கிறது. உடலை அசைக்கிறேன். வாய் திறந்து “ம்மா…” என்கிறேன். அது சிறு அழுகையாய் வெளிப்படுகிறது.
* * * *
நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
செல்வராஜ் அண்ணா,
கதையைப் படிக்கும் போதே என் கடந்த கால சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து என்னைப் பயமுறுத்துகிறது. உண்மையிலேயே மரணத்தின் பயத்தை இக் கதை மூலம் தெளிவாகவும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்னாங்க இது?
‘மரணம்’ தலைப்புக் கொடுத்தாலும் கொடுத்தார் இளவஞ்சி.
இப்படி ஆளாளுக்கு விஞ்சி எழுதறீங்களே.
ஒண்ணுக்கு ஒண்ணு வாங்கலை போங்க.
முடிவு சொல்றப்பதான் இருக்கு எங்களுக்கு :-))))
வாழ்த்து(க்)கள்.
பிரமாதம்.இனிமேல் இறக்க பயமில்லை என்று சொல்லத் தோணுகிறது.
அழகான பயணம்.
பிறந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
வெற்றி பெறவேண்டும்.
நல்ல கதை
புனரபி மரணம், புனரபி ஜனனம்…
நல்லா வந்திருக்கு..
எனக்குப் பிடித்தது
// குழந்தைக்கு வசந்தி ஆசைப்பட்ட பெயரையே வைத்திருக்கலாம். அதற்காக இட்ட சண்டை லேசாக நினைவுக்கு வருகிறது. இது என்ன வருத்தமா? அப்படியாகத் தெரியவில்லை. சும்மா ஓர் எண்ணம் ஓர் அலையாய் எழுந்து அமிழ்கிறது.
//
உண்மையாகவே இறந்த ஆன்மாவிற்கு எண்ண ஓட்டம் என்று இருந்திருந்தால், இப்படித் தான் இருந்திருக்கும் இல்லை?!.. ம்ம்..
பழையன கழிதலும் புதியன புகுதலும் – மரணத்தின் மூலம் நிகழ்கிறது…கூறியிருக்கிறீர்கள். 42 வயது காரரை தேர்ந்தெடுத்ததன் காரணம் கதையில் சோகம் வேண்டும் என்பதற்காக வா?
கதை களமும் சொல்லப்பட்ட விதமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
(இதையே எல்லோருடைய பதிவிலும் சொல்லிவருகிறேன். வாழ்த்துவது நிஜம் ஆனால் வாழ்த்து ?)
நன்றாய் வந்துள்ளது. வெற்றி பெறாமல் இருக்க வாழ்த்துக்கள்!
கடைசி பத்தியில், குழந்தை பிறந்ததை, வேறொருவர் மூலம் சொல்ல வைத்து முடித்திருக்கலாமோ…
இக்கதையின் கரு பற்றி எனக்கு நிறையக் குழப்பங்கள் உண்டு. மறுபிறப்பில் நம்பிக்கை இதுவரை ஏற்படவில்லை. ஆனால் உங்கள் நடை நன்றாக வந்துள்ளது. சொல்லும்விதத்தில் மெருகு கூடிக்கொண்டேயிருக்கிறது உங்களிடம். போட்டிக்காக இப்படைப்பு எனில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
செல்வராஜ்,
// மிச்சமிருந்த சிந்தையை வெட்டித் தெறிக்கிறது ஒரு மின்னல். பல்லாயிரம் துளிகளாய்த் தெறிக்கிறேன். வேறாயிரம் பல்லாயிரம் துளிகளைப்…. //
இந்தப்பத்தி அருமையான கற்பனை! இறப்புக்குப்பின் என்ன என்பதான முதல் பதிவு!
// என்ன காரணமாய் இருந்து என்ன? ‘போய்விட்டேன்’. அவ்வளவு தான். // ‘வந்துவிட்டேன்’ என் இருக்கனுமோ?! 🙂
போட்டிக்கான வாழ்த்துக்கள்!
செல்வராஜ்
நடை வழக்கம் போல மிக அழகு
நல்ல கருவும் கூட
ஆனால் படித்து முடிக்கும் போது ஆன்மீகக் கட்டுரை படித்தது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை
நல்ல வேளை, இந்த வாட்டி நான் கலந்துக்கலை 🙂
Selva,
Enakku migavum pidithirundathu.
Parisu kidaikka vAzthukkaL.
என்னவொரு கற்பனை, பிரமாதம்!
ம்ம்.. ஒன்னுஞ்சொல்லுறதுக்கில்லைங்க..
மரணம்’ன்னு தலைப்பு குடுத்துட்டாங்க இனி எல்லாரும் பிழிய பிழிய சீரியல் டைப்புல தாக்க போறாங்கன்னு இல்லாட்டி ‘தேடல்’ன்னு கிளம்பிருவாங்கன்னு தான் நினைச்சேன்.. அதை கூட இப்படி நல்ல விதமா சொன்னதுக்கு முதல்ல ஒரு ‘ஓ!’
நற்கருத்துக்கள் நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
செல்வநாயகி, மறுபிறப்புக் கரு ஒரு கற்பனைத்தேற்றமே. முற்றிலும் புதிதானதுமல்லவே. அறிந்த எல்லை தாண்டினால் இருக்கிற வெற்றிடத்தைப் பற்றிய ஒரு கற்பனை தான்.
கிருஷ், உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்! 🙂 கதை முழுதும் (தன்மை, படர்க்கை) கோணம் மாறாமல் இருத்தல் நலம் என்று படித்திருக்கிறேன் (சுஜாதா?). நானும் அதனை ஏற்கிறேன்.
நிலா, உங்கள் கூற்று ஓரளவு உண்மை தான் (ஆன்மீகக் கட்டுரை போல…). கதை என்பது உரையாடல்களாலும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாலும் தான் அமையவேண்டுமா என்று கேட்டுக் கொண்டு ஒரு சோதனை முயற்சியாகவும் இது அமைந்திருக்கிறது. அது வாசகர்களுக்கு ஒரு சோதனையாக இல்லாமல் இருக்கும் என்று ஓரளவு நம்புகிறேன் 🙂 !
அனைவருக்கும்: தொலைதூரத்தில் இருக்கிற ஒரு தந்தையின் மரணத்தை நினைவுகூறும் பெண்ணை வைத்து (ராசா சொன்னமாதிரி) ஒரு கதை மனதில் தோன்றியது. இருந்தும் சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று அதனை விட்டுவிட்டு இதனைத் தெரிந்தேன். நல்ல தலைப்பிற்கு இளவஞ்சிக்கு நன்றி.
இக்கதை குறித்தான உங்களின் ஊக்கங்களுக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி. இவை எல்லாம் ஒரு பயிற்சியே.
நன்றாக வந்திருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் செல்வராஜ்!
செல்வராஜ்,
கதை interesting-ஆக இருக்கிறது. ஆரம்பத்தில் Ghost படத்தை நினைவூட்டியது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.