இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

நேர்மையும் நீதியும்

January 31st, 2004 · 2 Comments

சிறு வயது முதல் முடிந்தவரை நேர்மையாய் இருக்க நான் முயற்சி செய்து வந்தது உண்டு. கால ஓட்டத்தில் அந்த முயற்சிக்குச் சவால்கள் ஏற்பட்ட போது சில இடங்களில் வழுக்கி இருக்கலாம். ஆனாலும் இயன்றவரை இன்னும் அந்த முயற்சியில் தவறுவதில்லை. இதற்காக “idealist”,  “பொழைக்கத் தெரியாதவன்” என்று பட்டங்கள் பல கிட்டியிருக்கின்றன. “யதார்த்தமாய் இரு”, “நீ மட்டும் இப்படி இருந்து என்ன கிழிக்கப் போகிறாய்?” என்று அறிவுரைகளுக்கும் குறைவே இருந்ததில்லை.

ரேஷன் அட்டையில் வீட்டில் இருக்கிற நபர்களுக்குத் தகுந்த அளவு பொருட்கள் வழங்கப் படும் என்று இருந்த அந்தக் காலத்தில், வீட்டில் இல்லாத சில நபர்களைச் சேர்க்க என் பெற்றோர் விழைய, அதற்கு நான் முட்டுக் கட்டையாக இருந்த கதையை இன்னும் திட்டிக் கொண்டே என் அன்னை நினைவு கூர்வார். இருப்பினும் உள்ளூர அவர்களுக்குப் பெருமை தான் என்று நான் நினைத்துக் கொள்வேன். (இதைக் கேட்டால், “ஆமா..அஞ்சாறு பெரும… போடா… பொழைக்கத் தெரியாதவனே” என்பாராயிருக்கும்!)


பொறியியற் கல்லூரி விண்ணப்ப காலத்தில் தாசில்தார் அலுவலகத்தில் சமூகச் சான்றிதழ் வாங்க வேண்டியிருந்த போது, உடன் பயின்ற சில மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும் நேராகத் தாசில்தார் அலுவலகத்தில் சென்று கொஞ்சம் அதிகச் செலவில் சிறப்புச் சலுகையோடு காரியத்தை முடித்துக் கொண்டதுண்டு.

எந்தக் கையூட்டும் தர மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்பில் நானும் இன்னும் சிலரும் இழுத்தடிக்கப் பட்டோம். முதலில் ஒரு விண்ணப்பப் படிவத்தில் மணியகாரர் (?) கையொப்பம் வாங்க வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் அதிகாலையில் தவம் கிடக்க வேண்டும். அதன் பிறகு வெளியூர் சென்று விட்ட Revenue Inspector (வருவாய் அதிகாரி) இடம் அதே தாளில் அவர் வரும் தேதி அறிந்து சென்று கையொப்பம் வாங்கி வரவேண்டும். இவ்விடங்களில் எல்லாம் நேரிடையாகவோ சுற்றி வளைத்தோ காசு கேட்கப் படுவதையும் சமாளித்தாக வேண்டும். அதன் பிறகு மீண்டும் தாசில்தார் அலுவலகம் சென்று விண்ணப்பத்தைக் கொடுத்த பின் மறுநாளோ சில தினங்கள் கழித்தோ சான்றிதழ் தரப்படும். எல்லாம் முடிந்து சான்றிதழ் எடுத்துக் கொண்டு வரும் வேலையாளிடமும் ஒரு பத்து வேண்டும் என்னும் கோரிக்கையை எதிர் கொள்ள வேண்டும் ! ஒரு அரசு பொதுமக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள் தானே இவை. இதற்கு எதற்கு இத்தனை இழுபறிகள் ?

கல்லூரி நாட்களில் விடுதிச் செலவை நிர்வாகிகளே பார்த்துக் கொள்வதில் ஏதோ “கோல்மால்” நடக்கிறது என்று எல்லோரும் குற்றம் சாட்டி மாணவர்களே பார்த்துக் கொள்வது என்று ஒரு நிலை ஏற்பட்டது நல்லதுக்காகத் தான் இருந்திருக்க வேண்டும் ஆனால் அதையே மாணவப் பிரதிநிதிகள் செய்து காசடித்துக் கொண்ட கதை தெரிய வந்த போது ஒரு ஏமாற்ற உணர்வே ஏற்பட்டது. அதிகாரமும், வாய்ப்புக்களும் ஏற்படும் போது சலனங்களும் அதிகரிக்கத் தான் செய்யுமோ ? இருப்பினும் ஒரு மன உறுதியோடு அவற்றை எதிர்கொள்ளாமல் இப்படி நிழல் வளைந்த மனிதர்களாக மக்கள் மாறுவது ஏன் ?

