இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

தொட்ட இடம் மலரும்

June 19th, 2006 · 19 Comments

பூரண நிலவு மாலைக்குப் பொன்னிறம் பூசும் நாளொன்றில், கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்துக் கிடக்கிறேன். இப்படித்தான் மனசு கிடந்து தவிக்கிறபோதெல்லாம் ஆறுதல் தேடி இந்த அலைகளைப் பார்க்க வந்துவிடுவதுண்டு. இனம்புரியாத, என்னவென்று சொல்லமுடியாத தவிப்பு என்று பலநாள் நாட்குறிப்பில் கூட எழுதி வைத்திருக்கிறேன். இதுபோன்ற நாட்களில், சில மணி நேரங்கள் கடற்கரைக் காற்றில் ஊறிப் பின் விறுவிறுவென்று வேகமாக மிதிவண்டியை விடுதி நோக்கிச் செலுத்துவேன். சீறிப் பாயும் இரத்தம் எல்லா கசடுகளையும் குழப்பங்களையும் கரைத்து விடும். ஹ்ம்… மனமென்பது சிந்தனைகளின் வடிவமென்கையில் எந்த நாளம் வழியாய் இரத்தம் அங்கு பாய்கிறது? தெரியவில்லை.

படுத்துக்கிடந்த என்னை மீண்டும் மீண்டும் முயன்று தீண்ட முடியாத அலைகள், ‘ஹோ’வென்ற இறைச்சலோடு காற்றில் கலந்து சாரல்களாய் என்னை வந்து அடைகின்றன. உப்புக்காற்றின் பிசுபிசுப்பு முகத்தில் படிய ஆரம்பிக்கிறது. எழுந்து ஒருமுறை முகத்தைத் துடைத்துக் கொண்டு இரு கைகளையும் பின்புறம் ஊன்றியமர்ந்து கடலைப் பார்க்கிறேன். ஆர்ப்பரிக்கின்றன அலைகள். இந்த அலைகளைப் போலத் தான். இன்றென்னவோ பெரும் பாடாய்ப் படுத்துகிறது இந்தப் பாழாய்ப் போன மனசு.

“டேய், உண்மையச் சொல்லுடா! நெசமாவே என்ன குழப்பம்னு புரியலியா?”

மனதுக்குப் பதில் சொல்லப் பிடிக்காமல் திரும்பிப் பார்க்கிறேன். என்னைச் சுமந்து கொண்டு வந்த மிதிவண்டி மட்டும் தூரத்தில் மௌனமாக நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சுண்டல் விற்ற சிறுவன் கூட மிச்சமிருந்த இரண்டு பொட்டலத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். சோடி சோடியாய் வந்தவர்கள் எல்லாம் திரும்பிச் சாலையை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தார்கள். அதில் சில பெண்களின் நீளக் கூந்தல் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த காட்சி எனக்கு மீண்டும் கவிதாவையே நினைவுக்கு மீட்டது.

“பாத்தியா… அவள் தானே காரணம்? அதை ஒத்துக்கக் கூட உன்னால முடியலியா?” இம்சைப் படுத்துகிறது மனது.

malar poo

கவிதாவை எனக்குப் பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும். தனியாக அவளோடு பேசிக் கொண்டிருக்க வாய்ப்புக் கிட்டுமா என்று நிறைய ஏங்கியிருந்ததுண்டு. ஆனாலும் இன்று மாலையில் வகுப்பு முடிந்து கிளம்பும் போது கவிதா கேட்டதற்கு நான் தயாராய் இல்லை தான்.

“டேய், நாளைக்கு ஹாஸ்டல் பக்கமா கொஞ்சம் வர்ரயா? உங்கூடக் கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும்”

கவிதா வகுப்பிலேயே கண்ணைக் கவரும் பெண்களுள் ஒருத்தி. முதன்முதலாக எனக்கு என் பிறந்த நாளன்று ஒரு குட்டிப் ‘பொக்கே’ கொடுத்தது அவள் தான். சொல்லப் போனால் அவள் ஒருத்தி தான் எனக்கு அப்படி அன்பாய் ஒன்றைச் செய்திருக்கிறாள். எனக்கு மட்டுமல்ல, தனக்குப் பிடித்தவர்கள் பெரும்பாலானோர்க்கு அவள் அப்படிச் செய்து தருவதுண்டு என்று பின்னாளில் அறிய வந்ததுண்டு. அவளுடைய இந்த அன்பும் இது போன்ற இனிய பண்புகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.

மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. “என்ன விஷயம் கவிதா, இப்பவே சொல்லேன்”.

ஒரு சிறு நகரத்தில் இருந்து வந்தவனுக்கு முதன்முறை சென்னை பிரமிப்பாகத் தான் இருந்தது. பதின்ம வயதுக் கண்களுக்குப் பார்வை இயற்கையாகப் பெண்கள் பக்கம் திரும்பினாலும், நகரவாழ்வு நவநாகரீக மங்கையர் சற்றே மருட்டுவதாய்த் தானிருந்தனர். பெண்கள் விடுதிப் பக்கமாய்ப் பல மாணவ மாணவியர் அளவளாவி இருப்பதைப் பார்த்து ஆசைப் பட்டிருக்கிறேன். இருந்தும் நானாக ஒருமுறையும் அங்கு சென்று யாருடனும் பேசியதில்லை. முதலாண்டு மட்டும் ஒரு நாள், ஒரே நாள் ஏதோ ஒரு காரணம் வைத்துக் கொண்டு அங்கு சென்று ஒரே நிமிடத்தில் ஓடி வந்துவிட்டேன்.

“இல்லடா… இங்க வேணாம். நீ நாளக்கி வா. சாய்ந்திரம் நாலு மணிக்குப் பக்கமா வர்றியா?”

ஆரம்பத்தில் வகுப்புப் பெண்களோடு கூடப் பேச்சுவார்த்தை இருக்கவில்லை என்றாலும், மெல்ல மெல்லப் பேச்சு வளர்ந்து நிறைய நல்ல நட்புக்கள் உருவாகியிருந்தன. கவிதாவோடும் அப்படித் தான். ஒருமுறை கவிதைகள் என்று நான் பள்ளி நாட்களில் இருந்து கிறுக்கி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை அவளிடம் கொடுத்திருக்கிறேன். கற்பனையாகக் காதலைப் பாடுபொருளாக்கி நான் எழுதியிருந்தது குறிப்பாக அவளுக்குப் பிடித்துப் போயிருக்க வேண்டும். ‘யாரு அந்தப் பொண்ணு’ என்று சில நாள் என்னைக் கேட்டுக் கிண்டல் செய்துகொண்டே இருந்தாள். ‘கற்பனைன்னு நம்பவே முடியல்லடா…’

“சரி கவிதா. நாளைக்கு வர்றேன்”

நிதானமாகத் தான் சொன்னேன். ஆனால் மனதில் மட்டும் துடிப்புக் குறையவே இல்லை. இருக்குமோ? அப்படியும் இருக்குமோ? என்னைப் போன்றே அவளுக்கும் என்னைப் பிடித்து, அதனை, அவளுடைய காதலை என்னிடம் சொல்லத் தான் நினைக்கிறாளோ?

சற்று வேகமாக எழும்பிய அலையில் தெறித்த கடல்நீர் சிறு துளியாய்க் கண்ணில் விழுந்து உப்பாய் எரித்தது. துடைத்துக் கொண்டு எழுந்தேன். மிதிவண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

காதலைப் பற்றிக் கொஞ்சம் இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. எனக்குள் மட்டும் அது குறித்தான எண்ணங்கள் இருக்கும்போது ஒரு வசதி இருக்கிறது. அதைப் பற்றிக் கற்பனை செய்து கொள்ளலாம். எஃப் எம் ரேடியோவில் பாட்டுக் கேட்கும் போது மனமுருகிக் கதவில் சாய்ந்து கொள்ளலாம். வெறும் அறையில் தனியாகச் சிரித்துக் கொள்ளலாம். பக்கம் பக்கமாய்க் கவிதை எழுதிக் கிழித்துப் போடலாம். வேறு எந்தத் தளைகளும் இல்லை. ஆனால், இந்த நிலை மாறி அவளும் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டால்? அது பிறகு ஒருவழிப் பாதையாகி விடுமே. திரும்ப இயலாத அந்தப் பயணத்திற்கு நான் தயாரா?

