வேதிப்பொறியியல்: ஓர் எளிய அறிமுகம் – 3
Jun 15th, 2006 by இரா. செல்வராசு
வேதிப்பொறியியல் கோட்பாடுகளும் நுட்பங்களும் காரணமாக விளையும் இன்னும் சிலவற்றைப் பார்ப்போம். எண்ணெய் விள்ளெடுப்பு ஆலைகளில் தொடங்கிய பயணத்தைத் தொடர்ந்தால், பலவித வண்டிகள், ஊர்திகள், பறனைகள் இவற்றின் எரிபொருளைத் தருவது தவிர, இன்னும் பல வேதிப்பொருட்களுக்கு அவை ஆரம்பமாய் இருப்பது புலப்படும். பல்வேறு பாறைவேதி ஆலைகளுக்கு (petrochemical plants) மூலப்பொருட்கள் தருவனவாய் அவை அமைகின்றன. விள்ளெடுப்புக் கோபுரங்களின் உச்சியில் வெளிவரும் வாயுக்கள் வழியே தான் வீட்டில் சமையலுக்குப் பயன்படும் இழிக்கிய பாறைநெய் வாயு (LPG – அல்லது நீர்ம எரிவளி), இயல்வாயு (natural gas) முதலியன தயாரிக்கப் படுகின்றன.
அசிட்டிலீன், எத்திலீன், புரொப்பிலீன், போன்ற கரிம வேதிப்பொருட்களும், அதனைச் சார்ந்த பலமங்கள் (polymers) (பாலி-வைனைல்-குளோரைடு, பாலி-எத்திலீன், பாலி-புரொப்பிலீன், முதலியன) தயாரிக்கவும் ஆரம்பநிலை இயல்பொருட்கள் (raw materials) இந்த பாறைநெய் சுத்தகரிப்பு ஆலைகளின் வழியே தான் கிடைக்கின்றன. இந்தப் பலமங்களின் வழியாகக் கிடைக்கும் ஞெகிழிகளை (plastics) மட்டும் வைத்தே ஒரு பெரிய உலகம் இருக்கிறது.
காட்டாக, சதா செல்லமாய்ச் சிணுங்குகின்ற செல்பேசிகள் கூட எடை குறைவாய் ஆகிக் கொண்டிருப்பதற்கு அவற்றைத் தயாரிக்க உதவும் ஞெகிழிப் பொருட்கள் காரணம். மருத்துவத் துறையிலும் ஞெகிழிகளால் செய்யப்பட்ட தூம்புகள் (tubes) உடலினுள் உணவு, மருந்து, குளுக்கோசு முதலியன செலுத்தும் குழாய்களாகவும், ஊசிமருந்துக் குழாயாகவும் பயன்படுகின்றன. அங்கும் பிற இடங்களிலும் பயன்படும் கையுறைகளும், ரப்பர் விரிப்புகளும், இன்னும் பலவும் ஞெகிழிகளின் வழியே தான் கிடைக்கின்றன.
நீர்ப்பாய்ச்சலுக்குக் கூடப் பல இடங்களில் புழம்பாகப் (pipe) பயன்படுவது ‘பிவிசி பைப்பு’ என்று சுத்தத்தமிழில் (:-)) சொல்லப்படும் பாலி-வைனைல்-குளோரைடு என்னும் பலமமே. பொட்டலங்கட்டவும் பிறபயன்களும் கொண்ட ‘மழைக்காகிதம்’ என்று பொதுமையாகச் சொல்லப்படுகிற ‘பாலித்தீன்’ என்பதும் பாலி-எத்திலீன் என்கிற பலமமே.
கொங்குநாட்டிலே அதிகம்பேருக்கு ‘ழ’ தகராறு உண்டு. மழைக்காகிதம் பேச்சுவாக்கில் மலக்காய்தம் (!) ஆகிவிடும். சொல்லும்போதும் பேசும்போதும் அப்பகுதியிலிருந்து வந்தவனுக்கு வித்தியாசம் தெரிவதில்லை என்றாலும், அதை எழுதும்போது அடிப்பொருளே மாறி உறைக்கிறது. சற்றே உதைக்கிறது. இருந்தாலும், அந்தப் பொருளிலும் கிடைக்கும் ஒரு புதுக்கு (product) உருவாவதும் வேதிப்பொறியியல் முறையாலேயே! :-). மேலை நாடுகளில் அது ஒரு பெரிய வணிகம். அட! அதற்கும் கூட ஒரு தனி வலைத்தளம் வைத்து விற்று ஜார்ஜ் புஷ்ஷை வைத்துத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல வகையான பலமங்கள், அவற்றின் குணங்கள், வடிவமாக்கும் முறைகள், அவற்றை ஒட்டிய செலுத்தங்கள், பயன்படும் முறைகள் என்று இவற்றைப் பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். இவற்றிற்கு ஆரம்பமாய் இருப்பது பாறைநெய்க்கூறுகளே என்பதை மீண்டும் நினைவுறுத்திக் கொள்வோம். இவ்வாறு, பாறைநெய் விள்ளெடுப்புக் கோபுரங்களின் உச்சியில் கிடைக்கும் வாயுக்கள், இடையில் கிடைக்கும் பின்னக்கூறுகள் (fractions) தவிர, அதன் அடியில் கிடைக்கும் கரிப்பிசுக்கு (tar) கூட, சாலையிடுதல் போன்றவற்றிற்குப் பயனாகிறது.