சிறு அளவில் இப்படி ஆரம்பிப்பதும், பின் அது பழகி விடுவதும் தான் பின்னர் பெரிய அளவிலும் பொதுவாழ்விலும் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. இந்தக் கறைகள் படியாத கடைசி இடம் என்று தான் நீதித் துறையை நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதிலும் எனக்கு ஏமாற்றத்தைத் தரத் தொடங்கியிருக்கின்றன. நீதித் துறையின் சில கேவலங்கள் பற்றி பத்ரி சமீபத்தில் பதிந்திருக்கிறார். இது போல் காசு வாங்கிக் கொண்டு நீதி பல இடங்களில் விற்கப்படுகிறது என்று ஒரு வதந்தியாக என்னுடைய இந்தியப் பயணத்தின் போது அறிந்து கொண்டேன். மேற்சொன்ன நிகழ்வு போல் பத்திரிக்கைகளில் வெளி வராத செய்தியாய், ஆனால், காது வழிச் செய்தியாய் சிறு ஊர்களில் நடக்கின்ற (தாகச் சொல்லப்பட்ட) சிலவற்றை அறிந்தேன்.

“இப்பொ இருக்கிறவர் காசு வாங்குபவர். இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வு பெற்று விடுவார். அது வரைக்கும் இழுத்துவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்”, என்று ஒரு நீதிபதியைப் பற்றி ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிடம் (எனது உறவினர்) கூறியதாய் அறிந்தேன்.

இன்னும் சிலவற்றில் தமக்கோ, தம் வாரிசுகளுக்கோ ஆபத்து ஏற்படும் என்கிற மிரட்டல்களுக்கு ஆளாகியும் நீதி நடுங்குவதாகவும் காதுவழியே வதந்தி.

குறிப்பு: இவை எல்லாம் ஆதாரபூர்வமான செய்திகளோ எனது சுய அனுபவங்களோ இல்லை. அதனால் தான் வதந்தி என்கிறேன். ஆனாலும் பரவலாய் இது பலரது கருத்தாகவும் இருக்கிறது. யாரும் என் மீது அவதூறு வழக்குக் கொண்டு வராதீர்கள். இவை என் கருத்துக்களல்ல.(எதற்கு வம்பு என்று தான் 🙂 ).

இப்படிப்பட்டவை ஒரு வெட்கக்கேடு என்று கூறும் பா.ராகவன் அதே சமயம் அவர்களும் மனிதர்கள் தான், தவறு செய்யும் பிரகஸ்பதிகள் அங்கும் இருக்கிறார்கள், தவறு செய்பவர்களைக் குறை கூறுவோம், ஆனால் ஒட்டு மொத்த நீதித் துறையும் அப்படித்தான் இருக்கிறது என்னும் முடிவுக்கு வரவேண்டாம் என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட நம்பிக்கை சற்றே குறைந்து கொண்டு வந்தாலும், அவரைப் போன்றே நானும் இன்னும் அந்த நம்பிக்கையோடே இருக்கின்றேன். இவை ஒரு சில களைகளாக மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும்.

இருப்பினும், இந்தக் களைகள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. அவை இருக்கின்றனவோ என்ற ஐயங்களும் பரவலாக மக்களிடம் பரவாதிருக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போது தான் நீதித்துறையின் உயர்ந்த பீடத்திற்கும் மதிப்பிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதன் மீது மக்களின் நம்பிக்கை குறையாதிருக்கும்.

ஒரு இற்றைப்பாடு:

சில வழக்குகளில் தாமதமாக ஏன் தீர்ப்புச் சொல்லப் படுகிறது என்று தெரியவில்லை என்று ஒரு புகழ்பெற்ற வழக்கின் தீர்ப்புப் பற்றி நானும் அதற்கு முன்பே காலம் கடந்த நீதி பற்றிக் காசியும் எழுதி இருந்தோம். முழுத் தீர்ப்பைப் படித்த வழக்கறிஞர் பிரபு அது பற்றி விரைவில் தனது கருத்துக்களை எழுதுவதாகக் கூறி இருக்கிறார். அதைப் படிக்கவும் ஆவலாய் இருக்கிறேன்.

Tags: சமூகம்

2 responses so far ↓