காரணமின்றி அப்பாவின் முறுக்கு மீசையும் உருமாலைக் கட்டும் நினைவில் வந்து போனது. தங்கை கலகலவென்று சிரித்தாள். ‘நல்லபடியா படிச்சுட்டு வாடா’ என்று தலையை நீவிச் சொடக்கு எடுத்துக் கொண்ட அம்மா. தலையைக் கொஞ்சம் உலுக்கிக் கொண்டேன். நாளைக்கு அவள் விடுதிப் பக்கம் போகாமல் இருந்துவிடலாமா? மிதிவண்டியில் ஏறி வேகமாக மிதிக்க ஆரம்பித்தேன்.

“டேய். உன் வாழ்க்கையப் பத்தி யோசிக்கறத உட்டுட்டு, சும்மா எதுக்கு அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சின்னு நெனச்சுக் குழப்பிக்கறே?”

ஒரு பக்கம் மனசு இப்படிக் கேள்வி கேட்டாலும், ‘சாப்பிடற சோத்துக்கே அவங்க கிட்டத் தானே கையேந்தி இருக்க வேண்டி இருக்கு; அங்க மொறச்சுக்கறது நடைமுறைக்கு ஒத்து வருமா’ என்று ஏரணம் பாடியது இன்னொரு புறம். இந்த நிலையில காதல் கத்தரிக்காயெல்லாம் தேவை தானா? சொந்தக் காலிலே நிற்கணும்னா இன்னும் இரண்டு வருஷம் படிச்சு முடிச்சு, அதுக்கு அப்புறம் நல்ல வேலை வாங்கி மொத்தமா ஒரு நாலஞ்சு வருஷம் ஆயிருமே!

ஆனாலும் கவிதாவின் கவின்முகம் கண்முன் வந்து போனது. இந்தச் சுழலிலே சிக்கித் தான் பிடறியில் மணல் படியப் படுத்துக் கிடந்தேன். இன்னும் தெளியவில்லை!

நெடுஞ்சாலைக்குத் திரும்பும் தெரு முக்கில் சிலர் பூ விற்றுக் கொண்டிருந்தனர். கவிதாவைப் பூவில்லாது பார்க்கும் நாட்கள் அபூர்வம். சில நாள் ரோசாவில் இரண்டு ஒருபக்கமாய் அவள் தலையில் பூத்திருக்கும். சில நாட்கள் சரக்கொத்தாய் மல்லிகை ஒற்றைப்பின்னல் கூந்தலில் அணி வகுக்கும். கவிதாவிற்கு என்ன பூ பிடிக்கும்? தெரியவில்லை. ஆனால், எனக்கு மல்லிகை தான் பிடிக்கும். அவளின் பற்களின் வெண்மைக்குப் போட்டி போட்டுத் தோற்கும் மல்லிகை. இருந்தாலும் வீசும் நறுமணத்தால் அது மீண்டும் வெற்றி பெறும்.

“போடா. ரோசா தான் அவளுக்கு அழகாய் இருக்கு”, என்பான் வகுப்பில் அருகமர்ந்திருப்பவன். வாசு, எனது உற்ற நண்பன். எனக்கு மல்லிகை மீதும், குறிப்பாய் அவளின் மல்லிகை மீதும் பிடித்தம் இருப்பது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் இப்படி வம்புக்கு இழுப்பான் தடியன். வெளிப்படையாய் அவள் மீதான என் பிரியத்தை வாசுவிடம் கூடச் சொன்னதில்லை நான். ஹ்ம்ம்.. இந்தக் குழப்பத்தைப் பற்றி அவனிடம் பேசினால் நன்றாக இருக்குமே! இந்த வாரம் பார்த்து அவன் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய்விட்டான். முடிந்தால் தொலைபேசியில் பேசிப் பார்க்க வேண்டும். விஷயத்தைக் கேட்டால் உடனே கிளம்பி விடுதிக்கு வந்தாலும் வந்துவிடுவான்.

பொறியியல் படிக்கச் சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. வாசு தான் எனக்கு உற்ற நண்பனாய் அமைந்தான். இருவரிடமும் மிதிவண்டி இருந்தாலும் முன் தண்டில் அமர்ந்து பேசியபடி பெரும்பாலும் ‘டபுள்ஸ்’ போவது தான் எங்கள் வழக்கம். இரசனைகளில் சில வித்தியாசம் இருந்தாலும், எங்கள் எண்ண ஓட்டங்கள் பெரும்பாலும் ஒத்திருந்தன.

