• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« தொட்ட இடம் மலரும்
மாண்டவன் கதை »

சமன்பட்ட குமுகாயம் – ஓர் அமெரிக்கப் பார்வை

Jul 8th, 2006 by இரா. செல்வராசு

“நூற்றாண்டுகளின் காயத்தழும்புகளைத் துடைத்தெறிய, ‘இதோ, இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; விரும்பும் தலைவரை ஏற்கலாம்’ என்று வெறும் வாயில் சொல்லிவிட்டுச் சென்று விட முடியாது. ஆண்டாண்டு காலமாகச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒருவனை விடுவித்துப் பந்தயத்தின் ஆரம்பக் கோட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு, ‘நீ பிறரோடு போட்டியிட இனித் தளையில்லை…போ!’ என்று சென்றுவிடமுடியாது. அப்படிச் சொல்லிவிட்டுப் பின்னும் முழு நயன்மையுடன் நடந்துகொண்டதாக நாமே நம்பிக்கொள்ள முடியாது. பொது (சிவில்) உரிமைக்கான போராட்டத்தில் இது அடுத்த கட்டமும் ஓர் ஆழ்ந்த கட்டமும் கூட. ஒடுக்கப்பட்டவர்களுக்காக நாம் தேடுவது ஒரு தளையற்ற நிலையை மட்டுமல்ல, மேலேறும் வாய்ப்புக்களையும் தான்; அவர்களின் சரிசம நிலையை ஒரு உரிமையாகவும் தேற்றமாகவும் மட்டும் கருதுவதல்ல, ஒரு உண்மையாகவும் நடைமுறை விளைவாகவும் தான்”

இது இந்தியச் சூழலில் கேட்கவேண்டிய குரல்களில் ஒன்றாகத் தோன்றினாலும், 1965ல் அமெரிக்க அதிபராய் இருந்த லிண்டன் ஜான்சன் ஒரு பல்கலைக்கழக உரையில் பேசியது. உலகத்தின் பழம்பெரும் மக்களாட்சி குமுகாயமான அமெரிக்காவிலும் வரலாற்று ஒடுக்குமுறைகளால் நிறைந்திருந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்க, அறுபதுகளில் எடுக்கப்பட்ட திட்டங்களின் பின்னணியிலேயே அவரது குரல் அப்படி ஒலிக்கிறது. 1961ல் ஜான் கென்னடி அதிபராய் இருந்தபோது ‘சம வேலை வாய்ப்புச் சட்டமும்’ (Equal Employment Opportunity), அதன்பின் 1964ல் லிண்டன் ஜான்சன் காலத்தில் பொது உரிமைச் சட்டமும் (Civil Rights Act) பேதமற்ற நிலையை அடைவதைக் குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. அந்த ஆண்டுகளில் தான் பாகுபாடற்ற குமுகாயத்தினை ஏற்படுத்த ‘உறுதியான செயல்பாடு’ (Affirmative Action) கைக்கொள்ள வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் நடவடிக்கைகளால் இனம், நிறம், மொழி, மதம், பால் போன்ற எல்லாப் பேதங்களும் தடை செய்யப்பட்டன.

உலகின் இருபெரும் மக்களாட்சிக் குமுகாயங்கள் என்று அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு கூட்டில் வருபவை என்பதால் அமெரிக்கக் குமுகாயத்தில் இருந்து சிலவற்றை அவதானிக்கலாம். ஒப்பிடலாம். ஒரு நேர்மையான குமுகாயத்திற்கு, மக்களாட்சி அரசுக்கு, பலவிதக் குறிக்கோள்கள் இருப்பது இயற்கையானது. சிலசமயம் அவை ஒன்றுக்கு ஒன்று சிறிது முரண்பட்டிருப்பதும் கூடத் தவிர்க்க முடியாதது. தகுதியும் தரமும் வாய்ந்தவர்களுக்கே முன்னுரிமையும் உயர்வும் என்பது ஒரு குறிக்கோள் என்றாலும், எல்லா சமூகத்தினருக்குமான சமநிலையை அடைய முற்படுதல் இன்னொன்று.