ஒரு வாழைமரத்தின் பல பகுதிகளையும் மனித நுகர்விற்குக் கொள்வதைப் போலப் பாறைநெய்யின் பல கூறுகளையும் ஏதாவது ஒரு வகையில் வேதிப்பொருளாய்ப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொண்டிருக்கிறோம்.
சரி, வீட்டில் இருந்து கிளம்பி, ஏதாவது ஒரு வண்டி ஏறி அலுவம் வந்துவிட்டோம். இன்று பலர் ஏதாவது ஒரு வழியில் கணினி வழியாய் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அல்லது அவற்றோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். அந்தக் கணினிகளின் இயக்கத்திற்கு ஆதாரமாய் இருக்கும் நூகச்செலுத்திச் சில்லுகளைப் (microprocessor chips) போன்ற குறைகடத்திக்கருவிகளைத் (semiconductor devices) தயாரிக்கவும் கூட ‘வேதி ஆவி படிதல்’ (chemical vapor deposition) முறைகள் தான் உதவுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால், நமது வாழ்வில் வேதிப்பொறியியல் நுட்பங்கள் தொடாத இடங்கள் குறைவு என்று உணரலாம். இண்டெல் போன்ற சில்லுத் தயாரிக்கும் நிறுவனங்களில் கூட இதன் காரணமாகத் தான் வேதிப்பொறிஞர்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இண்டெல் நிறுவனத்தை உருவாக்கிப் பலவருடங்கள் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்துவிட்டுத் தற்போது மூத்த ஆலோசகராய் இருக்கும் ஆண்ட்ரூ குரோவ் கூட ஒரு வேதிப்பொறிஞர் தான் என்பதும் ஓர் எச்சுருமம் (extra information).
இன்னும், மரங்களில் இருந்து தயாரிக்கப் படும் காகிதத்தாள்களும், சாயப்பொருட்களும், வண்ணக்கலவைகளும், பயிர் செழிப்பாய் வளரத் தயாரிக்கப்படும் உரங்களும், பூச்சிக்கொள்ளிகொல்லி மருந்துகளும், உடைந்து கிழிந்தவற்றை ஒட்டப் பாவிக்கும் கோந்துப் பொருட்களும், தீபாவளிப் பட்டாசுகளும், வெடிமருந்துகளும், ஒளிப்படக் கருவிகளும், படம்பிடி சாதனங்களும், கரும்பில் இருந்து எடுக்கும் சர்க்கரையும், அதன் சக்கைகளில் இருந்து எடுக்கும் எத்தனால் என்னும் எரிவாயுக்கூறும், என்று வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வேதிப்பொருட்களும் அவற்றை உருவாக்க உதவும் வேதிநுட்பங்களும் நீங்காதிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறாக இன்னும் பல பொருட்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், இவ்வளவில் சொல்ல வந்த கருத்துப் புரிந்திருக்கும் என்பதால், இந்த இடத்தில் பட்டியலை நிறுத்திவிட்டு மேற்கொண்டு செல்வோம்.
-(தொடரும்).
நல்லாக்கொண்டு போறீங்க தொடரை.
புதுக்கு (product)- New product – உற்பத்தி பொருள் ?
நுண் – milli
நூக – micro
நூண – nano
இராம.கி தாக்கம் போல தெரிகின்றது..
ஷ்ரேயா, நன்றி.
நற்கீரன், உண்மை தான். இராம.கி அவர்களின் தாக்கம் பெரிதாக உண்டு. துல்லியமான சொற்கள் வேண்டும் என்னும் அவரின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. மைக்ரோ என்பதற்கு நுண் என்னும் பாவனை சில இடங்களில் உண்டென்றாலும், நீங்கள் எடுத்துக்காட்டியபடி நூக என்பதை நானும் பாவிக்க விரும்புகிறேன். மில்லி என்பதற்கு நுல்லிய என்றும் பரிந்துரைக்கிறார்.
