வேதிப்பொறியியல்: ஒரு ஓர் எளிய அறிமுகம் – 2
Jun 13th, 2006 by இரா. செல்வராசு
வேதிப்பொறியியல் நுட்பங்கள் நமது அன்றாட வாழ்வை எப்படித் தொட்டிருக்கின்றன என்று பார்க்க, காட்டாக, நமது நாளொன்றைக் கருத்தில் கொள்வோம். காலை எழுந்து சற்றே சோம்பல் முறித்துவிட்டுக் குளியலறைக்குள் செல்வோம். அங்கே பல் துலக்கப் பயன்படுகிற பசையில்(பேஸ்ட்டு) இருந்து குளிக்கும் போது பயன்படும், சோப்பு, ஷாம்பூ, கண்டிஷனர், லோஷன் போன்ற சகல தைலங்களும் களிம்புகளும் வேதிப் பொருட்களே. வேதிப்பொறியியல் முறைகளில் தயாராவது தான். நல்ல மென்மையான துண்டில் ஈரத்தைத் துவட்டிக் கொள்கிறீர்களா? அதிலே அழகான படமோ, வடிவோ, வண்ணமோ இருக்கிறதா? அவற்றை உருவாக்கப் பயன்பட்ட சாயங்களும் வேதிப்பொருட்களே.
தலைவாரப் பயன்படும் சீப்புக் கூட ஒரு ஞெகிழி (பிளாஸ்டிக்) – பலமர் (பாலிமர்) இவற்றால் செய்யப்பட்டிருக்கும். உடுத்திக் கொள்ளும் உடையில் வேதிநுட்பங்கள் சம்பந்தப் பட்டிருக்கும். அரையிறுக்கியும் (பெல்ட்), காலணியும், தோல் பொருளாய் இருந்தால் அந்தத் தோலைப் பதப்படுத்தித் தயாரிக்கவும், பலமர்/ஞெகிழியாய் இருப்பின் அதைத் தயாரிக்கவும் வேதிநுட்பங்கள் பயன்பட்டிருக்கும்.
காலையில் உட்கொள்ளும் உணவு முதல், நாள் முழுதும் உட்செலுத்தும் உணவு, தீனி, வெவ்வேறு வித பானங்கள் என்று எல்லாவற்றிலும் வேதிப்பொருளும் நுட்பங்களும் நிறைந்திருக்கும். உணவுச்செலுத்தத் தொழில்முறை (food processing industry) கூட வேதிப்பொறியியலின் ஒரு உட்பிரிவு தான். அதோடு நுகர்வோர் பொருட்கள் என்று வகைப்படுத்தப் படுகிற வாசனைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள், இதழ்_மை, கண்_மை போன்றவை, சோப்புக்கள், கழிவுக்காகிதங்கள், இவையெல்லாவற்றையும் தயாரிப்பதிலும் வேதிப் பொறியியல் சம்பந்தப் பட்டிருக்கிறது.
ஆற்று நீரைச் சுத்தப்படுத்தி மாசகற்றிக் குடிநீராகப் பதப்படுத்தித் தருவதாக இருந்தாலும் சரி, கடல்நீரைச் சுத்தகரித்து, எதிர் சவ்வூடு பரவல் (reverse osmosis) முறையாலோ, பல்லடுக்குத் தெறிப்பு (multi-stage flash) முறையாலோ உப்பகற்றிக் (desalination) குடிநீராக மாற்றித் தருவதாக இருந்தாலும் சரி அங்கும் செலுத்தங்கள் எல்லாம் வேதிப்பொறியியலின் அடியே.
உடல் நோயகற்றும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் வேதியல், உயிர்வேதியல், உயிரியல் போன்ற துறைகளுக்குப் பங்கிருந்தாலும், அவற்றைப் பெரிய அளவில் தயாரிப்பதை வேதிப்பொறியியல் பார்த்துக் கொள்கிறது. நொதித்தல் (fermentation) நுட்பங்கள் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படும். மற்றும் உணவுச் செலுத்தங்களிலும் (காட்டு: திராட்சை_மது, தயிர், இட்லி, ஊறுகாய், இன்னபிற), மாசுநீர்ச் செலுத்தங்களிலும் (wastewater processing) கூடப் பயன்படும்.