பலக்கிய குமுகாயங்களின் வரலாற்று நிகழ்வுகள் உண்டாக்கிய ஏற்ற இறக்கங்களைச் சமன்படுத்தவும், காலத்தில் ஒடுக்கப் பட்டவர்களின் மேம்பாட்டுக்கான வாய்ப்பளிக்கவும் உருவாக்கப்படும் சட்டங்கள், சிலருக்கு மட்டும் சிறப்பு முன்னுரிமைகளை அளிப்பது போல் தோன்றலாம். முன்சொன்ன ‘தகுதிக்கேற்ற உயர்வு’ என்னும் தத்துவத்தினின்று முரண்படுகிறது என்றாலும் அதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்பதை இந்த ‘அமெரிக்க உறுதிச்செயல்’ சட்டங்களிலும் பார்க்கலாம். அதனாலேயே அமெரிக்காவிலும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்புக் குரல்களுக்கும் தர்க்கங்களுக்கும் இடையில் இந்தச் சிறப்புச் சட்டங்கள் இன்னும் அமுலில் இருக்கின்றன.

இந்தியச் சூழலில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்குப் பரிகாரமாக கொண்டு வரப்படும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இன்று வைக்கப்படும் வாதங்கள் அனைத்தும் கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவிலும் வைக்கப்பட்டே வந்திருக்கின்றன. பல்வேறு நீதிமன்ற வழக்குகளும் எழுந்திருக்கின்றன. அமெரிக்க உச்ச நீதிமன்றம் கூடச் சில முக்கிய வழக்குகளில் ஒருமித்த கருத்துக் கூறாமல் இருபுறமும் உள்ள வாதங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இருந்தும் அடிப்படையில் இந்தச் சிறப்புத்திட்டங்கள் சட்டத்திற்குப் புறம்பானவையல்லவென்றே இதுவரை தீர்ப்பளித்திருக்கின்றன.

உறுதியான செயல்பாடு (Affirmative Action) குறித்த வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் சட்டம், நீதிமன்றம் என்ற அமைப்புக்களிலும், மறுபுறம் மக்களின் பொதுவான விவாதங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த முன்னுரிமைத் தேவையின் சார்பாக எழும் வாதங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

  • ஒன்று, நீதி மற்றும் நியாயம் இவற்றின் அடிப்படையில், கடந்த காலத் தவறுகளுக்கும், இன்னும் தொடர்கின்ற பாகுபாடுகளைத் திருத்தவும் பரிகாரமாய் அமைவது.
  • இரண்டு, மக்களாட்சித் தத்துவத்தின்படி, ஒரு நல்ல மக்களாட்சிக் குமுகாயம் அமைய அதன் முக்கிய அங்கங்களில் எல்லா வகைக் குழுக்களுக்கும் இடம் கிடைக்கவேண்டும் என்னும் அடிப்படையில் அமைவது.
  • மூன்று, குமுகாய நன்மையும் அவசியமும் கருதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேறும் வாய்ப்பு அளிக்கவும், நலிவடைந்தோருக்குச் சேவைகள் சென்றடையவேண்டும் என்னும் குறிக்கோளின் அடிப்படையிலும் அமைவது.
  • நான்கு, தளையற்ற பேச்சு மற்றும் கல்வி இவற்றின் அடிப்படையில், குமுகாயத்தின் பல்வேறு தட்டுக்களில் இருந்து வரும் வேறுபட்ட குரல்களுக்கு ஆய்வு, கல்வி, வளர்ச்சி இவற்றில் இடமளிக்க வேண்டும் என்ற கருத்தில் அமைவதும் ஆகும்.

சிறப்புரிமைகளுக்கு எதிராக அமையும் வாதங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

  • ஒன்று, தார்மீக அடிப்படையில், வேறு எதையும் நோக்காமல் இந்த முன்னுரிமைகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் இருந்து விலகுகிறது என்பது.
  • இரண்டாவது, விளைவுகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரா என்றும், செயல்திறன் குறைந்தவை என்றும், இதனால் முன்னேற்றத்தை விடப் பின்னடைவுகளே அதிகம் என்றும் சொல்வது.

