நீதியின் விலை
Oct 25th, 2005 by இரா. செல்வராசு
நீதித்துறையின் நேர்மை, நடுநிலை, உயர்ந்த குறிக்கோள்களில் நம்பிக்கை வைக்க எனக்கு ஒரு அவசியம் இருக்கிறது. குமுகாயத்திலே சந்திக்கின்ற அநியாயங்களை முறையிட்டு நியாயம் பெற இருக்கும் கடைசி அமைப்பு என்கிற ஆறுதலைத் தரவல்லது. அதை நாட வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லையெனினும், விருப்பு வெறுப்பின்றியும் பாகுபாடுகள் இன்றியும் நீதி ஒன்றே குறிக்கோளாய் இருந்து ஒரு பாதுகாப்புணர்வைத் தரவல்லது. அது வளையாத செங்கோல் போலிருக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் இறுதியில் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான்.
வழக்கறிஞராக இருக்கும் நெடுநாள் நண்பரைச் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஊரிலேயே வேறு எந்த வழக்கறிஞரும் எடுத்து நடத்தத் தயங்கிய ஒரு வழக்கை இன்னொரு நண்பருக்காகத் தான் முன்வந்து எடுத்து நடத்தி வெற்றி கண்டிருக்கிறார் என்று மனதாரப் பாராட்டியபடி பேசிக் கொண்டிருந்தோம். அதிலும் எதிராளி ஊரில் சக்திவாய்ந்த ஒருவர் என்று அறியச் சற்றுப் பெருமையாகக் கூட இருந்தது. ஆனால் ஊதிய பலூனில் குத்திய ஊசியாக என் மகிழ்வுணர்ச்சிகள் குறைந்தன, அங்கும் பணம் விளையாடியிருக்கிறது என்கிற செய்தி கேட்டு.
‘எதற்குப் பணம் கொடுக்க வேண்டும்?’, ‘எல்லோரும் பணம் வாங்குபவர்கள் தானா?’, ‘நேர்மையாகவே யாரும் இல்லையா?’ என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் வைத்தேன். பெரும்பாலான வழக்குகளில் பணம் கைமாறுவது உண்மை என்று கூறியவர் ‘இதெல்லாம் சகஜமப்பா’ என்று சாதாரணமாகக் கூறினார். நீதி இப்படி விலை போகிறதே என்கிற என் கவலைக்கு ஆறுதல் அளிப்பவர் போல் அவர் சொன்னார் – ‘ஜெயிக்கிற கட்சிக்காரரிடம் இருந்து தீர்ப்பு சொல்வதற்கு முன் பணம் வாங்கிக் கொள்வார்கள் – அவ்வளவு தான்’. அதாவது வழக்கு முடிந்து தீர்ப்பு நிலைக்கு வந்துவிடும். அதன்பிறகு விரைவில் தீர்ப்பு வெளியிட ஊக்குவிப்பது போல் பணம் கைமாறும். தீர்ப்பே மாறுவதில்லை. ஆஹா! இது கேட்டு நான் புளங்காகிதம் அடைந்து கொள்ள வேண்டும் போலும்!
Justice delayed is simply Justice that can get more returns!
கீழ் நீதிமன்றங்களில் சுமார் மூன்று கோடி வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன என்கிறார் Y.K. சபர்வால், உச்ச நீதிமன்றத்தின் 36ஆவது தலைமை நீதிபதியாக அடுத்த வாரம் பதவி ஏற்கப் போகிறவர். தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளைத் துரிதப் படுத்துவதே தன் உடனடி வேலை என்கிறார்.
குறிப்பாக இரண்டு வகை வழக்குகளை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஒன்று – உயரிடத்து லஞ்ச ஊழல் குற்றங்கள். இரண்டு – பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள். உயரிடத்து லஞ்ச ஊழல் வழக்குகளை விரைவில் முடித்துத் தீர்ப்பு வெளியிடுகையில் ஒரு செய்தி மக்களுக்குச் செல்கிறது. நம்பிக்கை பிறக்கிறது. அதற்காக இவற்றிற்கென்றே பிரத்தியேகச் சிறப்பு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இந்த வழக்குகள் விரைந்து விசாரிக்கப் படும் என்கிறார் சபர்வால் (ஹிந்து பேட்டி, 21 அக் 2005). பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லல்லூ, ஜெஜெ போன்றவர்களின் மீதிருக்கிற வழக்குகள் என்னவாகின்றன என்று.
இவை கிடக்க, நீதித்துறையிலேயே இருக்கும் ஊழல்களை நீக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்கிற கேள்விக்குச் சபர்வால் தருகிற பதில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. “நீதித்துறையின் உள்ளேயோ வெளியேவோ, ஊழல் எங்கிருப்பினும் அவற்றை நீக்கத் தேவைப்படும் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கீழ்நீதிமன்றங்களில் சிறிய அளவில் நடக்கும் ஊழல்களைத் தடுக்கும் வண்ணமாக நாள்தோறும் நீதித்துறை அலுவலர்கள் கட்டாய ஓய்வில் செல்வதை இப்போது பார்க்கலாம். மேல்நீதி மன்றங்களில் லஞ்ச ஊழல் குற்றங்கள் மிகவும் குறைவே. சக ஊழியர் அழுத்தத்தின் காரணமாக உயர்நீதி மன்ற நீதிபதிகளே பதவி நீங்கிச் செல்வது நீதித்துறை ஒன்றில் தான் நடக்கிறது. நீதித் துறையோ, வேறு எதுவோ, எல்லா இடங்களிலும் இருக்கிற இந்த லஞ்ச ஊழல்களை எல்லோரும் எதிர்க்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்லது”, என்று கூறுகிறார்.
ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியால் இவ்வளவு தான் செய்ய முடியுமா என்று ஆதங்கம் ஏற்படுகிறது. மறுபக்கம் யதார்த்தமாகப் பார்க்கையில், வானைத் தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகள் போலில்லாமல் நடைமுறையில் சாத்தியமாவதை மட்டும் சொல்கிறார் போலும் என்றும் தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் இருக்கிற லஞ்ச ஊழல்களை எல்லோரும் எதிர்க்க வேண்டும் என்கிற செய்தி முக்கியமானது. அது முதலில் நம் ஒவ்வொருவரிலும் தொடங்க வேண்டும்.
என் பழைய பதிவொன்று – நேர்மையும் நீதியும்.
சமீபத்தில் திருமணச் சான்றிதழ் பெறச் சென்றிருந்தபோது என்னை இந்துவே அல்ல என்று சொன்னார் அவர்!!! எனக்கு தூக்கி வாறிப் போட்டது. பணம் பறிக்க இப்படி ஒரு முயற்சியா? இளம் ரத்தம். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்றெல்லாம் ரூல்ஸ் பேசினேன். அதன்பின் என் சுற்றத்தினர் என்னை வாயடக்கி அந்த மிருகத்துக்கு 1000க்கு மேல் தண்டம் அழுது சான்றிதழ் பெற்று வந்தனர். அவர்மேல் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். என்றாலும் நான் எடுத்திருந்த விடுப்பு நாட்கள் போதவில்லை. கூடவே நமக்கு அலைச்சல், பணச் செலவு. ஒவ்வொருவரும் ஒதுங்கிச் செல்வதால்தான் “அவை” பிழைப்பு நடத்துகின்றன என்பதனை தாமதாமக அறிந்தேன்.
//அதாவது வழக்கு முடிந்து தீர்ப்பு நிலைக்கு வந்துவிடும். அதன்பிறகு விரைவில் தீர்ப்பு வெளியிட ஊக்குவிப்பது போல் பணம் கைமாறும். தீர்ப்பே மாறுவதில்லை. ஆஹா! இது கேட்டு நான் புளங்காகிதம் அடைந்து கொள்ள வேண்டும் போலும்!//
ஆமாம்! பிறகென்ன?
ஒரு மாஜிஸ்ட்ரேட் ஆவதற்கும் நிறையப் பணம் செலவாகிறது என்று கேள்வி. இது ஒரு சுழற்சி – பணம் அதிகம் வரும் வேலைக்குப் பணம் கொடுக்க வேண்டும். கொடுத்த பணத்தைத் திரும்பச் சம்பாதிக்க வேலையில் பணம் வாங்க வேண்டும்.
—-
இருக்கட்டும். உங்க பின்னூட்டப் பெட்டி ‘ஃபயர்ஃபாக்ஸ்’ல தெரியலை. கோபத்தில் மொத்தமா நீக்கிட்டீங்களோன்னு நெனச்சேன்.
🙂
//உங்க பின்னூட்டப் பெட்டி ‘ஃபயர்ஃபாக்ஸ்’ல தெரியலை//
It’s ok now – must have been my settings…
கண்ணன், இல்லை தவறு இங்கே தான் இருந்தது. வடிவமைப்பில் சிறிது மாற்றிக் கொண்டிருந்தேன். IE வேலை செய்ய வைக்க முயன்றதில் FireFox உடைந்து போனதைக் கவனிக்கவில்லை. நீங்கள் சுட்டிய பின்னரே சோதித்துப் பார்த்துச் சரி செய்தேன். அதற்கும் உங்களுக்கு நன்றி.
மூர்த்தி, உண்மை தான். ஏதாவது ஒரு காரணத்துக்காக நாம் எல்லோருமே சமரசம் செய்து கொண்டு போய் விடுவதால் இந்தக் குறைகள் தீரும் வழி தெரியவில்லை.
இது தான் உலகம் நேற்று பரவாயில் இன்று மோசம் வரும்காலம் எப்படியிருக்கும் எண்ணிப்பாருங்கள்