சரி, இனி வீட்டை விட்டு வெளியில் கிளம்புவோம். பேருந்தோ, சிற்றுந்தோ, அல்லது வேறு எந்த வண்டியில் சென்றாலும் அந்த வண்டியின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் எரிபொருட்கள் தயாரிக்கப்படுவதும் வேதிப்பொறியியலின் விள்ளெடுப்பு (refining) மற்றும் துளித்தெடுப்பு (distillation) நுட்பங்கள் மூலமே. நிலத்தடியில் (மற்றும் நீருக்கடியில்) இருந்து கச்சாவாகக் கிடைக்கும் கரட்டுப் பாறைநெய்யைப் (crude petroleum) பகுத்து, துளித்தெடுப்புக் கோபுரங்கள் (distillation towers) வழியாக வெவ்வேறு கூறுகளாய், கன்னெய் (petrol), மண்ணெய் (kerosene), டீசல், என்று பிரித்தெடுத்தத் தருவதும் வேதிப்பொறியியலே. ஒரு மாட்டுவண்டியில் சென்றால் கூட அதன் சக்கரங்கள் எளிதாய் எதிர்ப்பின்றிச் சுழல மசகுநெய் (grease) பயன்படுத்துவோமே. இவ்வாறு மாட்டு வண்டிகள் முதல் எறிபறனைகள் (jet planes) வரை இயங்குவதற்கான ஆதாரமாகவோ ஒத்தாசை புரிவதாகவோ இருப்பதும் வேதிப்பொறியியலே.
-(தொடரும்).
Sounds like an Ad for ChemicalEngineering. We don’t notice its presence until someone mentions it.
உள்ளேன் ஐயா.
பள்ளியில் அறிவியல் வகுப்பில் உட்கார்ந்திருந்த நாட்களை நினைவூட்டுகின்றன உங்களின் இந்தப் புதிய தொடர்:)) இது ரொம்பச் சிறிய பதிவாகத் தெரிகிறது:)) என்னை மாதிரி அறிவியலைப் பள்ளியோடு மறந்துபோனவங்களுக்காக ரொம்ப எளிமையா இருக்கட்டும்னு சின்னச் சின்னப் பாடமா எடுக்கறீங்களோ:))
விமலா, குலவுசனப்பிரியன், செல்வநாயகி நன்றி. பாடம்னு சொன்னா எல்லாம் பயந்து ஓடிடுவாங்க. 🙂 இது
ஒருஓர் (ஓர் தான் சரி என்று சுட்டிக் காட்டிய இராதாவிற்கு நன்றி) எளிய அறிமுகமாய் இருக்கட்டும் என்று நினைத்தேன். போகப் போக எப்படி அமைகிறது என்று பார்க்கலாம்.இந்த இடுகைகள் சற்றுச் சிறியனவாகத் தான் இருக்கின்றன. நுட்பியல் பற்றி எழுதும் போது நீளம் அதிகம் இருந்தால் ஆர்வம் குறைந்துவிடலாம் என்பது ஒரு காரணம். மற்றபடி சரியான கருத்துக்களை எழுத வேண்டும் என்பதும், நுட்பியல் சொற்களுக்குச் சரியான தமிழ்ப்பதம் வேண்டும் என்பதாலும் எழுதவும் நேரமாகிறது. இராம.கி அவர்களின் பதிவும், சில அகரமுதலிகளும் துணை கொண்டு செல்கிறேன்.
செல்வராஜ்,
உங்கள் வேதியற்பொறியியல் பதிவுகள் விறுவிறுப்பாயும் படிக்க ஆர்வம் தூண்டுவதாயும் உள்ளது. நீங்கள் புழங்கும் நற்றமிழ்ச்சொற்களும் அறிய உவப்பாயுள்ளது. தொடர்ந்து எழுதி எங்கள் அறிவுப்பசிக்கு உங்கள் அழகு தமிழால் விருந்து படையுங்கள்.
தம்பிரான், உங்கள் ஊக்கமான வாழ்த்துக்களுக்கு நன்றி.
* *
என் மற்றும் பிறர் உள்ளுருமத்திற்கு (information):
ஒரு/ஓர் குறித்த மரத்தடிக் கட்டுரை.
எளிய தமிழில் புரியும் படி எழுதி இருக்கிறீர்கள். நன்றி.
-நாகையன்.
நாகையன், உங்கள் கருத்துக்கும் நன்றி. முடிந்தவரை இப்படியே தொடர முயல்கிறேன்.