முதல் பிரிவு வாதங்கள், இந்தச் சிறப்புத் திட்டங்கள் எதிர் பேதங்களை வளர்க்கின்றன என்றும், தகுதியைப் புறக்கணிக்கின்றன என்றும் குறை கூறுகின்றன. ஆனால் நூற்றாண்டுகளின் சிறப்புக் கவனிப்பால் வலுவுற்றவனை விடப் புறக்கணிப்பால் நோஞ்சானாய் இருப்பவனுக்குக் கூடுதல் கவனம் கொடுப்பதைக் குறை கூறுவது வெறும் சுயநலம் தான். தனிமனிதனைப் பொருத்தவரை அதில் பாதிப்புக்கள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தக் குமுகாயத்தின் நலன் என்று பார்க்கையில் ஒரு அரசுக்கு அப்படியான குறிக்கோள்கள் இருப்பது முற்றிலும் சரியானதே.

தகுதி என்பதும் இருக்கிற சூழலின் நேரடி விளைவாய் அமைவதே. போதுமான வசதிகளையும் வாய்ப்புக்களையும் கொடுத்தால் பின்னடைந்த ஒருவனும் தன் தரத்தை உயர்த்திக் கொள்வது இயல்பாய் நிகழ்வது தான். ஒரு ஆய்வில், படிப்பறிவில் சம அளவே உள்ள கறுப்பின மாணவர்கள் சிலரை முன்னுரிமை உறுதிச்செயல்பாட்டின் காரணமாய் உயர்தரப் பள்ளியில் அனுமதித்த போது அவர்களுடைய கற்றறிவும், படிப்பை முடிக்கும் சதவிகிதமும், கல்வியில் வெற்றியும் அதிகரித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது அந்த வசதி கிடைக்கப் பெறாத பிற கறுப்பர் அந்த முன்னேற்றத்தை அடையவில்லை. இதனடிப்படையில் தகுதி என்பது கிடைக்கும் வசதிகளின் அடிப்படையில் அமைவது என்பதால், குமுகாயத்தில் அந்த வசதிகள் எல்லோரையும் சென்றடைய ஒரு அரசு முனைவது அதன் தார்மீகக் கடமைகளுள் ஒன்றாகிறது. இன்று தமிழகத்திலேயே கடந்த சில ஆண்டுகளின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளால் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் அண்மைய காலங்களில் தகுதியில்/தரத்தில் உயர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கும்போது இடஒதுக்கீட்டுக் கொள்கைகளால் தரம் குறைகிறது என்கிற வாதங்கள் நீர்த்துப் போகின்றன.

அமெரிக்க மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட மற்றுமொரு ஆய்வில், சிறப்புத்திட்டங்களினால் பயனுற்று மருத்துவர்களாய் ஆன சிறுபான்மையினரும் பெண்களும், பிற சிறுபான்மையின மக்களுக்கும் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் சேவை செய்யும் மனப்பாங்கு அதிகம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான குமுக, பொருளாதாரப் பின்புலம் ஒன்றாய் இருக்கும் போது அவர்களிடையே ஒரு மிதமான ஆனால் முக்கியமான ஒட்டுதல் உருவாகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மீண்டும் தமிழக அனுபவங்களில் இருந்தும் இந்த அவதானத்தைப் பார்க்கலாம். அண்மைய சுனாமி காலத்தின் போது தமிழகத்தில் பட்டி தொட்டிகளிலும் மருத்துவக் கவனிப்புகள் சிறப்பாகச் செயல்பட்டன என்பதை வடநாட்டில் இருந்து வந்தவர்கள் கவனித்துச் சொல்லியிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் முறையால் வெளிவந்த பலதரப்பட்ட மருத்துவர்களால் தான் மருத்துவ வசதிகள் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் பல நிலைகளையும் எட்டியிருக்கிறது எனலாம்.