பதிவை வாசிக்கும்போது, புழம்பிற்கும் தூம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்வென்று எழுந்த கேள்விக்கு கூகிளின் உதவியால், பின்வரும் தளங்களில் விளக்கம் கிடைத்தது:
http://www.tubenet.org.uk/cgi/vblite/showthread.php3?threadid=21
http://bicyclesports.us/id198.htm
//பூச்சிக்கொள்ளி//-பூச்சிக்கொல்லி
செல்வா,
முடிந்த அளவுக்குத் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற உங்களின் கொள்கைக்கு என் வணக்கங்கள். சீனருடன் பணியாற்றியதில் கணினி மற்றும் மென்பொருளியலிற் பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களுக்கும் சீன மொழிச்சொற்கள் வழங்கி வருவது தெரிந்தது. உங்கள் பதிவுகளில் காணப்படும் கலைச் சொற்களைப் (நன்றி: கலைக்கதிர்) பார்க்கும்போது, அச்சொற்கள் நான் நினைத்திருந்தது போல அந்நியமாகத் தோன்றவோ, உறுத்தவோ செய்யவில்லை. இராமகி அய்யாவின் பரிந்துரைகளை அவ்வப்போது படித்தாலும், முறையாக அவைகளைச் சேமித்து, மறக்காமல் உபயோகிக்க முடியாமல் இருப்பது என் சோம்பலினாலேயே. விரைவில் எந்தத் துறையினைக் குறித்தும் முற்றுமுழுதான தமிழ்ச்சொற்கள் கொண்டு உரையாட/எழுதவொரு காலம் அமையும் என்று நம்பிக்கை பிறக்கிறது.
அப்புறம் நேற்று ஹிந்துவில் பார்த்த ஒரு நல்ல கட்டுரை நினைவுக்கு வந்தது. அது இங்கே…
செல்வராஜ்
நல்லாயிருக்கு.யாரும் தொடாத மற்றவர்களை உறுத்தாத களம்.
தொடருங்கள்.
சுத்த தமிழ் பரவாயில்லை,ஆனால் எல்லோருக்கும் புரியனுமே என்ற கவலையும் வருகிறது.
கண்ணன், ஹிந்து சுட்டி வெறுமையாய் இருக்கிறதே? உங்கள் பாராட்டுரைக்கு நன்றி. எனக்கும் சற்றுச் சோம்பல் தான். எண்ணிய அளவு செய்ய முடியவில்லை. நிறைய எண்ணம் உண்டு. (இந்தத் தொடரின் அடுத்த பகுதியை இன்னும் எழுதவில்லை பாருங்களேன்!).
குமார், உங்கள் கருத்துக்கும் நன்றி. பலருக்கும் புரியவேண்டும் என்று நானும் யோசிக்கிறேன். அதோடு பெரும்பாலும் தமிழிலேயே சொல்ல வேண்டும் என்கிற ஆசையும் உண்டு. இரண்டையும் சமன்படுத்திச் செல்லவேண்டும் என்று நினைத்தாலும் பின்னதுக்கு மிகச்சிறிதாவது அழுத்தம் அதிகம் தர நினைக்கிறேன்.
இராதா, உங்கள் குறிப்புகள் எனக்கும் பயனுள்ளதாய் இருந்தன. இது போல் கூர்தீட்டும் கருத்துக்கள் பல தருக.
சரியான சுட்டி
இந்த தொடரின் இந்த பகுதியை மட்டும் தான் இன்று படிக்க முடிந்தது. மீண்டும் தொடர வேண்டும். நீங்கள் சொல்ல வந்த எளிய இந்த இடுகை அறிமுக விசயங்களை விட வேறு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 12 ஆம் வகுப்பு வரைக்கும் இந்த வேதியலை பார்த்தால் பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடுவதுண்டு. கல்லூரியில் மற்ற அத்தனை துறைகளையும் சகோதரிகள் படித்து முடித்து இருந்ததால் பிடித்த தாவரவியல் எடுத்து படிக்கும் போது இது இணை பாடமாக வந்தது. அழகப்பாவில் ஸ்ரீனிவாசன் என்பவர் துறைத் தலைவர். தோற்றத்தைப் பார்த்தால் பஞ்சு மிட்டாய் சாலையில் விற்பவர் போல இருப்பார். சட்டையை துவைத்து போடுவாரா என்பது சந்தேகமாக இருக்கும். அக்கிரமத்திற்காகவே நிஜ காந்தியாகவே தெரிந்தார். பாடம் நடத்த ஆரம்பித்த பிறகு இரண்டு ஆண்டுகளும் ஒரு வகுப்பு கூட தவற விட முடியாத அளவிற்கு அத்தனை எளிமையாக கிராமத்து மாணவர்களான எங்களை கட்டிப்போட்டு அவர் இறப்புக்கு காலம் கடந்து தெரிந்த போதிலும் வீட்டுக்கு செல்லும் அளவிற்கு ஈர்த்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மற்றொரு ஸ்ரீனிவாசம். எளிமையான கருத்துக்கள் என்ற செல்வத்தை தந்து கொண்டுருக்கும் ராஜா நீங்கள் வாழ்க வளமுடன்.
ஏன் என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கீறீர்கள். எழுத பஞ்சமா?
தமிழ் படித்தால் வளர முடியாது. தமிழில் அறிவியல் கலைச் சொற்களை பயன்படுத்த முடியாது என்பவர்கள் கண்ணன் சொல்வதைப் போல் உங்கள் படைப்புகளை பார்த்தால் திருத்துவார்களா? திருந்துவார்களா?