கல்லூரியில் சேர்ந்த புதிதில் இருந்தே பதின்ம வயதுக்கே உரிய குறுகுறுப்பு எதிர்பாலின் மீது ஈர்ப்பை உண்டு செய்தாலும் பெரும்பாலும் நான் ‘நல்ல’ பையனாகவே இருந்தேன். வாசு தான் என் தயக்கங்கள் சிலவற்றை உதறவைத்தவன். என் எல்லைகளை விரிவாக்கியவன். பெண்கள் விஷயத்தில் கூட,

“எதுக்குடா அழகழகாப் பூக்கள் உலகத்துல இருக்கணும்? நாம பார்த்து இரசிக்கறதுக்குத் தாண்டா… அதே மாதிரி தான் பொண்ணுங்களும். அவங்களைத் தொந்தரவு பண்ணாம, கேலி கிண்டல் செய்யாம, அவங்க மனசுக்கோ உடம்புக்கோ காயமில்லாம பாத்து ரசிக்கறதுல தப்பே இல்ல. அவங்களுக்கும் நம்ம மேல ஒரு ஈர்ப்பு இருக்கும்டா… அது தானே இயற்கை?” என்று என் குற்ற உணர்ச்சிகளை நீக்குவான்.

கவிதா பற்றி வாசுவிடம் பேசினால் என்ன சொல்வான் என்று நினைத்துக் கொள்கிறேன். முதலாண்டுச் சுற்றுப்பயணம் போனபோது எங்கள் கும்பலில் கவிதாவோடு நிறைய வாக்குவாதம் செய்தவன் என்றாலும் அவள் மீது வெறுப்பை எல்லாம் அவனிடம் பார்த்ததில்லை. அதிலும் இந்த விஷயத்தைச் சொன்னால் முன்சார்புகள் இருந்தாலும் உதறிவிட்டு எனக்கு ஆதரவாய்த் தான் இருப்பான்.

நிச்சயமாகக் காதலுக்கு ஆதரவாகத் தான் பேசுவான். நமது வாழ்க்கைப் பாதையை நாமே தான் தீர்மாணித்துக் கொள்ளவேண்டும் என்கிற கொள்கை உடையவன். அதிலும் கவிதாவே வெளிப்படுத்தும்போது நான் தயங்குவது முட்டாள்த்தனம் என்பான்.

இன்னும் வேக வேகமாய் மிதியை அழுத்துகிறேன். சீறிப் பாய்கிறது வண்டி. வாழ்க்கை ஒருமுறை தான் வாழ்கிறோம்… எனக்குள் ஒரு முடிவு உருவாகிக் கொண்டிருக்கிறது.

* * * *

விடிந்ததில் இருந்து குறுகுறுப்பாகவே இருக்கிறது. பெண்கள் விடுதியை நோக்கிச் செல்கையில் ஒவ்வொரு அடிக்கும் மனதில் ஒரு ‘திக்திக்’ அதிகமாகிறது. வாயிலை நெருங்குகையில் வெளியே சிலர் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பது போலிருக்கிறது. இப்படியே திரும்பிப் போய்விடலாமா என்று எண்ணிக் கால்கள் தயங்கும்போது உள்ளிருந்து வேகமாய் அவள் வெளிப்பட்டாள்.

“என்னடா இவ்வளவு நேரம்? நீ வருவேன்னு மேல இருந்து பாத்துக்கிட்டே இருந்தேன். எங்க வராமப் போயிடுவியோன்னு நெனச்சேன்”

“இல்லை கவிதா. கெளம்பரப்ப சின்ன வேலை ஒண்ணு வந்துருச்சு. அதான்…”

நான் சாக்கு சொன்னேன். அவளோ அழகாய் இருந்தாள். தலைக்குக் குளித்திருக்க வேண்டும். நறுவிசாகப் புடவை கட்டி இருந்தாள். அழகாக இருந்தாள் (ஓ, முன்னரே சொல்லி விட்டேனா!).

“சரி… வா. அப்படியே கொஞ்சம் நடந்துட்டு வரலாம்”

‘என்ன கவிதா… புடவ கிடவ எல்லாம் கட்டிக்கிட்டு…’ என்று கேட்க நினைத்துச் சும்மா இருந்தேன்.

“எங்க, உங்கூட ஒருத்தன் சுத்திட்டே இருப்பானே, அவனக் காணோம்?”

இறுக்கத்தைக் குறைப்பதற்குக் கேட்கிறாள் போலும். நான் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

“யாரு வாசுவா? அவன் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்ட்டான் கவிதா”.

‘அவன் இல்லையேன்னு நேத்து நான் கூட ஏங்கினேன்’ என்பதையும் அவளிடம் நான் சொல்லவில்லை.

நடைக்கு இதமாகக் காற்று வீசுகிறது. அவளிடம் இருந்து தனித்துவமான நறுமணம் கலந்து என் உணர்வுகளை மயக்குகிறது. கலையரங்கு முன் வந்த போது, “வா… கொஞ்ச நேரம் இங்க உக்காந்து பேசலாம்” என்று அமர்கிறாள்.

முழங்கால்களை உயர்த்தி வைத்துக் கைகளைக் கோர்த்து அதிலே தாங்கிக் கொள்கிறாள். ‘டுவீட் டுவீட்’ என்று இரண்டு குருவிகளோ குயில்களோ மரத்துக்கு மரம் தாவி விளையாடிக் கொண்டிருக்கின்றன. ‘சே! முதலில் நினைத்தபடி ஒரு பூ வாங்கி வந்திருக்கலாம்’ என்று மனதுக்குள்ளே என்னைத் திட்டிக் கொண்டேன்.

என்னை ஆழ்ந்து பார்க்கிறாள் கவிதா. ஒரு நிமிட மௌனம் சங்கடத்தை உண்டுபண்ணுகிறது. தயங்கியபடியே கேட்கிறேன்.

“என்ன கவிதா? என்னவோ முக்கியமாச் சொல்லணும்னியே”

“அது வந்து…” சிறு தயக்கத்துக்குப் பின், ஒரு முடிவுக்கு வந்தவளாய்ச் சொல்கிறாள். எதிர்பார்ப்புடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

“எனக்கு எப்படிச் சொல்றதுண்ணு தெரியலடா… எல்லாம் உன் பிரெண்டு பத்தித் தான். எனக்கு அவன ரொம்பப் பிடிச்சிருக்கு. அவனுக்கும் என்னைப் பிடிக்குதுண்ணு நெனைக்கிறேன். உறுதியாத் தெரியல்ல. ரெண்டு பேர்த்துக்கும் நீ தான நல்ல நண்பன். அதனால தான் உன் கிட்டச் சொல்லலாம்னு…”

“கவிதா…” ஒரு திகைப்போடு வெளிவருகிறது என் குரல்.

“ஏண்டா? எதாவது பிரச்சினை ஆயிருமா?”

சிறு கலவரத்தோடு பார்க்கிறாள். சுதாரித்துக் கொள்கிறேன்.

“இல்ல கவிதா… திடீர்னு சொன்னியா… ஆச்சரியமா இருந்துது. எனக்கு ரொம்ப சந்தோஷம். வாசுவுக்கும் உனக்கும் நல்ல பொருத்தமாத் தான் இருக்கும். பாத்தியா இத்தன நாள் சொல்லவே இல்லியே… நெஜமா எனக்குச் சந்தோஷமா இருக்கு… வாவ்…”

ஏமாற்றத்தை மறைக்கவென்று அவசரமாகப் பேசியதைச் சாதாரணமாக யாரும் கவனித்திருப்பார்கள். இவளும் உணர்ச்சிமேலிட்டு இருக்கிறாள். கவனிக்கவில்லை. சன்னமான குரலில்,

“ரொம்பத் தேங்சுடா. எனக்காக அவன்கிட்ட சொல்லிடறயா? உன்கிட்ட தான் முதல்ல சொல்றேன்”, என் உள்ளங்கையை நன்றியோடு சற்று அழுத்தி விட்டு எழுந்தாள்.

“நான் வரட்டுமா?” கிளம்புகிறாள் தேவதை தொலைவு செல்ல. திரும்பினாள். இன்று அவள் கூந்தலில் ரோசாப்பூ தான் இருக்கிறது. வெற்றி என்னவோ ரோசாவுக்குத் தான்!

அவள் தொட்ட இடத்துக் கை ஈரத்தைத் தென்றல் வந்து உலர்த்திக் கொண்டிருக்க, மனக்கூட்டில் ஒரு வெறுமை நிறைகிறது. அவளோடு போகத் தயாராய் இருந்து, இப்போது போக்கிடமற்றுத் தவித்துக் கொண்டிருந்த மனதை இழுத்துக் கொண்டு நடக்கிறேன். கொஞ்சம் நேரம் அமைதியாகவே இருந்தது மனது. திரும்பித் தூரத்தில் புள்ளியாக மறையும் அவளைப் பார்த்துவிட்டுச் சொன்னது,

“காதலென்பது விட்டுக் கொடுத்தலும் தான்!”

* * * *

வளர்சிதை மாற்றம் – தேன்கூடு-தமிழோவியம் போட்டி ஜூன் 2006

Tags: சிறுகதை

19 responses so far ↓

  • 1 டிசே // Jun 19, 2006 at 11:10 pm

    /காதலென்பது விட்டுக் கொடுத்தலும் தான்/
    செல்வராஜ் உங்களின் இந்தக்கதையை வாசித்தபோது பதின்மங்களில் (பதினான்கு வயதளவு என்று நினைக்கின்றேன்) நண்பனுக்காய் மறைத்த/மறந்த எதிர்ப்பால் ஈர்ப்பின் ஞாபகம் நினைவுக்கு வருகின்றது.

  • 2 Kana Praba // Jun 20, 2006 at 12:58 am

    வணக்கம் செல்வராஜ்

    இதுவரை உங்கள் மிதிவண்டிப் பயணங்களை நன்றாகவே அனுபவத்து வாசித்திருக்கிறேன். காதல் மிதித்த தருணங்களையும் அழகாக வடிக்கமுடியும் என்று மெய்ப்பித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

  • 3 வெற்றி // Jun 20, 2006 at 1:19 am

    நல்ல அருமையான கதை. மிகவும் சுவையாகவும் ஆவலைத் தூண்டும் படியும் எழுதியுள்ளீர்கள்.

    நன்றி.

  • 4 ராசா // Jun 20, 2006 at 2:47 am

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றதுங்கிறது இது தானா.. ம்ம் ..??

  • 5 மணியன் // Jun 20, 2006 at 3:02 am

    எப்படி கதை எழுதுவது என்று குமுதத்தில் தொடர் வந்தது; ஆனால் உங்களின் இந்த ஆக்கம் ஒரு நடைமுறை எடுத்துக் காட்டு. வாழ்த்துக்கள் !!

  • 6 அருள் குமார் // Jun 20, 2006 at 3:10 am

    இனிய நடையில் நன்றாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள் செவ்லராஜ் 🙂

  • 7 சுதர்சன்.கோபால் // Jun 20, 2006 at 3:25 am

    இனிமை.எளிமை.அழகு.

    வாழ்த்துகள் செல்வராஜ்.

  • 8 nila // Jun 20, 2006 at 8:57 am

    வெகு நேர்த்தியாக கதை சொல்லியிருக்கிறீர்கள். ஆங்காங்கே கவிதை பொதிந்த அழகு.

    எ.கா:
    //அவள் தொட்ட இடத்துக் கை ஈரத்தைத் தென்றல் வந்து உலர்த்திக் கொண்டிருக்க, மனக்கூட்டில் ஒரு வெறுமை நிறைகிறது. அவளோடு போகத் தயாராய் இருந்து, இப்போது போக்கிடமற்றுத் தவித்துக் கொண்டிருந்த மனதை இழுத்துக் கொண்டு நடக்கிறேன். //

    வாழ்த்துக்கள்

    நாயகனின் எண்ண ஓட்டங்கள் வயதுக்கு சற்றே முதிர்ந்ததாய்த் தோன்றுகிறது.

    //“காதலென்பது விட்டுக் கொடுத்தலும் தான்!” // – க்ளைமாக்ஸ் சரியாக ஒட்டாதது போலிருக்கிறது. அவனாகக் காதல் வயப்படவில்லை. அப்படியே பட்டிருந்தாலும் அது ஒருதலைக்காதலாக இருப்பதால் விட்டுக்கொடுத்தல் என்றாகுமா?

    தலைப்பு அழகாக இருக்கிறது – கதைக்கும் தலைப்புக்குமுள்ள தொடர்பைச் சொல்வீர்களா?

  • 9 செல்வராஜ் // Jun 20, 2006 at 3:10 pm

    டிசே, கானாபிரபா, வெற்றி, அருள் உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    ராசா, இத எழுதறதுக்குள்ளயே பெரீய்ய வேலையாப் போச்சு. மரத்தடிப்போட்டிக்கு எழுதுனதப் பாதியில தொங்க விட்ட மாதிரி விடாம, ஒருவழியா முடிச்சு அனுப்பிட்டேன். ஆள வுடுங்க.

    சுதர்சன், நன்றி.நன்றி.நன்றி 🙂

    மணியன், ரா.கி.ர-வினதைத் தானே சொல்கிறீர்கள்? நானும் படித்த நினைவு இருக்கிறது. சிறுகதை எழுதுவது பெரிய வேலை தான் என்பது அனுபவபூர்வமாக இப்போது உணர முடிகிறது. உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது.

    நிலா, விரிவான உங்கள் பின்னூட்டத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றி.

    விடலைப்பருவம் என்பதன் பொதுவான இரண்டுங்கெட்டான் கருத்தை விட்டு மேலே சென்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்த ஒருவனை வைத்தே எழுதினேன். இப்படியான சற்று முதிர்ச்சி கூடிய பதின்ம வயதினரைக் காண்பது அப்படியொன்றும் அரிதல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. (ஆனால் நீங்கள் சொன்ன இதே கருத்தை என் வீட்டிலும் 🙂 ஒருவர் சொன்னார்!).

    முடிவு பற்றி நீங்கள் கூறியதும் கவனிக்கத் தக்கதாகத் தான் இருக்கிறது. நானும் கூட அப்படியே யோசித்து ஒருமுறை நீக்கி மாற்றி எழுத முனைந்தேன். இருப்பினும், அவனைப் பொருத்தவரை, தனது மனதில் (ஒருதலையாய் இருந்தாலும்) உள்ள காதலை, தன் நண்பனுக்காகவும், ‘காதலி’க்காகவும் விட்டுக் கொடுத்துவிடுகிறான் என்பதால் அந்தக் கோணத்தில் சரிதான் என்று பிறகு இப்படியே அமைத்துவிட்டேன்.

    தலைப்பு பற்றிச் சொன்னதற்கும் நன்றி. காதலைச் சொல்கிற தலைப்பு என்று மனதுக்குள் உருவாகிவிட்டது. கதையோடு சம்பந்தப்படுத்தி விளக்காமல் விட்டு அவரவர் கற்பனையை முடுக்கி விட்டுவிடுவது தான் நன்றாக இருப்பதாகப் படுவதால் விட்டுவிடுகிறேன்.

    இறுதியாக, உங்களை எனக்குச் சிறிது அறிமுகம் உண்டு, தெரியுமா? சந்தித்து (அ) பார்த்திருக்கிறேன்.

  • 10 nila // Jun 21, 2006 at 2:07 am

    செல்வராஜ்,

    விளக்கத்திற்கு நன்றி.
    உங்களை சந்தித்திருக்க இரு வாய்ப்புகளுண்டு – வேதிப்பொறியியல் படிக்கும்போது சென்னையில் (அங்கே உங்கள் பெயரை அடிக்கடி கேள்விப்பட்ட நினைவு). அல்லது நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த ஏரியை ஒட்டிய அமெரிக்க நகரில் (அங்கே நானும் சில காலம் இருந்தாலும் உங்களைப் பார்த்த நினைவில்லை) 🙂

  • 11 யாத்திரீகன் // Jun 22, 2006 at 2:46 am

    நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

    உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

    அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்….

  • 12 Vimala // Jun 22, 2006 at 3:06 pm

    Nandraga irukku(Ezhuthina vitham), anaal mudivu ethirpartha mathiriye irukku..ie as usual.

  • 13 arulroja(tamilatamila) // Jun 23, 2006 at 12:47 am

    கற்பனை நன்றாக இருக்கிறது. அழகு,வாழ்த்துக்கள்…

  • 14 செல்வராஜ் // Jun 27, 2006 at 5:31 pm

    தமிழாதமிழா, விமலா நன்றி. சிறுகதையும் எழுத எழுதத் தான் பழகிப் போகும் போலிருக்கிறது. முன்னரே முடிவு தெரியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதில் வெற்றியில்லை போலும்.

  • 15 Thangamani // Jul 3, 2006 at 11:52 am

    //அவளோடு போகத் தயாராய் இருந்து, இப்போது போக்கிடமற்றுத் தவித்துக் கொண்டிருந்த மனதை இழுத்துக் கொண்டு நடக்கிறேன். //

    நல்லா இருக்கு செல்வராஜ். கதை நிகழ்ந்த இடங்கள் பரிச்சயமானவை என்பதால் இன்னும் நன்றாக இருக்கிறது.

  • 16 வெற்றி // Jul 4, 2006 at 1:11 am

    செல்வராஜ் அண்ணா,
    இப் பின்னூட்டம் தங்களின் பதிவு பற்றியதல்ல. மன்னித்தருள்க. உங்களுக்குப் பிடித்த 6 விடயங்களை எழுத ஆறுப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது அழைப்பை ஏற்று பதிவு போடுவீர்களென எதிர்பார்க்கிறேன். நன்றி

  • 17 கடல்கணேசன் // Jul 8, 2006 at 2:13 am

    பதினெட்டு பத்தொன்பது வயதில், உலகத்தை ரசிக்க ஆரம்பிக்கும் பருவத்தில், ஒரு இளைஞனின் மனதுக்குள், முதல்முதலாக காதல் பற்றி எழும் உணர்வுகளை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் செல்வராஜ். நிலா குறிப்பிட்டது போல அங்கங்கே கவிதை நடை..

    “என்னடா இவ்வளவு நேரம்? நீ வருவேன்னு மேல இருந்து பாத்துக்கிட்டே இருந்தேன்.”- என்ற வரிகளைப் படிக்கும்போதே முடிவு தெரிந்து விடுகிறதோ என்ற சந்தேகம் தோன்றியது. (ஒருவேளை ‘சிறுகதை’யென்றால் முடிவு எதிர்விளைவாகத்தான் இருக்கும் என்று நினைத்தது முதல் காரணமாக இருக்கலாம். அல்லது முதல்முதலாய் காதல் சொல்ல வரும் பெண் ‘என்னடா’ போடமாட்டாளே என்ற சந்தேகம் வந்ததும் இருக்கலாம்..( ஆனால் கதை சொன்னவிதம் மிக அழகு.. அதற்காகவே உங்களுக்கு வெற்றி கிடைக்கவேண்டும்..).
    தொடர்ந்து எழுதுங்கள். படிக்கக் காத்திருகிறேன்.

  • 18 செல்வராஜ் // Jul 8, 2006 at 8:49 pm

    கடல்கணேசன், உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி. இந்தக் காலத்துக் காதலர்களிடையே ‘டா’ போட்டுப் பேசுவது இயற்கை தானே என்று எண்ணி எழுதிவிட்டேன். எண்ணிப் பார்த்தால், நெடுநாட்கள் காதலர்களாய் இருக்கும்போது தான் அப்படியாகும் என்று தோன்றுகிறது. ஆனாலும் முன்பே நன்கறிந்த நண்பர்களாய் இருப்பதன் நெருக்கத்தை வைத்தும் அப்படி எழுதிவிட்டேன். ஆழ்ந்து படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மகிழ்ச்சி.

    தங்கமணிக்கும் நன்றி. உண்மை தான். வெளிப்படையாகச் சொல்லாமல் ஓரிரு படிமங்களை (கலையரங்கு…) மட்டுமே வைத்திருந்தாலும், கதை நிகழும் இடத்தை அவதானித்திருப்பதற்கு உங்கள் பரிச்சயமும் காரணமாய் இருக்கும். நன்று.

  • 19 mahatma mani // Feb 26, 2008 at 2:27 am

    ம‌னதை தொட்டவரிகள் பாரட்டுகள் தோழர்