அமெரிக்க முன்னுரிமை உறுதிச்செயல் சட்டங்களுக்கும் இந்திய இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்கும் எதிராக இருப்பவர்கள், ஆனாலும் பாகுபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு அவை ஒழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் சில மாற்றுத் திட்டங்களைக் கொள்ளலாமே என்று நினைக்கிறார்கள். அவற்றுள் சில பொருளாதார நிலையைக் கவனத்தில் கொண்டு முன்னுரிமைகளை அளிப்பது, புவியியல் அடிப்படையில், உதாரணத்துக்கு கிராம / நகரப் பின்புலத்தை வைத்து முன்னுரிமை அளிப்பது போன்றவை. இன்னும் சிலர் நலிவடைந்த இடங்களுக்குப் பல வசதிகளை, முன்னேறும் வாய்ப்புக்களை அளிக்கும் வண்ணமாய் அங்கு வளர்ச்சிப் பணிகளை அதிகளவில் மேற்கொண்டால் அதனால் வேலைவாய்ப்புக்கள் முதலியன பெருகி அதன் மூலம் மேம்பாடு அடையலாம் என்கிறார்கள். இன்னும் சிலர் எந்த அமைப்புசாராத் திட்டங்களாக கலப்புத் திருமணங்களையும், பலதட்டு மக்களிடையே நட்புணர்வுகளையும் பேணி வளர்த்தாலே போதும் என்று கருத்துக் கொள்கிறார்கள்.

இவை அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், பின்னொரு கட்டத்தில் பலனளிக்கலாம் என்றாலும், நூற்றாண்டுகளின் பாகுபாடுகள் மறைய இந்திய அமெரிக்கச் சிறப்புத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் இன்னும் அவசியமாய்த் தான் இருக்கின்றன. ஆண்டாண்டு காலமாய்ச் சங்கிலிப் பிணைப்பில் கிடந்தவனை உடனே ஓடச் சொல்ல முடியாது. தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவது மட்டுமே பற்றாது. அவனுக்கு வேண்டிய சிறப்புக் கவனிப்புக்களைச் செய்தே ஆகவேண்டும்.

தாம் பார்க்கும் இடத்தில் இருந்து சிலர் இவற்றைச் ‘சலுகை’ என்று கூறலாம்; வேறு சிலர் ‘இல்லை அவை உரிமை’ என்று போர்க்குரல் கொடுக்கலாம். எந்தச் சொல் கொண்டு இந்த முன்னுரிமைகளை அழைத்தாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றே. நூற்றாண்டுகளாய் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டுக் கிடந்தவர்களுக்கான முன்னேற்றத்திற்கும் மேலெழும்பல்களுக்குமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதும், தடைகளை உடைத்தெறிவதுமே இப்படிப்பட்ட சிறப்புச் சட்டங்களுக்கான காரணங்கள். ஏற்றத் தாழ்வுகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில் இந்தச் சட்டங்களும் இடஒதுக்கீடுகளும் இன்னும் அவசியமாகின்றன. இவற்றை எதிர்த்து எழும் சிலரின் ஆனால் வலிவும் சக்தியும் வாய்ந்த குரல்கள், இந்தத் தேவையை அவசியமாகக் கருதும் ஆனால் நலிவடைந்த குரல்களை நசுக்கி விடாதபடி பார்த்துக் கொள்வது பொறுப்பான மிடையங்களின் தார்மீகப் பண்பும் கூட.

* * * *
உசாத்துணை:
Race, Gender, and Affirmative Action, Resource Page for Teaching, Elizabeth S. Anderson, University of Michigan.

* * * *
இது திசைகள் – ஜூலை 2006, இட ஒதுக்கீடு சிறப்புக்கட்டுரைகளில் ஒன்றாக வெளிவந்த என் கட்டுரை. திசைகளுக்கும் ஆசிரியர் அருணாவிற்கும் நன்றி.

* * * *
இதே இதழில் வெளியான தருமியின் ‘சாதிகள் இருக்குதடி பாப்பா’ கட்டுரையையே சிறப்பான ஒன்றாகக் கருதுகிறேன். இதில் குறிப்பிட்டுள்ள தரவுகள் பற்றிய ஐயத்தை ரவி ஸ்ரீனிவாஸ் எழுப்பியுள்ளார். தரவுகளைப் பற்றி நான் ஆய்வுசெய்யவில்லை என்பதால் எனக்குத் தெரியவில்லை. இருந்தும் தரவுகளின் சரி, தவறு என்பதைச் சுட்டிக் காட்டுமிடத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்று அஸ்திரங்களை ஏவுவது ஒருவகையில் கருத்துத் தீவிரவாதமாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. இது குறித்த இழையில் தங்கமணியின் பின்னூட்டங்களும், மாலனின் கருத்தும் கவனிக்கப்படவேண்டியவை.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in சமூகம்

4 Responses to “சமன்பட்ட குமுகாயம் – ஓர் அமெரிக்கப் பார்வை”

  1. on 08 Jul 2006 at 6:28 am1ravisrinivas

    இருந்தும் தரவுகளின் சரி, தவறு என்பதைச் சுட்டிக் காட்டுமிடத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்று அஸ்திரங்களை ஏவுவது ஒருவகையில் கருத்துத் தீவிரவாதமாகத் தான் எனக்குத் தோன்றுகிறது

    these days accusing supreme courts and
    judges without any evidence is a fashion.
    you can extend support to it.Dont expect
    me to do so.i have faith in constitution
    of india and the principle of equality
    and principle of non-discrimination
    by government on account of race,color,
    gender,caste,ethinicity.I know that these
    principles may not be liked by all,
    particularly by those who benefit from
    the government discriminating against
    the so called forward castes in
    education,jobs.you may not beleive
    in the honor and sanctity of institutions
    like Supreme Court of India but I beleive
    in them.

  2. on 08 Jul 2006 at 1:33 pm2யக்ஞா

    செல்வராஜ், ஒடுக்கப்பட்டோருக்கு கைகொடுத்து தூக்கி சமத்துவத்தை நிலைநாட்டவேண்டியது அரசின் பிரதான கடைமையாகும். இதற்காக ஒதுக்கீடு திட்டங்கள் தேவை என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் பிரச்சினையே அதற்கு ஒரு எண் மதீப்பீடு அளிக்கும்போது தான் எழுகிறது. அது நாம் 10 விழுக்காடோ அல்லது 100 விழுக்காடோ எவ்வளவு நிர்ணயித்தாலும் அது கணிக்கப்படும் முறையும் பரிசீலிக்கப்படும் விதமும் மிக முக்கியமாக கருதுகிறேன். துல்லியமான புள்ளி விவரங்களும் தீர்க்க சிந்தனையும் மிக அவசியமென நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது இருக்கும் தலைமையில் எனக்கு நம்பிக்கையில்லை.

  3. on 08 Jul 2006 at 9:06 pm3செல்வராஜ்

    ரவி, உங்கள் கருத்தில் நீங்கள் மாற்றம் கொள்ளப் போவதில்லை. ஆனால், தருமியின் கட்டுரையில் அப்படி நீதிமன்றத்தை அவதூறு செய்யும் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லியிராவிடில் வேறு யாருக்கும் அப்படியொரு சந்தேகம் கூட எழுந்திருக்காது என்று நினைக்கிறேன். இந்த நிலையில் நானோ பிறரோ அப்படியான ஒரு நிலையை ஆதரிப்பதாக நீங்கள் சொல்வதும் ஏற்கத்தக்கதல்ல.

    நீதிமன்றங்களின் புனிதம், செம்மை பற்றி நானும் பெருமை கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் அவை அப்படித் தான் இருக்கின்றன என்றெண்ணுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தான். நீதிமன்றம் சம்பந்தப்பட்டு நான் முன்னர் எழுதிய பதிவுகள் இங்கே, மற்றும் இங்கே.

  4. on 08 Jul 2006 at 9:14 pm4செல்வராஜ்

    யக்ஞா, உங்கள் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வது உண்மை தான் என்றாலும் எங்காவது ஓரிடத்தில் ஆரம்பிக்க வேண்டுமே. பூரணமான முறை வரும்வரை காத்திருத்தல் நடைமுறைக்கு ஒத்துவராது. இப்போது எதிர்ப்பவர்கள் எத்தனை சதவீதம் சொன்னாலும் எதிர்பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது. துல்லியமான கணக்கெடுப்புகள் சிந்தனைகளும் வேண்டும் தான். நிஜ உலகில் இந்தியா போன்ற ஒரு பலக்கிய குமுகத்தில் இது வரக் கொஞ்சம் காலங்கள் ஆவதும் இயற்கையே.

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook